Sunday, April 14, 2013

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

Wednesday, January 30, 2013

திருப்பூர் புத்தகக் கண்காட்சி

ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு 4 வருடம் முன்பு ஜவுளிக் கடையில் தரும் கட்டை பையை எடுத்துக் கொண்டு காய்கறி வாங்கப் போவது போல் போய் வந்தேன். அதன் பிறகு புத்தகங்கள் வாங்குவது கண்காட்சியில் மட்டுமல்லாது கோவையில் உள்ள புத்தகக் கடைகளிலும் வாங்குவது அதிகரித்தது. மேலும் பிளிப்கார்ட் இணைய தளம் மூலமும் காலச்சுவடு பதிப்பக நூல்களை வாங்கினேன்.

இந்த முறை குறைந்த அளவிலேயே வாங்க வேண்டும் என்று போன திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் பை நிறைய வாங்க வேண்டியதாகிவிட்டது. இந்த முறை புனைவு பக்கம் அதிகம் செல்லவில்லை. அபுனைவு நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்களையே அதிகம் வாங்கினேன். தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை மொழிபெயர்ப்பு நூல்கள் காட்டிக் கொண்டே இருக்கின்றன. தமிழ்ச் சூழலில் இது போன்ற புத்தகங்கள் ஏன் எழுதப்படுவதில்லை என்பதற்கு விடை தெரியவில்லை. சென்னை புத்தகக் கண்காட்சியை விட திருப்பூரில் இட வசதி நன்றாக இருப்பதாக கடைக்காரர்கள் கூறினர். சுமார் 150 பதிப்பகங்கள் வந்திருந்தன. மேலும் கண்காட்சியின் இணையதளமும் நன்றாக உள்ளது. http://www.tirupurbookfair.com/

வாங்கிய புத்தகங்கள்

1. அனைத்தையும் குறித்த  சுருக்கமான வரலாறு- பில் பிரைஸன்- பாரதி புத்தகாலயம்.
2. மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி- டேவிட் ஹார்வி- என்சிபிஹெச்.
3. முரண்தர்க்க பொருள்முதல்வாதம் என்றால் என்ன?- ஓ.யாக்கோத்- என்சிபிஎச்.
4. சூழலியல் புரட்சி- ஜான் பெல்லமி ஃபாஸ்டர்- விடியல் பதிப்பகம்.
5. பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும்- எஸ்.ஜி.சர்தேசாய்- என்சிபிஹெச்.
6. வரலாறு என்றால் என்ன?- ஈ.எச்.கார்- அலைகள் வெளியீட்டகம்.
7. உலகாயதம்- பண்டைக்கால இந்திய பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு- தேவி பிரசாத் சட்டோபாத்யாயா- என்சிபிஹெச்.
8. சோஷலிசம்- இர்ஃபான் ஹபீப்- பாரதி புத்தகாலயம்
9. தகர் நிலையில் உலக நிதிமூலதனம்- என்.எம்.சுந்தரம்- பாரதி புத்தகாலயம்.
10. சிறியதே அழகு- இ.எஃப்.ஷுமாஸர்- எதிர் வெளியீடு.
11. அமைப்புமையவாதம், பின்அமைப்பியல் மற்றும் கீழைக் காவியஇயல்- கோபிசந்த் நாரங்க்- சாகித்ய அகாதெமி.
12. பண்படுதல்- ஜெயமோகன்- உயிர்மை பதிப்பகம்.
13. சிலுவையின் பெயரால்- ஜெயமோகன்- உயிர்மை பதிப்பகம்
14. மேற்குச் சாளரம்- ஜெயமோகன்- உயிர்மை பதிப்பகம்
15. அரசியல் இஸ்லாம்- யமுனா ராஜேந்திரன்- உயிர்மை பதிப்பகம்
16. ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம்- எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா- விடியல் பதிப்பகம்.
17. அரவிந்தர் அல்லது உணர்வின் சாதனைப் பயணம்- சத்பிரேம்- மீரா அதிதி, மைசூர்.
18. தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு- ஹொரேஸ் பி.டேவிஸ்- விடியல் பதிப்பகம்.
19. மார்க்ஸின் கொடுங்கனவு- டெனிஸ் கொலன்- காலச்சுவடு
20. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்- ஜெயமோகன்- கிழக்குப்பதிப்பகம்
21. தமிழக தத்துவச் சிந்தனை மரபுகள்- கி.முப்பால்மணி- என்சிபிஹெச்.
22. மார்க்சிய அரசியல் பொருளாதாரம்- வெங்கடேஷ் ஆத்ரேயா- பாரதி புத்தகாலயம்.
23. பண்பாட்டு அரசியல்- சி.சொக்கலிங்கம்- என்சிபிஹெச்
24. தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும்- நா.வானமாமலை- பல்கலைப் பதிப்பகம், சென்னை
25. அறிவு நிலைகள் பத்து- இரா.குப்புசாமி- தமிழினி
26. ரூஸோ- இரா.குப்புசாமி- தமிழினி.
27. நீட்சே- இரா.குப்புசாமி- தமிழினி.
28. தத்துவங்களின் தேரோட்டம்- எஸ்.ஏ.பெருமாள்- பாரதி புத்தகாலயம்

29. கிராம்ஷியின் சிந்தனைப் புரட்சி- இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், பி.கோவிந்தப்பிள்ளை- பாரதி புத்தகாலயம்
30.தெய்வம் என்பதோர்- தொ.பரமசிவன்- மணி பதிப்பகம், பாளையங்கோட்டை.
31. வழித்தடங்கள்- தொ.பரமசிவன்- மணி பதிப்பகம், பாளையங்கோட்டை.
32. ஒளவையின் உளவியல் & ப்ராய்டு-லெக்கானின் மன அலசல்- ஐ.க.பாண்டியன்- கார்முகில் பதிப்பகம், மதுரை.
33. மொழிபெயர்ப்பின் சவால்கள்- ஜி.ஜெயராமன், லதா ராமகிருஷ்ணன்- சந்தியா பதிப்பகம்.
34. சிந்துசமவெளி எழுத்து- அஸ்கோ பர்போலா- தமிழோசை பதிப்பகம், கோவை.
35. சவாரி விளையாட்டு- புனைகளம் இதழ் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்- தொகுப்பு-சி.மோகன், நற்றிணை பதிப்பகம்.
36. கனவுகளுடன் பகடையாடுபவர்- சர்வதேச சிறுகதைகள்- ஜி.குப்புசாமி- நற்றிணை பதிப்பகம்
37. முதலில்லாததும் முடிவில்லாததும்- சிறீ ரங்க- என்பிடி
38. அக்னி நதி- குர்அதுல்ஜன் ஹைதர்- நேஷனல் புக் டிரஸ்ட்
39. தர்பாரி ராகம்- ஷ்ரி லால் சுக்ல- என்பிடி
40. வனசாட்சி- தமிழ்மகன்- உயிர்மை
41. உண்மைக்கு முன்னும் பின்னும்- ப.சிவகாமி- உயிர்மை பதிப்பகம். 

Friday, December 21, 2012

பிருஷ்டத்தில் பதிந்த கவிதை

wooden-typeset


பள்ளி இறுதியாண்டு வகுப்பு முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு சிறிய அச்சகத்தில் மதிய நேரங்களில் நான் வேலை செய்தேன். என் தாய் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எனது முதலாளியுடனும் கவர்ச்சியான அழகுடைய அவரது மனைவியுடனும் மிகுந்த நட்புக் கொண்டிருந்தேன். அந்தப் பெண்மணி எனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து சென்றதால் என் தாய் அவருக்கு சிகை வெட்டிவிடவோ அல்லது அப்போதைய ஸ்டைலுக்கேற்றபடி சாயமடித்துவிடவோ செய்தார். ஒரு நாள் தனது கவிதைகளும் பிரசுரமாக வேண்டும் என்று நினைப்பவனைப் போல் அச்சுத் தொழில் தொடர்பான விஷயங்களை ஆர்வத்துடன் நான் கற்றுக் கொண்டேன். அப்போது சிறிது காலத்துக்கு ஈய எழுத்துருக்களை அச்சுக் கோர்க்கும் பொறுப்பில் இருந்தேன். முதலாளியின் மனைவி செனோரா லியோனார் அச்சுக் கூடத்துக்கு வரும்போதெல்லாம், எழுத்துருக்கள் வரிசை மாறியிருப்பதைப் பார்த்தால் அதை மீண்டும் சரியாக கோர்க்கும்படி கூறுவார் என்பதால் எப்போதும் கவனத்துடன் வேலை செய்தேன். அவர் அருகில் இருக்கும் போதெல்லாம் ஒரு வித சலனத்தை என்னுள் ஏற்படுத்தியதை அவரும் நன்றாகவே அறிந்திருந்தார். குழந்தைப் பருவத்தில் என் பொம்மைக் கார்களுடன் விளையாடும் போது அவரது கால்களிலோ இடுப்பிலோ உரசுகையில் ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகம் எனக்குப் புரியும் முன்பே செனோரா லியோனாருக்கு நன்றாகத் தெரிந்திருக்குமோவென்று இப்போது சந்தேகிக்கிறேன்.

வருடங்கள் கடந்த பிறகும் கூட அவரது அந்தச் சிரிப்பு அவரது கணவரின் அச்சுக் கூடத்தில் என்னை சிலிர்க்க வைக்கிறது. அச்சகத்துக்கு அவர் வருவது என்றாவது ஒரு நாள்தான் என்றாகிவிட்டால் அது என்னை மேலும் கலக்கமடைய வைத்தது. அந்த மாதிரியான சமயங்களில் எனது பருவ மனதில் தோன்றியதை கவிதை வரிகளாகக் கொட்டித் தீர்த்தேன். பின்னொரு நாள் அந்தக் கவிதைகளை அச்சுக் கோர்க்கும் கட்டைக்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாள் வேலை செய்யும்போது அதை எடுத்து ஒளித்து வைத்தேன். அதைச் செய்யாதே என என் மனம் அப்போது தடுக்கவில்லை.

இப்படியே மாதங்கள் கடந்தன. என் பள்ளி இறுதியாண்டுப் படிப்பும் கூட முடிவுக்கு வந்தது. அந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் முதலாளி கூறியபடி, அதிகப் பொறுப்புடனும் அதிக சம்பளத்துடனும் முழு நேர ஊழியருக்குண்டான மரியாதையுடன் எனது பணி மாறியது. அவரது மனைவி கோடை வெயிலின் உக்கிரத்தைச் சாக்காக வைத்து அறுபதுகளின் இறுதியாண்டுகளில் அணியப்பட்ட குட்டைப் பாவாடை போன்றும் குட்டையான சிவப்பு நிறக் கூந்தல் அலங்காரத்துடனும் அடிக்கடி அச்சுக் கூடத்துக்கு வந்து செல்ல ஆரம்பித்தார். அந்த சிவந்த கூந்தலாலும் அவரது வெளிறிய மேனியாலும் தூண்டப்பட்டு, நான் எழுதிய எழுத்துகளெல்லாம் ஆகச் சிறந்த கவிதைகளானது மட்டுமல்ல நீளமானவையாகவும் இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.


எவ்வித நெருடலும் இல்லாமல் அவரிடம் காட்டுவதற்காக நான் அச்சுக் கோர்த்தது ஒரே ஒரு கவிதை மட்டும்தான். அவரிடம் அதைக் கொடுக்க ஆயிரம் வழிகளில் சிந்தித்தேன். அதற்கு அவரது ஒரே பதில், என் கன்னத்தில் ஒரு முத்தமிடலாகவோ அல்லது விரல் நகங்களால் தாடையை தொடுவதாகவோ தான் இருக்கும் என்று கற்பனை செய்தேன்.

 மிகச் சரியாக ஒரு நாள் மதிய நேரம் அதற்கு வாய்த்தது. அது எப்போதும் அவர் வரும் வியாழக்கிழமை. அவரது கணவர் சில அச்சுக் காகிதங்கள் எடு்த்துவர வெளியே சென்றுவிட்டார். கோடை வெயிலில் வெளிறிய தோற்றத்துடன் சிவந்த கூந்தல் முடிந்து குட்டைப் பாவாடையுடன் செனோரா லியோனார் வந்தபோது, நான் கோர்த்து வைத்த என் கவிதையின் மீது மை பூசி அச்சடித்தேன். அப்போது அவர் என்ன சொன்னார் என்பது எனக்குச் சரியாக நினைவில்லை. என்னை அழைத்து கடையின் கதவை தாழ்போட்டு விட்டு பின்பக்கம் வரும்படி அவர் கட்டளையிட்டது மட்டுமே நினைவில் உள்ளது.


என் முன்னே நின்று, வைத்த கண் வாங்காமல், நான் நன்கறிந்த அந்த மெல்லிய சிரிப்பை உதிர்த்தார். பின்னர் என்னை முத்தமிட்டார். எனது கையை வழிநடத்தி அவர் உடலில் பரவச் செய்தார். குட்டைப் பாவாடையை தளர்த்தி உள்ளாடையை தளர்த்தச் செய்து உள்ளே பார்த்த கணத்தில் நான் உறைந்து போனேன். உடலின் கிளர்ச்சியான தூண்டலில் வெறியேறிய மனநிலையிலிருந்த நான் அவரை அப்படியே தள்ளிச் சென்று என் டேபிளின் மீது கிடத்தினேன். அவர் மீது ஏறி அப்படியே படர்ந்தேன். காமம் நிறைந்த கவர்ச்சியான செனோரா லியோனார் மோகத்தால் என்னை அணைத்து கிளர்ச்சியால் அதிரச் செய்தார்.


மன திருப்தியும் உணர்வும் எங்களைப் பிரிக்கும் வரை நாங்கள் அப்படியே வெகு நேரம் கிடந்தோம். மேசையிலிருந்து அவர் மேலே எழுந்தபோதுதான் என் கவிதையின் தலைவிதியை அறிந்து கொண்டேன். என் கவிதை அப் பெண்மணியின் புட்டத்தில் அச்சேறியிருந்தது. உண்மையைச் சொல்வதென்றால் அவரது கீழ் இடுப்பில் மிகத் தெளிவாகத் துவங்கிய என் கவிதை, விரிந்தபடியே றங்கி அகன்ற பெரிய பிருஷ்டத்தில் உருமாறி கரைந்து வெறும் மை மட்டுமே தெரிந்தது. எனக்கு நானே விளக்கம் அளிக்க முயற்சித்தாலும், அந்த சமயத்தில் நான் ஏன் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று இதுநாள் வரை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் மேலெழுந்து உடையணிந்த பின்னர் அன்பான ஒரு முத்தமிட்டபடி விடை பெற்றார்.


எனது கவிதை வரிகளின் ஈய எழுத்துருக்களை அந்த அச்சுக் கட்டையில் மீண்டும் ஒருமுறை கோர்க்க முடிந்தது அப்போது மட்டுமே. ஒரு வேளை எதிர்காலத்தில் மற்றொரு வேலையில் சேர்ந்தபின் ஓய்வாக இருக்கும்போது வேறு கவிதைகளை நான் எழுதக்கூடும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.


http://www.theparisreview.org இணையதளத்தில் வெளியான ரிகார்டோ சுமலாவியா எழுதிய First Impressions என்ற சிறுகதையின் ஆங்கில வழி தமிழாக்கம்: .ரகுநாதன்

நகங்களைச் சேகரிப்பவன்

Zoran Zivkovic
Zoran Zivkovic


திரு. ப்ரோஸ்கா வெட்டப்பட்ட தனது விரல் நகங்களை சேகரித்து வந்தார். தனது எட்டாவது வயதில் முதல் முதலாக தானாகவே விரல் நகத்தை வெட்டியதிலிருந்தே அவற்றை சேகரிக்கத் துவங்கிவிட்டார். அம்மாவின் உதவி இல்லாமலும் விரல்களைக் காயப்படுத்திக் கொள்ளாமலும் தானே நகங்களை வெட்டியதை நினைத்து அன்று அவருக்குப் பெருமையாக இருந்தது. இந்த வெற்றியின் நினைவாக அந்த பத்து குட்டி அரிவாள்கள் போன்ற நகங்களை சேகரித்து வைக்க முடிவு செய்தார்.  அம்மாவுக்குத் தெரிந்தால் நகங்களைச் சேகரித்து வைக்க விடமாட்டார் என்பதால் அவற்றை ரகசியமாக வைக்க வேண்டும் என்று விரும்பினார். ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் அந்த நகங்களைத் திணித்து அதன் மேல் ஒரு லேபிளை ஒட்டி தேதியை எழுதி வைத்தார். எழுத்துகள் இன்றும் கூட அவருக்கு இடைஞ்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் அந்த சிறிய வயதில் எண்களை எழுதுவதில் சமர்த்தனாகவே இருந்தார். பிறகு அந்தப் பையை மறைவான இடத்தில் வைத்தார்.

சரியாக இரண்டு வாரங்கள் கழித்து, மீண்டும் நகங்களை வெட்டியபோது சிறிது தயக்கத்துக்குப் பின் அந்தக் குட்டி அரிவாள்களை பிளாஸ்டிக் பையில் போட்டு தேதியை எழுதி வைத்தார். இவ்வாறு சேகரித்து வைப்பதற்குப் பின்னால் எந்த ஒரு நீண்டகாலத் திட்டமும் அவரிடம் அப்போது இருக்கவில்லை. ஆனால் அது பின்னாளில் முடிவு செய்யப்பட வேண்டியதாகிவிட்டது. வெட்டப்பட்ட நகங்களை தூக்கி வெளியே எறிவதை அவர் வெட்கக்கேடான விஷயமாக நினைத்தார். நகங்களை எறிவது தனது உடலின் ஓரங்கத்தையே வீசுவதற்கு ஒப்பானதாகப்பட்டது. வெட்டப்பட்ட நகங்களுடன் உடல் தொடர்பு இல்லையென்பது உண்மை என்றாலும், அதெல்லாம் அவற்றுடனான அவரது பிணைப்பபை சிறிதளவும் குறைத்துவிடவில்லை. அவை அவரிடமிருந்து துண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றை தன்னோடே அவர் பத்திரமாக வைத்திருக்க முடிந்தது. எட்டு வயதுக்கு முன்பு வரை அம்மா வெட்டிப் போட்ட ஏராளமான நகங்களை இனி என்றென்றும் மீட்க முடியாது என்பதை உணர்ந்தபோது வருத்தம் அவரை சூழ்ந்து கொண்டது.

வெட்டிய நகங்களை வரிசைப்படி சேகரிப்பதை ப்ரோஸ்கா தொடர்ந்தார். காலப்போக்கில் அந்த குட்டிப் பைகளை எங்கே வைப்பது என்ற பிரச்னை எழுந்தது. ஒவ்வோராண்டும் இருப்பத்தைந்து முதல் முப்பது பைகள் வரை சேர்ந்து கொண்டிருந்தன.  அவற்றை மறைத்து வைக்கும் காலணிப் பெட்டியும் நிரம்பிவிட்டது. அதுவுமில்லாமல் இரண்டு, மூன்று முறை அம்மாவின் கண்களிலும் பட்டுத் தொலையவிருந்தது. பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ வந்த 20 வயது வரை அவருக்கு இந்தத் தொந்தரவு நீடித்தது. அப்போது அவரிடம் சேகரமாயிருந்த நானூறு குட்டி நகப் பைகள் மூன்று காலணிப் பெட்டிகள் நிறைய இருந்தன. யாருக்கும் தெரியாமல் செய்யும் இந்த பழக்கத்தால் யாரிடமாவது மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சமின்றி அந்தப் பைகளை வரிசைக்கிரமப்படி அடுக்கி வைத்தார். அவரது ரகசியமான இச்செயல் அவரை சிறிதளவு கூட வெட்கப்படவைக்கவில்லை.

பொக்கிஷம் போல் பாதுகாக்கும் நகப் பைகளை சம்பந்தமேயில்லாமல் காலணிப் பெட்டிக்குள் கொண்டுபோய் வைத்திருப்பது அவமானகரமாகத் தோன்றியது. அதை தெய்வநிந்தனைக்கு ஒப்பான செயலாகவே கருதினார். தனது பிரத்யேகமான சேகரிப்புக்குத் தகுந்த மதிப்புமிக்க ஓரிடத்தை அவர் கண்டடைய வேண்டியிருந்தது. பெரிதாக வருமானம் ஒன்றும் ஈட்ட முடியாவிட்டாலும், நகங்களைச் சேகரிக்க தனித்துவம் மிக்க 500 சிகரெட் பெட்டிகளை அவர் எப்படியோ வாங்கிவிட்டார். பணக்காரனாக மட்டும் அவர் இருந்திருந்தால் அந்த வெள்ளியில் வடிக்கப்பட்ட சிகரெட் பெட்டிகளை வாங்கியிருப்பார். ஆனால் அந்தச் சூழலில் வெள்ளி முலாம் பூசப்பட்ட சிகரெட் பெட்டிகளையே வாங்க முடிந்தது. ஒவ்வொரு சிகரெட் பெட்டியின் மூடியிலும் தேதி பொறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெட்டிகளின் உள்ளே இளஞ்சிவப்பு நிறத்தில் இரண்டு வளைந்த வரிசைகள் கொண்ட பிரிவுகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் ஐந்து அரிவாள் வடிவ நகங்களை வைப்பதற்கேற்ற வரிசை உள்நோக்கி தள்ளியிருந்தது.

குட்டிக் குட்டியான அந்த நகப்பைகளை சிகரெட் பெட்டிகளுக்கு மாற்ற பல மாதங்களானது. மிகவும் சிக்கலான அந்த வேலையைச் செய்ய பொறுமையாக செயல்பட வேண்டியிருந்தது. தவறுதலாக மாற்றி வைத்து அடுக்கி விடுவோமோ என்ற பயத்தில் அதீத கவனத்துடனும் அசாத்திய பொறுமையுடனும் செய்து முடித்தார். ஒவ்வொன்றும் எந்த விரல் நகம் என்பதைக் கண்டறிவது மிகச் சிரமமாக இருந்தது.  இறுதியில் அவற்றை ஒரு வழியாக மிகச் சரியாகப் பொருத்தினார். வெட்டப்பட்ட நகங்களை அதற்குரிய சரியான இடத்தில் வைப்பதே சவாலானதாக இருந்தது. இது போன்று அடையாளப்படுத்தி வைப்பதில் தான் ஒரு நிபுணர் என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

சரியான ஓரிடத்தில் அந்தப் பெட்டிகள் வைக்கப்பட்டிருப்பதை ஒருவித கர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த சிறிய சஞ்சலம் மனதில் தோன்றி அலைக்கழித்தது. யாராவது திருடன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் இந்தப் பெட்டிகள் என்னவாகும்? வீட்டில் எந்தவொரு விலையுயர்ந்த பொருளும் இல்லையென்பதால் திருடன் நேராக சிகரெட் பெட்டிகளை நோக்கியே வருவான். அவனைப் பொருத்தவரை சிகரெட் பெட்டியில் ஒன்றும் இருக்கப்போவதில்லை என்பதால் அதை திறந்துகூடப் பார்க்கப் போவதில்லை. அவனுக்கு சல்லிக்காசு பிரயோஜனம் இல்லாத பெட்டி என்பதால் பின்னர் அவற்றை தூக்கி வெளியே எறி்ந்துவிடுவான். இந்த எண்ணம் ப்ரோஸ்காவை திகிலுறச் செய்தது. எப்பாடுபட்டாவது அந்தப் பெட்டிகளை காப்பாற்றியாக வேண்டும். உடனே ஒரு வங்கிக்குச் சென்று பாதுகாப்புப் பெட்டக வசதியைப் பெற்றார். தன்னிடமிருந்த சிகரெட் பெட்டிகளை அதில் அடுக்கத் துவங்கினார். கடைசிப் பெட்டியை அடுக்கி முடிந்த பின்னர்தான் அவர் ஆசுவாசமடைந்தார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வங்கிக்குச் சென்று இரண்டு புதிய சிகரெட் பெட்டிகளை பெட்டகத்தில் வைத்துப் பூட்டுவார். பெட்டகத்தில் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகை வெகு நேரம் ரசித்திருப்பார். அப்படியொரு நாளில் திடீரெனத் தோன்றிய எண்ணம் அவரது மகிழ்ச்சியை நிலைகுலையச் செய்தது. வரும் காலத்தில் தனது அனைத்து வெட்டப்பட்ட நகங்களையும் சேகரிப்பதற்கு ஏற்ற வகையில் அந்த பெட்டகம் போதுமானதாக இருக்குமா? என்ற சந்தேகம்தான் அது.

இன்னும் எத்தனை நகங்கள் சேகரமாகும் என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு கணிதவியலாளரான அவருக்கு அதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமான காரியமாகவும் இல்லை. ஒருவேளை தான் எண்பத்தேழரை வயது வரை வாழ்ந்தால் பாதுகாப்புப் பெட்டகத்தின் மேல் மட்டம் வரை சிகரெட் பெட்டிகள் நிரம்பிவிடும் என்று கணக்கிட்டார். அதற்கு மேலும் உயிருடன் இருந்தால் மேலும் பெரிய பெட்டகம் வாங்க வேண்டும். பெரிதாக கிடைக்கவில்லையென்றால் இதே போன்று வேறு ஒரு பெட்டகத்தை வாங்க வேண்டும். இந்தப் பிரச்னைக்குக் கூட ஒரு தீர்வு இருந்தது. ஆனால் இறுதிப் பிரச்னை அவ்வாறில்லை. இதற்கு முன் அவரது மனதுக்கு எட்டாத அந்தப் பிரச்னை திடீரென தலை தூக்கியது. தான் இறந்த பின்னர் அந்த நகச் சேகரிப்பின் நிலைமை என்னவாகும்? என்ற கவலைதான் அது.

அடுத்து அது போன்றொரு நிலைமைக்கு முடிந்தவரை விரைவில் தயாராக வேண்டும். கட்டுறுதியான உடலமைப்பைக் கொண்டிருப்பதால் தற்போதைக்கு மரணம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும் நோய் மட்டுமே மரணத்தைத் தருவிக்கும் என்று சொல்ல முடியாது. இயற்கை நமது கட்டுப்பாட்டையும் மீறி அழி்ப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது. பத்திரப்படுத்த  அவர் எடுக்கும் முயற்சிகள் நிறைவேறுவதற்குள் திடீரென அவர் இறப்பது என்பதுதான் சேகரிப்புக்கு ஏற்படும் மிக மோசமான சூழ்நிலையாக இருக்கக் கூடும். அவர் இறந்த பின் சொத்துக்காக அவரது பாதுகாப்புப் பெட்டகம் திறக்கப்பட்டால் அது ரகசிய சேகரிப்பை தேவையில்லாமல் பகிரங்கப்படுத்தி விடும்.

ஏதாவது செய்து அதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். ஆனால் எப்படி? ஒருவேளை, மற்றொரு பாதுகாப்புப் பெட்டகத்தை அநாமதேயப் பெயரில் வாடைக்கு எடுத்துவிட்டால், தான் இறந்த பிறகும் கூட அந்தப் பெட்டகம் திறக்கப்படாமல் இருக்குமல்லவா? ஆனால் வாடகைக் காலம் முடிந்த பிறகு பெட்டகம் திறக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், ஒரு பெட்டகத்தை மிக நீண்ட காலத்துக்கு வாடகைக்கு எடுத்துவிடுவதுதான் சரியாக இருக்கும். அப்படியானால் ஒரு நூற்றாண்டா அல்லது ஓராயிரம் ஆண்டா? நீண்ட காலம் என்பது எத்தனை ஆண்டுகள் என்பதில் குழப்பம் சூழ்ந்தது. வங்கியிலோ அதிகபட்சம் 25 ஆண்டுகளுக்கு மட்டுமே வாடகைக்குத் தர முடியும் என்று கூறிவிட்டார்கள்.

நிச்சயமாக அது அவருக்குப் போதுமானதாக இல்லை. வங்கியிலிருந்து துவண்டு போன மனதுடன் வெளியில் வந்த அவர் உற்சாகமற்ற மனநிலையிலேயே இருந்தார். அப்போது, அவர் கவனத்திலிருந்து பிசகிய மற்றொரு உண்மை நினைவுக்கு வந்த போது நிலைமை மேலும் மோசமானது. பிணத்தின் விரல்களில் உள்ள நகம் சிறிது நாளைக்கு வளருமே. அதை என்ன செய்வது?   குழந்தைப் பருவத்தில் இழந்த நகங்களை மீட்டெடுக்க முடியாமல் போனது போல எதிர்காலத்திலும் இழந்துவிட அவர் தயாராக இல்லை. அதற்கான பாதுகாப்பை அவர் உறுதி்ப்படுத்த வேண்டும். மிக முக்கியமான மாதிரி ஒன்றை அந்தச் சேகரிப்பு இழக்க வேண்டுமா?  கூடாது.  அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? இறந்த பிறகு கல்லறைக்குள் சென்று நகங்களை வெட்டவும் முடியாது. தனக்குப் பின் தனது விரல் நகங்களை வெட்டும் பொறுப்பை யாரிடம் விடுவது?

இந்த சிக்கல் அவர் மனதை விட்டு அகலவுமில்லை, அதற்கொரு தீர்வைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. பிறகொரு நாள் மழைக்கால மதிய நேரம் அந்த திடீர் ஞானம் அவருக்குத் தோன்றியது. அது ஒரு கணித சூத்திரம் போல மிக எளிதாகவும், பிரமாண்டமான நேர்த்தியையும் கொண்டிருந்தது. மனம் ஆனந்தக் கூத்தாடுவது போலிருந்தது. தான் ஆனந்தப்படுவதை யாரும் கவனிக்காவிட்டாலும் மிகச் சிறந்த பழக்க வழக்கங்களைக் கொண்ட கனவான் போல அதிலிருந்து விலகியே இருந்தார்.

மரணம் மட்டுமே தன் பாதையில் குறுக்கிடும் முக்கியமான தடை என்றால் அதைத் தாண்ட இறுதியான தீர்வு ஒன்று மட்டுமே உள்ளது. திரு. ப்ரோஸ்கா அந்த இறுதியான முடிவை எடுத்தார்.

அது- “தான் ஒரு போதும் சாகக் கூடாது என்பதுதான்”!

தமிழில்: க.ரகுநாதன்
 

பி.கு.: செர்பிய எழுத்தாளர் ஜோரன் ஜிவ்கோவிக் எழுதிய Twelve Collections and the Teashop  தொகுப்பில் உள்ள Fingernails என்ற கதையின் தமிழாக்கம்.
ஆங்கிலத்தில்- அலைஸ் காப்பில் ஓசிக்