Pages

Sunday, April 10, 2022

விருப்பக் குறிகள்

 

என் குலை நடுக்கத்தின் சுவையையும்

வெண்மஞ்சள் பூத்து நிற்கும்

மனப் புரையின் வீச்சத்தையும்

வெளி எங்கும் பரவி ஓடும்

நரம்புகளில் ஏற்றிப் பகிர்கிறேன்

விருப்பக் குறிகளைத் தேடியவாறு.


நீலம் தோய்ந்த கட்டைவிரல்

குருதி வாசத்தின் இதய வடிவம்

மனப்புண் ஆற்ற இறங்கி ஓடும்

கண்ணீர்க்காரன்

இதழ் குவித்த வட்ட வாயன்

உதிரக் கொதிப்பை

வரித்துக் கொண்ட செம்முகன் என

ஏதேனும் குறி ஒன்றில்லாமல்

அமைதி அடைவதில்லை

என் ரத்த நாளங்களின் அதிர்வு.


பகிரல்களும் ஊட்டங்களும்

ஊட்டத்திற்கு பின்னான ஊட்டமும்

இல்லாத ஒரு நாளில்

வாழ்வையே துண்டங்களாக்கி

பைசாசங்களின் உதடுகளுக்கு

குருதியோடு படைக்கிறேன்

இந்தச் சதை போதுமாவென.


அசையா முகங்களுக்கு

அந்தரங்க விம்மல்களும்

தளர் நரம்புடன் முகம் இழைபவர்களுக்கு

வேட்கையின் முனகல்களும்

பரிசளித்த பின்னரும் கூட

குறிகளுக்கு குறிகளும்

குறியிடாத குறிகாரர்களை

உள நூலில் குறித்தும் வைக்கிறேன்

கோரைப் பற்களை மறைத்தபடி.


No comments: