Pages

Sunday, April 10, 2022

கவிஞனை காயப்படுத்துவது எப்படி?


ஒரு கவிஞனை
காயப்படுத்துவது எப்படி
என்பதை
ஒரு எழுத்தாளனைக்
காயப்படுத்துவது எப்படி
என்பதை அறிவதைப் போல்
அவ்வளவு கடினமானது அல்ல.

எழுத்தாளனின் படைப்பை
வாசிக்கிறீர்கள்
அட்டைகளுக்கிடையே
பக்கங்களுக்கிடையே
பத்திகளுக்கிடையே
வரிகளுக்கிடையே
எழுத்துகளுக்கிடையே
இன்னும் எழுதாத அல்லது
வெளுத்த பகுதிகளில்
கிடந்தலையும்
மௌனங்களுக்கிடையே
வாசித்து வாசித்து
அவன் மனதிற்குள் சென்று
அவன் நினைக்காததை
கேட்டதாகக் கூறி
அவனுக்கெதிரே
படைப்பை திருப்பினால்
காயப்படுவான்.

கவிஞன் அப்படி அல்ல.
அவன் கவிதையை
காணாமலும்
கண்டால் வாசிக்காமலும்
வாசித்தால் ரசிக்காமலும்

ரசித்தால் மௌனமாகவும்

இருந்துவிடலாம்.
அவ்வளவு எளிதானது.

05.08.2020

நன்றி: வாசகசாலை.காம் 

No comments: