நீ உதிர்த்த சொற்களின்
பிழை பொருள்களுக்கான
பழிகளை எல்லாம் சேகரித்து
சிலுவையில் என்னை
அறைந்து கொள்கிறேன்.
ஒவ்வொரு சொல்லும்
ஆணியாக இறங்க
குருதியோடு வெளியேறுகிறது
ஆன்மா.
என்றோ உதிர்ந்து
உன் நினைவுகளில்
துருவேறிக் கிடக்கும்
சொற்களை எல்லாம்
ஒன்று சேர்த்து முள்முடியாக்கி
தலையில் சூட்டிவிடுகிறாய்.
குத்திய முட்கள் ஒவ்வொன்றும்
மூளையை ருசி பார்த்து
ரோஜாக்களின் வண்ணத்தை
கசிய விடுகின்றன.
இடைவெளியின்றி அறையப்பட்ட
சொற்களால் நிறைந்து
ஒற்றை ஆணியாகிப் போன இவ்வுடல்
உலர்ந்த ரத்த நிறப் பூ ஒன்றின்
காம்பாகிக் கிடக்கிறது.
நாக்கால் கசக்கி எறியப்படும்
உன் இறுதிச் சொல்லொன்று
உயிரைக் கொல்லும் முன்
பிரபஞ்சம் நோக்கித் தொழுகிறேன்
என்னுள் துடிக்கும்
தேவமைந்தனுக்கு
மூன்றாம் நாளொன்று
இல்லாது போகட்டும் என.
நன்றி: வாசகசாலை.காம்
No comments:
Post a Comment