Pages

Monday, April 11, 2022

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

 


        வாழ்க்கை மர்மங்கள் நிறைந்தது. அதனாலேயே அது சுவாரஸ்யமானதும் கூட. தனி நபர் வாழ்வில் மட்டுமல்ல இந்த பூமியிலும் மர்மங்கள் நிறைந்துள்ளன. அதற்கான விடைகளைத் தேடுவதில் அறிவியலாளர்கள், அரசுகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமாகவே உள்ளனர். ஆனால் மர்மங்கள் மேலும் முடிச்சுகள் நிறைந்தவையாகவே நீடிக்கின்றன். நீண்ட தேடலுக்குப் பின் எந்த முடிவும் இல்லாமல் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்ற நிலைக்கு வருகிறார்கள்.

    எழுத்தாளர் ராஜ் சிவா அவர்கள் எழுதிய "இறந்த பின்னும் இருக்கிறோமா?" என்ற கட்டுரைத் தொகுப்பு அந்த வகையில் சுவாரசியமான ஒரு தொகுப்பு. அதே போல் தற்போது "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" என்ற நூல் விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட விண்வெளி சார்ந்த கட்டுரைத் தொடர். சிக்கலான அறிவியலை சுவாரசியமான நடையில் அளித்துள்ளார் ராஜ் சிவா.

        Crop Circle என்ற பயிர் வட்டங்கள் பல அதிர்வலைகளை விஞ்ஞான உலகிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் ஏற்படுத்தி உள்ளன. மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கிய Signs திரைப்படம் பயிர் வட்டம் பற்றியது. அவை வெறும் சித்திரங்கள் மட்டுமல்ல; அவை ஏதோ ஒரு விஷயத்தைக் கூறுவதாக இருக்கின்றன. அதே நேரம் அவை மனிதனால் உருவாக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவாகவே உள்ளன.

        சில நூறு அடிகள் முதல் சில கிலோமீட்டர்கள் வரை பயிர்களை இயந்திரத்தால் வெட்டிச் சீராக்கியது போன்று உருவாக்கப்படும் இந்த பயிர் வட்டங்கள் வானில் உயரப் பறந்தால் மட்டுமே முழுமையாகப் பார்க்கக் கூடிய அளவில் உருவாகின்றன. இதை நாங்கள் தான் உருவாக்கினோம் என்று சிலர் கூறினாலும் அவை எல்லாம் பொய் என்பது எளிதில் நிரூபிக்கப்பட்ட ஒன்றாக ஆகி உள்ளது. கணினி வரைகலையில் உருவாக்கப்படும் சித்திரத்தைப் போன்று ஒரே இரவில் சில மணி நேரங்களில் உருவாக்கி எந்த தடையமும் இல்லாமல் செய்துவிட்டும் சென்றுவிடுகின்றன(ர்). இவை உருவாகும் போது ஒளிப் பந்துகள் வயல்வெளிகளில் சுற்றியதைப் பார்த்த சாட்சிகளும் உள்ளனர்.

        அந்த precision எப்படி வருகிறது? யார் இதைச் செய்கிறார்கள்? ஏன் செய்கிறார்கள்? தெற்கு இங்கிலாந்தில் வைல்ட்ஷையர் பகுதியில் மட்டுமே பெரும்பாலான பயிர் வட்டங்கள் ஏன் உருவாகின்றன? 4500 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்டோன்ஹெஞ் எனும் கல் வட்டம் 400 கிமீ அப்பாலிருந்து கொண்டுவரப்பட்ட பலநூறு டன் எடை கொண்ட பாறைகளால் எப்படி ஏன் உருவாக்கப்பட்டது? அதே போல் பாலைவனப் பகுதியான எகிப்தில் 800 கிமீ அப்பாலிருந்து கொண்டுவரப்பட்ட லட்சக்கணக்கான பெரும் பாறைகளால் பிரமிடுகள் ஏன் யாரால் எப்படி உருவாகின? கிஸா பிரமிடுகளுக்கும் வானில் தெரியும் 3 நட்சத்திரங்களின் அமைவிற்கும் அதே போல இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட ஒரே நேர்கோட்டில் அமைந்த 3 வட்ட வடிவ பயிர் வட்டத்திற்கும் இடையேயான தொடர்புகள் என்ன? ஏன்? எதனால்?எதற்கு?எப்படி?         ஏலியன்கள் தான் எனில் அதை அரசுகள் மறுக்க, மறைக்க காரணம் என்ன? பெல்ஜியம் மட்டுமே பறக்கும் தட்டு ஒன்றைப் பற்றி அரசு ரீதியாக அறிக்கை வெளியிட்டு ஆவணப்படுத்தி உள்ளது. ஆனால் பல UFO வருவதாகக் கூறப்படும் அமெரிக்கா, ஏன் ஏரியா 51ல் உள்ள மர்மம் பற்றி வாய் திறப்பதில்லை. ஏலியன்கள், பறக்கும் தட்டுகள், பயிர் வட்டங்கள் எல்லாம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலேயே நிகழ்கின்றன. ஆசியா, சீனா, தனியாக இருக்கும் ஆஸ்திரேலியா, ரஷ்யாவில் வருவதில்லையே ஏன் என்ற கேள்விகள் எழாமல் இல்லை.         Parallel universe என்ற ஒன்று இருக்கிறது என்கிறார்கள். இதைப் படித்து லைக் போடும் உங்களைப் போன்றே ஒருவர் பேரண்டத்தின் மறுபக்கம் இருக்கிறார். அவர் நீங்கள் இல்லாவிட்டாலும் இருப்பார். மொத்தம் 11 பரிமாணங்கள் உள்ளன என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நமக்கு முப்பரிமாணத்திற்கு மேல் நடப்பவை அறிய இயலாது எனும்போது 11 வது பரிமாணத்தில் இருப்பது என்ன என்பதைக் கற்பனை கூட செய்ய இயலாது. எனில் ஏதோவொரு பரிமாணத்தில் இருப்பவர்கள் தான் ஏலியன்களா? அவர்கள் எதிர்காலத்தில் வாழும் நாமா? நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது என்று நாம் நினைக்கும் கடவுளரா? ஒரு எறும்பால் நம்மை முழுவதுமாக பார்த்து அறிய முடியாது என்பதால் நாம் இல்லை எனலாமா? 6வது அல்லது 8வது பரிமாணத்தில் உள்ள ஏதோ ஒன்று நம் கண்ணில் படுவது இல்லை என்பதால் அது இல்லை என மறுக்க முடியுமா? அல்லது இருக்கிறது என நிரூபிக்க முடியுமா?         டார்வின் பரிணாமக் கொள்கையை வைத்து இதைப் புரிந்து கொள்ளலாமா? சூரிய குடும்பத்தில் மிக இளைய கோளான பூமியில் நம் இருப்பின் ஆரம்பம் 2 லட்சம் ஆண்டுகள் தான். அதுவும் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளில் தான் இவ்வளவு வளர்ச்சி. எனில் 13.7 பில்லியன் ஆண்டுகளாகிவிட்ட இப் பேரண்டத்தில் ஏதோவொரு கேலக்ஸியில் ஏதோ ஒரு கோளில் ஏன் மிக உச்ச அறிவைக் கொண்ட இனம் இருக்கக் கூடாது? இப் பேரண்டத்தில் அறிவார்ந்த ஏலியன்கள் இருப்பதை ஸ்டீபன் ஹாக்கிங் ஒத்துக் கொள்கிறார்.         இப்படி ஏராளமான கேள்விகளை நம்முள் எழுப்பும் இந்நூலில் விரிவான விளக்கங்களை அளிக்கிறார் நூலாசிரியர் ராஜ் சிவா.         என்றேனும் ஒரு நாள் இவற்றுக்கு எல்லாம் நம் எதிர்கால மனித குலம் அறிவியல்பூர்வமான விடைகளை கண்டறியலாம். ஏலியன்களுடன் உறவாடலாம். ஆனால் அந்தக் காலம் அடுத்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இல்லை என்பது மட்டும் உறுதி. இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? ஆசிரியர்: ராஜ் சிவா எழுத்து பதிப்பகம்
பக். 194, விலை: ரூ.200/-

No comments: