Monday, May 25, 2009

பிரபாகரனின் வீரச்சாவில் விளையாடும் நெடுமாறன், வைகோ, பத்மநாதன்போகிற போக்கை பார்த்தல் சிங்கள அரசே பரவா இல்லை போல இருக்கிறது. அவர்களை பொறுத்த வரை போர் முடிந்து விட்டது. பிரபாகரன் கிளைமாக்ஸ் காட்சியில் கொல்லப்பட்டார். (நமக்கு வீரச்சாவு). அறிவியலில் உச்சபச்ச வளர்ச்சி கொண்ட இலங்கையில் இரண்டு மணி நேரத்தில் டி.என். சோதனை செய்து உறுதி ஆகியது. பின்னர் சடலத்தை எரித்து இந்துமா கடலில் சாம்பலை எரிதாகி விட்டது. அப்படியே பதினாறாம் நாள் காரியம் செய்தால் எல்லாம் முடிந்தது.

லண்டனில் இருக்கும் செய்தி தொடர்பாளர் முதலில் தலைவர் உயிருடன் உள்ளார் என்றார். வைகோ, பழ.நெடுமாறன் போன்றோரும் உறுதி செய்தனர். நக்கீரனும் தன் பங்குக்கு செய்தி போட்டு காசு பார்த்தது. பிறகு புலனாய்வு செய்தி தொடர்பாளர் என்று ஒருவர் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று அதிகாரப் படி அறிவித்தார். தமிழ் மக்களின் நெஞ்சில் பால் வார்த்து போல இருந்தது அந்த செய்தி.

கொஞ்சம் கவலை மறந்து இருந்த நிலையில் (அதாவது தலைவரின் இருப்பு குறித்து மட்டுமே. தமிழர்கள் முகாம்களில் படும் அவலம் குறித்த கவலை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.) லண்டன் பத்மநாதன் முழ நீள அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஒரு மாவீர வணக்கத்துடன் தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்கிறார். ஏன் இந்த முரண்பாடு. அப்படியே மரணம் என்றாலும் மாவீரனுக்கு செலுத்தும் அஞ்சலி வெறும் ஒரு பக்க அறிக்கை மட்டும்தானா. கூட்டங்கள், இரங்கல் ஊர்வலம் இல்லையா? முத்துகுமரனுக்கே மாபெரும் ஊர்வலம் நடந்ததே? இதில் இருந்து அவரது அறிக்கையில் சந்தேகம் எழுகிறது.

ஒரு வேளை அவரும் மகிந்தா கோத்தா கருணாவுடன் அன்ட் கோ போட்டுவிட்டாரா? தலைவர் முழு பலத்துடன் இருந்த போதே கருணா துரோகம் இழைத்தான். இப்போது தனது பலத்தை இழந்து உள்ளதால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நினைப்பில் பணத்தை அமுக்க இப்படி ஒரு அறிக்கையா? புலம் பெயர் தமிழரின் போராட்டத்தை நசுக்க நடக்கும் நாடகமா? சர்வதேசத்தை குழப்ப எடுத்த முடிவா?

அல்லது மாவிலாறில் தொடங்கி, முள்ளி வாய்க்கால் வரையிலான ராஜதந்திரத்தில் இதுவும் ஒன்றா?

தமிழ்நாடில் இரண்டே பேர் மட்டுமே இப்போது தலைவர் உயிருடன் இருப்பதாக சொல்கிறார்கள். பழ.நெடுமாறன், வைகோ. இருவரும் பத்மநாதன் அறிக்கைக்கு பதில் கொடுத்து உள்ளனர், இதுவரை சிங்கள அரசு மீது சந்தேகமே இல்லை. அவர்கள் சொல்வது பொய் என்று வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. ஆனால் இப்போது தமிழ் உணர்வாளர்கள் சொல்வது உண்மையா என்று சந்தேகம் எழுகிறது.

ஒரு வேளை அவர்கள் உண்மையை மறைக்கிறார்களா? ஆம் என்றால் ஏன்? இல்லை என்றால் தலைவர் பிரபாகரன் இருப்பதை அவர்கள் எப்படி உறுதி செய்தார்கள்.? தொடர்ந்து உறுதியுடன் சொல்கிறார்கள்? தலைவரின் வீர மரணத்தை இப்படி மறைப்பது ஏன்? அல்லது சிங்கள இந்திய அரசின் உளவுத்துறை சூழ்ச்சிக்கு பலியாகி எங்கே இருக்கிறார் என்று சொல்லிவிடக் கூடாது என்று வேறு எந்த பதிலும் சொல்ல மறுக்கிறார்களா? சின்ன துப்பு கிடைத்தாலும் அந்த இடத்தில ஊடுருவி தலைவரை பிடித்து விடுவர் என்பதால் சொல்ல மறுக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இது ஒன்றும் அமைதிக் காலம் இல்லை. போரே முடிந்து விட்டது. அதனால் பிரபாகரன் உயிருடன் இருந்தால் தனது பாதுகாப்பில் சின்ன ஓட்டை கூட இல்லாமல் இருக்க வேண்டிய தருணம். அதனால் அவர் தொலைபேசி பயன்படுத்த வாய்ப்பு இல்லை. அவருடன் இருக்கும் வேறு யாரும் பயன்படுத்தவும் வாய்ப்பு இல்லை. பிறகு நெடுமாறன், வைகோவுடன் தொடர்பு எப்படி?

புலிகளின் செய்தி தொடர்பாளர் புதிய அறிக்கை ஏன் எதற்காக வெளியானது. இவ்வளவு சாதாரணமாக அந்த செய்தியயை வெளியிட காரணம் என்ன? ஒரு வேளை சுபாஷ் சந்திர போஸ் போல தலைவர் பிரபாகரனின் வீர மரணத்தை மாற்ற முயற்சி செய்கிறார்களா? வைகோ, நெடுமாறன் சொல்வது எத்தனை சதவீதம் உண்மை? ஏன் இந்த குழப்பம், பிரபாகரன் மரணம் என்றால் பொட்டு, சூசை எங்கே?

நெடுமாறன், வைகோ சொல்வது உண்மையா? பத்மநாதன் சொல்வது உண்மையா?, எங்கே அந்த புலனாய்வு செய்தி தொடர்பாளர் அறிவழகன்?

செய்தியை உறுதி படுத்த முடியாததால் பிரபாகரன் வீரச்சாவு குறித்து வெளியிடும் செய்திகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று தமிழ்நெட்.காம் சொல்கிறதே ஏன்?

As TamilNet is being heavily pressed by its readership to know the truth, it has become a necessity to state that TamilNet doesn't take any responsibility for any of the stands taken, as these are beyond its independent verification.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29446

இது பற்றி நாம் குழம்பாமல் இருக்க மூன்று வழி தான் உள்ளது.

1. இப்போதைக்கு தலைவர் பிரபாகரனின் இருப்பு குறித்த சர்ச்சயயை விட்டு, தமிழர் இலங்கையில் படும் வலியை உலகுக்கு உணர்த்த போராட்டத்தை தொடர்வது.

2. தலைவரே மீண்டும் (உயிருடன் இருந்தால்) வீடியோவிலோ, உண்மையான தேதியுடன் கூடிய புகைபடதிலோ வருவது

3. இதை கண்டு கொள்ளாமல் நமது வேலையை பார்க்கப் போவது.

அய்யா தமிழ் உணர்வாளர்களே....ஏன் இப்படி குழப்புகிறீர்கள்? ஒண்ணுமே புரியல. பைத்தியம் பிடிக்காதது ஒண்ணுதான் குறை.

Saturday, May 23, 2009

தலைவர் பிரபாகரனும் தமிழ் பதிவர்களும்
தலைவர் பிரபாகரன் உயிரோடு நலமாக இருக்கிறார் என்று பல நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. புலிகளும் அதிகாரப் பூர்வமாக தெரிவித்து விட்டனர். உண்மையாகவும் இருக்கலாம், இருக்க வேண்டும் எனபதுதான் தமிழரின் விருப்பம், வேண்டுதல். நான் சொல்ல வரும் சேதி அதுவல்ல.

பதிவுலகை பொறுத்தவரை அந்த வாரம், மாதம் என்ன ஹாட் டாபிகோ அதை பற்றியே அதிகம் எழுதுகிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. அது போல கடந்த ஆகஸ்ட் முதல் கிளிநொச்சி, பிறகு முல்லைத்தீவு, பின்னர் புதுக்குடியிருப்பு, அப்புறம் நம் சகோதரர்களின் படுகொலை, பின்னர் தேர்தல், முடிவு தெரிந்த பின் நம்மை நாமே நொந்து கொண்டது, கடைசியாக தலைவரின் 'மரணத்தில்' எழுந்துள்ள சந்தேகம், சிங்கள அரசு பயங்கரவாதிகளின் கோயபல்ஸ் பிரசாரம், நக்கீரனின் அட்டை படம் கிராபிக்ஸ் என்று தெரியாமலேயே சிலரின் ஆர்வம் பொங்கிய பதிவுகள், அது கிராபிக்ஸ் தான் என்று சிலரின் விளக்கப் பதிவு....போய்க்கொண்டே இருக்கிறது.

நக்கீரன் செய்தது சரியா, தர்மமா, பிராடு, பொறுக்கித்தனம், என்றெல்லாம் பதிவுகள். தங்களின் நியாயமான ஆதங்கத்தை அவர்கள் வெளியிடுகிறார்கள் என்பது புரிகிறது. ஆனால் அதற்கு சற்றும் குறை இல்லாமல் சில பதிவர்கள் போடும் பதிவு எரிச்சலை தூண்டுவது மாட்டும் இல்லாமல் ஒரு இனத்தில் வாராது வந்த மாவீரனை இழிவு படுத்தும் செயலை அவர்கள் அறியாமலேயே செய்கிறார்கள்.

விஜயும், நமீதாவும் தலைவருடன் ஒப்பிடத் தகுந்தவர்களா? இதற்கு கருணாவே பரவாயில்லை போல இருக்கிறது. கூகுளில் அதிகம் தேடப் படும் வரிசையில் நமீதாவை பின்னுக்கு தள்ளினார் பிரபாகரன் என்று ஒரு மாலை பத்திரிகை சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது.

பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று ஒரு நாளும், இருந்து விட்டார் என்று அஞ்சலி கட்டுரை ஒரு நாளும் வெளியிடும் பத்திரிகைகளின் நோக்கம் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதே அல்லாமல் ஆதங்கம் அல்ல. அப்படி ஈழ தமிழர் மீது பரிவு இருந்தால், பாசம் இருந்தால் அங்கு நடக்கும் கொடுமையயை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து இருக்க வேண்டும்.

உண்மையில் மகிந்த ஆயுத போரிலும் ஊடக போரிலும் வெற்றி பெற்றுவிட்டான். கடைசி நாள் போரில் இறந்தவர்களை பிரபாகரன் மரணத்துடன் சமம் ஆக்கி உலகின் கண்களில் மண்ணை தூவி விட்டான். அதை கேடுகெட்ட ஆங்கில தமிழ் ஊடகங்களும் ஒப்பிகின்றன. ஒரு சில வலை உலக பதிவர்கள் நியாயமான அவர்களது ஆதங்கத்தை வெளியிட்டாலும், அவர்களும் கடைசியில் பரபரப்புக்கு நடிக நடிகையுரின் பிரபலத்துடன் தலைவரை ஒப்பிட்டு இழிவு படுத்துகின்றனர். இனியாவது அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளட்டும். புரிந்து கொள்வோர் புரிந்து கொள்ளட்டும்.

கடைசியில் நானும் அவ்வாறே பதிவு போட வேண்டியதாகி விட்டது.

ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன


ஆழ்ந்து உறங்குபவன் அசைவற்றுக் கிடப்பது போல் பின்னிரவில் அந்தக் கானகம்நிசப்தத்துடன் இருந்தது. மரம், செடி, கொடி என அனைத்தும் துயில் கொண்டுகிடந்தன. சில சிறு காற்றின் அலைக்கேற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தன. குடிசையின் உள்ளே கூரையில் பனியின் சுவடு தெரிந்தது. அம்பறாத்தூணியில்இருந்து கொத்துக் கொத்தாக அம்புகள் பாய்வது போல குளிர் உடலெங்கும் குத்திவாட்டியது. அருகில் இருந்த குடிசையில் இருந்து எந்த சப்தமும் வரவில்லை. சீடர்கள் இந்நேரம் தங்களுடைய அரண்மனைகளில் இருந்து புறப்பட்டிருந்தால்வந்து சேர எப்படியும் சில நாட்கள் ஆகும். தனது புலமையையும், அறிவுக்கூர்மையையும் போற்றும் இந்த மன்னர்களை நினைத்து அவரது மனம் கொஞ்சம்பெருமை அடைந்தது. முதுமை அடைந்து வருவதை கண்களில் இருந்து நழுவிச்சென்ற தூக்கம் உணர்த்தியது. எழுந்து உட்கார்ந்தார் ஆதிகவி. தரை சில்லிட்டுஇருந்தது.

குடிசையை விட்டு வெளியே வந்தார். இடது பக்கம் இருந்த மரத்தடியில் கட்டப்பட்ட பசு அவரை பார்த்ததும் எழுந்து நின்றது.அருகே சென்று அதை அன்பாக தடவி விட்டார். சிறிது புல்லை எடுத்துப் போட்டார்.

இருபுறமும் செடிகள் அடர்ந்த ஒற்றையடி காட்டுப் பாதையில் தடாகம் நோக்கி மெல்ல நடந்தார். கண் காணாத தொலைவு நோக்கி ஓடிக் கொண்டிருந்தன அடிவானத்தில் தெரிந்த நட்சத்திரங்கள்.

தடாகத்தின் மேல் பனிப் புகை மண்டலம் எழுந்து உயர்ந்து கொண்டிருந்தது. காற்றின் சிலுசிலுப்பு மனதை ஏதோ செய்தது. கவிதை புனைய ஏற்ற நேரமிது. இருப்பினும் மனதில் தோன்றிய எண்ணத்தை அடித்து விரட்டினார். போதும் கவிதை எழுதியது என்று தனக்குள் கூறிக் கொண்டார்.

குரங்கொன்று தாவிக் குதித்ததைக் கண்டு அஞ்சிய பறவைகள் வேறு கிளைகளில் பறந்து அமர்ந்தன. தடாகத்தின் கரையில் விழுந்து கிடந்த பெரிய மரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்தார் ஆதிகவி. பல் துலக்கும் போது எதிரே இருந்த பாறை மேலிருந்து ஒரு தவளை அவரையே உற்றுப் பார்த்தது. தள்ளி அமர்ந்தார். மறுகரையில் இருந்த மரங்களின் ஊடே பாய்ந்து மறைந்தது புள்ளிமான் ஒன்று. "தொளக்' சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். தடாகத்தின் கரையில் ஒரு வரையாடு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததை தவிர யாரும் தென்படவில்லை. கதிரொளி இக் கானகத்தில் இறங்கி நடக்க இன்னும் வெகு நேரம் ஆகும். இந்நேரத்தில் மரக்கூட்டம் நடுவில் பிளிரும் களிறுகள் நின்றாலும் தெரியப் போவதில்லை என்று எண்ணியபடியே மெல்ல நீரில் இறங்கி குளிக்கத் தொடங்கினார்.

நீராடல் முடித்து திரும்பி கரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அங்கே நின்ற உருவத்தைப் பார்த்த போது மனம் ஒரு நொடி அதிர்ந்தது. கண்கள் மின்ன நீண்ட தலைமுடியுடன் ஒரு முதியவர் அவரையே பார்த்து புன்னகைத்தார்.

""யார் நீங்கள்...இந்தக் கானகத்தில் இங்கே என்னை பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள்?''

""தவம் செய்ய இந்தக் கானகத்தில் அலைகிறேன் ஆதிகவி.''

காட்டுப்புற்களின் மீது பட்டுத் தெறிக்கும் மழைபோல் அவரது குரல் சில்லிட்டுக் கேட்டது. ஏதோ ஒரு தெளிவு அவரது முகத்தில் தெரிந்தது.

""என் பெயர் உங்களுக்கு எப்படி..''

""இந்த மலைக்கு அப்பால் உள்ள நாட்டின் இளவரசன் உன்னிடம் படித்தவன். அவன் உன் அருமை பெருமைகளை அரண்மனையில் கூறியதை கேட்டு உனைக் காண வந்தேன்.'' என்று வினா விழும் முன்பே விடையிறுத்தார்.

""என்னைத் தேடி எதற்காக வந்தீர்கள்..?''

வா உன் குடிசையில் அமர்ந்து பேசுவோம். முன்னே நடந்தார் முதியவர். தலை முடியின் ஈரத்தை துவட்டிய படியே பின் சென்றார் ஆதிகவி. குடிசையின் முன் மரத்தடியே இருந்த பெரிய கல்லின் மீதமர்ந்தார் அவர். எதிரே கிடந்த மரத்துண்டு மீது ஆதிகவி அமர்ந்தார்.

எதையோ சிந்தனை செய்தபடி இருந்துவிட்டு அமைதி கலைத்துக் கேட்டார். ""நீ இப்போது எல்லாம் என்ன செய்கிறாய் ஆதிகவி?''

இப்போது `எல்லாம்' என்று அவர் கேட்டதில் இருந்தே தனது கடந்த காலத்தை அறிந்தவர் என உணர்ந்தார்.

"அரசகுல மக்களுக்கு போர் பயிற்சியும் வாழ்வியல் கல்வியும் கற்றுக் கொடுக்கிறேன்''

சில ஆண்டுகளுக்கு முன் நீ படைத்தாயே இம்மொழியின் இலக்கணம் அதைப் பற்றி.? ஆம்..அதையும் தான்.

"இம்மொழி பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும்..நின் புகழ் வானுயர்ந்து நிற்க நான் ஒன்று சொல்கிறேன். மொழி நம் இருவருக்கும் இடையே உணர்வுகளை அறியச் செய்ய வந்த கருவி.''

"நீங்கள் வந்த நோக்கம் என்ன துறவியே...''தீர்க்கமாகக் கேட்டார் ஆதிகவி.

"சொல்கிறேன் கேள். நீ படைத்த இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள் என வகுத்துப் படைத்திருக்கிறாய். நன்று. ஆனால் பொருளுக்கு அப்பால் என்ன அல்லது எழுத்துக்கு முன் இருப்பது என்ன?''

"இந்த அதிகாலை நேரத்தில் என்னைக் குழப்பவே வந்தீர்களா?'' பேச்சில் வெப்பம் தெறித்தது.

"நான் பேசுவதை நீ புரிந்து கொள்கிறாய் என்றால் என் வாயில் இருந்து வரும் சொற்கள் ஒரு பொருளை உணர்த்துகின்றன. அதற்குக் காரணம் சொற்கள். எழுத்தால் ஆனவை சொற்கள். எழுத்துக்கு முன் ஒலி. அதாவது அ என்பது ஒரு ஒலி வடிவம். ஏ என்பது வேறோர் ஒலி வடிவம். ஆக பொருளுக்கு முன் சொல். சொல்லுக்கு முன் எழுத்து. எழுத்துக்கு முன் ஒலி. ஒலிக்கு முன் என்ன?''

நீண்ட நாள் தான் மறந்திருந்த கனவை மீண்டும் தட்டி எழுப்பிய அவரை ஆழமாக பார்த்தார் ஆதிகவி. புன்னகையின் கீற்று அவர் இதழோரம் எட்டிப் பார்த்துச் சென்றது.

"பேசுபவன் மொழிக்கு இலக்கணம் படைக்கலாம். பேச முடியாதவன் எப்படி புரிகிறான். வெறும் கையசைவில் மட்டும் தானா? அதற்கும் மேல் ஏதோவொன்று இரு பேச முடியா மனிதரிடத்தில் உள்ளது. அது என்ன? அவன் மொழிக்கு உன்னால் இலக்கணம் படைக்க முடியுமா? அப்படி செய்தால் அது உன் புகழை நிலைநிறுத்தும்.''

"சில காரணங்களால் நான் கவிதை எழுதுவதை நிறுத்தி பல்லாண்டுகள் ஆகின்றன துறவியே. இனித் தொடரும் எண்ணமும் இல்லை. என்னை விட்டுவிடுங்கள்.''

"அப்படியானால் கொலைத் தொழில் புரியும் அரச குல மக்களுக்கு அறிவை புகட்டிக் கொண்டிரு. உன் எழுத்தாணியை தீயிலிட்டு கருக்கிவிடு" என்று கூறிவிட்டு விறுவிறுவென மரங்களின் ஊடே நடந்து மறைந்தார் துறவி. துறவிக்கே உரிய சினம். அவர் சென்ற திசையில் பறவைகள் கத்தியபடி பறந்தன.

"யார் இவர். எதற்காக என்னை வந்து இப்படி எழுதக் கேட்கிறார். இதற்கு முன் பார்த்தது இல்லையே. பெயரைக்கூட கேட்க மறந்துவிட்டோமே...எழுத்துக்கு முன் ஒலி. ஒலிக்கு முன்...ஒலி தோன்றுமிடம்..."உந்தி முதலா முந்து வளி தோன்றி கழுத்தினும் மிடற்றினும்...'' தனது கவிதை வரிகள் நினைவில் அசைந்தாடின. என் கனவு இவருக்கு எப்படித் தெரிந்தது. அதை மறந்தும் நினைவூட்ட வந்த இவர் யாராக இருக்கும்...அய்யோ துறவியே நில்லுங்கள்...ஆதிகவி கானகம் நோக்கி ஓடினார். முதுமையை மறந்து வேகமாக ஓடினார். காய்ந்து கிடந்த இல்லை சருகுகளின் மீது கால்கள் பட்டு தடதட ஓசை எழும்பி கானகத்தில் எதிரொலித்தது. மலையின் சரிவை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார் ஆதிகவி.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர் வனத்துக்கு அருகே அமைந்த அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் விடுதியின் 13-ம் எண் அறையில் படுத்திருந்த மொழியியல் ஆய்வு மாணவன் கவிச்செல்வன் திடுக்கென எழுந்து உட்கார்ந்தான். ஒரே புழுக்கமாக இருந்தது. மின்விசிறியை சுழல விட்டான். வெகு நேரம் கால்கள் எங்கோ ஓடிக் கொண்டிருந்தது போல் உணர்ந்தான். கால்களைத் தடவிக் கொண்டான். தண்ணீர் குடித்துவிட்டு சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடி படுத்துக் கிடந்தான். இதோடு பல நாட்கள் இப்படி நிகழ்ந்துவிட்டது. மெல்ல மெல்ல மின்விசிறியின் ஒலி உயர்ந்தது. அலை அலையாக எழுந்து அவன் காதுகளில் ரீங்காரமிட்டது.

தட்தட்...ஸ்ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்..காதுகளில் விழும் ஒலிக்கேற்ப வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தான் வெகுநேரம். காற்று, விசிறி, ஒலி...அதுக்கு முன்னாடி என்ன? மயில் ஒன்று க்வாக் என அகவியது. க்வாக்..க்வாக்...க்...வா...க் என்று அவனும் சத்தமிட ஆரம்பித்தான். விடிந்தது கூடத் தெரியாமல் கத்திக் கொண்டிருந்தான்.

சத்தம் கேட்டு நான் அவன் அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். சிரசாசனம் செய்வதுபோல் தலைகீழாக நின்று கொண்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். பயந்துபோய் ஓடினேன்.

"டேய் ரமேஷ்...எழுந்திருடா...கவிக்கு என்னமோ ஆயிருச்சு...தடதடஸ்ஸ்புஸ்னு என்னமோ கத்திட்டு இருக்கிறான்டா''

"இவனுக்கு இதே பொழப்பா போச்சுடா...வா பார்க்கலாம் என்று ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துவிட்டு என்னிடம் ஒன்று நீட்டியபடியே வெளியே வந்தான். கவிச்செல்வன் அறைக்குச் சென்றோம்.

"டேய் கவி...என்னடா ஆச்சு..எதாவது கனவு கண்டயா மாப்ள.''

"ஒன்னும் இல்லயே...நான் நல்லாத்தான் இருக்கேன். எதுக்கு எல்லோரும் ஒன்னா வந்திருக்கிறீங்க...'' அவன் இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதை கண்கள் இரண்டால் அறிந்தேன்.

"இல்ல.. டீ சாப்பிட...தம் அடிச்சுட்டு வரலாம்னு.."என்று ஏதோ சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தோம்.

குளித்துவிட்டு கிளம்பி டிபார்ட்மென்ட் போகும் போது அவன் அறையைத் தட்டினேன். திறக்கவில்லை. மீண்டும் ஜன்னல் வழியே பார்த்தேன். க்வாக் என்று கத்தியபடி எதேயோ எழுதுவதும் பின்னர் அமைதியாக இருப்பதும் மீண்டும் எழுதுவதுமாக இருந்தான். அருகில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம், நோம் சோம்ஸ்கியின் லாங்குவேஜ் அண்ட் மைண்ட் புத்தகம் கிடந்தது.

அதற்குள் மற்ற துறை நண்பர்கள் வந்தனர். கூட்டம் கூடியது. "இந்த ரூமுக்கு பின்னாடி எவனோ தூக்கு மாட்டி செத்துட்டான் மாப்ள. அந்த ஆவி அடிச்சிருக்குமோ..."சிரித்தான் எகனாமிக்ஸ் பிரதீப்.

"ஆவியும் இல்ல இட்லியும் இல்ல...இது ஏதோ ஸ்பிலிட் பெர்சனாலிட்டி மாதிரி" என்றான் உளவியல் ஆய்வு மாணவன் சித்தார்த்.

" இங்க பார்றா அந்நியன்..."சிரித்துக் கொண்டே சென்றான் கெமிஸ்ட்ரி ஜான்.

"அவன வரச்சொல்லுடா மாப்ள...நம்ம புரபொஸர்கிட்ட காட்டி கவுன்சலிங் கொடுக்கலாம்" என்றான் சித்தார்த்.

"கவி...டிபார்ட்மென்ட் போகலாமா?. நான் ரெடி என்று கசங்கிய சட்டையுடன் முன்னே வந்தான். குளிக்கலையா? பெர்பியும் எடுத்துக் காட்டினான். என்னடா மனசு எதாவது சரியில்லையா...தீபிகா எதாவது சொன்னாளா...லவ் எதாவது...

"கருமம்டா...என்று ஒரே வார்த்தை சொன்னபடி தலையில் அடித்துக்கொண்டான் கவி.

மெஸ்ஸில் சாப்பிடும் போது தட்டை தூக்கி எறிந்தான். அது டிங்டடாங் என்று ஒலி எழுப்பி அடங்கியது. அதை உரக்கச் சொல்லிப் பார்த்தான். உனக்கு என்னடா பைத்தியமா..பளார் என்று அறைவிட்டேன். அந்த சத்தத்தையும் உச்சரித்தான். "இப்போ நீ அடிச்சயே..இந்த சத்தம் அங்க இருந்ததா இல்ல இங்க இருந்ததா? இருந்துச்சு அப்படின்னா ஏன் அதுக்கு முன்ன கேட்கல? என்னையே உற்றுப் பார்த்தான். எனக்கு கைகள் நடுங்கின.

எல்லோரும் வலுக்கட்டாயமாக அவனை இழுத்துக் கொண்டு சைக்காலஜி டிபார்ட்மென்ட்டுக்குச் சென்றோம். அதற்குள் மொழியியல் துறை தலைவர் சண்முகம் அங்கு வந்திருந்தார். கவிச்செல்வனின் ஆய்வு வழிகாட்டி அவர். நான், கவி, ரமேஷ், சித்தார்த் நான்கு பேரும் துறைத்தலைவர் கணேசன் அறைக்குச் சென்றோம்.

அறையில் ஏ.சி.குளிர் இருந்தது. புத்தக அடுக்குகள் நூலகத்தை நினைவு படுத்தின. ஏதோ சிந்தனையில் கைகளைக் கட்டியபடி ஃப்ராய்டு உட்கார்ந்திருந்தார். அந்தப் படத்துக்கு கீழே கணேசன் அமர்ந்தார்.

"என்னய்யா பிரச்னை...காலங்காத்தால''

"சார் கொஞ்ச நாளா இவன் நடு ராத்திரியில திடீர்னு தடதட இஸ் புஸ்னு ஏதேதோ சத்தம் போடறான். காலைல வரை இப்படித்தான் இருக்கிறான். வெறிச்சு பாத்துட்டு இருக்கிறான். என்னனு கேட்டா ஒன்னும் இல்லைன்னு சொல்றான். எல்லோரும் ஒரு மாதிரியா பேசுறத கேட்டா பாவமா இருக்கு சார்...'' கவியை பார்த்தபடி சொன்னேன். அவன் வெகு தொலைவில் ஏதோ சிந்தனை செய்து கொண்டிருந்தான்.

"கவிச்செல்வன் கனவு ஏதாவது கண்டு பயந்திட்டயா?''

"இல்ல சார்''.

"அப்புறம் ஏன் இப்படி இருக்கீங்க...?"

"நான் ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் இருக்கிறேன் சார்''.

"வெரிகுட். டாக்ட்ரேட் வாங்கிறதுக்கு முன்னே புக் பப்ளிஷிங் பண்றது நல்ல விஷயம்தான். ஆல் த பெஸ்ட். என்ன புத்தகம் அது?''

"ஒலிக்கு முந்தைய வடிவம் பற்றியது''.

"பிஸிக்ஸ்ல வருமே அந்த ஒலியா?'' இல்லை. மொழியியலில் வருமே அந்த ஒலி..அதாவது phonetics. கணேசன் சற்று கவனமாக அவனைப் பார்த்தார்.

"அதென்ன வடிவம் ஒலிக்கு முன்னாடி?''

"அதாவது சார்...கைகள் இரண்டையும் மேசை மீது வைத்து சுவாரஸ்யத்துடன் முன்னகர்ந்தான். "ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு. அந்த சொல் எழுத்தால் ஆனது..அந்த எழுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒலி வடிவம் உண்டு. அந்த ஒலி துவங்குவதற்கு முன்னாடி இருந்தது என்ன?'' அவரையே உற்று நோக்கினான். கணேசன் புரியாமல் பார்த்தார்.

" என்ன சார்?"

"நீயே சொல்லுப்பா..."

"அந்த ஒலிக்கு முன்னாடி இருக்கிற ஏதோ ஒன்னுதான் நம்மோட புரிதலுக்கு அடிப்படை...நீங்க சில விஷயம் பாத்திருப்பீங்க. பஸ்ல, பார்க்ல, இங்க யூனிவேர்சிடில ஏன் எங்கவேணா....ஒரு பயனும் பெண்ணும் எவ்ளோ கூட்டம் இருந்தாலும் பேசாம ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டே இருப்பாங்க. ஆனா அவங்க கண்கள் நான்கும் பேசிட்டு இருக்கும். ஆனா புரிஞ்சுப்பாங்க...எப்படி இது சாத்தியம். சொல் இல்லை, எழுத்தில்லை, ஒலி இல்லை ஆனாலும் எதோ ஒன்னு ரெண்டு பேரு மனசுக்கு உள்ளேயும் ஓடுது. எப்படி புரிஞ்சுகிறாங்க? இதே போல பேச்சுத்திறன் இல்லாதவங்களும் எப்படி புரியறாங்க?" என்று சொல்லிவிட்டு சாய்ந்து உட்கார்ந்தான்.

எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.

மீண்டும் முன் நகர்ந்தான். ''இப்ப பச்சை மாங்காய் அப்படின்னு சொன்னா உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?" என்னையும் பார்த்து கேட்டான்.

எனக்கு ஏனோ பயோடெக் மஞ்சுளா ஞாபகத்துக்கு வந்தாள்.

"வாயில் எச்சில் ஊறுன மாதிரி இருக்கும், பல் கூசும்" என்றார் கணேசன்.

''அதேதான். புளிப்பு மாங்காய் அப்படின்னு சொன்னா பல் கூசுது. அப்ப புளிப்பு எங்க இருக்கு? எழுத்திலயா, சொல்லுலயா, உங்க வாயிலயா? இங்கதான் மாங்காய் இல்லையே" கைகளை ஆட்டினான்.

இப்போது கவுன்சலிங் நடப்பது யாருக்கு என்று எனக்கே சற்று குழப்பமாக இருந்தது.

"அதைத்தான் நான் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கேன். இது தொல்காப்பியத்தின் தொடர்ச்சி. இதை எழுத வேண்டும் என்று தொல்காப்பியருக்கு ஒரு சிந்தனை இருந்தது. அதைக் கனவுன்னும் சொல்லலாம்."

இப்போது அவனது ஆய்வு வழிகாட்டி சண்முகமும் அதிர்ந்து பார்த்தார்.

''கவிச்செல்வன்..நீங்க ஏதோ கனவு கண்டு குழம்பத்துல இருக்கீங்க...ஸ்ட்ரெஸ் அதிகமா இருந்தா இப்படித்தான். நிறைய யோசிக்காதீங்க...டேக் இட் ஈஸி...இந்த மாத்திரையை சாப்பிட்டு நல்லா தூங்குங்க" என்று சில மாத்திரைகளை கொடுத்தார்.

"அமுக்கப்பட்ட வேட்கைகள் கனவுகளில் நிறைவேறத் துடிப்பதால் அவை வரம்பற்று வெளிப்படும் அப்படின்னு ஃப்ராய்டு சொல்லியிருக்கிறார்'' என்று சண்முகத்திடம் கூறினார் கணேசன்.

"இல்ல சார்..நீங்க சொல்ற ஃப்ராய்டு, பலரோட கனவுகளை ஆராய்ச்சி பண்ணி 1900ம் வருஷம் interpretation of dreams எழுதினார். அதாவது ஃப்ராய்டு ரிசர்ச் பண்றதுக்கு முன்னயே பலருக்கு கனவுகள் இருந்திருக்கு..அதையெல்லாம் அவர் ஆராய்ச்சி பண்ணி இருக்கிறாரா? அப்படி பண்ணத்தான் முடியுமா? நீங்க அதைப் படிச்சுட்டு எங்கிட்ட பேசாதீங்க...கணேசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

''உந்தி முதலா முந்து வளி தோன்றி...அதாவது, வயிற்றிலிருந்து வரும் காற்றின் அழுத்தம் கழுத்து, நெஞ்சு, தலை போன்ற இடத்தில் நிலை பெறும். அண்ணம், நாக்கு, பல் என்று படுவதால் ஒவ்வொரு எழுத்தும் எப்படி தோன்றுதுன்னு தொல்காப்பியர் சொல்கிறார். அதுக்கு முன்னாடி அந்த ஒலிக்கு முன்பு இருந்தது என்ன? என்ன? டேபிளை ஓங்கி அடித்தான்.

பேப்பர் வெயிட்டை எடுத்து ஜன்னலில் வீசினான். சலார் என்று கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. அந்த சப்தத்தையும் உச்சரித்தான். கணேசனின் செல்போனை எடுத்து அவர் மீது வீசினான்.

விபரீதம் ஏற்படும் முன் நாங்கள் அவனைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம். அவன் அறைக்கு கொண்டு சென்று மாத்திரை சாப்பிட வைத்து தூங்க வைத்தோம்.

"அவங்க வீட்டுக்குச் சொல்லி அனுப்புங்க சண்முகம் சார். ஒரு மாதிரி ஆகிட்டு வர்றான். இப்படியே போனா சீரியஸ் ஆயிடும்" என்று அவருடன் பேசிக்கொண்டே கிளம்பிச் சென்றார்.

இரவு மெஸ்ஸுக்கு போகும் முன் அவன் அறையை எட்டிப் பார்த்தேன். நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். நான் மட்டும் சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து தூங்கிவிட்டேன்.

அதிகாலை திடீர் விழிப்பு வந்து எழுந்தேன். முதலில் கவியின் அறைக்குச் சென்றேன்.

கதவு திறந்து கிடந்தது. அறையில் அவன் இல்லை. புத்தகங்கள் இறைந்து கிடைந்தன. விடுதி முழுவதும் தேடினேன். கால்கள் வலித்ததுதான் மிச்சம். நண்பர்களை எழுப்பும் முன் மீண்டும் அவன் அறைக்குச் சென்று பார்த்தேன். திறந்த நிலையில் கட்டிலில் ஒரு நோட்டு கிடந்தது. அதில் ஏதோ எழுதி இருந்தான் கவி.

பொருளுக்கு முன் சொல், சொல்லுக்கு முன் எழுத்து, எழுத்துக்கு முன் ஒலி....ஒலிக்கு முன்...மௌனம். அமைதி. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பது மௌனம். வாய் பேசாதவனும் உணர்ந்து கொள்ளும் ஓர் உயர் தத்துவம் மௌனம். மௌனத்தில் எல்லாமும் உண்டு. அதை நான் எழுதுவேன். அதற்கு இலக்கணம் படைப்பேன். அதற்கு கீழே கவிச்செல்வன் என்கிற ஆதிகவி என்கிற தொல்காப்பியன் என்று எழுதியிருந்தான்.

எனக்கு ஏனோ அழ வேண்டும் போல் இருந்தது.

திண்ணை.காம் மே 14, 2009.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=10905121&format=html


Friday, May 1, 2009

சார்லஸ் அந்தோணிக்கு உணர்வுள்ள சீக்கியரின் கடிதம்

சர்வதேச சமூகம் உடனே தமிழீழ வீரர்களுக்கும், மக்களுக்கும் ஆதரவாக இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று ஒரு சீக்கிய எழுத்தாளர் www.worldsikhnews.com இணைய தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ள ஆங்கில கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

தமிழன் காசில் தின்று கொழுக்கும் துரோகிகள், பத்திரிகைகள் இதை படிக்கட்டும். ஒரு சீக்கியருக்கு இருக்கும் உணர்வும் மனிதாபிமானமும் மானங்கெட்ட தமிழினத் துரோக தமிழ் ஊடகங்களுக்கும், (தினம...ம்) தமிழன் நடத்தும் ஆங்கில பத்திரிகைக்கும் (தி சந்து ) இல்லையே.


அன்புள்ள் சார்லஸ் அந்தோணிக்கு,

உங்களது வாழ்வுரிமை, அடையாளம் மற்றும் விடுதலைக்கான போராட்டத்துக்கு எனது ஆதரவை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

நீங்களும் உங்களது மக்களும் உயிர் வாழ எப்படிப்பட்ட போராட்டத்தில் தற்போது இருக்கிறீர்கள் என்பதை பஞ்சாபில் நடந்த போராட்டங்களை அருகில் இருந்து கவனித்தவன் என்ற முறையில் நான் நன்கறிவேன்.

ஊடகங்களில், உங்கள் தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு நாள் நண்பர், மற்றொரு நாள் எதிரி. சில நாட்கள் அவர் பாதுகாக்கப்பட்டவர். இன்று அவர் கைவிடப்பட்டவர். சிலருக்கு அவர் தீவிரவாதி. பலருக்கு அவர் ரட்சகர். அவர் எப்படிப்பட்டவர் என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும் என்று விடுவதே நல்லது.

நான் போர்க் குணம் மிக்க இனத்தைச் சேர்ந்தவன். போராட்ட குணத்துக்கு பெயர் பெற்றவர்கள் சீக்கியர்கள். பஞ்சாபில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்களது வாயைத் திறக்கவில்லை என்றாலும், அச்சமின்றி அறிக்கை வெளியிடவில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களின் துணிச்சல், உறுதி, போர்த் திறன் ஆகியவற்றை அங்குள்ள பலர் பாராட்டுகின்றனர். இதை நீங்கள் நம்பியே ஆக வேண்டும். சமீப காலமாக உங்கள் போராட்டம் சந்தித்து வரும் வீழ்ச்சி பற்றிய செய்தியைக் கேட்டு பெரும்பாலான சீக்கியர்கள் கவலை கொண்டுள்ளனர்.

போர் பகுதியில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற சில மணி நேரங்கள் மட்டுமே அளித்த நிலையில், உங்கள் மக்களும், வீரர்களும் இலங்கை ராணுவத்தின் விஷ வாயு குண்டு வீச்சுக்கும், ரசாயன குண்டு வீச்சுக்கும் ஆளாகியுள்ள நிலையில் உங்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இலங்கையில் தமிழீழ மக்கள் படும் துன்பத்தால் மனம் நொந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். துன்பப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து மலைகளே அசைய வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. உங்கள் வலிகளையும் துன்பங்களையும் கண்டு கொள்ளாமல் மொத்த உலகமும் இயங்கி வருகிறது. அதற்கு 24 மணி நேர டி.வி. சேனல்களுக்கு நன்றி கூற வேண்டும்!.

தமிழீழ தாயகத்தை விட்டும், தமிழீழ வீரர்களை விட்டும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வெளியேறுவதைக் கண்டு எனது இதயம் அழுகிறது. இதை எழுதும் போது எனது உள் மன உணர்வுகளை வெளிப்படுத்த இது ஒரு வழி மட்டுமே என்ற குற்ற உணர்வே மிஞ்சுகிறது. இருந்தபோதிலும் ஒரு சீக்கியனாக என்னால் செய்ய முடிந்தது உங்களது போராட்டத்தில் உங்களுடன் சேர்ந்து கொள்வது மட்டுமே. எனது பிரார்த்தனையும், எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு உண்டு.

உலகில் உள்ள மற்ற அமைப்புகள் போன்று தமிழீழத்திற்கும் வரலாற்று ஆவணங்கள் இருந்தபோதும், இலங்கையில் துன்பப்படும் பல்லாயிரம் மக்களின் துயரை, வலியைத் துடைக்க பன்னாட்டு சமூகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா எப்படி சீக்கியர்கள், காஷ்மீரிகள், வடகிழக்கு மாநில மக்களின் போராட்டங்களை அழித்ததோ, அதே போல் இலங்கை அரசு உங்களது போராட்டத்தை பகல் நேரக் கொலை மற்றும் பேரழிவின் மூலம் நசுக்கி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் வீதிகளில் இறங்கி போராடி இருக்கும் பேச்சுகளைத் தொடங்க வைத்த புலம் பெயர் தமிழர்களின் போராட்டம் இதயத்தை வருடுவதாக உள்ளது. குறிப்பாக நார்வே தலைமையிடம் கூர்மையாக வாதாடிய புலம் பெயர் தமிழர்களால் நான் கவரப்பட்டேன்.

ஆஸ்லோவில் பிரதமரின் அலுவலகத்தை நார்வே வாழ் புலம் பெயர் தமிழர்கள் முற்றுகையிட்டு, அரசாங்கத்துடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது, சர்வதேச வளர்ச்சிக்கான நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைம், ‘என்னால் நார்வே தமிழர்களது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் என்னால் மாயவித்தை புரிய முடியாது’ என்றார். இதை செய்திகளில் நான் படித்தேன். நார்வே அரசின் என்ஆர்கே பத்திரிகை நிருபர்கள் இது குறித்து கேள்வி கேட்ட போது, ‘என்னால் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் மீண்டும் ஒருமுறை பேச இலங்கையில் போரை நிறுத்த ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்’ என்றார்.

தமிழ் எழுத்தாளர் கே.பி.அறிவானந்தம் எரிக்கின் இந்த பதில் குறித்து அளித்த பதில்:
‘மாய வித்தைகள் புரிய சோல்ஹைமால் முடியாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அவர் தவறுகள் செய்வதில் இருந்து தள்ளி நின்றிருக்கலாம். முடிந்தவற்றை செய்வது மட்டுமே ராஜதந்திரம் என்பதாக இருக்கலாம். ஆனால் முடியாததையும் நடத்திக் காட்டுவதுதான் விடுதலைப் போராட்டம்’. இந்த பதில் மிகச் சரியானது. ஒரு காவியம் போன்றது.

துணிவுக்கும், மனித உரிமை போற்றுதலுக்கும் ஸ்காண்டிநேவிய நாடுகள் பெயர் பெற்றவை. அதனால் தான் சமாதான பேச்சுக்கு நார்வேயை உங்கள் தலைமை தேர்ந்தெடுத்திருக்கும்.

‘முக்கியமான கருத்தை நார்வே உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டது. சமாதான பேச்சில் நடுநிலை வகித்ததால், புலிகள் ஆயுதங்களை கீழே போடுமாறு கோரிக்கை விடும் இணைத் தலைமை நாடுகளுடன் சேர்வதில் நியாயம் இல்லை. கொழும்பின் இனப்படுகொலை கரங்களுக்குள் வன்னி மக்களை செல்லுமாறு கூறுவது பெரும் கவலை அளிக்கிறது. அவர்களுடைய செயல்முறைத் தோல்விகளால், பன்னாட்டு அமைதித் தூதுவர் என்ற மதிப்பை நார்வே குறைத்துக் கொண்டுள்ளது. சுதந்திரமாகவும், வல்லரசுகளின் புவிசார் அரசியல் குறிக்கோளில் இருந்து விலகியும், உலக மனித குலத்துக்கு உண்மையாக நடந்து கொள்ள விரும்பியும் வருவதற்கு நார்வேக்கு இன்னும் நேரம் உள்ளது’ என்று நார்வேயின் தலையில் ஆணி அடித்தது போல் அறிவானந்தம் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து துன்பப்படும் தமிழீழ மக்களானவர்கள், இந்தியா மற்றும் உலக நாடுகளின் வெளிப்படையானதும், மவுனமானதுமான ஆதரவால் சிங்களப் பேரினவாத ராணுவத்திடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களின் சகோதரர்களின் அபயக் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 13 தமிழ் சகோதரிகள் உங்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்தியா முழுவதும் தேர்தல் களேபரத்தில் உள்ள நேரத்தில் அவர்களைப் பற்றி இந்த ஊடகங்கள் கண்டு கொள்கின்றனவா?

தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பொய்யாகவும் ஏமாற்றும் விதமாகவும் குரல் கொடுக்கின்றனர். அவர்கள் நேர்மையாக உங்களை ஆதரிக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்கு அவர்களைப் பற்றி நன்கு தெரியும்.

தமிழ் தலைவர்களைப் போன்று இந்தியத் தலைவர்களும் உங்களுடனும் உங்களுடைய லட்சியத்துடனும் தங்கள் சாணக்கியத் தனத்தை காட்டி வருவதாக நான் கருதுகிறேன். இந்தியா உங்கள் நண்பனா, எதிரியா என உலகத்தால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது. அந்த வகையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது. இலங்கை ராணுவத்துக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுப்பதைத் தொடர்ந்து கொண்டே ஒன்றும் தெரியாதது போல் மென்மையாக நடந்து கொள்கிறது.

நான் பாதுகாப்பு ஆய்வாளர் கிடையாது. ஆனால், நார்வே தலைமையிலான அமைதிப் பேச்சு துவங்கியபோதே உங்கள் மக்களின் போராட்டத்துக்கு பெரிய அடி விழுந்து விட்டது. சீக்கியர்கள், காஷ்மீரிகள், நாகா, மிசோ மக்களின் போராட்டத்திலும் இந்தியா இந்த முறையையே கடைபிடித்தது. 9/11 சம்பவத்துக்குப் பிறகு உலகின் புவிசார் அரசியல் மாற்றமும் உங்கள் போராட்டத்தின் தன்மையை மாற்றிவிட்டது. இதுவும் கூட நார்வேயின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

கடந்த ஆண்டு இதே நேரம் கொசோவா என்ற புதிய நாடு பிறந்தது. அதற்கு ஓராண்டு முன்பு கிழக்குத் தைமூர் விடுதலை அடைந்தது. 2009-ல் தமிழீழம் விடுதலை பெறும் என்று நினைத்தேன். இந்த ஆண்டு அது நடைபெறாது போல் இருந்தாலும் எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.

உங்களுடைய போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்துவிட்டது என்று உலக அளவில் ஒரு தோற்றம் உள்ளது. கள நிலைமைகள் குறித்த உண்மைகள் தெளிவாகத் தெரியாத நிலையில் இருந்தாலும் உங்கள் போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. உங்கள் போராட்டம் தொடர வேண்டும். உங்கள் சுதந்திரக் கொடியை தொடர்ந்து நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற கோத்தபய ராஜபட்ச, பச்சை அட்டைதாரர் பொன்சேகா ஆகியோரின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதில் முன்னாள் அமெரிக்க அரசு வழக்கறிஞர் புரூஸ் ஃபெய்ன் வெற்றி பெற்றுள்ளார் என்று நம்புகிறேன். நியூயார்க்கில் உள்ள இனப்படுகொலை தடுப்பு அமைப்பு உலகில் உள்ள 8 நாடுகளில் இனப்படுகொலை நடைபெறுகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் இலங்கையும் ஒன்று. உங்களது தாயகத்தில் இனப்படுகொலை நடக்கிறது என்பதை உலகிற்கு அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நாம் நம்புவோம்.

ஒரு நாட்டின் மக்களை காப்பாற்றுவதில் யாருக்கு பொறுப்பு உள்ளது என்ற ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டதில் எழுப்ப மெக்ஸிகோ தூதர் கிளாட் ஹெலன் முயற்சி செய்தார்.

தெற்காசியாவின் புவியியலையே மாற்றும் வல்லமை கொண்டவரின் மகன் சார்லஸ் அவர்களே, நீங்கள் உங்கள் போராட்டத்தை தொடர்வீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

நான் உங்களுக்கு கூறுவது இதுதான், கொசோவா விடுதலை அடைந்ததும் நான் கூறியதும் இதுதான். சீக்கியர்களின் 10-வது குரு, குரு கோபிந்த் சிங் அவர்களின் வாக்குதான் அது.

‘யாரும் உங்களுக்கு விடுதலையை தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள்; அதைப் பெற்றவர்கள், தங்களுடையை சொந்த முயற்சி, துணிவு, உறுதி, வலிமையாலேயே பெற்றார்கள்’ என்பது தான் அந்த வாசகம்.

விரைவில் அல்லது காலம் தாழ்த்தியோ நீங்கள் அதை அடைவீர்கள்.
இந்த தலைமுறையிலேயே நீங்களும் உங்கள் மக்களும் விடுதலையை அடைவீர்கள் என வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் தமிழ் மக்களுக்கு ஆசி வழங்கட்டும். அவர்களது துன்பத்தை நிறுத்தட்டும். இந்த உலகில் சுதந்திர மக்களாக அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கட்டும்.

உண்மையுள்ள,

ஜக்மோகன் சிங்
sbigideas@gmail.com