Pages

Monday, April 11, 2022

அந்நியர்களின் வாழ்வு

 




    நேர்கோட்டில் செல்வது அல்ல இவ் வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் கூட அந்த கணத்திற்கான ஆச்சரியத்தையும் திருப்பங்களையும் ரகசியமாகவே வைத்திருக்கிறது. ஆனால் இதுவெல்லாம் சேர்ந்து தான் ஒரு வாழ்வாக நம்முள் மலர்கிறது. நிகழ்வுகளைக் கோர்த்துப் பார்க்கும் போது அதை நம் வாழ்வாக மாற்றிப் பார்க்கிறோம். ஆனால் தன்னளவில் ஒவ்வொருவரின் வாழ் கணமும் ஒரு நிகழ்வுதான். அவற்றைப் பின்னாளில் பார்க்கும் போது ஓர் அந்நியனின் வாழ்க்கையாகவே அவரவர்க்குத் தெரியும்.

    எழுத்தாளர் வா.மு.கோமு எழுதிய அந்நிய ஆடவன் நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு நிகழ்வாக, கதையாக விரிகிறது. அதில் யாரோ ஒருவர் யாரோ ஒருவரால் பாதிக்கப்படுகிறார். ஏமாற்றப்படுகிறார். ஆனால் நாவல் முழுவதும் அந்தக் காரியத்தைச் செய்பவர் கதாபாத்திரத்திற்கு அந்நியமாய் வந்து சேரும் ஒரு ஆடவனாகவே இருக்கிறார்.

    நான் அடிக்கடி சென்று வரும் சென்னிமலை, வெள்ளோடு மற்றும் சொந்த ஊர் ஊத்துக்குளி என்றே கதைகளின் களமும் மாந்தர்களும் வந்து செல்வதால் எளிதாக என்னை அதனுள் பொருத்திக் கொள்ள முடிந்தது.

    நாவலின் துவக்கத்தில் வரும் #வா_மு_கோமு அவர்களின் முன்னுரையே ஒரு சிறுகதையாக மிளிர்கிறது. அவரின் வழக்கமான எள்ளல் மற்றும் அங்கத நடையில் ரசிக்க வைக்கிறது.

    முதல் அத்தியாயம் ஒரு நாயின் பார்வையில் மிகச் சிறப்பாக விரிகிறது. அதில் வரும் சாத்தான் அந்த நாயை மஹாராஜா என்றழைக்கிறான். தன்னை யாரும் அழைக்காத ஒரு பெயரால் விளிக்கும் சாத்தானுடன் தன் வாழ்நாளை கழிக்க நினைக்கும் நாய்க்கு அவன் ஓர் அந்நிய ஆடவன் தான்.

    தந்தையின் களியாட்டத்திற்கு ஏற்படும் தடங்கல்களை தடுத்திடாத சிறுவன் முருகனை அடிக்கும் போது அவன் தந்தை அவனுக்கு அந்நிய ஆடவனாகிப் போகிறான்.

    நிறைய புத்தகம் படிப்பதால் திறந்த புத்தகமாகத் திகழ நினைத்து முதலிரவில் உளறிக் கொட்டும் தன் கணவனானவன் நீலவேணிக்கு ஓர் அந்நிய ஆடவனாகவே தோற்றமளிக்கிறான்.     காலில் ஏற்பட்ட புண்ணுக்கு பாடம் போடச் சென்ற இடத்தில் ஜோசியம் பார்க்கும் பங்காளியின் தயவால் அந்நிய ஆடவனாகிப் போகிறான் பூசாரி.     ஓடிப் போன கணவன் புது வாழ்க்கை அமையுந்தருணத்தில் வந்து சேர, தன்னைத் தனதாக்கிக் கொள்ள வந்த முதலாளியை அவன் அந்நியமாகப் பார்த்து அனுப்பியதை நினைத்து சகுந்தலா முன்னாள் கணவனை அந்நிய ஆடவனாகவே பார்க்கிறாள்.     ஊத்துக்குளியில் கடை வைத்திருப்பவரின் மகளாக வரும் சங்கவிக்கு, அறை எடுத்து தங்கி எழுத்தாளனாய் திகழ நினைக்கும் பத்திரிகையாளன் ராசு ஓர் அந்நிய ஆடவனாகிப் போகிறான்.     மஞ்சுவின் பார்வையில் காதலன் சுரேந்திரன் அந்நிய ஆடவனாகிப் போக கதிருவேலன் கணவனாகிப் பின் பத்மநாபனின் நிமித்தமாக கணவனே அந்நிய ஆடவானகிறான். இறுதி அத்தியாயத்தில் சென்னிமலையை நோக்கி சிரிப்பது அவன் தானோ என எண்ணத் தோன்றுகிறது.     இந்த நாவலை வாசிக்கும் போது ஆங்காங்கே நீங்கள் திடீர் திடீரென வெடிச் சிரிப்பு சிரிக்காவிட்டால் இலக்கிய உலகம் உங்களை ஓர் அந்நிய ஆடவனாகவோ பெண்டிராகவோ பார்க்கும்! சிரித்தீர்கள் என்றால் உங்களைச் சுற்றிலுமுள்ள உலகமும் அப்படித்தான் பார்க்கும்! அந்நிய ஆடவன் - வா.மு.கோமு மலைகள் பதிப்பகம்
விலை ரூ. 175

No comments: