Pages

Monday, April 11, 2022

நீதிக் கதை- லூயிஸ் க்ளக்



இரு பெண்கள் ஒரே உரிமைக்காக
அறிவுசான்ற அரசனிடம் வந்தனர். இரு பெண்கள்,
ஆனால் ஒரே ஒரு குழந்தை.
அரசனுக்குத் தெரியும்
ஒருவர் பொய் சொல்கிறார் என.
அவர் சொன்னது என்னவெனில்,
குழந்தையைப் பாதியாக
வெட்டுவோம்; அதனால்
யாரும் வெறுங்கையுடன்
செல்ல வேண்டுவதாகாது. அவர்
தன் வாளை உருவினார்.
பிறகு, இரு பெண்களில் ஒருவர்
தனது பங்கை தத்தம் செய்தார்:
இது தான் அறிகுறி, பாடம்.
ஒருவேளை
உங்கள் தாய்
இரு மகள்களிடையே பிய்க்கப்படுவதை
நீங்கள் பார்த்தால்
அவளைக் காக்க உங்களால்
என்ன செய்ய முடியும்
உங்களையே அழித்துக் கொள்ள
விரும்புவதைத் தவிர.
அவளுக்குத் தெரியும்
யார் உரிமையுள்ள குழந்தை என,
தாயைப் பங்கு போடுவதை
பொறுத்துக் கொள்ளாதவர்தான்.

-லூயிஸ் க்ளக். (கவிஞர், நோபல் பரிசாளர்-2020) #Wild_Iris தொகுப்பிலிருந்து A Fable என்ற கவிதை.

தமிழில்- க.ரகுநாதன்

சில்லவுட் புத்தர்



        நிழல் வெளியில் ஒரு வெளிக்கோட்டுருவத்தை ஏற்படுத்தும் சில்லவுட் போல மனதின் வெளிக்கோட்டுருவத்தை அதன் அமைதியைத் தருவது இந்தக் கவிதைத் தொகுப்பு. சில்லவுட் (silhouette) புத்தர் என்றால் நிழல்புத்தர் என்றும் மௌனமான, அமைதியான புத்தர் என்றும் பொருள் கொள்ளலாம். சித்ரன் ரகுநாத்  ஓவியர் என்பதால் இந்நூலுக்கு அழகிய அட்டையை அவரே வடிமைத்துள்ளார். கிண்டிலில் வெளியிடும் நூல்களுக்கு ஒரு அட்டைப் படம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் வடிவமைப்பு.
        கவிதைகளில் உணர்வோட்டங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அமைதியும் முக்கியம். இத் தொகுப்பில் உள்ள கவிதைகள் ஆழ்மன வெளியின் கூறுகளை கண்முன் காட்சிப்படுத்திடும் வல்லமை கொண்டவையாக உள்ளன. “புத்தர் பார்க்க அழகாக இருக்கிறார்” என்ற கவிதையில் புத்தனின் ஆழ்ந்த அமைதியும் அதனால் மனதில் தொற்றிக் கொள்ளும் அசைவின்மையும் சில நொடிகளுக்கே நீடிப்பதை, பார்க்க மட்டும் தான் சுலபம், அவரை பின்பற்றுவது சுலபம் அல்ல என வெளிப்படுத்துகிறார்.

//நான் புத்தரைப் பின்பற்றுவதில் லை.
ஆசை துறப்பது இயலாத காரியம்.
புத்தர் பார்க்க அழகாக இருக்கிறார்.
அமைதியாக இருக்கிறார்.
என் மனக்குரங்கின் பரபரப்பை
ஐந்து விநாடிகள் அடக்குகிறார்.
புத்தர் என்னிடம் இருக்கிறார்.
புத்தரிடம் ஏதோ இருக்கிறது.//

    காலம் உறைந்து நிற்பதை நாம் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு விடையாக உள்ளது “உறைந்த காலம்” கவிதை. கடிகாரம் நின்று போய்விட்ட நிலையில் அதன் காலத்தில் அது உறைந்து நிற்கிறது. அந்த நேரத்தில் நாம் செய்த/நினைத்த செயல்கள்/நினைவுகள் அப்படியே உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. ஒரு சிறு செய்கையில் அதனை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து காலத்துடன் கலந்துவிட வைக்க முடியும். ஆனால் அதற்கு நமது நினைவுகள் காலத்துடன் இணைந்து ஓட வேண்டும்.

//உறைந்த காலத்தை
உயிர்ப்பிக்கத் தேவை
ஒரு நிப்போ அல்லது எவரெடி.
1.5 வோல்ட் போதும்.
ஆனால் இருப்பு இல் லை.
கிடைக்கும்வரை
கடிகாரமும் நானும்
மாறி மாறிப்
பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்..//

    குழந்தைகள் குதூகலத்தில் செய்கின்ற சேட்டைகளால் நாம் அடையும் ஆனந்தத் தொல்லை நம் பால்யத்திற்கும் கடத்திச் செல்கிறது.

//…குழந்தைகள்
வளர்வதைப்
பார்ப்பதும் வெகு அழகு….//
//…உலகம் அழகாக
இருக்க வேண்டுமென்றால்
குழந்தைகள் வளராமல்
இருக்க வேண்டும்….//

    அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினோடுதான் இனி வரும் காலம் செல்லப் போகிறது. அதன் வளர்ச்சிக்கும் சென்று சேரும் இலக்கிற்கும் எல்லையே இல்லை. பயணங்களே தொழில்நுட்பங்களிடம் கையளிக்கப்பட்டுவிட்டது. இனி நாம் அதை விட்டாலும் அது நம்மை விடப்போவதில்லை.

//என் னை நீ உயிர்ப்பிக்கும்போது
உன் பயணங்களை
நான் உயிர்ப்பிக்கிறேன்.
நான் கூகிள் வரைபடத்தில்
ஜீப்பீயெஸ் தோய்த்த அம்புக்குறி.//
//…முன்னே நிற்கிறாள்.
மெல்லிய நுண்ணறிவால்
தானே கற்கிறாள்.
அவளின்றி அனுதினமும்
அசையாது இனி
பெயரைக் கேட்டால்
அலெக்ஸா என்கிறாள்.//

    நாள்தோறும் எத்தனை பறவைகளை விலங்குகளைப் பார்க்கிறோம். அழகாய் இருப்பனவற்றை நம் காமிராக்களில் பிடித்துக் கட்டி வைக்கிறோம். டிஸ்கவரி, நேட்ஜியோ சானல்களில் திரை முழுவதும் தெரியும் ஒரு பருந்து அல்லது பறவையின் பெருங்கண் ஒரு கணம் மூடி விழிப்பதை இந்த வரிகளில் கண்டு கொள்ள முடிகிறது. பறவைகள் பலவிதம் போல, அவற்றை படம் பிடிக்கும் மனிதர்களும் காணும் மனிதர்களும் பலவிதம் என்பது உண்மைதானே.

//…டியெஸ்ஸெல்லார் ஐரிஸ்
கண் சிமிட்டல்களில் சிக்கி….//

    இணையத்தில் என்னவெல்லாம் சாத்தியம் என்பது ஒருபுறமிருந்தாலும் அந்த சாத்தியக்கூறுகளை நிதர்சனப்படுத்தும் திறன் கொண்ட தொழில்நுட்பம் இல்லாமையைக் கிண்டலடிக்கும் கவிதை இது.

//…துரிதம் சாத்தியமில்லாத பீயெஸ்ஸென்னல்
கருணையற்ற ஜியோ.
நீ ஒரு தவிர்க்க முடியாத
அவஸ்தை!...//

    இயற்கையைப் பாடாத கவிஞர் இல்லை. வறட்சியில் சிக்கித் தவிக்கும் இப்பூமி அந்த ஆண்டில் ஒரே ஒரு மழைத் துளியை சொட்டினால் என்னவாகும்? அதை யார் ஏந்திக் கொள்வார்? அதையும் இந்த இயற்கைதான் பெறும். ஒரு ஒற்றை விதையிலை அமேசான் காட்டில் இருந்தபடி அதைப் பெற்றுக் கொள்கிறது.

//வறண்ட அமேசான் நதிப்படுகையில்
நிலம் கிளர்த்தெழுந்த விதையிலை
யாருமறியாமல் தன் கரத்தால்
ரகசியமாய் அதை வாங்கிக் கொண்டது.
நாலாயிரத்துக்குள் அது மரமாகும்//

    ஆண்களுக்கு மட்டும் என்ற கவிதை நினைவூட்டிச் செல்வதோ சிலிர்ப்பூட்டும் வரைபடக் கனவுகள். சப்வேயில் துப்பிச் சென்ற பான்பராக் வடிவங்களிலும் சில கவிதை வரிகள் வந்து செல்கின்றன. எதிரே வரும் வாகனத்தின் ஒளி கண்ணொளியை சில நொடிகள் இருளாக்குவது எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம்.

//வாய்களுக்கும் சுவர்களுக்குமான பந்தம்
சப்வே சுவரின் பான்பராக் துப்பல்கள்.//

    உலகம் நிகழ்தகவில் அடங்கி இருக்கிறது. எல்லாமே ஒருமுறை நிகழ்வதாக இருக்கிறது. அதே அனுபவம் அதே போன்ற நிகழ்வெனினும் அதில் வேறுபாட்டிற்கான சாத்தியங்கள் நிறைந்தே இருக்கும்.

//ஒருமுறைகளால் நிறைந்த உலகம் இது….//

    நம் கண் பார்வையின் துல்லியம் புற நிகழ்வுகளின் நிழல் வீச்சுகளைப் பொருத்து மாறுபடுகிறது. நமது பார்வை மனதளவில் இருந்தாலும் புற விஷயங்கள் அதை கட்டுப்படுத்துகின்றன.

//…கூட்டலும் கழித்தலுமான
எண்களால் நிச்சயிக்கப்படுகிறதென்
புறப்பார்வை.//

    தன் அகப் பார்வையை முன் வைக்கும் கவிஞர் எவ்வளவு முயன்றாலும் மன அமைதியை அகத்தின் ஒலியைக் கேட்கும்/ ஒளியைப் பார்க்கும் அளவு வெற்றி பெற இயலாத நிலையைக் கவிதையாக்குகிறார்.

//…இருப்புக்கொள்ளாத நிலையில்
இறை காண்பதெப்படி?
ஐம்புலன்களின் கதவுகளையும்
ஒரு சேரத் திறந்து வெளியேறி
பழகிய வழியில் கலந்தான்.//

    'சில்லவுட் புத்தர்' மனத்தின் வெளிக்கோட்டுருவமாக உருவாகி உள்ளது. அதன் சித்திரம் கவிதையை வாசிப்பவரின் மனதில் உருவாகி முழுமையடையக் கூடும்.


சில்லவுட் புத்தர் - சித்ரன் ரகுநாத்
கிண்டில் வெளியீடு
பக்கங்கள்: 44

தானும் அதுவாகப் பாவித்து

 


    கொதிக்கும் நீரில் எழும் குமிழிகள் ஒன்றோடொன்று மோதி உடைய, மற்றொன்று எழ அதன் அருகில் ஒன்று அமிழ என ஒரு பெரும் போராட்டம் நிகழ்வதைப் போல உணர்வுகளின் வெளிப்பாடுகள் நனவோடையாக ஓடும் கதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன் எழுதிய 'தானும் அதுவாகப் பாவித்து' சிறுகதைத் தொகுப்பு. எரியும் அடுப்பை அணைப்பது வரை குமிழிகளின் போராட்டம் நிற்காதது போல இந்நூலைப் படித்து முடிக்கும் வரை பாத்திரங்களின் உணர்வோட்டம் சொல்லுக்குச் சொல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கதா பாத்திரங்களின் நினைவுகளில் மூழ்கிச் சென்று ஊன்றிப் படிக்காவிடில் வெள்ளத்தில் இழுத்துச் சென்று 'கதை'சேர முடியாமல் போய்விடுவோம்.
        தினமணிக் கதிர், ஆனந்த விகடன் உள்பட வார இதழ்களில் இவரின் சிறுகதைகள் அவ்வப்போது படித்திருந்தாலும் தொகுப்பாகப் படிப்பது அலாதியான வாசிப்பனுபவம் தருகிறது. நூலகத்தில் இந்நூல் என் கையில் அகப்படவே ஆசிரியர் பெயரைப் பார்த்தவுடன் எடுத்து வந்து வாசித்துவிட்டேன். மொத்தம் 18 சிறுகதைகள் உள்ளன.
கண்ணகி: கணவனுக்காக நீதி கேட்டாள் சிலப்பதிகார கண்ணகி. வீரபத்திரன் என்ற பயந்த கணவனுக்காக நாயிடம் கல்லெறிந்து ஆவேசமடைகிறாள் மனைவி.
உறவுப்பாலம்: பால்ய கால மனமயக்கம் காதலாக மனதில் நிற்கிறது. அது இனக் கவர்ச்சியா இல்லையா என்பது நிகழ்வுகளின் தொடர் விளைவைப் பொருத்தது. தன் மனதில் நின்றவள் மணமாகி நகரம் சென்று மீண்டும் மகனுடன் ஊர் வருகிறாள். அவனுக்கு சைக்கிள் கற்றுத் தருவதன் மூலம் சிறுவனுக்கும் இவனுக்கும் இடையில் ஒரு உறவு ஏற்படுகிறது.
சாகசம்: ஊருக்கு ராசாவானாலும் அம்மாவுக்குப் பிள்ளை என்பார்கள். ஊரைவிட்டுப் போய் சர்க்கஸில் சாகசம் செய்யும் அவனை அப்பாவுக்குப் பிடிக்காது. ஊருக்கருகே வந்து சாகசம் செய்து விழுபவனைப் பார்த்து அய்யோ எனப் பதறுகிறாள் தாய்.
ஊர் மாப்பிள்ளை: ஒரு பந்த்-ஐ முன் வைத்து எழுதப்பட்ட கதை. பேருந்து நிலையத்தில் ரிவர்ஸ் வரும் பேருந்துகளுக்காக விசில் ஊத வைக்கப்படுகிறான் மனநலம் குன்றிய ஒரு ஆதரவற்றவன். பந்த் அன்று எதற்காக ஒருவரும் சாலையில் நடமாடவில்லை என நினைக்கும் அவன் திடீரென வரும் வாகனத்திற்கு விசில் அடிக்கிறான்.
நாடடங்கு காலத்தில் இவர்கள் எல்லாம் வயிற்றுக்கு என்ன செய்திருப்பார்கள்? எங்கு போயிருப்பார்கள்?
துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை: கைம்பெண், தன் மகளுடன் கோயிலில் இருக்கும் போது மின்தடை; யாரோ முத்தமிட உளக் கிளர்ச்சி அடைகிறாள். அவனைக் காணவில்லை. பின் தொடர்ந்தானா? கல்லூரி வயது மகள் இருக்க நான் என்ன அவ்வளவு அழகா? இத்தனை நாளில்லா காமம் இப்போது வருவதேன்? ஒரு சுவாரசியமான முடிவு.
ODI விளையாடு பாப்பா: கிரிக்கெட்டும் வாழ்வும் ஒன்று சேர்ந்து பயணிக்கும் கதை. "எந்தப் போட்டியையும் சௌகர்யமாக ஜெயித்ததே இல்லை நம் மக்கள்". டெஸ்ட் மேட்ச் வாழ்க்கை ODI ஆகி 20-20 போல திடீரென முடிகிறது.
பெண்ணிடம் ரகசியம்: "ஒவ்வொரு பெண்ணிடமும் எத்தனை ரகசியங்கள்..." மனைவியின் தங்கையை தன் தம்பிக்கு கல்யாணம் செய்து வைக்க கேட்கிறான் கணவன். "அவன் உனக்கு மகன் மாதிரின்னு நீயே சொன்ன..."// "அவன் அப்படி நினைக்கலியே" என்கிறாள். பெண்ணிடம் ரகசியம் ஏராளம் தான்.
ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்: விளிம்பில் வாழும் மனிதர்கள். மனைவி போன பின் ஊர் பேர் தெரியாத கிழவியுடன் எதிர்பார்ப்பில்லா அன்பு. சாராயம் குடித்து இறந்த தன் மகனை இவன் வடிவில் பார்க்கிறாள். இவனைக் குடிக்க வேண்டாம் என்கிறாள். அவளும் இறக்க, அதை மறக்க குடிக்கச் சென்றவன் ஏனோ உடைத்துவிட்டு வெளியேற கிழவி சிரிக்கிறாள்.
மூக்குத்திப்புல்: ஹைக்கூ கவிதைகள் ஊடே பயணிக்கும் கதை.
ஒளிந்திருப்பவனின் நிழல்: கோயிலுக்குச் செல்லும் தாத்தா இறைவனை வேண்ட பேரன் வெளியே கல்யானை மீதமர்ந்து அதனோடு பேசுகிறான். யார் ஒளிந்திருக்கிறார்கள்? எதனுள் ஒளிந்துள்ளார்கள்? அதன் நிழல் நம் மனம் மீது விழுகிறதா? தத்துவார்த்தமான கதை.
மிகை: தன் அழகின் பெருமையில் மிதந்து கிடக்கும் பெண். குணநலன் மிகுந்தவனை திருமணம் செய்து கொள்ளும் முன் அவர்களுக்குள் நிகழும் ஓடிப் பிடித்து விளையாடும் உரையாடல்.
புள்ளியில் விரியும் வானம்: தனிமையில் பள்ளிப் படிப்பு, பின் கல்லூரி, பின் வேலை. இந்த வாழ்வின் அர்த்தம் என்ன என்ற இருத்தல் கேள்வி. பெருளைத் தேடும் பொருளற்றதா இவ்வாழ்க்கை என நினைக்கையில் தனியே ஒரு வேப்ப மரம் அந்த தெருவிற்கே நிழல் தருவதன் சிறப்பு விடையாகிறது.
ஆழ்வார்களும் நாயன்மார்களும்: திரை நட்சத்திரங்களுக்கு பிளக்ஸ் போர்டு வைத்து தங்கள் படங்களை வரிசையாகப் போட்டுக் கொள்கிறார்கள். புரட்சி, கடவுள் மறுப்புக் கொள்கை, சாதி மறுப்புத் திருமணம் என பாதை மாறிய தன் மகனை வெறுத்தாலும் தன் மகன் திரை நட்சத்திரம் பெயரில் அன்னதானம் போடுவதில் பெருமைதான். அதே மகன் தன் படத்தை வினைல் போர்டில் பெரிதாகப் போட்டு பேரன் பெயர் சூட்டு விழாவிற்கு அழைத்து அவர் பெயரையே வைக்கச் சொல்வதில் பெருமிதமும் பூரிப்பும் தான்.
சொல்: எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறது தொல். சொல்லதிகாரம். உயிர் குறித்தன என்கிறது இக்கதை. மனித மனத்தின் நனவோடை கதை சொல்லல் போல சொல்லின் நனவோடை இக்கதை. சொற்கள் பேசத் துவங்கினால் என்ன ஆகும்? நூலக அடுக்குகளில் காலங்காலமாக யாராலும் எடுத்துப் படிக்கவேபடாத நூற்கள் ஏராளம். யாருக்கானவை அவை? யாராலும் பொருட்படுத்தவே படாத மானுடர்களைப் போல அவை ஏங்கித் தவிப்பதன் கதை. இளம் வாசகன் முதல் வயதான வாசகன் வரை காலடி ஓசையை வைத்தே கண்டு கொள்கின்றன. முன்பு என்றோ ஒரு நாள் வந்து அடுக்குகளின் பின்னால் முத்தமிட்ட சோடிகளில் அவன் மட்டும் பின்பொரு நாள் வந்து தன்னை எடுத்து சத்தமாக வாசிக்கும் போது 'காதல்' எனும் சொல்லும் கண்ணீர் உகுக்கிறது.
தாய்மடி: "இப்படித்தானே எதோ பதற்றத்தில், பயத்தில் ஒரு இனத்தையே போர் என்று அழிக்கிறார்கள்" ஈழப் போரில் சிக்கி உறவு, உடமை இழந்தவனின் குரல்.
    ஏராளமான நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்கள், திரட்டு நூல்கள் படைத்துள்ளார்.
    தானும் அந்தக் கதை மாந்தர்களாக, நிகழ்வுகளாகப் பாவித்து படைக்கப்பட்ட கதைகள். இவரின் மற்ற படைப்புகளையும் படிக்கத் தூண்டிய தொகுப்பு இது.

நூல்: தானும் அதுவாகப் பாவித்து

ஆசிரியர்: எஸ். ஷங்கரநாராயணன்
சொல்லங்காடி பதிப்பகம் (2012)
விலை: ரூ.120. பக். 207

பினாச்சியோ




    எங்கள் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் கொடுத்துச் சென்ற படக்கதைகள் நிறைந்த ஒரு மாத இதழைத் தேடி எங்கள் சிற்றூரில் இருந்த பெட்டிக் கடையில் விசாரித்த போது எனக்கு 8 வயது இருக்கலாம். அப்போது வியாசபாரதம் என்ற நூல் ஒன்றையும் அவர் கொடுத்திருந்தார். அதை கொஞ்சம் பக்கம் படிக்கும் முன்பே திரும்ப வாங்கிச் சென்றார். அதற்குப் பதிலாக அவர் அளித்தது தான் அந்த இதழ். பச்சை வண்ணப் படக்கதையில் முயலும் மையும் பேசியது ஆனந்தம் அளித்தது. இதழின் பெயர் பூந்தளிர். அது கிடைக்கவே இல்லை. பின்னர் அம்புலிமாமா, பாலமித்ரா என வாசிப்பு விரிந்தது.
    சிறுவர் கதைகள் நீதி கூறுவதாகவும் அறிவுரைக் கதைகளாகவும் ஒரு ஊரில் ஒரு ராஜா எனத் துவங்குவதாகவும் இருக்கும். பதின்ம வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமல்லாது தீவிர இலக்கிய வாசகர்களின் வாசிப்புக்கு ஏற்ற உலகப் புகழ்பெற்ற நூல் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. கார்லோ கொலோடி எழுதிய பினாச்சியோ. தமிழில் அற்புதமாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார் கவிஞரும் எழுத்தாளருமான யூமா.வாசுகி.
    பெரும்பாலான சிறுவர் கதைகள் கதையை விவரித்தபின் எனவே அன்புக் குழந்தைகளே நாம் இப்படி செய்யக் கூடாது என்பதாக முடியும். ஆனால் பினாச்சியோவில் கதை ஓட்டத்தில் நுட்பமான விவரணைகளின் இடையே தனது அறிவுரைகளைச் சேர்த்துள்ளார் கார்லோ. பெற்றோரை மதிக்காத, புத்தக வாசிப்பை விரும்பாத, பள்ளிக்குச் செல்ல விரும்பாத, பொய் பேசும், ஏமாற்றும் குழந்தைகள் மிகுந்த துன்பம் அனுபவிப்பர் என்னும் நீதி தான் கதையின் மையம்.
    பினாச்சியோ (பினோக்கியோ என்கிறது விக்கி) ஒரு மரபொம்மையாக இருந்து சிறுவனாக மாற முயற்சிப்பவன். ஆனால் அதற்காக அவன் படும் துன்பங்களும் இருளின் முடிவில் எழும் ஒளிபோன்ற தீர்வுகளுமே இக்கதையை செவ்வியல் தன்மை கொண்டதாக ஆக்கியுள்ளது.
    கெபட்டோ எனும் தச்சர் ஒரு மரக்கட்டையை பொம்மையாக செதுக்க அது பேசத் துவங்குகிறது. பொய் பேசினால் அதன் மூக்கு வளர்ந்து சென்று சுவரில் இடிக்கிறது. பள்ளிக்குச் செல்லும் வழியில் பொம்மலாட்டம் பார்க்கிறான். அங்கு அந்த பொம்மைகளுடன் விளையாடுகிறான். அங்கிருந்து வெளியே செல்லும் போது அவனிடம் இருந்த தங்க நாணயங்களைத் திருட நரியும் பூனையும் திட்டம் போட்டு ஏமாற்றுகின்றன. இதற்கிடையில் பினாச்சியோவைத் தேடி கெபட்டோ அலைகிறார். ஒரு மரத்தில் அவனைக் கட்டித் தொங்கவிடுகின்றன நரியும் பூனையும். அப்போது நீலநிறத் தலைமுடி கொண்ட தேவதை வந்து காப்பாற்றி நல்ல பையனாக இருப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. அவளை அம்மாவாக ஏற்கிறான். மீண்டும் அங்கிருந்து செல்லும் வழியில் சிறுவர்களை எப்போதும் விளையாடி மகிழும் முட்டாள்களின் தேசத்திற்கு ஒரு வண்டிக்காரன் அழைத்துச் செல்வதாக பினாச்சியோவின் நண்பன் ரோமியோ என்கிற மெழுகவர்த்தி சொல்கிறான். அங்கு சென்றபின் இருவரும் கழுதையாகின்றனர். ஒரு வியாபாரியிடம் விற்கப்பட்டு அவனிடமிருந்து தப்பித்து கடலில் ஒரு மீன் வாயில் சிக்குகிறான். அங்கே அவனது தந்தை கெபட்டோவை சந்தித்து தப்புகிறான். மெழுகுவர்த்தியின் முடிவு சோகமயமானது. இறுதியில் பினாச்சியோ ஒரு சிறுவனாக உருமாறுகிறான்.
    இத்தாலியில் பிறந்த கார்லோ மதக் கல்வி பெற்றவர். இத்தாலிய சுதந்திரப் போரில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். 1848ல் தொடங்கிய இவரது பத்திரிகை 1849ல் தடை செய்யப்பட்டது. குழந்தைகளுக்கான அதிபுனைவுக் கதைகளை எழுதினார். 1881ல் பினாச்சியோவின் முதல் அத்தியாயம் பிரசுரமானது. 1882ல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாகி உலகப் புகழ் பெற்றது. 2012ல் தமிழில் வெளியானது.
    இந்தக் கதை திரைப்படங்களாகவும் வந்துள்ளன. 1940ல் வால்ட் டிஸ்னி சார்பில் அனிமேஷன் அதிபுனைவு சாகசப் படமாக வந்துள்ளது. உலக இலக்கிய வாசகர்கள், குழந்தைகளைக் கவர்ந்த Pinocchio வின் கதை திரைப்படமாக 2020 கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது.

    எங்கே கதைவெளி விரிகிறது எங்கே அறிவுரை கூறப்படுகிறது எனப் பிரித்தறிய முடியா அதிபுனைவு சாகச நாவலான பினாச்சியோ சிறுவர்கள் மட்டுமன்றி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.

நூல்: பினாச்சியோ
கார்லோ கொலோடி
தமிழில்: யூமா. வாசுகி
பாவை பப்ளிகேஷன்ஸ்

பக். 208, ரூ.125 (2012ல்) 

வேட்டையும் வேட்டை நிமித்தமும்



    காட்சிவழி புலனாகும் காட்டில் நிகழ்ந்தேறும் வேட்டையின் படப்பிடிப்பல்ல. வரிகளால் சூழ்ந்து சிறிது சிறிதாக மனதில் முளைத்து எழும் காட்டில் இரைதேடி அலைந்த தொல் மனதை உணரச் செய்யும் கவிதைத் தொகுப்பு இந்த வேட்டுவம் நூறு.
    தன் கிழங்குக்குப் போட்டியாக வந்த விலங்கை அல்லது தன்னைத் தாக்க வந்த விலங்கைத் திருப்பித் தாக்கியதில் ஆதி மனிதன் நாவில் பட்டுத் தெறித்த அந்த முதல் இரத்தத் துளியில் வேட்டையின் முதல் ருசி முளைத்திருக்க வேண்டும்.
    வேளாண் சமூகம் உருவான பின் அந்த வேட்டைச் சங்கிலி கொஞ்சம் கொஞ்சமாக அறுபடத் தொடங்கி இன்று காணாமல் போனாலும் அதன் அறுபடாக் கண்ணி நம் மனதில் இன்னும் இருப்பதற்கான சான்றை கவிஞர் மௌனன் யாத்ரிகாவின் வேட்டுவம் நூறு கவிதைத் தொகுப்பில் உணர முடிகிறது.
    நம் மண்ணின் காட்டையும் அதில் நாம் பயின்ற வேட்டை மரபையுமே தன் கவிதைகளில் முன் வைக்கிறார். ஐவகை நிலத்தில் முல்லை, மருதம், முல்லை திரிந்த பாலையைச் சுற்றிய நிலத்தில் அம்புக்கு இரையான குறு விலங்குகளை தோளில் சுமந்தலைய வைத்துள்ளார் கவிஞர்.
    வேட்டைக்கான வழி முறைகளைச் சொல்வதெல்லாம் பணத்திற்கும் வீர சாகசத்திற்குமானதாக அல்லாமல் காட்டின் வளத்தைக் காப்பதற்கும் அதன் மூலம் தன் இருப்பை நிலைப்படுத்திக் கொள்ளவுமான 'நீ வாழ்ந்தால் நான் வாழ்வேன்' என்ற தொல்குடி பண்பாட்டின் எச்சமாக உள்ளது.
    வேற்றுயிர் தாக்கி உயிருக்குப் போராடும் சிற்றுயிர்களை சில நேரம் கருணை கொப்பளிக்கக் கொன்று விடுதலை செய்வதும் இயற்கைக்கு செய்யும் கைம்மாறாகவே நம் சமூகம் நினைத்து வந்துள்ளதைக் குறிப்பிடுகிறார் கவிஞர்.
    காமுறும் விலங்குகளைக் கண்டறியும் வேட்டுவர்கள் பேரன்பால் அதைக் கண்டு கொள்ளாமல் கிழங்கு அகழ்ந்து பசியாறுவதில் விழித்திருக்கிறது ஆதிச் சமூகத்தின் சூழலியல் மனம்.
    வேட்டையில் முன்னால் ஓடும் நாய் இரையைப் பல் படாமல் தூக்கி வரும் போது அதனுடன் நம் கால்களும் ஓடுகின்றன. காட்டிற்கு இயற்கை சமநிலையைப் பேண வேண்டும்; மனிதனுக்கோ பசி நீங்கி உயிர்த்திருக்க வேண்டும். இருவருக்குமான தேவை முயங்கும் புள்ளியில் நிலை கொள்கிறது வேட்டையின் வெற்றி. காடு கொடுக்க நினைத்தால்தான் மனிதனால் அதை அடைய முடியும்.
    காடு ஓர் அன்புள்ள ராட்சசன். அதன் மரப் பற்களிடையே ஒளிந்திருக்கிறது ஒரு கிராமத்திற்கான உணவு.
    வேட்டையின் நுட்பங்கள் பொதிந்த இக்கவிதைகள் இயற்கையைப் போற்றுகின்றன.
    காடும் காடு சார்ந்த இடத்தில், வேட்டையும் வேட்டை சார்ந்த நம் ஆழ்மனம் விழித்தெழச் செய்யும் அரும் கவிதைகள் இவை. தொகுப்பு முழுவதும் வரும் வேட்டை நாய் நம் மனம்தானோ என பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
    வியப்பளிக்கும் உவமைகள், படிமங்கள்.
//காட்டின் மானம் பெரிது//
//ஒரு முரட்டுப் பன்றியின் நிமிர்ந்த கோலம் போல் முறிந்த பனை//
//தப்பிக்க எல்லா வழிகளும் திறந்திருக்க தனியாக நிற்கிறது ஒரு விலங்கு// என்ற வரியில் அதன் மருட்சி தெரிகிறது.
//புரண்டு கிடக்கும் கறுத்த பாறைக்கு மடி நிறைய காம்புகள்...//
//எருக்கம் பூ மலர்ந்தது போல
புதர் மறைவில் இரு கண்கள்//
//வேட்டை நாயின் உமிழ்நீர் வழிந்து கல்லொன்று மலர்வதைக் கண்டேன்//
    தொகுப்பில் உள்ள கவிதைகள் காட்டில் வேட்டையாட அழைத்துச் செல்கையில் திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ஓவியங்கள் குருதி நனையக் கிடக்கும் இரையை காலடியில் துடிக்கத் துடிக்கக் காட்டுகின்றன.
    வேட்டையும் அதில் வழியும் குருதியும் அதன் கவிச்சையும் வீச நம் கைகளில் ஒரு ஈட்டியைக் கொடுத்து காண் என்றது கான் என்கிறார் கவிஞர்.
    காடிருக்கவே நாமிருக்கிறோம் எனும் கவிஞர் காட்டை அழிப்போர் வேரொடு கெடுவர் என்கிறார். இது கவிஞனின் சாபம் அல்ல. லட்சம் ஆண்டுகளாய் தொடரும் ஆதி மனதின் வலி. வேட்டுவம் ஆயிரமாகட்டும். ஆம், கவிதையில் மட்டும்.

வேட்டுவம் நூறு
மௌனன் யாத்ரிகா
லாடம் பதிப்பகம்
விலை: ரூ.200
பக்கம்: 144