Pages

Friday, December 30, 2011

ஆன்டன் செகாவ் 'பந்தயம்'-1

மரண தண்டனை வேண்டுமா என்று உலகம் முழுவதும் விவாதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. மூன்று பேரின் முடிவை தள்ளி போட தமிழர்கள் தவித்து வருகின்றோம். ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தை எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் கேள்விக்கான பதிலை  தனது எழுத்தின் மூலம் சிறுகதையாக்கி முடிவை காவியம் போல் செதுக்கியிருக்கிறார் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ்.

எப்போதோ படித்த இந்தக் கதை எப்போதும் என்னை துரத்திக் கொண்டிருக்கிறது வாழ்ந்தே ஆக வேண்டிய நம் வாழ்க்கையைப்  போல. அந்தக் கதையின் ஆங்கில வழி தமிழாக்கம் இது.



                                                                  பந்தயம்
 
பனி பொழியும் ஓர் இரவில் தனது படிப்பறையில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார் அந்த வங்கி அதிபர். 15 ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு நாளின் பொன் மாலைப் பொழுதில் அவர் அளித்த விருந்தில் நடந்த சம்பவம் மனதில் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த அறையில் இருந்த அறிவிற்  சிறந்த இளைஞர்களுடன் ஆர்வத்தைத் தூண்டும் உரையாடல் நடந்தது. பல விஷயங்களைப் பேசிய அவர்கள் ஒரு கட்டத்தில் மரண தண்டனை குறித்தும் தங்களது உரையாடலில் விவாதித்தனர்.

விருந்துக்கு வந்திருந்த பெரும்பாலானோரில் பத்திரிகையாளர்களும், மெத்தப் படித்த கனவான்களும் மரண தண்டனை அளிப்பதை நிராகரித்தனர். இம்மாதிரியான தண்டனை நீதி நெறியற்றது, காலத்திற்கு ஒவ்வாதது, பழம் பஞ்சாங்கம், ஒரு கிறிஸ்தவ நாட்டிற்கு ஏற்புடையது அல்ல என்று வாதிட்டார்கள். இன்னும் சிலரோ, எங்கெல்லாம் மரண தண்டனை விதிக்க இடமிருக்கிறதோ அங்கெல்லாம் ஆயுள் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று ஆவேசப்பட்டார்கள்.

 'உங்கள் வாதத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்றார் அந்த வங்கியாளர்.  'ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ இதுவரை நான் அடைந்ததில்லை. ஆனால் ஒரு நீதிபதியின் இடத்தில் இருந்து பார்த்தால் ஆயுள் தண்டனையை விட மரண தண்டனையே மிகவும் அறம் சார்ந்தது, நீதி நெறிமிக்கது. மரண தண்டனை ஒருவனை உடனடியாகக் கொல்கிறது. ஆனால் ஆயுள் தண்டனையோ கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது. ஒரு மனுஷனை சில நிமிஷத்தில் கொல்வது நல்லதா அல்லது சிறிது சிறிதாக வாழ்க்கை முழுவதும் சாகடிக்கிறது நல்லதா. இதில் எது மனித நேயம் மிக்கது?'
'இரண்டுமே நீதியற்றது, மனித நேயமில்லாதது' என்றார் ஒரு விருந்தினர்.  இரண்டு தண்டனைகளின் நோக்கமும் வாழ்வை ஒருவனிடம் இருந்து எடுத்துக் கொள்வதுதான். அரசாங்கம் என்பது கடவுள் அல்ல. அரசாங்கத்தால் ஓர் உயிரைக் கொடுக்க முடியுமா. நிச்சயமா முடியாது. அதனால அதுக்கு ஓர் உயிரை எடுக்கிற உரிமையும் இல்லை' என்றார்.
வந்திருந்த விருந்தினர்களில் ஓர் இளம் வழக்கறிஞரைப் பார்த்து அவரது கருத்து என்ன என்று கேட்டோம்.

'இரண்டுமே மனித நேயமற்றது. ஆனால் ஆயுளா அல்லது மரணமா என்று கேட்டால் நான் ஆயுள் தண்டனையையே தேர்வு செய்வேன். ஏன்னா, சாகறத விட எப்படியாவது உயிரோட இருக்கிறது நல்லது தானே' என்றார்.

விவாதம் உச்சத்தை அடைந்தது. அப்போது வங்கி அதிபர் மிக இள வயதினராக இருந்ததால் பெரும் மன எழுச்சி கொண்டு  உணர்ச்சி வேகத்தில் இருந்தார்.

'இதுல கொஞ்சம் கூட உண்மையில்லை. உங்களால் தனிமைச் சிறையில் ஒரு 5 வருஷங்கள் கூட இருக்க முடியாதுங்கிறேன். பாக்கலாமா? என்ன பந்தயம்? 2 மில்லியன் ரூபிள் பந்தயம். ஓகேவா?' உணர்ச்சி வேகத்தில் டேபிளை ஓங்கித் தட்டினார் வங்கி அதிபர்.

'நீங்க நிஜமாத்தான் சொல்றீங்கன்னா, உங்க பந்தயத்துக்கு நான் தயார். ஆனால் 5 வருஷமில்ல 15 வருஷத்துக்கு நான் ரெடி' என்றார் இளம் வழக்கறிஞர்.

'15 வருஷமா...அப்படின்னா நானும் ரெடி. ஜென்டில்மென் இதோ 2 மில்லியன் கொடுக்க நான் ரெடி' இப்போதே வெற்றி பெற்றது போல் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார் அதிபர்.

'ஒப்புக்கிறேன். நீங்க உங்க மில்லியனை பந்தயம் கட்டுங்க. நான் என் சுதந்திரத்தை பந்தயமா கட்டுறேன்' வக்கீலும் ஆவேசமானார்.

இந்த முட்டாள்தனமான பந்தயம் துவங்கியது. மில்லியன் ரூபிள்களை எடுத்து வைத்த வங்கி அதிபர் இரவு விருந்தின் போது அந்த இளம் வழக்கறிஞரை சீண்டினார்.

'இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நல்லா யோசிச்சு முடிவு செய்யுங்க தம்பி. எனக்கு 2 மில்லியன் ரூபிள் சும்மா... ஒன்னுமே இல்லை. ஆனா உங்களுக்கு வாழ்க்கையோட 3, 4 சிறந்த வருஷங்கள் வீணாப் போயிரும். நான் மூனு நாலுன்னு ஏன் சொல்றேன்னா அதுக்கு மேல உங்களால தனிமை சிறையில இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அதனால அப்படி சொல்றேன். அதே மாதிரி கட்டாயமா சிறைக்குள்ள இருக்கிறது வேற. நீங்களே விரும்பி தனிமைச் சிறைக்குள்ள அடைஞ்சுக்கிறது வேறங்கிறது புரிஞ்சுக்குங்க தம்பி.  அது ரொம்ப கஷ்டமானது. எந்த நிமிஷத்திலாவது  நீங்க சிறையிலிருந்து வெளிய போயிருவோம்டா சாமீ என்று நினைத்தாலும் மொத்த சிறைக் காலமும் உங்களுக்கு ரொம்ப வேதனை தருவதாக மாறிடும். ஞாபகம் வச்சுக்குங்க. பாவம் நீங்க' என்றார் அதிபர்.

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த வங்கி அதிபர் நினைத்துக் கொண்டார். 'இந்தப் பந்தயத்தின் நோக்கம் என்ன?  அந்த மனுஷன் 15 வருஷத்தை இழப்பதும், நான் 2 மில்லியனைத் தூக்கி வீசுவதும் எதற்காக? மரண தண்டனையை விட ஆயுள் தண்டனை நல்லது என்பதை இந்தப் பந்தயம் நிரூபிக்குமா? இல்லை. இது எல்லாமே அர்த்தமற்றது. முட்டாள்தனம். எனக்கு ஒரு இளைஞனின் வாழ்க்கையில் விளையாடக் கிடைத்த சந்தர்ப்பம். அவனுக்கு கஷ்டப்படாமல் கிடைக்கும் பணத்தின் மீது பேராசை. அதுதான் இதுக்கு எல்லாம் அர்த்தம்.'

அவரது சிந்தனை கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் ஊடாடிக் கொண்டிருந்தது. அந்த மாலைப் பொழுதில் நடந்தவை நினைவிலிருந்து தூசி போல உதிர்ந்தன.

வங்கியாளரின் தோட்டத்தில் உள்ள பங்களாவில் கண்காணிப்பு நிறைந்த ஓர் அறையில் அந்த இளைஞர் தனது சிறைவாசத்தை துவங்குவது என முடிவு செய்யப்பட்டது. 15 வருடங்களுக்கு எந்த மனிதரையும் பார்க்கக் கூடாது, மனிதக் குரல்களைக் கேட்கக் கூடாது, வெளியிலிருந்து எந்த கடிதமும் பெறவோ, செய்தித் தாளோ படிக்கக் கூடாது என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டது. ஆனால் குடிக்கலாம், புகைக்கலாம், புத்தகம் படிக்கலாம், கடிதம் எழுதலாம், இசைக் கருவி வாசிக்கலாம். வெளியுலகுடன் அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட ஒரே தொடர்பு சிறிய சாளரம் மட்டுமே. அது பந்தயத்தின் விதிமுறை.  அவருக்குத் தேவையான மது, சுருட்டு, புத்தகம், இசைத்தட்டு என்று எதையும் ஒரு சிறிய சீட்டில் எழுதி அனுப்பலாம். அவற்றை அந்த சிறிய சாளரத்தின் வழியாக மட்டுமே பெற முடியும்.

அந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு வரியும் மிக நுணுக்கமாக எழுதப்பட்டிருந்தது. நவம்பர் 14, 1870- ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்குத் துவங்கி நவம்பர் 14, 1885- ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு கடுங்காவல் மிகுந்த தனிமைச் சிறைவாசம் முடிகிறது. இந்த விதிமுறைகளை மீறுவதற்கு அந்த இளைஞர் செய்யும் மிகச் சிறிய முயற்சி கூட பந்தயத்தில் தோல்வியடைந்ததைக் குறிக்கும். கடைசி நாளில் கடைசி 2 நிமிடங்கள் இருக்கும் போது கூட அவர் விதியை மீறினால் வங்கியாளருக்கு 2 மில்லியன் ரூபிள் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதும் ஒரு விதி.

சிறைவாசத்தின் முதலாண்டில், தனிமையும் மன அழுத்தமும் அந்த இளைஞரை  வாட்டி வதைக்கின்றன என்பதை அவர் எழுதி அனுப்பிய சிறு குறிப்புகள் மூலம் உணர்ந்தேன். அவரது அறையிலிருந்து பியானோவின் இசையொலி இரவும் பகலும் கேட்டுக் கொண்டே இருந்தது. புகையிலையையும், ஒயினையும் அவர் மறுத்துவிட்டார். ஒயின் ஆசையை அதிகரிக்கிறது. ஆசையே ஒரு கைதிக்கு மிகப் பெரும் துன்பமிழைக்கும் எதிரி.  குடிப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதையும் விட மிகத் துன்பமான செயல் இல்லை. சுருட்டுப் பிடித்தால் அந்த அறையில் எழும் புகையால் காற்று மாசடைந்துவிடும். அதனால் அதுவும் வேண்டாம் என்று அந்த இளைஞர் ஒதுக்கினார்.  முதல் வருடத்தில் எளிமையான காதல் கதைகள் கொண்ட நாவல்கள், புத்தகங்கள், வீரதீர சாகசக் கதைகள் கொண்ட புத்தகங்களைப் படித்தார்.

இரண்டாம் ஆண்டில் அந்த அறையிலிருந்த பியானோ அமைதியாக இருந்தது. அந்த சிறைவாசி தனக்கு செவ்வியல் இலக்கியங்கள் வேண்டும் என்று கேட்டுப் பெற்றார். இப்படியே நாட்கள் நகர்ந்தன. ஐந்தாவது வருடத்தில் அந்த அறையில் மீண்டும் பியானோ இசைத்தது. குடிப்பதற்கு ஒயின் பெற்றுக் கொண்டார். அவரைப் பற்றி அறிந்தவர்கள், அந்த இளைஞர் அறையில் எந்நேரமும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறார் என்றும், சாப்பிடுவது, தூங்குவது, குடித்துக் கொண்டு, கோபமாக தனக்குத் தானே கத்திக் கொண்டும் இருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. இரவு முழுவதும் ஏதாவது எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் விடிகாலையில் அவற்றைக் கிழிந்து எறிந்தார். ஓரிருமுறை அவர் அழுததும் கேட்டது.

ஆறாவது ஆண்டின் பிற்பகுதியில் அந்த இளைஞர் புதிய மொழிகளையும், தத்துவம், வரலாறு ஆகியவற்றையும் வெறி கொண்டது போலப் படிக்கத் தொடங்கினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 600 புத்தகங்களை அவர் படித்து முடித்தார். வங்கி அதிபர் தேடித் தேடி அந்தப் புத்தகங்களை அவருக்காக வாங்க வேண்டியிருந்தது. அந்தக் கால கட்டத்தில் வங்கியாளருக்கு ஒரு கடித்தத்தை சிறைவாசி அனுப்பினார்.

'மை டியர் ஜெயிலர், நான் இந்தக் கடிதத்தை ஆறு மொழிகளில் எழுதியுள்ளேன். அந்த மொழிகளைத் தெரிந்தவர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். அதில் ஒரு பிழை கூட இல்லையென்றால் உங்கள் தோட்டத்தில் நின்று வானை நோக்கி துப்பாக்கியால் ஒரு முறை சுடுங்கள். அதன் மூலம் நான் எழுதியது சரிதான் என்றும் எனது உழைப்பு வீணாகவில்லை என்றும் அறிந்து கொள்வேன். வரலாற்றின் பக்கங்களில் வாழ்ந்த எந்தவொரு அறிவாளியும் பல்வேறு மொழிகளைத் தெரிந்திருக்கிறார்கள். அவற்றை நான் புரிந்துகொள்ளும் போது எனது ஆன்மா எவ்வளவு ஆனந்தம் அடைகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.'

சிறைவாசியின் ஆசை நிறைவேற்றப்பட்டது. வங்கி அதிபர் தோட்டத்தில் இருமுறை சுட உத்தரவிட்டார்.

பத்தாம் ஆண்டில் அவர் ஓரிடத்தில் அமர்ந்து நற்செய்தியை (Gospel) மட்டுமே படித்துக் கொண்டிருந்தார். ஒரு சில வருடங்களில் 600 புத்தகம் படித்த ஒருவர் ஓராண்டை அமைதியாகக் கழித்தது வியப்பாக இருந்தது வங்கி அதிபருக்கு. அதற்குப் பின் இறையியலும், மதங்களின் வரலாறும் பற்றிய புத்தகங்களைப் படித்தார்.

கடைசி இரண்டு வருடங்களில் ஏராளமான நூல்களை வகை தொகை இல்லாமல் வாசித்தார்.  ஒரு சமயம் இயற்கை அறிவியல் நூல்களை வாசித்தவர், சில சமயம் பைரன், ஷேக்ஸ்பியர் நூல்களை கேட்டார். வேதியியல், மருத்துவம், நாவல், தத்துவம், இறையியல் ஆகிய நூல்களை வாசித்து தீர்த்தார். கடலில் உடைந்து போன கப்பலில் இருந்து சிதறிய கட்டைகளை ஒவ்வொன்றாய் பிடித்து உயிர் தப்ப நினைக்கும் ஒரு மனிதனைப் போல புத்தகங்களை படித்துக் கொண்டே இருந்தார் அந்த தனிமை  சிறை இளைஞர்.

நினைவுகளினூடே மிதந்து கொண்டிருந்தவர் சட்டென்று நின்றார். நாளை 12 மணிக்கு அந்த இளைஞன் தனது சுதந்திரத்தை பெற்று விடுவான். ஒப்பந்தப்படி நான் அவனுக்கு இரண்டு மில்லியன் ரூபில்களை கொடுத்தாக வேண்டும். அப்படி கொடுத்தால் அதோடு நான் திவால் தான். எல்லாம் அதோடு முடிந்துவிடும் என்று நினைத்தார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவரிடம் எண்ணி முடிக்க முடியாத அளவு பணம் இருந்தது. ஆனால் இன்று, கடன் அதிகமா சொத்து அதிகமா என்று தனக்கு தானே கேள்வி எழுப்பக் கூட அவருக்கு அச்சமாக இருந்தது. வெறித்தனமாக பங்குச் சந்தையில் சூதாட்டம் போல ஈடுபட்டதும்,  கண்மூடித்தனமான ஊக வணிகத்தில் இருந்து வெளியே வரக்கூட முடியாத சூழலும் அவருடைய சொத்துகளை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்தன. பெருமை கொண்ட நெஞ்சமும், அச்சமின்மையும், தன்னம்பிக்கையும்  கொண்ட வங்கியாளர் தனது முதலீடுகள் ஒவ்வொரு முறை ஏறும்போதும், இறங்கும்போதும் பெரும் நடுக்கம் அடைந்தார்.

"நாசமாய் போன  பந்தயம்..." என்று மனம் தளர்ந்து தலையில் கை வைத்து அமர்ந்தார் அந்த வயோதிகர். "அந்த இளைஞன் ஏன் சாகவில்லை?. அவனுக்கு நாற்பது வயதுதான் ஆகிறது. என்னிடமிருக்கும் கடைசி பணம் வரை அவன் வாங்கிக் கொண்டு, நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொள்வான். வாழ்க்கையை அனுபவிப்பான். பங்கு சந்தையில் விளையாடுவான். அதே நேரம் நான் அவனை பொறாமையோடு ஒரு பிச்சைக்காரனை போல பார்த்துக் கொண்டிருப்பேன். 'எனது வாழ்வின் மாபெரும் மகிழ்ச்சிக்கு நீங்கள் தான் காரணம். நான் உங்களுக்கு உதவட்டுமா' என்று என்னை பார்த்து ஒவ்வொரு நாளும் அவன் கேட்பான். அய்யோ இது நடக்கக் கூடாது. அவமானத்திலிருந்தும் திவால் ஆவதில் இருந்தும் நான்  தப்பிக்க இருக்கும் ஒரே வழி அந்த இளைஞனின் மரணம் தான்."

மணி மூன்றடித்தது. அந்த வீட்டில் எல்லோரும் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தனர். வெளியே பனிக் காற்றுக்கு மரங்களின் அசைவோசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. பதினைத்து ஆண்டுகளாக பெட்டியில் பூட்டி வைத்திருந்த சாவியை சத்தமில்லாமல் எடுத்து தந்து கோட் பாக்கட்டில் வைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார் வங்கியாளர்.

தொடரும்... 

4 comments:

Unknown said...

அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்..

RAGUNATHAN said...

thank you for ur comments sai

வ.மு.முரளி. said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!
அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்.
-வமுமுரளி.

RAGUNATHAN said...

நன்றி சார். உங்கள் வாழ்த்து உத்வேகம் அளிக்கிறது.