என் நடையில் தெரியும்
பிட்டசைவுகளில் குத்தின
ஓராயிரம் கண்ணீட்டிகள்.
இழுத்துச் சென்ற பாதையோரம்
ஊளையிட்ட நாயின்
தொண்டையில் சிக்கியிருப்பது
என் குரல்.
ஒடிந்த தண்டுவடத்தின்
துண்டெலும்புகளில் சிக்கி உள்ளது
ஆதிமிருகத்தின் கோரைப் பல்.
உடைந்து திரும்பிவிட்ட கால்கள்
கோடிழுத்த ஈரமண் தடத்திலோ
எறும்புகளின் மௌன ஊர்வலம்.
பாலமுதம் ஊட்டும் முன்னமே
உங்கள் வெறி நகங்கள் பட்ட
முலைகளில் குருதிச்சாரல்.
வயிற்றினுள் தவழும்
உடல் பிரதி தசைப் பைக்கு
நான் கொண்ட வழிதான்
உறுத்தியது உங்கள்
தசைக் கோல்களை.
சிதைக்கப்பட்ட அவ்வழியில்
செம்புலமாகி பெருகியோடுகிறது
நீங்கள் பீய்ச்சியடித்த திரவம்.
முதுகை ஒடிக்கும் முன்
காலை உடைக்கும் முன்
நாக்கை அறுக்கும் முன்
உயிரை எடுக்கும் முன்
கண்களைப் பிடுங்க மறந்தது ஏன்?
கூற்றின் தீர்ப்புக்காக
அறத்தின் நினைவில்
பதிந்து காத்திருக்கின்றன
உமது நஞ்சேறிய முகங்கள்.
நன்றி: வாசகசாலை.காம்
(மனீஷாக்களின் நினைவுக்கு…)
No comments:
Post a Comment