Friday, December 21, 2012

அ.முத்துலிங்கம் எனும் அதிசயக்காரர்

சிறுவயது நினைவு ஒரு சங்கிலித் தொடர் போன்றது. ஒவ்வொருவருக்கும் தனது பால்ய கால மிச்ச நினைவுகள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அது நிகழ்வுகளின் கோர்வையாக இல்லாவிட்டாலும் வாழ்வில் நிகழும் சம்பவங்களின் இருப்பு அவ்வப்போது எழுந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த நினைவுத் தொடர் அறுபட்டுவிடாமல் அதை கோத்துக் கொண்டே செல்வது எல்லோராலும் முடிவதில்லை.

பால்ய கால நினைவுகள் ஒரு பழைய கறுப்பு வெள்ளை புகைப்படம் போல எல்லோரது மனதிலும் தொங்கியபடி இருக்கிறது. காலங்கள் மாறினாலும் அனுபவங்கள் ஏறினாலும் சூழ்ந்தழுத்தும் வாழ்க்கையிலிருந்து தப்பிச் செல்ல சிறுவயது நினைவுகள் எல்லோருக்கும் துணையாய் இருக்கின்றன. அந்த வாழ்க்கைக்குள், அந்தக் காலத்துக்குள் பின்னோக்கிச் சென்று முகிழ்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் ஒவ்வொருவருக்குள்ளும் ஊழித் தீயைப் போல எரிந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உறைந்துவிட்ட கடந்த காலம் அந்தப் புகைப்படம் போல மீட்டு வர முடியாததாகவும், ஒரு வழிப்பாதையாகவுமே இருக்கிறது. நினைவுகளால் மட்டுமே அதை தொட்டுப் பார்க்க முடிகிறது. அதற்கு மனதை விட வேறெந்தக் கருவியும் உவப்பானதாக இருப்பதில்லை.

ஏற்கெனவே நிகழ்ந்து விட்ட காலத்தை மனதில் மீண்டும் ஓட்டிப் பார்த்து அதை எழுத்தாக மாற்றிவிடும் வல்லமை ஒரு சிலருக்கே வாய்க்கிறது. அதிலும் வாழ்வை சுவாரசியமாகப் புனையும் திறமை குவிந்து கிடப்பது அ.முத்துலிங்கம் எழுத்துகளில்தான். எழுத்தாளர்கள் விரும்பும் எழுத்தாளராக விளங்கும் அ.முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” என்ற நாவல், சிறுகதைகளின் தொகுப்பா அல்லது புலம் பெயர்ந்த தமிழரின் நினைவு மீட்புக் குறிப்புகளா அல்லது கட்டுரைக்கும் புனைவுக்கும் இடையில் நிகழும் ஊடாட்டமா என்பது வாசிப்பவரின் அனுபவத்தைப் பொருத்து மாறுபடுகிறது.
படிக்கச் சுவாரசியம் என்ற பெயரில் துணுக்குகளையும் தேதிகளையும் சேர்த்து உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாறுகள் வெறும் ‘எழுதப்பட்ட’வையாகவே உள்ளன. ஆனால் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உண்மையில் ‘படைக்கப்பட்ட’ ஒரு வாழ்க்கை வரலாறாகவே உள்ளது.


46 தலைப்புகளில் புனையப்பட்ட இந்த உண்மை கலந்த நாட்குறிப்புகள் என்ற நாவல், ஈழத்தில் துவங்கி பாகிஸ்தான், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, கனடா என்று உலகம் சுற்றிச் சுழல்கிறது. இதில் வரும் மனிதர்கள் எல்லோரும் சுவாரசியமானவர்கள் என்பது மட்டுமல்ல தமிழ் படைப்புலகம் இதுவரை கண்டிராதவர்களாக உள்ளனர்.

உலகின் ஆதி மொழிகளில் ஒன்றான யேசு பேசிய மொழியான அராமிக் மொழி பேசும் சிகையலங்கார நிபுணர் தனியே தன் வீட்டுச் சுவற்றில் பேசி தாய்மொழி மறந்துவிடாமல் காப்பாற்றுகிறார். தனி நாடு இல்லையெனில் மொழியின் அழிவு நிச்சயம் என்று சொல்லும் அவர் அதற்கான காரணத்தை தர்க்க ரீதியாக விளக்குகிறார்.

சில குறிப்புகள் சத்தமில்லாமல் சிரிப்பதற்கென்றே எழுதப்பட்டவையோ என்று கருத இடமுண்டு.

அவரது அக்காவுக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்க வரும் வாத்தியார் அவரது ஐயாவிடம் படும்பாட்டைக் கூறலாம். ‘அக்காவின் சங்கீத சிட்சை’ யில் யாரோ இவர் யாரோ என்ற பாட்டை மெழுகுவர்த்தி போல உருகி அக்கா பாடிக் கொண்டிருக்கையில் ஒருநாள் “அது நான் தான்” என்று வீதியில் ஒருவன் சத்தமிட்டுச் சென்றதுடன் அந்தக் கீர்த்தனை ஐயாவால் தடை செய்யப்படுகிறது. பிரச்னை அதோடு நின்றபாடில்லை. அதற்குப் பின் வந்த ஒவ்வொரு பாடலையும் ஐயா சலித்துப் பார்த்து அதில் ஆண் பெயர் வருகிறதா என்று சந்தேகக் கண்ணால் பார்த்த பின்னரே பாட அனுமதிக்கிறார். பிறகு ஒருநாள் அக்கா சங்கீதத்தின் கரையை கண்டுவிட்டபடியால் அவரது சங்கீத வகுப்பு முடிவுக்கு வந்தது என்று எழுதுகிறார்.

ஒவ்வொரு நாட்குறிப்பின் துவக்கத்திலும் எழும் சுவாரசியம் இறுதியில் ஒரு சுருக் வரியுடன் அல்லது வியப்பு கலந்து வரியுடன் முடிவடைகிறது.
காதலியை தன் வசமாக்கியதால் நீ ஒரு முழுத் துரோகி என்று கத்திவிட்டுச் சென்ற பால்ய கால நண்பன் ஐம்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் கனடாவில் சந்திக்கிறான். அப்போது அவன் கோபப்பட்டு முத்துலிங்கத்தின் சட்டையைப் பிடிப்பதில்லை. அவசரமாக வெளிநடப்புச் செய்வதில்லை. மாறாக புன்னகைத்துச் செல்கிறார். காலம் அதன் திசையில் வரும் அனைத்தையும் மாற்றிவிடுகிறது. ‘துரோகியின் காதல்’ இல் வரும் மதியாபரணத்தைப் போல.

சியாராலியோனில் வேலை கிடைத்து அங்கு சென்று அலுவலகம் செல்ல படகில் பயணித்தபோது, இறக்கும் நிலையில் உள்ள தன் தாயுடன் வரும் ஆப்பிரிக்கன் ஒருவன், சூனியக்காரனிருந்தால் தன் தாயைக் காக்க முடியும் என்று கூறி அவளை ஆசிரியரிடம் விட்டுச் செல்கிறான். அவன் சென்ற சிறிது நேரத்தில் அவர் கைகளிலிருந்த முதியவளின் உயிர் பிரிகிறது. மாபெரும் துயரம் அவரைச் சூழ்ந்துவிட்ட நேரம் அது. ஆனால் அதை வாழ்க்கையிலிருந்து எடுத்து எழுத்தில் புனைவாக்கும்போது துயரத்தை எளிதாகக் கடந்து செல்கிறார். முழு டிக்கெட்டுக்கான பயண தூரத்தை அடையும் முன்பே பாதியில் டிக்கெட் எடுத்துவிட்ட அந்தக் கிழவியைப் பற்றி படகில் யாருமே அறிந்திருக்கவில்லை என்று அபத்த நகைச்சுவையாக அதைப் படைக்கிறார் சூனியக்காரன் என்ற கதையில்.

நல்ல வாசகர்கள் உள்ளவரை நல்ல புத்தகங்கள் வரும். நல்ல புத்தகங்கள் வரும்போது நல்ல வாசகர்களும் வருவார்கள். இதில் எது முதலில் என்பதுதான் தெரியவில்லை என்கிறார். சிறுவயதில் அம்புலி மாமா படிக்கத் தொடங்கி கல்கிக்கு வந்து புதுமைப்பித்தனில் வியந்து ஜேம்ஸ் ஜாய்ஸின் Dubliners இல் மூழ்கி தாமும் இவர்களைப் போல எழுத வேண்டும் என்று ஆவல் கொள்கிறார். வாழ்வின் அனுபவம் புத்தகங்களைத் தேடிச் செல்ல வைக்கிறது.

 புத்தகத்தில் பற்று வைக்கும் ஒருவருக்கு வேறு பற்று இருக்காது. ஆயிரம் புத்தகம் படித்தால் ஆயிரத்தோராவது புத்தகத்தில் வியப்பதற்கு விஷயம் குறைந்து கொண்டே வரும். ஆனால் தனக்கோ ஆர்வம் கூடிக் கொண்டே வருகிறது என்று அதிசயிக்கிறார். ஆனால் வாழ்நாள் குறைந்து வருகிறதே என்று வருந்துகிறார்.

நல்ல வாசகரா, நல்ல புத்தகமா எது முதலி்ல் என்பதற்கு யாரிடமும் பதிலில்லை. ஆனால் எது முதலில் நடந்தாலும் அது அதிசயம்தான். உண்மை கலந்த நாட்குறிப்புகள் அதிசயங்கள் கலந்தது.

2 comments:

நானாக நான் said...

ரகு, அ.முத்துலிங்கம் நிஜமாகவே ஒரு அதிசயக்காரர் தான். நானும் அவரின் சில புத்தகங்களை படித்திருக்கிறேன். மகாராஜாவின் ரயில் வண்டி -யில் ஆரம்பித்தது. நகைச்சுவையுடன் எழுத்து நடை இருந்தாலும் இடையில் கண்களில் கண்ணீர் கோர்த்து மனதை கனக்க வைக்கும் எழுத்து அவருடையது. அராமிக் மொழி பற்றி எழுதும் போது அவரின் ஆதங்கம் நமக்கும் தொற்றிகொள்வது இயல்பே. உண்மை கலந்த நாட்குறிப்புகள், அமெரிக்கக்காரி, அமெரிக்க உளவாளி, ஒன்றுக்கும் உதவாதவன் என படிக்க படிக்க சுவை குறையாத புத்தகங்கள். மேலும் எவ்வளவு முறை படித்தாலும் திகட்டாத புத்தகங்கள். ஆப்ரிக்கா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளுக்கு நாம் சென்று வந்த மாயை நம்மை தொற்றிகொள்வது உண்மை. அவருடைய வலைதளத்தின் நிரந்தர வாசகி நான்

க. ரகுநாதன் said...

புவியீர்ப்புக் கட்டணம் என்ற அவரது சிறுகதை தான் முதன்முதலில் திண்ணை.காமில் நான் படித்தது. ஆனால் அவர் மூத்த எழுத்தாளர் என்பது அப்போது தெரியாது. அந்தக் கதையிலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு....

பின்னூட்டத்துக்கு நன்றி தமயந்தி :)