Pages

Monday, April 11, 2022

பிரபஞ்சம் தழுவிடும் சொற்கள்


        இயற்கையைப் பாடுதல் கவிஞர்களுக்கு இயல்பு எனினும் கார்த்திக் திலகனின் விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள் தொகுப்பு மீஇயற்கை கவிதைகளாக உருவெடுத்துள்ளன. ஆழ் படிமங்கள், குறியீடுகள், நவீன சொல்லாடல்கள் என கவி மொழியில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்தேறி உள்ளது. இயற்கையைக் கடந்த இயற்கையைப் பேசுகின்றன. மேலான மெய்மையைத் தேடுகின்றன இக்கவிதைகள்.         எளிய சொற்களால் கட்டமைந்து திருகல் இன்றி அர்த்தப்படுத்த ஏதுவான கவிமொழியை தன்னுள்ளே கொண்டுள்ளன. சொற்களின் வழி இப் பிரபஞ்சத்தையும் அதன் வழி சக்தியையும் கொண்டாடும் கவிதைகளாக மலர்ந்துள்ளன. காதலினூடே காமத்தையும் சக்தியையும் பெண்மையையும் போற்றும் கவிமொழியை உருவாக்கியுள்ளார் கவிஞர்.         ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் ஆணிற்குள் பெண்மையாகவும் பெண்ணிற்குள் ஆண்மையாகவும் ஒன்றில் ஒன்று புகுந்து இரண்டும் ஒன்றாதல் இரண்டும் மற்றாதல் என்றாகிறது 'சக்தி பீடம்' எனும் கவிதை.         உடல் உச்சமடைவது காமத்தில். மனம் உச்சமடைவது கவிதையில் தான். மொழி உச்சமடைவது கவிதையில் எனில் கவிதை உச்சமடைவது காமத்தில் அன்றோ? //பெருவெடிப்பு நிகழ்ந்து வெளியே விழுந்த சூரியனின் இரண்டு துண்டு சதைகளைப் போல தகித்துக் கிடப்போம் நம் மோகம் தணிய இன்னும் சில மில்லியன் ஆண்டுகளாவது ஆகலாம்//         மனிதர்கள் தானியங்களை விரும்பித் தின்று தீர்ப்பதைப் போல இந்தப் பூமியும் மனிதனைத் தானியம் போலத் தின்று தீர்த்து வருகிறது. மனிதனால் முடியாது. ஆனால் இந்தப் பூமி ஏராளமான தானியங்களை ருசித்திருக்கிறது. இன்னும் ருசிக்கும். பசியடங்கா வயிறுடைத்து இப்பூமி. //சமைத்துக் கொடுக்கிறது மரணம் அதை மண்ணறையில் வைத்து ருசித்துச் சாப்பிடுகிறது பூமி//     'மரணம் எனும் மகாதியானம்' என்ற கவிதையின் துவக்க வரிகளை வாசிக்கும் போது கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் நினைவு வந்தது. அதன் முடிவிலோ அவருக்குத் தான் அதை அஞ்சலி ஆக்கியிருந்தார் கவிஞர். வாசக மனத்தின் வழி கவி மனதைப் படிக்கச் செய்யும் பேரதிசயத்தை தன் கவிதைகளில் வைத்துள்ளார் கார்த்திக் திலகன்.     மானுடத் துயரத்தைவிட மேலான ஒன்று அதி தூய்மையான ஒன்று எதுவுமில்லை. இந்தப் பிரபஞ்ச பேரியக்கம் முழுவதும் கூடி நின்றாலும் ஒரு துளித் துயரைத் துடைத்திட இயலுமா? //சூரியனை அணைக்கிற கண்ணீர் நட்சத்திரங்களை அழுக வைக்கும் துயரத்தின் உப்பு என்னிடம் ஏராளம் இருக்கின்றன//     இன்பத்தில் வெளிப்படும் ஒரு துளி விந்துவும் மகிழ்ச்சியில் வழியும் ஒரு துளி கண்ணீரும் ஒன்றே. இரண்டிலும் இருப்பது மற்றோர் உயிருக்கான விதை. பெண்மையைப் போற்றுவதுடன் தந்தைமையையும் போற்றுகிறார். தாய் ஒரு வெட்டவெளி எனில் தந்தை ஒரு பெருங்கடல். //தந்தை அழைக்கும் போது பெயருக்கு ஒரு பூத்தன்மை ஏற்பட்டு விடுகிறது//     அழுகை எப்படி நம் உள்ளத்தை தெளிவாக்கி வெளிச்சம் ஏற்படுத்துகிறதோ அது போலத்தான் ஒரு தீபமும். //எப்படி இருந்தாலும் ஒரு தீபத்தின் அழுகை அறையை நிறைத்துவிடுகிறது அழுகையின் வெளிச்சம் நம் மனசை நிறைத்துவிடுவதைப் போல//     உளந்தோறும் எழுந்தாடும் பிரச்னைகளை இக வாழ்வில் அவ்வளவு எளிதில் வெல்லவும் முடிவதில்லை. எடுத்து எறியவும் இயல்வதில்லை. //வெயிலில் நிற்கும் நாய் ஒன்று வேகவேகமாகக் கால்களை உதறுகிறது. தன் நிழலை அவ்வளவு எளிதாக உதறிவிட முடியவில்லை அதனால். //     நவீன சொல்லாடலைச் சூடி நிற்கும் இக் கவிதைகள் கவிமொழியின் வேறொரு தளத்தில் பல்வேறு அர்த்த பரிமாணங்களை சொற்களுக்குள்ளும் சொல்லிடை மௌனத்தூடேயும் கொண்டு இயங்குகின்றன. இருப்பிற்கும் இன்மைக்கும் இடையிலான ஊடாட்டத்தை நிகழ்த்தி புறவயத்தில் இருந்து அகத்தைப் பெறுதல், அகத்தின் வழி புறத்தை உணர்தலாய் மிளிரும் இக்கவிதைகள் பூமிக்கு வெளியே நிற்கும் சொற்களாய் மாறி பிரபஞ்சம் தழுவும் மனவெளியைப் பிரதிபலிக்கும் அற்புத தரிசனமாக அமைகின்றன..
விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்-
கார்த்திக் திலகன்

படைப்பு பதிப்பகம் 

விலை: ரூ.120 

No comments: