Pages

Friday, February 17, 2012

மிகைல் ஸோச்சென்கோ- தொப்பி


நிகழ்காலத்தில் இருந்துகொண்டு எதிர்காலத்தில் வாழ்பவனே படைப்பாளி. கவிதையாயினும் கதையாயினும் தன் படைப்பினூடே நிகழ்காலத்தை விமர்சித்துக் கொண்டும் கற்பனையில் தனக்கான உலகை படைத்துக் கொண்டும் இருக்கும் மனதை உடையவன் சிறந்த படைப்பாளியாகிறான். காற்றின் திசையையும் வேகத்தையும் தடுக்க இயலாதது போல எழுத்தாளனின் மனதுக்கும் அவன் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் தடை போட முடியாது.

 எந்த ஒரு நாட்டிலும் அரசுக்கு எதிரான கொள்கையுடையதாக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் இருந்திருக்கின்றன. அந்தந்த நாடுகளின் அரசுக்கு எதிரான கலகக் குரல் கொண்டதாக அந்தப் படைப்பாளிகள் இருந்துள்ளனர். முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிச சிந்தனையை வளர்த்த
எழுத்தாளர்களும், பொதுவுடைமை புரட்சி செய்த நாடுகளில் காணப்பட்ட ஒடுக்குமுறைகளை விமர்சித்த எழுத்தாளர்களும் ஏராளமாய்
வாழ்ந்துள்ளனர்.

உண்மையில் எழுத்தாளன் என்பவன் ஒரு கலகக்காரனே. மானுட அறத்தின், பல்லாயிரம் ஆண்டுகளாய் மானுட மனத்தில் விழுந்து முளைத்து வேர்விட்டு எழுந்து செழித்து நிற்கும் மாறாத விழுமியங்களை காப்பதே தனது எழுத்தின் சாரமாய் கொண்டு தனது கருத்தை அஞ்சாமல் உலகின் முன் வைப்பவன். தஸ்தயேவ்ஸ்கி, தால்ஸ்தோய் போன்றோர் இந்த அறத்தையே வெளிப்படுத்தினர்.

அவ்வகையில் ரஷ்ய எழுத்தாளர்களின் ஏராளமான படைப்புகள் தமிழில் வெளி வந்துள்ளன. சோசலிச அரசின் கொள்கைகளைப் போற்றும் கதைகளும்
பெரும்புகழ் பெற்றிருக்கின்றன. ஆனால் குறைகள் எங்கும் இருக்கின்றன. அவற்றை தம் படைப்புகளில் சுட்டிக் காட்டிய எழுத்தாளர்கள் இல்லாமல் செய்யப்பட்டனர். அவர்கள் ரைட்டர் யூனியனிலி்ருந்து வெளியேற்றப்பட்டனர்.

கலக்காரர்களுக்கு எதிரான ஒரு கலகக்காரன் எனில் அவன் துரோகியே என்பது எங்குமிருக்கும் சித்தாந்தம்தான். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் மிகைல் மிகலோவிச் ஸோச்சென்கோவும் ஒருவர்.


1895ல் உக்ரைனில் பிறந்தவர் மிகைல் ஸோச்சென்கோ. முதல் உலகப் போரில் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து போரிட்டார். பின்னர் ரஷ்யப் புரட்சி ஆதரவாளராக மாறிய அவர் செம்படையில் சேர்ந்து உள்நாட்டுப் போரில் பங்கேற்றார்.  1922ல் செராப்பியன் பிரதர்ஸ் என்ற இலக்கிய குழுமத்தில் சேர்ந்து எழுதத் துவங்கினார். ஆரம்பத்தில் முதல் உலகப் போர், ரஷ்ய உள்நாட்டுப் போர் அனுபவங்கள் சார்ந்து எழுதினாலும் பின்னாளில் தனக்கென தனி நடையை உருவாக்கிக் கொண்டார். அது நகைச்சுவை, நையாண்டி கலந்த எழுத்தாக மாறியது. Tales (1923),  Esteemed Citizens (1926),  What the Nightingale Sang (1927),  Nervous People (1927) போன்றவை அந்த வகையைச் சார்ந்தவை.

அவரது நகைமுரண் வகை எழுத்துகள் சோவியத் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. 1920களில் ரஷ்யாவில் அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்களில் அவரும் ஒருவராய் இருந்தார். சோவியத் அமைப்பை அவர் நேரடியாகத் தாக்காவிட்டாலும் அதன் உட்கூறுகளில் மலிந்து காணப்பட்ட அதிகாரவர்க்கத்தின் அலட்சியம், ஊழல், குடியிருப்புகள், உணவுப் பற்றாக்குறை போன்றவற்றை தன் எழுத்துகளில் வெளிப்படுத்தத் தயங்கியதில்லை. இதனால் சோவியத் அரசின் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டி இருந்தது. அவருடைய சுயசரிதையான Before Sunrise 1943ல் தடை செய்யப்பட்டது.  மூன்று ஆண்டுகள் கழித்து The Adventures of a Monkey  என்ற நாவல் வெளியானபோது சோவியத் ரைட்டர்ஸ் யூனியனில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அத்துடன் அவரது இலக்கிய வாழ்வு முடிவுக்கு வந்தது.  லெனின்கிராடில் 22 ஜூலை 1958ல் அவர் இறந்தார்.

அவர் எழுதிய சிறுகதைகளில் Electrification ஆகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. The crisis, The Galosh, The Bathhouse போன்ற கதைகளின் வரிசையில் The Hat  என்ற சிறுகதை ஸோச்சென்கோவைப் படிப்பதற்கான துவக்கமாகக் கொள்ளலாம்.

வளர்ச்சியின் பெயரால் அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எல்லாம் அரைகுறையானதாகவோ அல்லது அதிகாரவர்க்கத்தின் அலட்சியம் காரணமாக முழுமையடைய முடியாமலோ மக்களை அவதிக்குள்ளாக்குகின்றன என்பதைக் கூறுகிறது இக் கதை. இதன் கடைசி வரிகளே இதற்கு வலுச் சேர்க்கின்றன.


தொப்பி

கடந்த பத்தாண்டுகளில் நாம் எவ்வளவு முன்னேறியுள்ளோம் என்பதை இப்பொழுதுதான் ஒருவரால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

நமது வாழ்க்கையின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். அதில் முழுமையான வளர்ச்சியையும் மகிழ்ச்சிகரமான வெற்றியையும் நீங்கள் காண முடியும்.

சகோதரர்களே, ஒரு முன்னாள் போக்குவரத்து ஊழியனாக அத்துறையில் செய்யப்பட்ட சாதனைகளைக நான் கண்கூடாக இன்று காண்கிறேன்.

இப்போதெல்லாம் ரயில்கள் நன்றாக இயங்குகின்றன. இற்றுப்போன படுக்கைகள் அகற்றப்பட்டுவி்ட்டன. சிக்னல்கள் சரி செய்யப்பட்டுள்ளன. விசில்கள் மிகச் சரியாக ஊதுகின்றன. பயணம் செய்வது உண்மையிலேயே மிகவும் மகிழ்வானதாகவும் இனிமையாகவும் இருக்கிறது.

ஆனால் 1918ம் ஆண்டில் என்ன நிகழ்ந்தது? நீங்கள் பயணித்தீர்கள்... பயணித்தீர்கள்...பயணித்தீர்கள்... சென்று சேர முடியாமல் பயணம் செய்து கொண்டே இருந்தீர்கள். செய்வதறியாமல் ஸ்தம்பித்துக் கிடந்தோம். அப்போது என்ஜின் ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்து "சகோதரர்களே எல்லோரும் இங்கே வாருங்கள்" என்று கூச்சலிட்டார். பயணிகள் அனைவரும் அங்கு ஒன்று கூடினர்.

"சகோதரர்களே, எரிபொருள் இன்மையால் மேற்கொண்டு செல்ல முடியாது என நான் அச்சப்படுகிறேன். பயணம் செய்தே ஆக வேண்டும் என்று விரும்புவோர் தங்களது பெட்டிகளில் இருந்து எட்டிக் குதித்து காட்டுக்குள் ஓடிச் சென்று விறகுக் கட்டைகளைப் பொறுக்கி வாருங்கள்" என்று ரயில் ஓட்டுநர் கூறினார்.

நல்லது. பயணிகள் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் மிகவும் நொந்து போய் இந்தப் புதிய கண்டுபிடிப்பு பற்றி புலம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் விரைவிலேயே அவர்கள் காட்டுக்குள் சென்று விறகுகளைப் பொறுக்கவும், மரங்களை வெட்டி அறுக்கவும் துவங்கினர். நிறைய விறகுகளைச் சேகரித்தபின் ரயில் நகர்ந்து செல்ல நாம் பயணித்தோம். ஆனால் அந்த விறகுகள் அனைத்தும் பச்சை மரங்களிலிருந்து பெற்றவை. அதனால் நரகத்தின் நாராசமான ஒலியைப் போன்று ரயில் என்ஜினிலிருந்து சத்தம் எழும்பி நம் பயணம் மீண்டும் தடைபட்டது.

1919ம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. நாங்கள் லெனின்கிராட் நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். எங்கென்றே தெரியாத ஓரிடத்தில் ரயில் நின்றது. பிறகு வந்தவழியே பின்னோக்கிச் சென்றது. பிறகு மீண்டும் நின்றது.

அப்போது பயணிகள் அச்சத்துடனும் ஐயத்துடனும் கேள்விகளை எழுப்பினர். ஏன் ரயில் நின்றுவிட்டது?  ஏன் பின்னோக்கிச் செல்கிறது? கடவுளே, ரயில் மேற்கொண்டு செல்ல விறகுகளைப் பொறுக்க வேண்டுமா? ரயில் ஓட்டுநர் ஏதேனும் பிர்ச் மரக் கட்டைகளைத் தேடுகிறாரா? அல்லது காட்டுக் கொள்ளைக் கும்பல் ஏதாவது உருவாகி உள்ளதா?

அப்போது ரயில் ஓட்டுநரின் உதவியாளர் "ஒரு துரதிருஸ்டவசமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது. என்ஜின் ஓட்டுநரின் தொப்பி பறந்துவிட்டது. அதைத் தேடி எடுத்துவர அவர் சென்றிருக்கிறார்" என்றார்.

ரயிலிலிருந்து இறங்கிய பயணிகள் பாதையோரத்தில் அமர்ந்தனர். திடீரென காட்டுக்குள்ளிருந்து வெளிறிய முகத்துடனும் விரக்தியில் குலுங்கும் தோள்களுடனும் ஓட்டுநர் வெளியே வருவதை பயணிகள் கண்டனர். "எங்க போய்த் தொலைஞ்சுதுன்னே தெரியலை. என்னால அதைக் கண்டுபிடிக்க முடியலை. சாத்தானுக்குத்தான் வெளிச்சம்" என்றார்.

பிறகு ரயிலை மேலும் அரை பர்லாங் தூரம் பின்னோக்கிச் செலுத்தினார். இப்போது பயணிகள் தங்களுக்குள் சிறு சிறு தேடுதல் குழுக்களை அமைத்து காணாமல் போன தொப்பியைத் தேடத் துவங்கினர். சரியாக இருபது நிமிடங்கள் கழித்து தோளில் சாக்கு மூட்டை சுமந்த ஒரு பயணி "சாத்தான்களே இங்க பாருங்க, தொப்பி கிடக்குது" என்று கூச்சலிட்டார்.

அங்கே ஒரு புதரில் தொங்கியபடி ரயில் ஓட்டுநரின் தொப்பி கிடந்தது. அந்தத் தொப்பியை எடுத்த ஓட்டுநர், அதை தலையில் அணிந்து கொண்டு அதன் அடியிலிருந்த கயிற்றை தனது சட்டை பட்டனில் சேர்த்துக் கட்டிக் கொண்டார். பிறகு நீராவியை உசுப்பிவிட்டு ரயிலைக் கிளப்பினார்.

பிறகு அரை மணி நேரம் கழித்து நாங்கள் பாதுகாப்பாகச் சென்று சேர்ந்தோம். ஆம். போக்குவரத்து மிகவும் மோசமான நிலையில் அன்றிருந்தது.

ஆனால் இன்று ஒரு பயணியின் சாதாரணத் தொப்பி பறந்துபோனால் கூட நாங்கள் ஒரு நிமிடத்திற்கு மேல் ரயிலை நிறுத்த மாட்டோம்.

ஏனென்றால் நேரம் மிக உயர்வானது, முக்கியமானது. நாம் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

மிகைல் மிகலோவிச் ஸோச்சென்கோ, The Hat, முதல் பதிப்பு 1927, ஆங்கில மொழியாக்கம் ராபர்ட் சேண்ட்லர், தமிழில் க.ரகுநாதன்.

2 comments:

வ.மு.முரளி said...

அன்பு நண்பர் ரகுவுக்கு,

நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
இது சிறுகதையா என்று கூற முடியவில்லை. ஆனால் அங்கதம் வழிகிறது. மிகைல் ஸோச்சென்கோவின் தேர்ந்த கதைகளை மொழியாக்கம் செய்தால் நன்றாக இருக்கும்.

RAGUNATHAN said...

@வ.மு.முரளி

இது கதை அல்லது கட்டுரை என்பதை விட நல்ல நகைமுரண் தெறிக்கும் புனைவு என்றே நினைக்கிறேன். ஸோச்சென்கோ கதைகளை மொழியாக்கம் செய்ய முயற்சி செய்கிறேன். உங்கள் பாராட்டு உத்வேகம் தருகிறது. :)