Pages

Monday, April 11, 2022

தானும் அதுவாகப் பாவித்து

 


    கொதிக்கும் நீரில் எழும் குமிழிகள் ஒன்றோடொன்று மோதி உடைய, மற்றொன்று எழ அதன் அருகில் ஒன்று அமிழ என ஒரு பெரும் போராட்டம் நிகழ்வதைப் போல உணர்வுகளின் வெளிப்பாடுகள் நனவோடையாக ஓடும் கதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன் எழுதிய 'தானும் அதுவாகப் பாவித்து' சிறுகதைத் தொகுப்பு. எரியும் அடுப்பை அணைப்பது வரை குமிழிகளின் போராட்டம் நிற்காதது போல இந்நூலைப் படித்து முடிக்கும் வரை பாத்திரங்களின் உணர்வோட்டம் சொல்லுக்குச் சொல் பெருக்கெடுத்து ஓடுகிறது. கதா பாத்திரங்களின் நினைவுகளில் மூழ்கிச் சென்று ஊன்றிப் படிக்காவிடில் வெள்ளத்தில் இழுத்துச் சென்று 'கதை'சேர முடியாமல் போய்விடுவோம்.
        தினமணிக் கதிர், ஆனந்த விகடன் உள்பட வார இதழ்களில் இவரின் சிறுகதைகள் அவ்வப்போது படித்திருந்தாலும் தொகுப்பாகப் படிப்பது அலாதியான வாசிப்பனுபவம் தருகிறது. நூலகத்தில் இந்நூல் என் கையில் அகப்படவே ஆசிரியர் பெயரைப் பார்த்தவுடன் எடுத்து வந்து வாசித்துவிட்டேன். மொத்தம் 18 சிறுகதைகள் உள்ளன.
கண்ணகி: கணவனுக்காக நீதி கேட்டாள் சிலப்பதிகார கண்ணகி. வீரபத்திரன் என்ற பயந்த கணவனுக்காக நாயிடம் கல்லெறிந்து ஆவேசமடைகிறாள் மனைவி.
உறவுப்பாலம்: பால்ய கால மனமயக்கம் காதலாக மனதில் நிற்கிறது. அது இனக் கவர்ச்சியா இல்லையா என்பது நிகழ்வுகளின் தொடர் விளைவைப் பொருத்தது. தன் மனதில் நின்றவள் மணமாகி நகரம் சென்று மீண்டும் மகனுடன் ஊர் வருகிறாள். அவனுக்கு சைக்கிள் கற்றுத் தருவதன் மூலம் சிறுவனுக்கும் இவனுக்கும் இடையில் ஒரு உறவு ஏற்படுகிறது.
சாகசம்: ஊருக்கு ராசாவானாலும் அம்மாவுக்குப் பிள்ளை என்பார்கள். ஊரைவிட்டுப் போய் சர்க்கஸில் சாகசம் செய்யும் அவனை அப்பாவுக்குப் பிடிக்காது. ஊருக்கருகே வந்து சாகசம் செய்து விழுபவனைப் பார்த்து அய்யோ எனப் பதறுகிறாள் தாய்.
ஊர் மாப்பிள்ளை: ஒரு பந்த்-ஐ முன் வைத்து எழுதப்பட்ட கதை. பேருந்து நிலையத்தில் ரிவர்ஸ் வரும் பேருந்துகளுக்காக விசில் ஊத வைக்கப்படுகிறான் மனநலம் குன்றிய ஒரு ஆதரவற்றவன். பந்த் அன்று எதற்காக ஒருவரும் சாலையில் நடமாடவில்லை என நினைக்கும் அவன் திடீரென வரும் வாகனத்திற்கு விசில் அடிக்கிறான்.
நாடடங்கு காலத்தில் இவர்கள் எல்லாம் வயிற்றுக்கு என்ன செய்திருப்பார்கள்? எங்கு போயிருப்பார்கள்?
துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை: கைம்பெண், தன் மகளுடன் கோயிலில் இருக்கும் போது மின்தடை; யாரோ முத்தமிட உளக் கிளர்ச்சி அடைகிறாள். அவனைக் காணவில்லை. பின் தொடர்ந்தானா? கல்லூரி வயது மகள் இருக்க நான் என்ன அவ்வளவு அழகா? இத்தனை நாளில்லா காமம் இப்போது வருவதேன்? ஒரு சுவாரசியமான முடிவு.
ODI விளையாடு பாப்பா: கிரிக்கெட்டும் வாழ்வும் ஒன்று சேர்ந்து பயணிக்கும் கதை. "எந்தப் போட்டியையும் சௌகர்யமாக ஜெயித்ததே இல்லை நம் மக்கள்". டெஸ்ட் மேட்ச் வாழ்க்கை ODI ஆகி 20-20 போல திடீரென முடிகிறது.
பெண்ணிடம் ரகசியம்: "ஒவ்வொரு பெண்ணிடமும் எத்தனை ரகசியங்கள்..." மனைவியின் தங்கையை தன் தம்பிக்கு கல்யாணம் செய்து வைக்க கேட்கிறான் கணவன். "அவன் உனக்கு மகன் மாதிரின்னு நீயே சொன்ன..."// "அவன் அப்படி நினைக்கலியே" என்கிறாள். பெண்ணிடம் ரகசியம் ஏராளம் தான்.
ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்: விளிம்பில் வாழும் மனிதர்கள். மனைவி போன பின் ஊர் பேர் தெரியாத கிழவியுடன் எதிர்பார்ப்பில்லா அன்பு. சாராயம் குடித்து இறந்த தன் மகனை இவன் வடிவில் பார்க்கிறாள். இவனைக் குடிக்க வேண்டாம் என்கிறாள். அவளும் இறக்க, அதை மறக்க குடிக்கச் சென்றவன் ஏனோ உடைத்துவிட்டு வெளியேற கிழவி சிரிக்கிறாள்.
மூக்குத்திப்புல்: ஹைக்கூ கவிதைகள் ஊடே பயணிக்கும் கதை.
ஒளிந்திருப்பவனின் நிழல்: கோயிலுக்குச் செல்லும் தாத்தா இறைவனை வேண்ட பேரன் வெளியே கல்யானை மீதமர்ந்து அதனோடு பேசுகிறான். யார் ஒளிந்திருக்கிறார்கள்? எதனுள் ஒளிந்துள்ளார்கள்? அதன் நிழல் நம் மனம் மீது விழுகிறதா? தத்துவார்த்தமான கதை.
மிகை: தன் அழகின் பெருமையில் மிதந்து கிடக்கும் பெண். குணநலன் மிகுந்தவனை திருமணம் செய்து கொள்ளும் முன் அவர்களுக்குள் நிகழும் ஓடிப் பிடித்து விளையாடும் உரையாடல்.
புள்ளியில் விரியும் வானம்: தனிமையில் பள்ளிப் படிப்பு, பின் கல்லூரி, பின் வேலை. இந்த வாழ்வின் அர்த்தம் என்ன என்ற இருத்தல் கேள்வி. பெருளைத் தேடும் பொருளற்றதா இவ்வாழ்க்கை என நினைக்கையில் தனியே ஒரு வேப்ப மரம் அந்த தெருவிற்கே நிழல் தருவதன் சிறப்பு விடையாகிறது.
ஆழ்வார்களும் நாயன்மார்களும்: திரை நட்சத்திரங்களுக்கு பிளக்ஸ் போர்டு வைத்து தங்கள் படங்களை வரிசையாகப் போட்டுக் கொள்கிறார்கள். புரட்சி, கடவுள் மறுப்புக் கொள்கை, சாதி மறுப்புத் திருமணம் என பாதை மாறிய தன் மகனை வெறுத்தாலும் தன் மகன் திரை நட்சத்திரம் பெயரில் அன்னதானம் போடுவதில் பெருமைதான். அதே மகன் தன் படத்தை வினைல் போர்டில் பெரிதாகப் போட்டு பேரன் பெயர் சூட்டு விழாவிற்கு அழைத்து அவர் பெயரையே வைக்கச் சொல்வதில் பெருமிதமும் பூரிப்பும் தான்.
சொல்: எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறது தொல். சொல்லதிகாரம். உயிர் குறித்தன என்கிறது இக்கதை. மனித மனத்தின் நனவோடை கதை சொல்லல் போல சொல்லின் நனவோடை இக்கதை. சொற்கள் பேசத் துவங்கினால் என்ன ஆகும்? நூலக அடுக்குகளில் காலங்காலமாக யாராலும் எடுத்துப் படிக்கவேபடாத நூற்கள் ஏராளம். யாருக்கானவை அவை? யாராலும் பொருட்படுத்தவே படாத மானுடர்களைப் போல அவை ஏங்கித் தவிப்பதன் கதை. இளம் வாசகன் முதல் வயதான வாசகன் வரை காலடி ஓசையை வைத்தே கண்டு கொள்கின்றன. முன்பு என்றோ ஒரு நாள் வந்து அடுக்குகளின் பின்னால் முத்தமிட்ட சோடிகளில் அவன் மட்டும் பின்பொரு நாள் வந்து தன்னை எடுத்து சத்தமாக வாசிக்கும் போது 'காதல்' எனும் சொல்லும் கண்ணீர் உகுக்கிறது.
தாய்மடி: "இப்படித்தானே எதோ பதற்றத்தில், பயத்தில் ஒரு இனத்தையே போர் என்று அழிக்கிறார்கள்" ஈழப் போரில் சிக்கி உறவு, உடமை இழந்தவனின் குரல்.
    ஏராளமான நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்கள், திரட்டு நூல்கள் படைத்துள்ளார்.
    தானும் அந்தக் கதை மாந்தர்களாக, நிகழ்வுகளாகப் பாவித்து படைக்கப்பட்ட கதைகள். இவரின் மற்ற படைப்புகளையும் படிக்கத் தூண்டிய தொகுப்பு இது.

நூல்: தானும் அதுவாகப் பாவித்து

ஆசிரியர்: எஸ். ஷங்கரநாராயணன்
சொல்லங்காடி பதிப்பகம் (2012)
விலை: ரூ.120. பக். 207

No comments: