Pages

Monday, April 11, 2022

பச்சை ஆப்பிளின் ஆதி ருசி


சாலையோர வியாபாரக் குரல்களினூடே
அரேபிய பேரீச்சைக் குரலில்
ஆப்பிள் வாங்க அழைத்தாள் ஓர் அழகி.
ஆப்பிள் விதைகளின் நிறம் கொண்ட
அவள் உதடுகளிலிருந்து வெளியேறிய
சொற்களில் வீசியது தேன் நிற ஒளி.
ஒரு கிலோவுக்கான விலையும்
அமைதியான பச்சை நிறத்தில்
மிளிர்ந்து கொண்டிருந்த
ஒற்றை ஆப்பிளின் விலையும் ஒன்றே
என்றாள் ரகசியக் குரலில்.
இரண்டிற்கும் வித்தியாசம் கேட்டவனிடம்
ஒளிரும் ஆப்பிளின் தோலுக்கடியில்
அவன் தேடும் காதலியின் பெயரும்
மற்ற பழங்களில் கடவுளின் பெயரும் என்றாள்.
ஒற்றை இறகாக அலைந்து கொண்டிருந்த அவன்
பச்சை ஒளி கொண்ட ஆப்பிளைக் கேட்டான்.
காதலியைத் தொட தோலை அறுபடாமல்
சீவ வேண்டும் என்றவளின்
கட்டளையை அடிமை போல் ஏற்றான்.
சீவி எடுக்க முடியாமல் நடுங்கிய அவன் கைகள்
ஆப்பிளை பற்களிடம் ஒப்படைத்தன.
ஆதிகாலத்தின் நறுமணம் எழுந்த
அந்த ஆப்பிளில்
பிரபஞ்ச துவக்கமொன்றின்
துயரக்கதை மெலிதாக ஒலித்தது.
ஒரு துண்டு ஆப்பிளின் ஆதி ருசியை
அவன் நாக்கு உணர்ந்தபோது
யுகங்கடந்த துயரமொன்றை மீண்டும்
நிகழ்த்திவிட்டதன் நிம்மதியில்
சாலையில் எழுந்த காற்றோடு
காணாமல் போயிருந்தாள்.
திகைத்து நின்ற கடவுளின் கண்களில்
உருண்ட திவலையொன்று
பெரும் மழையென
கொட்டத் தொடங்கியது.

No comments: