பெருந்தொற்றின்
தீயச்சமின்றி
சாலையோர பிளீச்சிங்
பவுடர் நாற்றத்தில்
சயனித்துக் கிடக்கும்
யாசகனின் பாத்திரத்தில் ஒளிர்கிறது
கடைசிப் பருக்கையின் சுவடு.
நீண்டு செல்லும் சாலையில்
உருண்டு செல்லும் சக்கரமாய்
வயிற்றுள் உருளும்
தீப்பந்தின் கனலை
நெருங்கி வந்து
முன்னம் அணைத்தன
பற்பல பாதங்கள்.
நிகழைக் கடக்க முடியாத
பாதங்கள் எல்லாம்
யாசகம் கேட்டு
வீடுகளுக்குள் யாத்திரை போக
பிளீச்சிங் சுவடுகளில் ஒலிக்கிறது
உயிர் பற்றும்
ஆதி மனதின் கூக்குரல்கள்.
பற்றற்று
எதிர் காற்றில்
நின்றாடுகிறது
எதற்கும் முடங்காத
அவன் வயிற்றுத் தீ.
05.08.2020
No comments:
Post a Comment