Pages

Monday, April 11, 2022

வேட்டையும் வேட்டை நிமித்தமும்



    காட்சிவழி புலனாகும் காட்டில் நிகழ்ந்தேறும் வேட்டையின் படப்பிடிப்பல்ல. வரிகளால் சூழ்ந்து சிறிது சிறிதாக மனதில் முளைத்து எழும் காட்டில் இரைதேடி அலைந்த தொல் மனதை உணரச் செய்யும் கவிதைத் தொகுப்பு இந்த வேட்டுவம் நூறு.
    தன் கிழங்குக்குப் போட்டியாக வந்த விலங்கை அல்லது தன்னைத் தாக்க வந்த விலங்கைத் திருப்பித் தாக்கியதில் ஆதி மனிதன் நாவில் பட்டுத் தெறித்த அந்த முதல் இரத்தத் துளியில் வேட்டையின் முதல் ருசி முளைத்திருக்க வேண்டும்.
    வேளாண் சமூகம் உருவான பின் அந்த வேட்டைச் சங்கிலி கொஞ்சம் கொஞ்சமாக அறுபடத் தொடங்கி இன்று காணாமல் போனாலும் அதன் அறுபடாக் கண்ணி நம் மனதில் இன்னும் இருப்பதற்கான சான்றை கவிஞர் மௌனன் யாத்ரிகாவின் வேட்டுவம் நூறு கவிதைத் தொகுப்பில் உணர முடிகிறது.
    நம் மண்ணின் காட்டையும் அதில் நாம் பயின்ற வேட்டை மரபையுமே தன் கவிதைகளில் முன் வைக்கிறார். ஐவகை நிலத்தில் முல்லை, மருதம், முல்லை திரிந்த பாலையைச் சுற்றிய நிலத்தில் அம்புக்கு இரையான குறு விலங்குகளை தோளில் சுமந்தலைய வைத்துள்ளார் கவிஞர்.
    வேட்டைக்கான வழி முறைகளைச் சொல்வதெல்லாம் பணத்திற்கும் வீர சாகசத்திற்குமானதாக அல்லாமல் காட்டின் வளத்தைக் காப்பதற்கும் அதன் மூலம் தன் இருப்பை நிலைப்படுத்திக் கொள்ளவுமான 'நீ வாழ்ந்தால் நான் வாழ்வேன்' என்ற தொல்குடி பண்பாட்டின் எச்சமாக உள்ளது.
    வேற்றுயிர் தாக்கி உயிருக்குப் போராடும் சிற்றுயிர்களை சில நேரம் கருணை கொப்பளிக்கக் கொன்று விடுதலை செய்வதும் இயற்கைக்கு செய்யும் கைம்மாறாகவே நம் சமூகம் நினைத்து வந்துள்ளதைக் குறிப்பிடுகிறார் கவிஞர்.
    காமுறும் விலங்குகளைக் கண்டறியும் வேட்டுவர்கள் பேரன்பால் அதைக் கண்டு கொள்ளாமல் கிழங்கு அகழ்ந்து பசியாறுவதில் விழித்திருக்கிறது ஆதிச் சமூகத்தின் சூழலியல் மனம்.
    வேட்டையில் முன்னால் ஓடும் நாய் இரையைப் பல் படாமல் தூக்கி வரும் போது அதனுடன் நம் கால்களும் ஓடுகின்றன. காட்டிற்கு இயற்கை சமநிலையைப் பேண வேண்டும்; மனிதனுக்கோ பசி நீங்கி உயிர்த்திருக்க வேண்டும். இருவருக்குமான தேவை முயங்கும் புள்ளியில் நிலை கொள்கிறது வேட்டையின் வெற்றி. காடு கொடுக்க நினைத்தால்தான் மனிதனால் அதை அடைய முடியும்.
    காடு ஓர் அன்புள்ள ராட்சசன். அதன் மரப் பற்களிடையே ஒளிந்திருக்கிறது ஒரு கிராமத்திற்கான உணவு.
    வேட்டையின் நுட்பங்கள் பொதிந்த இக்கவிதைகள் இயற்கையைப் போற்றுகின்றன.
    காடும் காடு சார்ந்த இடத்தில், வேட்டையும் வேட்டை சார்ந்த நம் ஆழ்மனம் விழித்தெழச் செய்யும் அரும் கவிதைகள் இவை. தொகுப்பு முழுவதும் வரும் வேட்டை நாய் நம் மனம்தானோ என பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
    வியப்பளிக்கும் உவமைகள், படிமங்கள்.
//காட்டின் மானம் பெரிது//
//ஒரு முரட்டுப் பன்றியின் நிமிர்ந்த கோலம் போல் முறிந்த பனை//
//தப்பிக்க எல்லா வழிகளும் திறந்திருக்க தனியாக நிற்கிறது ஒரு விலங்கு// என்ற வரியில் அதன் மருட்சி தெரிகிறது.
//புரண்டு கிடக்கும் கறுத்த பாறைக்கு மடி நிறைய காம்புகள்...//
//எருக்கம் பூ மலர்ந்தது போல
புதர் மறைவில் இரு கண்கள்//
//வேட்டை நாயின் உமிழ்நீர் வழிந்து கல்லொன்று மலர்வதைக் கண்டேன்//
    தொகுப்பில் உள்ள கவிதைகள் காட்டில் வேட்டையாட அழைத்துச் செல்கையில் திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ஓவியங்கள் குருதி நனையக் கிடக்கும் இரையை காலடியில் துடிக்கத் துடிக்கக் காட்டுகின்றன.
    வேட்டையும் அதில் வழியும் குருதியும் அதன் கவிச்சையும் வீச நம் கைகளில் ஒரு ஈட்டியைக் கொடுத்து காண் என்றது கான் என்கிறார் கவிஞர்.
    காடிருக்கவே நாமிருக்கிறோம் எனும் கவிஞர் காட்டை அழிப்போர் வேரொடு கெடுவர் என்கிறார். இது கவிஞனின் சாபம் அல்ல. லட்சம் ஆண்டுகளாய் தொடரும் ஆதி மனதின் வலி. வேட்டுவம் ஆயிரமாகட்டும். ஆம், கவிதையில் மட்டும்.

வேட்டுவம் நூறு
மௌனன் யாத்ரிகா
லாடம் பதிப்பகம்
விலை: ரூ.200
பக்கம்: 144

No comments: