![]() |
Zoran Zivkovic |
திரு. ப்ரோஸ்கா வெட்டப்பட்ட தனது விரல் நகங்களை சேகரித்து வந்தார். தனது
எட்டாவது வயதில் முதல் முதலாக தானாகவே விரல் நகத்தை வெட்டியதிலிருந்தே
அவற்றை சேகரிக்கத் துவங்கிவிட்டார். அம்மாவின் உதவி இல்லாமலும் விரல்களைக்
காயப்படுத்திக் கொள்ளாமலும் தானே நகங்களை வெட்டியதை நினைத்து அன்று
அவருக்குப் பெருமையாக இருந்தது. இந்த வெற்றியின் நினைவாக அந்த பத்து குட்டி
அரிவாள்கள் போன்ற நகங்களை சேகரித்து வைக்க முடிவு செய்தார்.
அம்மாவுக்குத் தெரிந்தால் நகங்களைச் சேகரித்து வைக்க விடமாட்டார் என்பதால்
அவற்றை ரகசியமாக வைக்க வேண்டும் என்று விரும்பினார். ஒரு சிறிய பிளாஸ்டிக்
பையில் அந்த நகங்களைத் திணித்து அதன் மேல் ஒரு லேபிளை ஒட்டி தேதியை எழுதி
வைத்தார். எழுத்துகள் இன்றும் கூட அவருக்கு இடைஞ்சலை ஏற்படுத்திக்
கொண்டிருந்தாலும் அந்த சிறிய வயதில் எண்களை எழுதுவதில் சமர்த்தனாகவே
இருந்தார். பிறகு அந்தப் பையை மறைவான இடத்தில் வைத்தார்.
சரியாக இரண்டு வாரங்கள் கழித்து, மீண்டும் நகங்களை வெட்டியபோது சிறிது
தயக்கத்துக்குப் பின் அந்தக் குட்டி அரிவாள்களை பிளாஸ்டிக் பையில் போட்டு
தேதியை எழுதி வைத்தார். இவ்வாறு சேகரித்து வைப்பதற்குப் பின்னால் எந்த ஒரு
நீண்டகாலத் திட்டமும் அவரிடம் அப்போது இருக்கவில்லை. ஆனால் அது பின்னாளில்
முடிவு செய்யப்பட வேண்டியதாகிவிட்டது. வெட்டப்பட்ட நகங்களை தூக்கி வெளியே
எறிவதை அவர் வெட்கக்கேடான விஷயமாக நினைத்தார். நகங்களை எறிவது தனது உடலின்
ஓரங்கத்தையே வீசுவதற்கு ஒப்பானதாகப்பட்டது. வெட்டப்பட்ட நகங்களுடன் உடல்
தொடர்பு இல்லையென்பது உண்மை என்றாலும், அதெல்லாம் அவற்றுடனான அவரது
பிணைப்பபை சிறிதளவும் குறைத்துவிடவில்லை. அவை அவரிடமிருந்து
துண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றை தன்னோடே அவர் பத்திரமாக
வைத்திருக்க முடிந்தது. எட்டு வயதுக்கு முன்பு வரை அம்மா வெட்டிப் போட்ட
ஏராளமான நகங்களை இனி என்றென்றும் மீட்க முடியாது என்பதை உணர்ந்தபோது
வருத்தம் அவரை சூழ்ந்து கொண்டது.
வெட்டிய நகங்களை வரிசைப்படி சேகரிப்பதை ப்ரோஸ்கா தொடர்ந்தார்.
காலப்போக்கில் அந்த குட்டிப் பைகளை எங்கே வைப்பது என்ற பிரச்னை எழுந்தது.
ஒவ்வோராண்டும் இருப்பத்தைந்து முதல் முப்பது பைகள் வரை சேர்ந்து
கொண்டிருந்தன. அவற்றை மறைத்து வைக்கும் காலணிப் பெட்டியும்
நிரம்பிவிட்டது. அதுவுமில்லாமல் இரண்டு, மூன்று முறை அம்மாவின் கண்களிலும்
பட்டுத் தொலையவிருந்தது. பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ வந்த 20
வயது வரை அவருக்கு இந்தத் தொந்தரவு நீடித்தது. அப்போது அவரிடம்
சேகரமாயிருந்த நானூறு குட்டி நகப் பைகள் மூன்று காலணிப் பெட்டிகள் நிறைய
இருந்தன. யாருக்கும் தெரியாமல் செய்யும் இந்த பழக்கத்தால் யாரிடமாவது
மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சமின்றி அந்தப் பைகளை வரிசைக்கிரமப்படி அடுக்கி
வைத்தார். அவரது ரகசியமான இச்செயல் அவரை சிறிதளவு கூட
வெட்கப்படவைக்கவில்லை.
பொக்கிஷம் போல் பாதுகாக்கும் நகப் பைகளை சம்பந்தமேயில்லாமல் காலணிப்
பெட்டிக்குள் கொண்டுபோய் வைத்திருப்பது அவமானகரமாகத் தோன்றியது. அதை
தெய்வநிந்தனைக்கு ஒப்பான செயலாகவே கருதினார். தனது பிரத்யேகமான
சேகரிப்புக்குத் தகுந்த மதிப்புமிக்க ஓரிடத்தை அவர் கண்டடைய
வேண்டியிருந்தது. பெரிதாக வருமானம் ஒன்றும் ஈட்ட முடியாவிட்டாலும்,
நகங்களைச் சேகரிக்க தனித்துவம் மிக்க 500 சிகரெட் பெட்டிகளை அவர் எப்படியோ
வாங்கிவிட்டார். பணக்காரனாக மட்டும் அவர் இருந்திருந்தால் அந்த வெள்ளியில்
வடிக்கப்பட்ட சிகரெட் பெட்டிகளை வாங்கியிருப்பார். ஆனால் அந்தச் சூழலில்
வெள்ளி முலாம் பூசப்பட்ட சிகரெட் பெட்டிகளையே வாங்க முடிந்தது. ஒவ்வொரு
சிகரெட் பெட்டியின் மூடியிலும் தேதி பொறிக்கப்பட்டிருந்தது. அந்தப்
பெட்டிகளின் உள்ளே இளஞ்சிவப்பு நிறத்தில் இரண்டு வளைந்த வரிசைகள் கொண்ட
பிரிவுகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் ஐந்து அரிவாள் வடிவ நகங்களை
வைப்பதற்கேற்ற வரிசை உள்நோக்கி தள்ளியிருந்தது.
குட்டிக் குட்டியான அந்த நகப்பைகளை சிகரெட் பெட்டிகளுக்கு மாற்ற பல
மாதங்களானது. மிகவும் சிக்கலான அந்த வேலையைச் செய்ய பொறுமையாக செயல்பட
வேண்டியிருந்தது. தவறுதலாக மாற்றி வைத்து அடுக்கி விடுவோமோ என்ற பயத்தில்
அதீத கவனத்துடனும் அசாத்திய பொறுமையுடனும் செய்து முடித்தார். ஒவ்வொன்றும்
எந்த விரல் நகம் என்பதைக் கண்டறிவது மிகச் சிரமமாக இருந்தது. இறுதியில்
அவற்றை ஒரு வழியாக மிகச் சரியாகப் பொருத்தினார். வெட்டப்பட்ட நகங்களை
அதற்குரிய சரியான இடத்தில் வைப்பதே சவாலானதாக இருந்தது. இது போன்று
அடையாளப்படுத்தி வைப்பதில் தான் ஒரு நிபுணர் என்று பெருமைப்பட்டுக்
கொண்டார்.
சரியான ஓரிடத்தில் அந்தப் பெட்டிகள் வைக்கப்பட்டிருப்பதை ஒருவித
கர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த சிறிய சஞ்சலம் மனதில் தோன்றி
அலைக்கழித்தது. யாராவது திருடன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் இந்தப்
பெட்டிகள் என்னவாகும்? வீட்டில் எந்தவொரு விலையுயர்ந்த பொருளும்
இல்லையென்பதால் திருடன் நேராக சிகரெட் பெட்டிகளை நோக்கியே வருவான். அவனைப்
பொருத்தவரை சிகரெட் பெட்டியில் ஒன்றும் இருக்கப்போவதில்லை என்பதால் அதை
திறந்துகூடப் பார்க்கப் போவதில்லை. அவனுக்கு சல்லிக்காசு பிரயோஜனம் இல்லாத
பெட்டி என்பதால் பின்னர் அவற்றை தூக்கி வெளியே எறி்ந்துவிடுவான். இந்த
எண்ணம் ப்ரோஸ்காவை திகிலுறச் செய்தது. எப்பாடுபட்டாவது அந்தப் பெட்டிகளை
காப்பாற்றியாக வேண்டும். உடனே ஒரு வங்கிக்குச் சென்று பாதுகாப்புப் பெட்டக
வசதியைப் பெற்றார். தன்னிடமிருந்த சிகரெட் பெட்டிகளை அதில் அடுக்கத்
துவங்கினார். கடைசிப் பெட்டியை அடுக்கி முடிந்த பின்னர்தான் அவர்
ஆசுவாசமடைந்தார்.
ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வங்கிக்குச் சென்று இரண்டு புதிய சிகரெட்
பெட்டிகளை பெட்டகத்தில் வைத்துப் பூட்டுவார். பெட்டகத்தில் பெட்டிகள்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகை வெகு நேரம் ரசித்திருப்பார். அப்படியொரு
நாளில் திடீரெனத் தோன்றிய எண்ணம் அவரது மகிழ்ச்சியை நிலைகுலையச் செய்தது.
வரும் காலத்தில் தனது அனைத்து வெட்டப்பட்ட நகங்களையும் சேகரிப்பதற்கு ஏற்ற
வகையில் அந்த பெட்டகம் போதுமானதாக இருக்குமா? என்ற சந்தேகம்தான் அது.
இன்னும் எத்தனை நகங்கள் சேகரமாகும் என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு
கணிதவியலாளரான அவருக்கு அதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமான காரியமாகவும்
இல்லை. ஒருவேளை தான் எண்பத்தேழரை வயது வரை வாழ்ந்தால் பாதுகாப்புப்
பெட்டகத்தின் மேல் மட்டம் வரை சிகரெட் பெட்டிகள் நிரம்பிவிடும் என்று
கணக்கிட்டார். அதற்கு மேலும் உயிருடன் இருந்தால் மேலும் பெரிய பெட்டகம்
வாங்க வேண்டும். பெரிதாக கிடைக்கவில்லையென்றால் இதே போன்று வேறு ஒரு
பெட்டகத்தை வாங்க வேண்டும். இந்தப் பிரச்னைக்குக் கூட ஒரு தீர்வு இருந்தது.
ஆனால் இறுதிப் பிரச்னை அவ்வாறில்லை. இதற்கு முன் அவரது மனதுக்கு எட்டாத
அந்தப் பிரச்னை திடீரென தலை தூக்கியது. தான் இறந்த பின்னர் அந்த நகச்
சேகரிப்பின் நிலைமை என்னவாகும்? என்ற கவலைதான் அது.
அடுத்து அது போன்றொரு நிலைமைக்கு முடிந்தவரை விரைவில் தயாராக வேண்டும்.
கட்டுறுதியான உடலமைப்பைக் கொண்டிருப்பதால் தற்போதைக்கு மரணம் பற்றிக்
கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும் நோய் மட்டுமே மரணத்தைத் தருவிக்கும்
என்று சொல்ல முடியாது. இயற்கை நமது கட்டுப்பாட்டையும் மீறி அழி்ப்பதற்குக்
காத்துக் கொண்டிருக்கிறது. பத்திரப்படுத்த அவர் எடுக்கும் முயற்சிகள்
நிறைவேறுவதற்குள் திடீரென அவர் இறப்பது என்பதுதான் சேகரிப்புக்கு ஏற்படும்
மிக மோசமான சூழ்நிலையாக இருக்கக் கூடும். அவர் இறந்த பின் சொத்துக்காக
அவரது பாதுகாப்புப் பெட்டகம் திறக்கப்பட்டால் அது ரகசிய சேகரிப்பை
தேவையில்லாமல் பகிரங்கப்படுத்தி விடும்.
ஏதாவது செய்து அதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். ஆனால் எப்படி?
ஒருவேளை, மற்றொரு பாதுகாப்புப் பெட்டகத்தை அநாமதேயப் பெயரில் வாடைக்கு
எடுத்துவிட்டால், தான் இறந்த பிறகும் கூட அந்தப் பெட்டகம் திறக்கப்படாமல்
இருக்குமல்லவா? ஆனால் வாடகைக் காலம் முடிந்த பிறகு பெட்டகம் திறக்க
வாய்ப்பிருக்கிறது. அதனால், ஒரு பெட்டகத்தை மிக நீண்ட காலத்துக்கு
வாடகைக்கு எடுத்துவிடுவதுதான் சரியாக இருக்கும். அப்படியானால் ஒரு
நூற்றாண்டா அல்லது ஓராயிரம் ஆண்டா? நீண்ட காலம் என்பது எத்தனை ஆண்டுகள்
என்பதில் குழப்பம் சூழ்ந்தது. வங்கியிலோ அதிகபட்சம் 25 ஆண்டுகளுக்கு
மட்டுமே வாடகைக்குத் தர முடியும் என்று கூறிவிட்டார்கள்.
நிச்சயமாக அது அவருக்குப் போதுமானதாக இல்லை. வங்கியிலிருந்து துவண்டு
போன மனதுடன் வெளியில் வந்த அவர் உற்சாகமற்ற மனநிலையிலேயே இருந்தார்.
அப்போது, அவர் கவனத்திலிருந்து பிசகிய மற்றொரு உண்மை நினைவுக்கு வந்த போது
நிலைமை மேலும் மோசமானது. பிணத்தின் விரல்களில் உள்ள நகம் சிறிது நாளைக்கு
வளருமே. அதை என்ன செய்வது? குழந்தைப் பருவத்தில் இழந்த நகங்களை
மீட்டெடுக்க முடியாமல் போனது போல எதிர்காலத்திலும் இழந்துவிட அவர் தயாராக
இல்லை. அதற்கான பாதுகாப்பை அவர் உறுதி்ப்படுத்த வேண்டும். மிக முக்கியமான
மாதிரி ஒன்றை அந்தச் சேகரிப்பு இழக்க வேண்டுமா? கூடாது. அப்படியானால்
என்ன செய்ய வேண்டும்? இறந்த பிறகு கல்லறைக்குள் சென்று நகங்களை வெட்டவும்
முடியாது. தனக்குப் பின் தனது விரல் நகங்களை வெட்டும் பொறுப்பை யாரிடம்
விடுவது?
இந்த சிக்கல் அவர் மனதை விட்டு அகலவுமில்லை, அதற்கொரு தீர்வைக்
கண்டுபிடிக்கவும் முடியவில்லை. பிறகொரு நாள் மழைக்கால மதிய நேரம் அந்த
திடீர் ஞானம் அவருக்குத் தோன்றியது. அது ஒரு கணித சூத்திரம் போல மிக
எளிதாகவும், பிரமாண்டமான நேர்த்தியையும் கொண்டிருந்தது. மனம் ஆனந்தக்
கூத்தாடுவது போலிருந்தது. தான் ஆனந்தப்படுவதை யாரும் கவனிக்காவிட்டாலும்
மிகச் சிறந்த பழக்க வழக்கங்களைக் கொண்ட கனவான் போல அதிலிருந்து விலகியே
இருந்தார்.
மரணம் மட்டுமே தன் பாதையில் குறுக்கிடும் முக்கியமான தடை என்றால் அதைத்
தாண்ட இறுதியான தீர்வு ஒன்று மட்டுமே உள்ளது. திரு. ப்ரோஸ்கா அந்த இறுதியான
முடிவை எடுத்தார்.
அது- “தான் ஒரு போதும் சாகக் கூடாது என்பதுதான்”!
பி.கு.: செர்பிய எழுத்தாளர் ஜோரன் ஜிவ்கோவிக் எழுதிய Twelve Collections and the Teashop தொகுப்பில் உள்ள Fingernails என்ற கதையின் தமிழாக்கம்.
ஆங்கிலத்தில்- அலைஸ் காப்பில் ஓசிக்
2 comments:
பொழுதுபோக்கு பல வகை உள்ளது. இப்படி ஒரு பொழுதுபோக்கு ஒரு மனப் பழுது தான்....
@சந்திரன்
இக் கதை fantasy வடிவில் எழுதப்பட்டுள்ளது. இதன் கதை கருவே மொழிபெயர்க்கத் தூண்டியது...
Post a Comment