மனதில் தோன்றிய படிமத்தின் மீது
சொல்லொன்று பூனையைப் போல்
லாவகமாக ஏறி அமர்ந்தது.
கவிதையில் அதை சேர்த்து விடக் கூறி
இறங்க மறுத்து அடம்பிடித்தது.
இடமில்லையே என மறுத்தேன்.
நெடிய சொற்போர் தாண்டி
கவிதையை முடித்த போது
வரிகளுக்கு நடுவே ஒளிந்து கொண்டு
அப்பிராணியாகப் பார்த்தது சொல்.
கடுங்கோபத்தில் அதை நீக்கிவிட
சிறுகதையிலேனும் உவமையாக
சேர்க்கலாமே எனக் கெஞ்சியது.
சொல்லைப் படிமம் ஆக்குவது
கவிஞனின் உரிமை என்றேன்.
நானும் படிமமும் ஒன்றே என்றது சொல்.
சொல்லில் இருப்பது வெறும் சொல்
படிமத்தில் இருப்பது அனுபவம் என்றேன்.
படிமத்தின் அடிப்படை சொல் என்றது சொல்.
சொற்களைச் சேர்த்து படிமம் ஆக்குவது நான் என்றேன்.
முற்றிய வாதத்தின் இறுதியில்
படிமத்தின் ஒவ்வொரு எழுத்தாக
சொல் அழித்துச் செல்ல
அனுபவத்தை விட்டுவிட்டு
கவிதை காணாமல் போயிருந்தது.
நன்றி: வாசகசாலை.காம்
No comments:
Post a Comment