Pages

Sunday, April 10, 2022

பூனைகளைப் பிடிப்பதில்லை அல்லது நாய்களைப் பிடிக்கும்

 

மென்மயிர்க் காலினுள் உகிர் புதைந்த

பூனைகளைப் பிடிப்பதில்லை. அல்லது

நகங்களால் கீறத் தெரியா நாய்களைப் பிடிக்கும்.

நினைவில் உத்தியுள்ள மிருகம் பூனை.

லாவகம் நிறைந்த அது அலட்சியத்தின் உருவகம்.

வாசலை விட சாளரங்களே

பூனையின் பிரியமான வலசை.

வாலிருந்தும் நன்றி காட்டுவதில்லை.

நெடுந்தூரம் துணைக்கு வராது.

கண்களில் தெரிவதோ சுயநல ஒளி.

கால்களிடையே உரசிச் செல்லும் அது

எசமானரை மதிப்பதுமில்லை.

அதிகாரத்தின் நாற்காலியில் ஏறி நின்று

ஏளனமாய் பார்க்கும்.

நாய்கள் அப்படியல்ல.

கருணை மிகுந்த நாய்கள்

பூனைகளைப் போல கைவிடுவதில்லை.

வாலாட்டலில் எப்போதோ போட்ட பிஸ்கட் தெரியும்.

கையசைவிற்குக் காத்திருக்கும்.

புலிகளின் வரிகள் அளித்த வறட்டு கர்வம்

நாய்களுக்கு இல்லை.

பாதையின் குறுக்கே அபசகுனம் காட்டாது.

அதிகாரம் அற்றவனின் அன்பில் குழையும்.

திருட்டுப் பூனை என்பது

காம ரகசியங்களில் நெளியும் சொல்.

திருட்டு நாயோ ஆறறிவு மனிதனுக்கான வசை.

ஃபூக்கோவோ ப்யூகோவ்ஸ்கியோ

பூனையை கவிதைகளில் படைப்பது

இல்லையென்றால் கையில் பிடிப்பது

ஜீவகாருண்ய ஒளிவட்டம் தரும் தான்.

ஆனாலும்

மதில்மேல் நின்று பார்ப்பதைவிட

வான் ஏகினும் உடன் வரும்

நாய்களையே பிடிக்கும். அல்லது

பூனைகளைப் பிடிப்பதில்லை.


நன்றி: வாசகசாலை.காம்

No comments: