அறிவது - அறியப்படுவது இரண்டும் சந்திக்கும் புள்ளியில் அறிதல் நிகழ்கிறது. எழுத்தாளன் - வாசகன் இருவரின் மனமும் சந்திக்கும் புள்ளியில் பிரதி தன்னைப் படைத்துக் கொள்கிறது. ஒரு பருப் பொருள் அதன் இருப்பை, பார்க்கும் மனதால் அறியத் தருகிறதா அல்லது உண்மையில் அது இருக்கிறதா என்பதை எதை வைத்து முடிவு செய்வது? பார்வைக் கோணத்திற்கு ஏற்ப அது மாறுகிறதா? இறுதியில் இன்மையில் முடிகிறதா? என பல கேள்விகளை எழுப்புகிறது இந்நூல்.
கருத்தை முன் வைத்து உருவான conceptual art எனும் இப் படைப்பு வாசகனை நோக்கி எழுதப்படாமல் வாசகனுடன் சேர்ந்து படைக்கப்பட்டுள்ளது என்பதில் இருந்தே இந்திரன் அவர்களின் படைப்பாற்றல், கலைத் தன்மை, ஆளுமை ஆகியவற்றின் உச்சநிலையை அறிய முடிகிறது.
இப்படி ஒரு படைப்பை தமிழ் வாசகன் மட்டுமல்ல உலக இலக்கிய வாசகர்கள் (மொழிபெயர்க்கப்பட்டால்) கூட செவ்வியலாக்கமாக கருதி வாசிப்பர்.
இப் படைப்பில் ஒரு கலை அமைதி தெரிகிறது. செகாவ் சிறுகதையை விஞ்சும் கதைகளும், மார்க்கேஸை போன்ற மாய யதார்த்தவாதம் நிரம்பிய கதையும் நவீன பாணி ஓவியங்களும், ஜென் தத்துவார்த்த நோக்கும் கொண்ட படைப்புகளும் எதிர் கவிதைகளும் என 156 பக்கங்களிலும் விரவி உள்ளன. நிறைகுடமே காலிக்குடம் என ஜென் கூறுகிறது என்பதாக நூலின் பின்னட்டையில் அவர் கூறுவது நூறு சதவீதம் உண்மை. அதன் காரணமாகவே இந்நூலை 3 முறை மறுவாசிப்பு செய்தேன்.
வாசகனே பெரியவன், அவனுக்ககாகவே ஒருவன் எழுதுகிறான், எழுதியபின் எழுத்தாளனும் ஒரு வாசகனே, the writer is dead ஆனால் பிரதி இருக்கும் வரை வாசகன் இருப்பான் என்று பல சிந்தனைப் போக்குகளை தன்னளவில் கொண்டுள்ள மிகச் சிறந்த படைப்பு இந்நூல்.
எப்படி இவரால் அனைத்து தரப்பு இலக்கிய வாசகனுக்கும் ஏற்ற நூலைப் படைக்க முடிந்தது என வியக்க வைக்கிறது. நூலின் அட்டை வடிவமைப்பு நூலின் வடிவமைப்பு அனைத்தும் உலகத் தரத்தில் உள்ளது. வாசித்து முடித்த பின் ஒவ்வொரு வாசகனும் ஒரு எழுத்தாளன் ஆக உருவெடுப்பது உறுதி.
உலகிலேயே சிறந்த புத்தகம்-இந்திரன்
பக்.: 156
யாளி பிரின்ட் பதிப்பகம்.
No comments:
Post a Comment