Pages

Monday, April 11, 2022

அலிமா எனும் அற்புதப் படைப்பு



        "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் எனக் கேட்டு தப்பித்துக்கொள்ள பார்க்காதீர்கள்" என்று தன் நாவல் ஒன்றின் துவக்கத்தில் கூறுவார் ஜி. நாகராஜன்.
    அதுபோல், 'இந்தப் பிரதியில் ஏன் இத்தனை வீச்சமடிக்கிறது எனக் கேட்காதீர்கள். இந்த சமூக அமைப்பு ஏன் இத்தனை அலங்கோலமாயிருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள்' என்ற வரிகளே கீரனூர் ஜாகிர்ராஜாவின் 'வடக்கேமுறி அலிமா' நாவலைப் படிக்கத் தூண்டியது. சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாத நாவல்.
    கதை என்ன என்பதை விட இதன் நாயகி(?) அலிமா யார் என்ற கேள்விகளே இப் பிரதியைச் சுற்றி அலைகின்றன. ஒரு வசதிக்காக வடக்கேமுறி அஹமதுக்குட்டி-பாத்துமா தம்பதியின் மகள் அலிமா என்று நினைவில் கொள்ளலாம். ஆனால் அலிமா அதுவல்ல!.
    நூலின் துவக்கத்தில் அலிமா பற்றி ஊரார் கூறும் பட்டியலில் 13 சித்தரிப்புகள் உள்ளன. ஆனால் அதுதான் அலிமாவா என்றால் அதுவுமல்ல. வாசித்தபின் அதற்கு அப்பால் வேறொரு பட்டியல் நம்முள் விரிகிறது.
    வடக்கேமுறி இல்லத்தில் இருந்து வெளியேறி முஸ்லியாருடன் செல்கிறாள். அவரது மாயத் தந்திரத்தில் இருந்து விலகி மம்மதுவுடன் வெளியேறுகிறாள். அவளது பெரியப்பா ஒரு எழுத்தாளர். அவர் மலபார் நாடோடி என்று எழுதும் நாவலின் அனைத்து நிகழ்வுகளும் அலிமாவின் வாழ்வில் பிரதிபலிக்கின்றன. அதைப் பார்த்து அவர் அச்சமடைகிறார். அவர் மனைவி எழுத்தாளர்களைக் கொல்ல வேண்டும் என்கிறாள்.
    கேரளாவின் வடக்கேமுறியில் கயிறு வணிக கம்பெனியில் பணியாற்றும் குமாஸ்தாக்கள் கதை ஒரு புறம் செல்கிறது. அதன் எதிரே மளிகைக் கடை வைக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷேக் அலிமாவை மணமுடிக்க ஆசைப்படுகிறான். அலிமாவின் துபாய் மாமா பையனும் விரும்புகிறான். அலிமா மனநலம் குன்றியவள் என்று மருத்துவர்கள் சிறு வயதில் சொன்னது தெரிந்துதான் அவர்கள் இவ்வாறு ஆசைப்பட்டனரா எனத் தெரியாது. ஆனால் அலிமாவின் நாட்டமோ வேறு.
    இஸ்லாமிய இடுகாடான கபுர்ஸ்தானில் சிறு வயதில் தோழன் கபூருடன் கபுறுக்களி ஆடுகிறாள். பட்டாம்பூச்சியைப் பிடிக்க புதைக்கப்பட்டவர்களின் மேலேறி ஓடுகிறார்கள். சில இடங்களில் நின்று கேள்வி எழுப்புகிறாள்.

"தொழுதியளா?"
"காசு உண்டாக்கினீங்கோ, ஹஜ் செஞ்சியளா?"
"பிச்சக்காரன பக்கீர்களத் துரத்தியடிச்சீங்களா?"
"வட்டி வாங்கினதுண்டா?"
"பாவப்பட்டவன் வயித்தில் அடிச்சதுண்டா?"

இறந்தவர்களின் ஆன்மாவாக அலையும் பட்டாம்பூச்சிகள் பதில் அளிக்குமா என்ன?!
    கழுதை இலக்கிய இதழுக்கு ஒரு நடிகையான பின் அலிமா அளிக்கும் பேட்டி முக்கியமானது. தற்கால மலையாள நவீன எழுத்தாளர்கள் எல்லோரும் வந்து போகின்றனர். அலிமா ஒரு தீவிர படைப்பாளி என்பதுடன் ஒரு பின்நவீனத்துவவாதி என்பதைக் காட்டுகிறது இப்பேட்டி.
    அகரன் ஒரு சினிமா இயக்குநர் என்றாலும் அலிமாவின் ஆளுமைக்கு அவர் அளிக்கும் மதிப்பு மரியாதையினால் அலிமாவின் மதிப்பு வாசகனின் மனதில் பலபடி ஏறி நிற்கிறது. ஆனால் லாட்ஜ் பையனுக்கு அவள் அளிக்கும் தரிசனம் பிறழ்மனமா, கருணையா, பேரன்பா என வகைப்படுத்தி அறிய முடியவில்லை.
    தன்னுடன் மனநலக் காப்பகத்தில் இருந்த அக்கம்மாவுக்கு எழுதும் கடிதம் அவர்கள் இடையேயான உறவு மேன்மை கொண்டதான சாயல் தருகிறது.
    சுவர்களில் கரியால் ஓவியம் வரையும் கரிக்கோடன் மரணம் பற்றி அவள் எழுதும் கட்டுரை வெளியாவதில்லை. அலிமாவின் மனவுலகம் எதுவும் அவ்வளவு எளிதில் புலனாவதில்லை என்பதைப் போலத் தான் அதுவும் எனக் கருதலாம்.
    கலாச்சாரக் காவலர்களான அடிப்படைவாதிகளால் அவள் நடிகையான(!?) பிறகு எழுதப்படும் கொலை மிரட்டல் கடிதம் பல பேரை நமக்கு நினைவூட்டுகின்றன.
    பணிக்கரின் கடையில் சாப்பிட்டதற்கு பணம் தராமல் வெளியேறும் அலிமாவைத் துரத்தும் சர்வர் ஜெயச்சந்திரனுக்கு அவன் ஆழ்மனதில் விரும்பும் உள்ளாடையை வாங்கித் தந்து 'உள்ளிருக்கிறது யாருக்கும் தெரியாது' என்கிறாள். பின்னாளில் கடையின் முதலாளி ஆகும் அவன், அவள் மீண்டும் சாப்பிட வரும்போது 'காசு கொடுக்காம போங்க' என்கிறான். ஆனால் பணம் தருகிறாள். கடையனுக்கு கடைத்தேற்றம் தந்தவளாக வாசக மனதில் உயரும் அலிமா ஞானம் அடைந்தவளா? தெரியாது.
    இந்நாவலை வாசிக்கையில் பல வருடம் முன் வாசித்த சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி நினைவில் வந்தது. ஆனால் அதன் போலச் செய்தல் அல்ல அலிமா. இது ஒரு பின்நவீனத்துவ பிரதி என்பதில் ஐயமில்லை. அதேபோல நாவலில் அவள் எழுதியதாக்க் கூறும் என்ட யாத்ரா எனும் கதை கமலாதாஸையும் நினைவூட்டுகிறது.
    நான் பதினைந்து ஆண்டு காலம் வாழ்ந்த கோவை புலியகுளம் பகுதியின் ஒரு வெளிக்கோட்டுச் சித்திரமும் நாவலில் வந்து போனது காலாற நான் நடந்து பழக்கப்பட்ட பகுதியை மீண்டும் ஒரு முறை வலம் வந்த மகிழ்ச்சியைத் தந்தது.
    அலிமாவின் கதை, அவள் பேட்டி, எழுதிய கட்டுரை, அவளது இரு சிறுகதைகள், கடிதங்கள், அவளது காமம், நடிகையான கதை, நாடோடி வாழ்வு, அவள் தந்தையின் வணிகத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டு இஸ்லாமிய இளைஞர்கள், அவள் ஒரு காற்றுப் போல எதிலும் அடைக்கப்பட முடியாதவள் என்பது அறியாமல் அவளை விரும்புவர்கள், அவளை அடைந்து அடையத் துடிப்பவர்கள் எனச் செல்லும் இந்நாவல் மையமற்ற மையமாக தொடர்ச்சியற்ற தொடராக ஒழுங்கின்மையின் ஒழுங்கமைவாக அமைந்துள்ளது.
    கடைசியில் அவளுக்கு கடிதம் எழுதுவது யார் என்று தெரியாது. ஆனால் அது கபூராக இருக்கலாம். அல்லது ஷேக்காக இருக்கலாம். அவள் மீது பேரன்பு கொண்ட வேறு யாரேனுமாகவும் இருக்கலாம்.
    'சுயமான முழுமையான மனிதன் என்று யாருமே இல்லை. அதற்கான சாத்தியமும் இல்லை' என ஃபூக்கோ சொல்வதும் 'எனது சுயம் எனக்குள் இல்லை. எனக்கு வெளியே இருக்கிறது' என லக்கான் சொல்வதும் பன்முகத்தன்மை கொண்ட குறுங்கதையாடல்களால் உருவாகியுள்ள #வடக்கேமுறி_அலிமா எனும் இப்பிரதிக்கும் அப்படியே பொருந்துகிறது. அதுவே இதை பின்நவீனத்துவ பிரதியாக்குகிறது. ஜாகிர்ராஜா அவர்களின் கருத்த லெப்பை, மீன்கார தெரு இன்னும் படிக்கவில்லை என்றாலும் அலிமா எனும் அற்புதப் படைப்பு தந்த வாசிப்பனுபவம் கிடைக்குமா எனத் தெரியவில்லை.
    அலிமா என்பவள் பெண்ணியவாதியா? புரட்சிக்காரியா? எதிர் கலாச்சாரத்தில் வாழ்பவளா? விளிம்புநிலை வாழ்வியா? மனப்பிறழ்வு கொண்டவளா? ஒழுக்கம் பிறழ்ந்தவளா? நாடோடியா? தீயொழுக்கம் உடையவளா? கஞ்சா பிரியையா? கழிவறை ஓவியரா? இலக்கியகர்த்தாவா? அறிவுலகவாதியா? ஞானியா? என பல கேள்விகள் எழுகின்றன. இவை எல்லாமும் தான். இவை எல்லாம் தாண்டியவளும் தான் என்பதே என் பதில்.

வடக்கேமுறி அலிமா
கீரனூர் ஜாகிர்ராஜா
பக்கம்: 144
மருதா பதிப்பகம்

No comments: