Tuesday, September 8, 2009
வெள்ளெருக்கு- முந்திரிக்காட்டின் அந்தரங்கம்
கண்மணி குணசேகரனின் "வெள்ளெருக்கு' சிறுகதைத் தொகுப்பை படித்தபோது இந்த உணர்வே ஏற்பட்டது. தமிழினி வெளியீடான இத் தொகுப்பில் 14 சிறுகதைகள் உள்ளன. விருத்தாசலம், விழுப்புரம், பண்ருட்டி பகுதிகளில் வாழும் கிராம மக்களின் கதையை வட்டார மொழிநடையில் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
சீவனம்- இந்தத் தொகுப்பிலேயே மிகப்பிடித்த அழ வைத்த கதை இது. நகர நாகரிகமும், உலகப் பொருளாதாரத் தாக்கமும் கிராமத்தில் கூலி வேலை செய்பவனைக் கூட விட்டுவைக்காமல் அடித்து துவைத்து விட்டது என்பதைக் கூறும் கதை. விளைந்ததைக் கொண்டு செல்ல மாடு வேண்டும், மாட்டுக்கு வண்டி வேண்டும், வண்டியின் சக்கரத்துக்கு பட்டா போடுவார்கள். அதை பட்டறையில் வைத்து காய வைத்து அடித்து சீர் செய்து சக்கரத்தில் பொருத்துவார்கள். உலைக் களத்துக்கு கரி வேண்டும். கரி வாங்க காசு வேண்டுமே? எங்கே போவது.
"டயர் வண்டிகள் வந்த பிறகு, கொல்ல ஆசாரியை யாரும் ஏறெடுத்துப் பார்கவில்லை. வேலை முடங்கியது. வரும்படி குறைந்தது. வயிற்றில் சுருக்கம் விழுந்தது. உலைக்களம் கேட்பாரற்றுப்போய்விட்டது. எப்போதாவது சில்லறை வேலைக்கு, கூலிக்கு மல்லுக்கட்டி வாதாட வேண்டியிருக்கிறது'.
அப்போதுதான் வாராமல் வருகிறது சில்லறை வேலை. எங்கு கேட்டும் கரி கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல், கரியில்லை என்று திருப்பி அனுப்ப மனமில்லாமல் சுடுகாடு நோக்கி நடக்கிறார் ஆசாரி. அங்கே அவர் செய்யப் போகும் செயல் ஒரு கணம் வாழ்வின் மீளமுடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தும். அன்றைக்கு இறந்துபோன ஒருவனை எரித்த இடத்தை சுடுகாட்டில் தேடுகிறார். ஒரு விநாடி நிதானித்துவிட்டு கொண்டுவந்த சாக்கில், கீழே கிடக்கும் எரிந்து மீதியான கரித்துண்டுகளை எடுத்துப் போடுகிறார். அதில் எலும்பும் சேர்ந்தே வருகிறது. "மொத வேலயா ஊட்லபோய் கொட்டி, கெடக்கற எலும்புத் துண்டுவுள பொறுக்கி எட்டப் போடணும்'. என்று வேலை செய்யும் போது, "என்னா கரியில வெள்ளையா எலும்பு மாதிரி...' என்கிறான் எதிரில் இருப்பவன். "பைத்தியமா ஒனக்கு. பீங்கான் ஓடு' என்று வேகமாய் தூக்கி வேலிக்கு அந்தாண்ட எறிந்தான்.
வண்ணம்- ஆர்ட் கேலரிகளிலும், வழுவழு காகிதங்களில் அச்சான நவீன ஓவியங்களையும் பார்த்து பிரமிக்கும் கலா ரசிகர்களை சற்றே கிராமத்து ஓவியனின் பக்கம் திருப்புகிறது இக்கதை. கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்த வைக்கப்படும் சிலைகளுக்கு வண்ணம் அடிக்கும் தொழில் செய்கிறார் நடராஜ ஸ்தபதி. அவரிடம் தொழில் கற்றுக் கொள்ள விரும்பும் சிலம்பரசனுக்குக் கிடைப்பதோ கருப்பு வண்ணம் அடிக்கும் வேலை மட்டுமே.
"கருப்பு, கருப்பு எல்லாம் இருட்டாகவே போய்க் கொண்டிருந்தது வண்ணங்களைப் பற்றிய அவன் கனவு'. பயிற்சி பெறும் வரை கருப்பு பெயிண்ட் மட்டுமே அடிக்கக் கொடுக்கிறார் ஸ்தபதி. தனக்கு என்று உள்ள கனவை வெற்றி கொள்ள ஐயனார், வீரனார், குதிரை சிலைக்கு வண்ணக் கலவை அடிக்க ஒரு வாய்ப்பாவது கொடுக்கக் கூடாதா என்று வாய்ப்பை எதிர்நோக்கும் கிராமத்து ஓவியனின் மனம் சிலிர்க்க வைக்கிறது. வேறு தொழில் என்று பட்டறைக்குச் சென்றாலும் கருப்பு மை ஒட்டுகிறது உடலெங்கும். வண்ணமயமான வாழ்வை எதிர்பார்ப்பவனுக்கு வழிய வருவது கருப்பு மட்டுமே. செலம்புவின் மனம் கடைசியில், "இந்த கருப்புப் பெயிண்ட் இனி கையால நா தொடமாட்டன். எம்மாம் நாளைக்கி கருப்பு கருப்புன்னு அடிச்சிக்கிட்டுக் கெடக்கறது?' என்று ஸ்தபதியிடம் கோபப்பட வைக்கிறது. ஸ்தபதி சிரித்துக் கொண்டே, "சரி சரி, செவுப்பு பெயிண்ட எடுத்துக்கிட்டுப் போயி, ரெண்டு குதிரைக்கும் வாணியில அடி' எனும்போது பெரிய ஓவியனைப் போல் அவனுக்குள் ஒரு நிழல் விரிகிறது. தன் லட்சியத்தை அடையக் கிடைத்த துருப்புச் சீட்டு போல நினைத்து சிவப்பு பெயிண்டை மென்மையாக பூசியபோது கூச்சத்தில் நெளிகிறது குதிரை.
வெள்ளெருக்கு- அன்றிலிருந்து இன்று வரை கிராமப்புற பள்ளிக் கூடங்களில் ஆசிரியருக்கு வேலை செய்வதற்கென்றே சில மாணவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். சில நேரங்களில் பாடத் தொல்லையைத் தவிர்க்க அவர் எப்போது டீ வாங்கி வரச் சொல்லுவார், வீட்டுக்குப் போய் சாப்பாடு எடுத்துவரச் சொல்லுவார் என மாணவர்கள் காத்திருப்பார்கள் என்பது கிராமப் பள்ளியில் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆசிரியரின் ஆண் குழந்தைக்கு அரஞாண் கயிறு திரிக்க வெள்ளெருக்குச் செடியைத் தேடி அலையும் சிறுவர்கள் கதை. படிக்கும் போது நம் பால்யத்தின் கதவுகள் சற்றே திறந்து கொண்டு மனதினுள் காற்று வீசுவதைத் தடுக்க முடியவில்லை.
வனாந்திரம்- தாய், மகன் உறவு சொல்கிறது. கணவனை இழந்தவள் முந்திரி பயிர்களைப் பொறுக்கி விற்று பிழைப்பு நடத்துகிறாள். சிறுவயது மகனை வைத்துக் கொண்டு அவன் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாமல் திணறுகிறாள். முந்திரிப் பயிறு குழம்பு கேட்டு நச்சரிக்கும் மகனுக்கு ஆசை தீர செய்து கொடுக்கிறாள். ஆனால் அவள் சாப்பிட மறுக்கிறாள்.
"என்னாம்மா ஒனக்காகத்தான் இம்மானையும் செய்ய சொன்னன். என்ன சாக்குட்டாவது, நீ நாலு வாயில போடுவன்னுதான இம்மாம் அடி அடிச்சிகிட்டன்...' அவனுக்கு குரல் கம்மியது. "இல்லப்பா, நாம்ப இருக்கற நெலையில, நாக்குக்கு ருசியா தேடனா அது ஒத்து வராதுப்பா. ஏதோ பச்சத் தண்ணியா இருந்தாலும், வவுறு நொம்புதான்னுதாம் பாக்கணும்'. அவளுக்கு குரல் உடைந்து போயிருந்தது.
வலை- அக்கா இறந்துவிட்டால் தங்கைதான் இரண்டாந்தாரம் என்ற கிராமத்து பழக்கத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்ணின் கதை. எல்லோரும் முடிவெடுத்துவிட்டு அவளிடமும் ஒரு வார்த்தைக் கேட்க நினைக்கிறார்கள். "அப்புறம் நீ என்னம்மா சொல்ற' எனக் கேட்கும் தந்தையிடம், எல்லாப் பக்கமும் வழி மறைந்து விட வேறு வழியில்லாமல் வெடித்துச் சிதறும் அழுகையினூடே சொல்கிறாள் சித்ரா, "நா மட்டும் என்னா சொல்லிட முடியும்னு நெனைக்கிறீங்க...'
ராக்காலம்- நள்ளிரவில் வயலில் புகுந்து மேய்ந்து விவசாயிகள் வயிற்றில் உலை வைக்கும் மாடுகளைப் பிடிக்கப் படும் பாடு இக்கதை. ஒரு சிலர் மாட்டைப் பிடித்து அடிமாட்டுக்கு விடுகிறார்கள். சிலர் வீட்டில் கட்டி வைத்து விற்கிறார்கள். தன் வயலைச் சேதப்படுத்திய மாட்டைப் பிடித்து அறுப்புக்கு அனுப்ப நினைக்கும் மற்றவர்களுடன் ஓடும் வெள்ளையன் மனம், மாட்டைப் பிடித்த பிறகு மாறுகிறது. "டேய் வாணான்டா, புடிச்சி கட்டி வளக்கறதுக்கு வேணுமின்னா வைச்சிக்கலாம். வாயில்லா சிவனுவோடா...நம்ப கையால அறுப்புக்கு வேணாண்டா...செனமாடுடா' என்று கெஞ்சுகிறான் வெள்ளையன். "இந்தாடா மயிரு, ஒங்குளுக்காவறது எனக்கு. எங்கியாவுது தின்னு அழிச்சிட்டுப்போவுது' என்று பிடித்தவன் கயிறை விடுகிறான்.
எந்த ஃப்ளூ கிராஸ் அமைப்பிலும் இல்லாத ஜீவகாருண்யர்கள் இந்த கிராமத்து எளிய மனிதர்கள்.
ஆணிகளின் கதை- அற்புதமான புனைவு. ஒருவகையில் கிராமத்து ஆண்களின் கதை என்று கூறலாம். கிராமங்களில் உள்ளதைப் போல கலாசார, பண்பாட்டு விதிகளும் இல்லை விதி மீறலும் இல்லை. ஏதோ நவீன உலகத்தில் நகர்புறங்களில் மட்டுமே பாலியல் உறவு முறைகள் மாறிக் கிடக்கின்றன என்று சொல்வோர் சற்றே கிராமங்களின் அந்தரங்கத்திலும் கவனம் செலுத்தலாம் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.
"ஓரக்கட்டையில துணி சுத்தியிருந்தாக் கூட தூக்கிப் பார்த்துருவான்' என்று பேட்டையானைப் பற்றிப்பேசிக் கொள்வதுண்டு. அவன் வலையில் சிக்கிய பெண்கள் எக்கச்சக்கம். எப்பேர்ப்பட்ட கல் மனசுக்காரியாக இருந்தாலும் கரைத்துவிடுவான்' - இது ஒரு உதாரணம் மட்டும்.
கொடிபாதை- சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டது. இன்னும் இந்த ஊர் முன்னேறவில்லையே என்று வாழ்வில் ஒரு முறையேனும் நினைத்ததுண்டா? அதுவும் கிராமத்துக்கு வரும் ஒரே பேருந்தில் கூட்ட நெரிசலில் சிக்கிப் பிழிந்து மண் ரோட்டில் புழுதி பறக்க குலுங்கிச் சென்ற அனுபவம் உள்ளவர்கள் தினமும் சொல்லியிருப்பார்கள். அப்படி ஒரு பாதையில் செல்லும்போது பேருந்தில் ஒரு நிறைமாத கர்ப்பிணி படும் அவஸ்தையைச் சொல்கிறது கொடிபாதை.
முந்திரிக் காடுகளைக் கொண்ட கிராமப் புறங்களில் மனித உறவுகளிடையே நிகழும் அற்புதத்தை அதன் அந்தரங்கத்தை ஒளிவு மறைவின்றி பதிவு செய்திருக்கும் படைப்புகளாக இந்தக் கதைகள் வெள்ளெருக்கு எனும் தொகுப்பில் படிந்திருக்கின்றன.
கண்மணி குணசேகரன், விருத்தாசலத்தில்அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் தொழிலாளியாகப் பணியாற்றுகிறார். இவரது பிற படைப்புகள் தலைமுறைக் கோபம் (கவிதை), உயிர்த் தண்ணீர் (சிறுகதை), அஞ்சலை (நாவல்), ஆதண்டார் கோயில் குதிரை (சிறுகதைகள்), காற்றின் பாடல் (கவிதை), நடுநாட்டுச் சொல்லகராதி என்ற அகராதியையும் தொகுத்துள்ளார்.
வெள்ளெருக்கு- கண்மணி குணசேகரன், சிறுகதைத் தொகுப்பு, வெளியீடு- தமிழினி, சென்னை. விலை ரூ.90.
Sunday, July 19, 2009
ஏவி.எம்.ஸ்டுடியோ- ஏழாவது தளம்

பிரகாசமாக எரியும் விளக்கின் கீழே எப்போதும் இருக்கும் இருளைப் போல மனதை மயக்கும் பிரமாண்டங்களின் உள்ளே விசித்திரங்களும் அபத்தங்களும் நிறைந்திருக்கின்றன. எளிய மனிதனுக்கு வெளிச்சமும் பகட்டும் மட்டுமே தெரிகின்றன. அல்லது அதை மீறிப் பார்க்க அவன் முயற்சிப்பதில்லை. விருப்பம் கொள்வதும் இல்லை.
பட்டுச் சேலையின் பளபளப்பின் ஊடே பட்டுப் புழுக்களின் ஓயாத மரண ஓலம் ஒலித்துக் கொண்டிருப்பதை யாதொரு பெண்ணும் அறிந்திருப்பாளா எனத் தெரியவில்லை. தங்க, வைர மினுமினுப்பின் அடியில் சூழ்ந்திருக்கும் மையிருட்டில் இருந்து வறண்ட புன்னகையுடன் வாழ்வின் மிச்சத்தை எதிர்நோக்கும் முகங்களை யாரேனும் தெரிந்திருக்கிறார்களா?
ஒருவேளை அவர்களுக்கான வாழ்வாதாரமே, அந்த வெளிச்சத்தையும் பிரமாண்டங்களையும் கேள்விகளற்று ஏற்றுக் கொள்ளும் எளிய மனிதர்கள் தானோ என்பதே தமிழ்மகன் எழுதிய ஏவி.எம்.ஸ்டுடியோ- ஏழாவது தளம் நாவல் ஊடே பயணித்தபோது ஏற்பட்டது.
கதையும் சரி, புத்தகமும் சரி அதிக கனமில்லை. ஆனால் கதை மாந்தர்களின் செயல்களும் வாழ்பனுபவமுமே படித்து முடிக்கையில் கனத்தை ஏற்படுத்துகிறது. எர்நெஸ்த் ஹெமிங்க்வே எழுதிய கிழவனும் கடலும், ஹெர்மன் ஹெஸ்ஸெவின் சித்தார்த்தன் போன்றவை பக்க அளவில் சிறியவையே. ஆனால் உள்ளடக்கத்தில்...?
நாவலை அறம், பொருள், இன்பம் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து எழுதியுள்ளார் ஆசிரியர் தமிழ்மகன். ஆனால் தலைகீழாக. காமம், சினிமா பொருளாதாரப் பிரச்னை, தத்துவம் என்று கதை நகர்கிறது. உச்சத்தில் இருந்து மெதுவாக சமநிலைக்கு வரும் ஓட்டப்பந்தைய வீரனின் மூச்சைப் போல.
இன்பத்துப் பால்
நடிகர்களின் “வரலாற்றை’ அறிந்திருக்கும் தமிழ் கூறும் நல்லுலகு சற்றேனும் “ஒரு நடிகையின் கதை’யை கிசுகிசுவாகவோ, வேறெப்படியோ தெரிந்துதான் வைத்திருக்கிறது. ஆனால் இழப்பின் வலி எத்தகையது என்பது அதை அறிந்தவர்களால் தான் உணர முடியும். எதையும் இழக்கத் தயாராக உள்ள பெண்ணுக்கு நடிகை ஆவது அத்தனை கடினம் இல்லை. ஆனால் தன்னை நிலை நிறுத்த அதற்கும் மேலே செல்ல வேண்டியுள்ளது என்பதை அறிகிறாள் நடிகை தீபிகா.
எல்லோருக்குள்ளும் ஒரு சோகக் கதை இருப்பதைப் போல தீபிகாவையும் பின் தொடரும் கதையை தவிர்க்க முடியவில்லை. தனது தாயை ஏமாற்றிச் சென்ற தந்தை யார் என்பதை அவள் மூலம் தெரிந்து கொள்கிறாள். ஆனால் தாய் இறந்த பின் ஆதரவு இல்லாத அவள் ஒரு பத்திரிகை விளம்பரம் பார்த்து நடிகை ஆக வேண்டும் என உடுமலையில் இருந்து சென்னை வருகிறாள். அங்கே வெற்றியும் பெறுகிறாள்.
அவள் நடிகையானது இன்பத்துப்பால் பகுதியில் உற்சாகத்துடன் செல்கிறது. திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு பத்திரிகையாளராக ஆசிரியர் தமிழ்மகனுக்கு ஏராளமான அனுபவங்கள் உள்ளது என்பதை ஒவ்வொரு வரியும் சொல்கிறது. வாசகனுக்குள் இருக்கும் ரசிகனை கட்டி இழுத்துச் சென்று படப்பிடிப்புத் தளத்தில் தள்ளிவிட்டு, பார் உன் தேவதைகளை, இதய தெய்வங்களை...அவர்தம் நிஜத்தை என்று தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறார்.
நடிகைக்கு முதல் பாடமே “கூச்சம் தவிர்’- புதிய ஆத்திச் சூடி என்கிறார்.
திரையில் தெரியும் பிரமாண்டம் நிறைந்த, அதன் பின்னே இருப்பவர்கள் நான்கு கைகளும், ஒளிவட்டமும், சக்ராயுதமும் கொண்டோர் அல்ல; எளிய மனிதனின் இச்சை, பொறாமை, வஞ்சம், ஏமாற்றுதல் என்று அனைத்தும் சற்று அதிகமாகவே கொண்ட சராசரிக்கும் கீழான மனிதர்களே என எண்ண வைக்கும் ஹீரோக்கள் வினோத், பவன் சுந்தர், இயக்குநர் அர்விந்த, தயாரிப்பாளர் ஏழுமலை ஆகியோர் வெறும் கதை மாந்தர்கள் அல்ல, திரையுலகின் பிரதிநிதிகளே.
//இழக்கிற கற்பை கொஞ்சம் துணிச்சலாக இழக்க வேண்டும். அதே நேரத்தில் அதில் விபசார அர்த்தம் வந்துவிடக் கூடாது. காமம் கலந்த நாடகம். எதை எப்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தீபிகாவுக்குப் புரிந்தது// என்ற வரிகளே முதல் பகுதியை நம்மை வேகமாகக் கடக்க வைக்கிறது.
ஹீரோ, கிழ ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் என்று தீபிகாவின் மீது ஏற்படும் பொருந்தாக் காமம் அங்கே இயல்புக் காமம் ஆகியிருக்கிறது. தன் தாயை ஏமாற்றியவர் பிரபல இயக்குநர் பரணிகுமார் என்பது தெரிந்து அமைதியாக இருக்கிறாள் தீபிகா, தனது வளர்ச்சிக்காக. தீபிகா தன் மகள் என்பது அறிந்ததும் உணர்ச்சிவசம் அடையும் பரணிகுமாருக்கு ஏற்படும் சோக நிகழ்வு நம்மையும் தொற்றுகிறது.
அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சினிமா நிருபர் ஸ்ரீராம் மட்டுமே.
பொருட்பால்
திரையுலகின் போட்டி, பொறாமைக்கு இடையே கோடம்பாக்கத் தெருக்களில் அலையும் உதவி இயக்குநர்களின் பிரதிநிதியாக மகேஷ். தனக்குள் பல ஹீரோக்களுக்குத் தேவையான கதைகளுடன் அலைகிறான் 14 வருடங்களாக. ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. அதில் தீபிகா ஹீரோயின். அலைகள் ஓய்வதில்லை படம் முடியும் இடத்தில் அவனது படம் துவங்குகிறது. ஊரை விட்டு ஓடிப் போனவர்கள் எப்படி வாழ்க்கையில் போராடுகிறார்கள் என்ற கதையை படமாக்குகிறான். உண்மையில் தமிழ்மகனே கதையை கொண்டு செல்கிறார் சிரிப்பும் சிந்தனையுமாக. படம் ஹிட் ஆகிறது. (ஆசிரியர் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். இதே கதை எங்காவது, எப்பவாவது திரைப்படம் ஆகலாம்.)
தீபிகாவுக்குள் ஸ்ரீராம் மீதான காதல் இழையோடுகிறது. ஆனால் முடிவு எடுக்காமல் பழைமைக்கும், புதுமைக்கும் இடையே ஊசலாடும் ஸ்ரீராம், தற்போதைய முன்னாள் நடிகைகளின் கணவர்களின் மனசாட்சிதான்.
ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள், நிர்வாகிகள், விநியோகஸ்தர்கள், ஃபைனான்ஸியர்கள், பிஆர்ஓக்கள், மேக்கப் மேன்கள், சினிமா நிருபர்கள் என்று சாதாரண ரசிகன் பயணிக்காத, பயணிக்க விரும்பாத சினிமாவின் மற்றொரு சித்திரம் இப்பகுதியில் அசைகிறது.
அப்போதும் மிச்சமிருக்கும் தீபிகாவின் காதலை ஏற்க ஸ்ரீராம் நினைக்கையில், அவள் மகேஷின் மனைவியாகிறாள்.
அறத்துப்பால்
தீபிகாவின் இயக்குநர்-கணவன் எடுத்த படம் பிளாப் ஆகிறது. மீண்டும் தன்னை நிரூபிக்கும் வெறி. ஹீரோ அவனே. ஹீரோயின் தீபிகா. படம் பாதியில் நிற்கிறது. நமக்கு நிஜ முகங்கள் நிழலாடுகின்றன. அவளை தயாரிப்பாளரிடம் படுக்க சொல்கிறான். அவள் மறுக்கிறாள். இப்படி, அரிதாரங்களின் பின்னிருக்கும் அபத்தம் எளிய ரசிக மனதை வெறுமை மனநிலைக்கு கொண்டு செல்கிறது.
ஒரு அநாதையான, அதுவும் நடிகையான அவளுக்கு பணம், புகழ் தேவைப்படவில்லை. உண்மையான அன்புக்கே ஏங்குகிறாள். குத்தாட்டம் போடும் ஒவ்வொரு நடிகைக்குள்ளும் இப்படியான ஓராயிரம் நிராசைகளின் சத்தம் ஓலமிட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
கிழ ஹீரோ பவன்சுந்தர் கட்சி தொடங்குகிறார். தன் கணவனின் பணத் தேவையை சமாளிக்க அவனிடம் சரணடைகிறாள் தீபிகா. ஆனால் அவளே எதிர்பார்க்காத ஒன்று, கட்சியில் கிடைக்கும் அங்கீகாரம். பிறகு என்ன ஆகிறாள் என்பதை 60களுக்குப் பின் வந்த சினிமா-நிஜ உலகின் நட்சத்திரங்களின் வாழ்வோடு நம் மனது தொடர்புபடுத்தி பார்ப்பதை அவ்வளவு எளிதில் நிறுத்திவிட முடியாது.
தலைப்புக்கு ஏற்ப அறம் கூறும் பகுதியாக இப்பகுதியை அமைத்துள்ளார் ஆசிரியர்.
//நிம்மதியை விற்று பெருமை சேகரிக்கிறார்கள், சுயமரியாதையை விற்று கார் வாங்குகிறார்கள், அமைதியை விற்று வீடு வாங்குகிறார்கள், கற்பை விற்று புகழைத் தேடுகிறார்கள், பண்பை விற்று பணம் சேர்க்கிறார்கள். எதற்கு எது ஈடு என்று புரியவில்லை. இதைவிட இது சிறந்தது என்பது மாறிவிட்டது...//
நாவலின் மையப் புள்ளி இதுதான்.
கட்சியில் ஒரு கோடி ரூபாய் கொடுத்து சேர்த்துக் கொண்ட துணைப் பொதுச் செயலாளர் தீபிகாவின் பேச்சாற்றல் கண்டு பேசத் தெரியாத கிழ ஹீரோ-கம்-கட்சித் தலைவர் பவன்சுந்தருக்கு ஏற்படும் மனப்புழுக்கம், வெறும் பிம்பத்தை வைத்து கட்சி ஆரம்பித்தவன் கதை இதுதான் என்பதை அவன் உணரும் போது, வாசகனுக்குள்ளும் வந்து போகிறார்கள் பல புதுக்கட்சித் தலைவர்கள்.
//உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறு’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னது மக்களுக்கு மிகச் சரியாகப் புரியும்படிதான் இருந்தது தமிழ் சினிமா உலகம். ஜெயகாந்தன் இதையும் சேர்த்துக் கொண்டிருக்கலாம். “தமிழ் சினிமா உலகம் முற்றிலும் வேறு’// உண்மைதான்!
இறுதியாக முன்னாள் நடிகையாக அரசியல் கட்சியில் சேர்ந்த தீபிகா என்னவாகிறாள் என்பதை வெகு நேர்த்தியாக முடித்திருக்கிறார் தமிழ்மகன். ஆனால் அங்கிருந்து திரையுலகம், நிஜ உலகம் இரண்டிலும் பயணிக்கத் துவங்குகிறது வாசகனின் மனம்.
செல்லுலாய்டு தெய்வங்களைப் போற்றும் ரசிகர்களின் மனம் எளிமையானவையே என்பதை உணர்ந்தால், கனவுத் தொழிற்சாலை, கரைந்த நிழல்கள், சினிமாவுக்குப் போன சித்தாளு, கன்னியாகுமரி வரிசையில், இக்கதையின் உள்ளே உள்ள தீவிரத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
ஏவி.எம்.ஸ்டுடியோ-ஏழாவது தளம் ஆசிரியர்- தமிழ்மகன், பக்கம் 192, முற்றம் வெளியீடு, சென்னை. விலை- ரூ.60
Saturday, May 23, 2009
ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன

ஆழ்ந்து உறங்குபவன் அசைவற்றுக் கிடப்பது போல் பின்னிரவில் அந்தக் கானகம்நிசப்தத்துடன் இருந்தது. மரம், செடி, கொடி என அனைத்தும் துயில் கொண்டுகிடந்தன. சில சிறு காற்றின் அலைக்கேற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தன. குடிசையின் உள்ளே கூரையில் பனியின் சுவடு தெரிந்தது. அம்பறாத்தூணியில்இருந்து கொத்துக் கொத்தாக அம்புகள் பாய்வது போல குளிர் உடலெங்கும் குத்திவாட்டியது. அருகில் இருந்த குடிசையில் இருந்து எந்த சப்தமும் வரவில்லை. சீடர்கள் இந்நேரம் தங்களுடைய அரண்மனைகளில் இருந்து புறப்பட்டிருந்தால்வந்து சேர எப்படியும் சில நாட்கள் ஆகும். தனது புலமையையும், அறிவுக்கூர்மையையும் போற்றும் இந்த மன்னர்களை நினைத்து அவரது மனம் கொஞ்சம்பெருமை அடைந்தது. முதுமை அடைந்து வருவதை கண்களில் இருந்து நழுவிச்சென்ற தூக்கம் உணர்த்தியது. எழுந்து உட்கார்ந்தார் ஆதிகவி. தரை சில்லிட்டுஇருந்தது.
குடிசையை விட்டு வெளியே வந்தார். இடது பக்கம் இருந்த மரத்தடியில் கட்டப்பட்ட பசு அவரை பார்த்ததும் எழுந்து நின்றது.அருகே சென்று அதை அன்பாக தடவி விட்டார். சிறிது புல்லை எடுத்துப் போட்டார்.
இருபுறமும் செடிகள் அடர்ந்த ஒற்றையடி காட்டுப் பாதையில் தடாகம் நோக்கி மெல்ல நடந்தார். கண் காணாத தொலைவு நோக்கி ஓடிக் கொண்டிருந்தன அடிவானத்தில் தெரிந்த நட்சத்திரங்கள்.
தடாகத்தின் மேல் பனிப் புகை மண்டலம் எழுந்து உயர்ந்து கொண்டிருந்தது. காற்றின் சிலுசிலுப்பு மனதை ஏதோ செய்தது. கவிதை புனைய ஏற்ற நேரமிது. இருப்பினும் மனதில் தோன்றிய எண்ணத்தை அடித்து விரட்டினார். போதும் கவிதை எழுதியது என்று தனக்குள் கூறிக் கொண்டார்.
குரங்கொன்று தாவிக் குதித்ததைக் கண்டு அஞ்சிய பறவைகள் வேறு கிளைகளில் பறந்து அமர்ந்தன. தடாகத்தின் கரையில் விழுந்து கிடந்த பெரிய மரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்தார் ஆதிகவி. பல் துலக்கும் போது எதிரே இருந்த பாறை மேலிருந்து ஒரு தவளை அவரையே உற்றுப் பார்த்தது. தள்ளி அமர்ந்தார். மறுகரையில் இருந்த மரங்களின் ஊடே பாய்ந்து மறைந்தது புள்ளிமான் ஒன்று. "தொளக்' சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். தடாகத்தின் கரையில் ஒரு வரையாடு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததை தவிர யாரும் தென்படவில்லை. கதிரொளி இக் கானகத்தில் இறங்கி நடக்க இன்னும் வெகு நேரம் ஆகும். இந்நேரத்தில் மரக்கூட்டம் நடுவில் பிளிரும் களிறுகள் நின்றாலும் தெரியப் போவதில்லை என்று எண்ணியபடியே மெல்ல நீரில் இறங்கி குளிக்கத் தொடங்கினார்.
நீராடல் முடித்து திரும்பி கரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அங்கே நின்ற உருவத்தைப் பார்த்த போது மனம் ஒரு நொடி அதிர்ந்தது. கண்கள் மின்ன நீண்ட தலைமுடியுடன் ஒரு முதியவர் அவரையே பார்த்து புன்னகைத்தார்.
""யார் நீங்கள்...இந்தக் கானகத்தில் இங்கே என்னை பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள்?''
""தவம் செய்ய இந்தக் கானகத்தில் அலைகிறேன் ஆதிகவி.''
காட்டுப்புற்களின் மீது பட்டுத் தெறிக்கும் மழைபோல் அவரது குரல் சில்லிட்டுக் கேட்டது. ஏதோ ஒரு தெளிவு அவரது முகத்தில் தெரிந்தது.
""என் பெயர் உங்களுக்கு எப்படி..''
""இந்த மலைக்கு அப்பால் உள்ள நாட்டின் இளவரசன் உன்னிடம் படித்தவன். அவன் உன் அருமை பெருமைகளை அரண்மனையில் கூறியதை கேட்டு உனைக் காண வந்தேன்.'' என்று வினா விழும் முன்பே விடையிறுத்தார்.
""என்னைத் தேடி எதற்காக வந்தீர்கள்..?''
வா உன் குடிசையில் அமர்ந்து பேசுவோம். முன்னே நடந்தார் முதியவர். தலை முடியின் ஈரத்தை துவட்டிய படியே பின் சென்றார் ஆதிகவி. குடிசையின் முன் மரத்தடியே இருந்த பெரிய கல்லின் மீதமர்ந்தார் அவர். எதிரே கிடந்த மரத்துண்டு மீது ஆதிகவி அமர்ந்தார்.
எதையோ சிந்தனை செய்தபடி இருந்துவிட்டு அமைதி கலைத்துக் கேட்டார். ""நீ இப்போது எல்லாம் என்ன செய்கிறாய் ஆதிகவி?''
இப்போது `எல்லாம்' என்று அவர் கேட்டதில் இருந்தே தனது கடந்த காலத்தை அறிந்தவர் என உணர்ந்தார்.
"அரசகுல மக்களுக்கு போர் பயிற்சியும் வாழ்வியல் கல்வியும் கற்றுக் கொடுக்கிறேன்''
சில ஆண்டுகளுக்கு முன் நீ படைத்தாயே இம்மொழியின் இலக்கணம் அதைப் பற்றி.? ஆம்..அதையும் தான்.
"இம்மொழி பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும்..நின் புகழ் வானுயர்ந்து நிற்க நான் ஒன்று சொல்கிறேன். மொழி நம் இருவருக்கும் இடையே உணர்வுகளை அறியச் செய்ய வந்த கருவி.''
"நீங்கள் வந்த நோக்கம் என்ன துறவியே...''தீர்க்கமாகக் கேட்டார் ஆதிகவி.
"சொல்கிறேன் கேள். நீ படைத்த இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள் என வகுத்துப் படைத்திருக்கிறாய். நன்று. ஆனால் பொருளுக்கு அப்பால் என்ன அல்லது எழுத்துக்கு முன் இருப்பது என்ன?''
"இந்த அதிகாலை நேரத்தில் என்னைக் குழப்பவே வந்தீர்களா?'' பேச்சில் வெப்பம் தெறித்தது.
"நான் பேசுவதை நீ புரிந்து கொள்கிறாய் என்றால் என் வாயில் இருந்து வரும் சொற்கள் ஒரு பொருளை உணர்த்துகின்றன. அதற்குக் காரணம் சொற்கள். எழுத்தால் ஆனவை சொற்கள். எழுத்துக்கு முன் ஒலி. அதாவது அ என்பது ஒரு ஒலி வடிவம். ஏ என்பது வேறோர் ஒலி வடிவம். ஆக பொருளுக்கு முன் சொல். சொல்லுக்கு முன் எழுத்து. எழுத்துக்கு முன் ஒலி. ஒலிக்கு முன் என்ன?''
நீண்ட நாள் தான் மறந்திருந்த கனவை மீண்டும் தட்டி எழுப்பிய அவரை ஆழமாக பார்த்தார் ஆதிகவி. புன்னகையின் கீற்று அவர் இதழோரம் எட்டிப் பார்த்துச் சென்றது.
"பேசுபவன் மொழிக்கு இலக்கணம் படைக்கலாம். பேச முடியாதவன் எப்படி புரிகிறான். வெறும் கையசைவில் மட்டும் தானா? அதற்கும் மேல் ஏதோவொன்று இரு பேச முடியா மனிதரிடத்தில் உள்ளது. அது என்ன? அவன் மொழிக்கு உன்னால் இலக்கணம் படைக்க முடியுமா? அப்படி செய்தால் அது உன் புகழை நிலைநிறுத்தும்.''
"சில காரணங்களால் நான் கவிதை எழுதுவதை நிறுத்தி பல்லாண்டுகள் ஆகின்றன துறவியே. இனித் தொடரும் எண்ணமும் இல்லை. என்னை விட்டுவிடுங்கள்.''
"அப்படியானால் கொலைத் தொழில் புரியும் அரச குல மக்களுக்கு அறிவை புகட்டிக் கொண்டிரு. உன் எழுத்தாணியை தீயிலிட்டு கருக்கிவிடு" என்று கூறிவிட்டு விறுவிறுவென மரங்களின் ஊடே நடந்து மறைந்தார் துறவி. துறவிக்கே உரிய சினம். அவர் சென்ற திசையில் பறவைகள் கத்தியபடி பறந்தன.
"யார் இவர். எதற்காக என்னை வந்து இப்படி எழுதக் கேட்கிறார். இதற்கு முன் பார்த்தது இல்லையே. பெயரைக்கூட கேட்க மறந்துவிட்டோமே...எழுத்துக்கு முன் ஒலி. ஒலிக்கு முன்...ஒலி தோன்றுமிடம்..."உந்தி முதலா முந்து வளி தோன்றி கழுத்தினும் மிடற்றினும்...'' தனது கவிதை வரிகள் நினைவில் அசைந்தாடின. என் கனவு இவருக்கு எப்படித் தெரிந்தது. அதை மறந்தும் நினைவூட்ட வந்த இவர் யாராக இருக்கும்...அய்யோ துறவியே நில்லுங்கள்...ஆதிகவி கானகம் நோக்கி ஓடினார். முதுமையை மறந்து வேகமாக ஓடினார். காய்ந்து கிடந்த இல்லை சருகுகளின் மீது கால்கள் பட்டு தடதட ஓசை எழும்பி கானகத்தில் எதிரொலித்தது. மலையின் சரிவை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார் ஆதிகவி.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர் வனத்துக்கு அருகே அமைந்த அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் விடுதியின் 13-ம் எண் அறையில் படுத்திருந்த மொழியியல் ஆய்வு மாணவன் கவிச்செல்வன் திடுக்கென எழுந்து உட்கார்ந்தான். ஒரே புழுக்கமாக இருந்தது. மின்விசிறியை சுழல விட்டான். வெகு நேரம் கால்கள் எங்கோ ஓடிக் கொண்டிருந்தது போல் உணர்ந்தான். கால்களைத் தடவிக் கொண்டான். தண்ணீர் குடித்துவிட்டு சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடி படுத்துக் கிடந்தான். இதோடு பல நாட்கள் இப்படி நிகழ்ந்துவிட்டது. மெல்ல மெல்ல மின்விசிறியின் ஒலி உயர்ந்தது. அலை அலையாக எழுந்து அவன் காதுகளில் ரீங்காரமிட்டது.
தட்தட்...ஸ்ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்..காதுகளில் விழும் ஒலிக்கேற்ப வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தான் வெகுநேரம். காற்று, விசிறி, ஒலி...அதுக்கு முன்னாடி என்ன? மயில் ஒன்று க்வாக் என அகவியது. க்வாக்..க்வாக்...க்...வா...க் என்று அவனும் சத்தமிட ஆரம்பித்தான். விடிந்தது கூடத் தெரியாமல் கத்திக் கொண்டிருந்தான்.
சத்தம் கேட்டு நான் அவன் அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். சிரசாசனம் செய்வதுபோல் தலைகீழாக நின்று கொண்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். பயந்துபோய் ஓடினேன்.
"டேய் ரமேஷ்...எழுந்திருடா...கவிக்கு என்னமோ ஆயிருச்சு...தடதடஸ்ஸ்புஸ்னு என்னமோ கத்திட்டு இருக்கிறான்டா''
"இவனுக்கு இதே பொழப்பா போச்சுடா...வா பார்க்கலாம் என்று ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துவிட்டு என்னிடம் ஒன்று நீட்டியபடியே வெளியே வந்தான். கவிச்செல்வன் அறைக்குச் சென்றோம்.
"டேய் கவி...என்னடா ஆச்சு..எதாவது கனவு கண்டயா மாப்ள.''
"ஒன்னும் இல்லயே...நான் நல்லாத்தான் இருக்கேன். எதுக்கு எல்லோரும் ஒன்னா வந்திருக்கிறீங்க...'' அவன் இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதை கண்கள் இரண்டால் அறிந்தேன்.
"இல்ல.. டீ சாப்பிட...தம் அடிச்சுட்டு வரலாம்னு.."என்று ஏதோ சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தோம்.
குளித்துவிட்டு கிளம்பி டிபார்ட்மென்ட் போகும் போது அவன் அறையைத் தட்டினேன். திறக்கவில்லை. மீண்டும் ஜன்னல் வழியே பார்த்தேன். க்வாக் என்று கத்தியபடி எதேயோ எழுதுவதும் பின்னர் அமைதியாக இருப்பதும் மீண்டும் எழுதுவதுமாக இருந்தான். அருகில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம், நோம் சோம்ஸ்கியின் லாங்குவேஜ் அண்ட் மைண்ட் புத்தகம் கிடந்தது.
அதற்குள் மற்ற துறை நண்பர்கள் வந்தனர். கூட்டம் கூடியது. "இந்த ரூமுக்கு பின்னாடி எவனோ தூக்கு மாட்டி செத்துட்டான் மாப்ள. அந்த ஆவி அடிச்சிருக்குமோ..."சிரித்தான் எகனாமிக்ஸ் பிரதீப்.
"ஆவியும் இல்ல இட்லியும் இல்ல...இது ஏதோ ஸ்பிலிட் பெர்சனாலிட்டி மாதிரி" என்றான் உளவியல் ஆய்வு மாணவன் சித்தார்த்.
" இங்க பார்றா அந்நியன்..."சிரித்துக் கொண்டே சென்றான் கெமிஸ்ட்ரி ஜான்.
"அவன வரச்சொல்லுடா மாப்ள...நம்ம புரபொஸர்கிட்ட காட்டி கவுன்சலிங் கொடுக்கலாம்" என்றான் சித்தார்த்.
"கவி...டிபார்ட்மென்ட் போகலாமா?. நான் ரெடி என்று கசங்கிய சட்டையுடன் முன்னே வந்தான். குளிக்கலையா? பெர்பியும் எடுத்துக் காட்டினான். என்னடா மனசு எதாவது சரியில்லையா...தீபிகா எதாவது சொன்னாளா...லவ் எதாவது...
"கருமம்டா...என்று ஒரே வார்த்தை சொன்னபடி தலையில் அடித்துக்கொண்டான் கவி.
மெஸ்ஸில் சாப்பிடும் போது தட்டை தூக்கி எறிந்தான். அது டிங்டடாங் என்று ஒலி எழுப்பி அடங்கியது. அதை உரக்கச் சொல்லிப் பார்த்தான். உனக்கு என்னடா பைத்தியமா..பளார் என்று அறைவிட்டேன். அந்த சத்தத்தையும் உச்சரித்தான். "இப்போ நீ அடிச்சயே..இந்த சத்தம் அங்க இருந்ததா இல்ல இங்க இருந்ததா? இருந்துச்சு அப்படின்னா ஏன் அதுக்கு முன்ன கேட்கல? என்னையே உற்றுப் பார்த்தான். எனக்கு கைகள் நடுங்கின.
எல்லோரும் வலுக்கட்டாயமாக அவனை இழுத்துக் கொண்டு சைக்காலஜி டிபார்ட்மென்ட்டுக்குச் சென்றோம். அதற்குள் மொழியியல் துறை தலைவர் சண்முகம் அங்கு வந்திருந்தார். கவிச்செல்வனின் ஆய்வு வழிகாட்டி அவர். நான், கவி, ரமேஷ், சித்தார்த் நான்கு பேரும் துறைத்தலைவர் கணேசன் அறைக்குச் சென்றோம்.
அறையில் ஏ.சி.குளிர் இருந்தது. புத்தக அடுக்குகள் நூலகத்தை நினைவு படுத்தின. ஏதோ சிந்தனையில் கைகளைக் கட்டியபடி ஃப்ராய்டு உட்கார்ந்திருந்தார். அந்தப் படத்துக்கு கீழே கணேசன் அமர்ந்தார்.
"என்னய்யா பிரச்னை...காலங்காத்தால''
"சார் கொஞ்ச நாளா இவன் நடு ராத்திரியில திடீர்னு தடதட இஸ் புஸ்னு ஏதேதோ சத்தம் போடறான். காலைல வரை இப்படித்தான் இருக்கிறான். வெறிச்சு பாத்துட்டு இருக்கிறான். என்னனு கேட்டா ஒன்னும் இல்லைன்னு சொல்றான். எல்லோரும் ஒரு மாதிரியா பேசுறத கேட்டா பாவமா இருக்கு சார்...'' கவியை பார்த்தபடி சொன்னேன். அவன் வெகு தொலைவில் ஏதோ சிந்தனை செய்து கொண்டிருந்தான்.
"கவிச்செல்வன் கனவு ஏதாவது கண்டு பயந்திட்டயா?''
"இல்ல சார்''.
"அப்புறம் ஏன் இப்படி இருக்கீங்க...?"
"நான் ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் இருக்கிறேன் சார்''.
"வெரிகுட். டாக்ட்ரேட் வாங்கிறதுக்கு முன்னே புக் பப்ளிஷிங் பண்றது நல்ல விஷயம்தான். ஆல் த பெஸ்ட். என்ன புத்தகம் அது?''
"ஒலிக்கு முந்தைய வடிவம் பற்றியது''.
"பிஸிக்ஸ்ல வருமே அந்த ஒலியா?'' இல்லை. மொழியியலில் வருமே அந்த ஒலி..அதாவது phonetics. கணேசன் சற்று கவனமாக அவனைப் பார்த்தார்.
"அதென்ன வடிவம் ஒலிக்கு முன்னாடி?''
"அதாவது சார்...கைகள் இரண்டையும் மேசை மீது வைத்து சுவாரஸ்யத்துடன் முன்னகர்ந்தான். "ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு. அந்த சொல் எழுத்தால் ஆனது..அந்த எழுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒலி வடிவம் உண்டு. அந்த ஒலி துவங்குவதற்கு முன்னாடி இருந்தது என்ன?'' அவரையே உற்று நோக்கினான். கணேசன் புரியாமல் பார்த்தார்.
" என்ன சார்?"
"நீயே சொல்லுப்பா..."
"அந்த ஒலிக்கு முன்னாடி இருக்கிற ஏதோ ஒன்னுதான் நம்மோட புரிதலுக்கு அடிப்படை...நீங்க சில விஷயம் பாத்திருப்பீங்க. பஸ்ல, பார்க்ல, இங்க யூனிவேர்சிடில ஏன் எங்கவேணா....ஒரு பயனும் பெண்ணும் எவ்ளோ கூட்டம் இருந்தாலும் பேசாம ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டே இருப்பாங்க. ஆனா அவங்க கண்கள் நான்கும் பேசிட்டு இருக்கும். ஆனா புரிஞ்சுப்பாங்க...எப்படி இது சாத்தியம். சொல் இல்லை, எழுத்தில்லை, ஒலி இல்லை ஆனாலும் எதோ ஒன்னு ரெண்டு பேரு மனசுக்கு உள்ளேயும் ஓடுது. எப்படி புரிஞ்சுகிறாங்க? இதே போல பேச்சுத்திறன் இல்லாதவங்களும் எப்படி புரியறாங்க?" என்று சொல்லிவிட்டு சாய்ந்து உட்கார்ந்தான்.
எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.
மீண்டும் முன் நகர்ந்தான். ''இப்ப பச்சை மாங்காய் அப்படின்னு சொன்னா உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?" என்னையும் பார்த்து கேட்டான்.
எனக்கு ஏனோ பயோடெக் மஞ்சுளா ஞாபகத்துக்கு வந்தாள்.
"வாயில் எச்சில் ஊறுன மாதிரி இருக்கும், பல் கூசும்" என்றார் கணேசன்.
''அதேதான். புளிப்பு மாங்காய் அப்படின்னு சொன்னா பல் கூசுது. அப்ப புளிப்பு எங்க இருக்கு? எழுத்திலயா, சொல்லுலயா, உங்க வாயிலயா? இங்கதான் மாங்காய் இல்லையே" கைகளை ஆட்டினான்.
இப்போது கவுன்சலிங் நடப்பது யாருக்கு என்று எனக்கே சற்று குழப்பமாக இருந்தது.
"அதைத்தான் நான் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கேன். இது தொல்காப்பியத்தின் தொடர்ச்சி. இதை எழுத வேண்டும் என்று தொல்காப்பியருக்கு ஒரு சிந்தனை இருந்தது. அதைக் கனவுன்னும் சொல்லலாம்."
இப்போது அவனது ஆய்வு வழிகாட்டி சண்முகமும் அதிர்ந்து பார்த்தார்.
''கவிச்செல்வன்..நீங்க ஏதோ கனவு கண்டு குழம்பத்துல இருக்கீங்க...ஸ்ட்ரெஸ் அதிகமா இருந்தா இப்படித்தான். நிறைய யோசிக்காதீங்க...டேக் இட் ஈஸி...இந்த மாத்திரையை சாப்பிட்டு நல்லா தூங்குங்க" என்று சில மாத்திரைகளை கொடுத்தார்.
"அமுக்கப்பட்ட வேட்கைகள் கனவுகளில் நிறைவேறத் துடிப்பதால் அவை வரம்பற்று வெளிப்படும் அப்படின்னு ஃப்ராய்டு சொல்லியிருக்கிறார்'' என்று சண்முகத்திடம் கூறினார் கணேசன்.
"இல்ல சார்..நீங்க சொல்ற ஃப்ராய்டு, பலரோட கனவுகளை ஆராய்ச்சி பண்ணி 1900ம் வருஷம் interpretation of dreams எழுதினார். அதாவது ஃப்ராய்டு ரிசர்ச் பண்றதுக்கு முன்னயே பலருக்கு கனவுகள் இருந்திருக்கு..அதையெல்லாம் அவர் ஆராய்ச்சி பண்ணி இருக்கிறாரா? அப்படி பண்ணத்தான் முடியுமா? நீங்க அதைப் படிச்சுட்டு எங்கிட்ட பேசாதீங்க...கணேசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
''உந்தி முதலா முந்து வளி தோன்றி...அதாவது, வயிற்றிலிருந்து வரும் காற்றின் அழுத்தம் கழுத்து, நெஞ்சு, தலை போன்ற இடத்தில் நிலை பெறும். அண்ணம், நாக்கு, பல் என்று படுவதால் ஒவ்வொரு எழுத்தும் எப்படி தோன்றுதுன்னு தொல்காப்பியர் சொல்கிறார். அதுக்கு முன்னாடி அந்த ஒலிக்கு முன்பு இருந்தது என்ன? என்ன? டேபிளை ஓங்கி அடித்தான்.
பேப்பர் வெயிட்டை எடுத்து ஜன்னலில் வீசினான். சலார் என்று கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. அந்த சப்தத்தையும் உச்சரித்தான். கணேசனின் செல்போனை எடுத்து அவர் மீது வீசினான்.
விபரீதம் ஏற்படும் முன் நாங்கள் அவனைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம். அவன் அறைக்கு கொண்டு சென்று மாத்திரை சாப்பிட வைத்து தூங்க வைத்தோம்.
"அவங்க வீட்டுக்குச் சொல்லி அனுப்புங்க சண்முகம் சார். ஒரு மாதிரி ஆகிட்டு வர்றான். இப்படியே போனா சீரியஸ் ஆயிடும்" என்று அவருடன் பேசிக்கொண்டே கிளம்பிச் சென்றார்.
இரவு மெஸ்ஸுக்கு போகும் முன் அவன் அறையை எட்டிப் பார்த்தேன். நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். நான் மட்டும் சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து தூங்கிவிட்டேன்.
அதிகாலை திடீர் விழிப்பு வந்து எழுந்தேன். முதலில் கவியின் அறைக்குச் சென்றேன்.
கதவு திறந்து கிடந்தது. அறையில் அவன் இல்லை. புத்தகங்கள் இறைந்து கிடைந்தன. விடுதி முழுவதும் தேடினேன். கால்கள் வலித்ததுதான் மிச்சம். நண்பர்களை எழுப்பும் முன் மீண்டும் அவன் அறைக்குச் சென்று பார்த்தேன். திறந்த நிலையில் கட்டிலில் ஒரு நோட்டு கிடந்தது. அதில் ஏதோ எழுதி இருந்தான் கவி.
பொருளுக்கு முன் சொல், சொல்லுக்கு முன் எழுத்து, எழுத்துக்கு முன் ஒலி....ஒலிக்கு முன்...மௌனம். அமைதி. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பது மௌனம். வாய் பேசாதவனும் உணர்ந்து கொள்ளும் ஓர் உயர் தத்துவம் மௌனம். மௌனத்தில் எல்லாமும் உண்டு. அதை நான் எழுதுவேன். அதற்கு இலக்கணம் படைப்பேன். அதற்கு கீழே கவிச்செல்வன் என்கிற ஆதிகவி என்கிற தொல்காப்பியன் என்று எழுதியிருந்தான்.
எனக்கு ஏனோ அழ வேண்டும் போல் இருந்தது.
திண்ணை.காம் மே 14, 2009.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10905121&format=html
-
பிரகாசமாக எரியும் விளக்கின் கீழே எப்போதும் இருக்கும் இருளைப் போல மனதை மயக்கும் பிரமாண்டங்களின் உள்ளே விசித்திரங்களும் அபத்தங்கள...
-
ஆழ்ந்து உறங்குபவன் அசைவற்றுக் கிடப்பது போல் பின்னிரவில் அந்தக் கானகம் நிசப்தத்துடன் இருந்தது . மரம் , செடி , கொடி என அனைத்தும் ...
-
மனிதர்களின் மனம் எப்போதும் இழந்ததை நினைத்து ஆயாசப்படும் . மண்ணையும் உறவுகளையும் இழந்து தவித்து துன்பப்படும் மனதைக் கொண்டிராதவர்...
-
வானாகினாலும் மண்ணாகினாலும் ஊனாகினாலும் உயிரே போனாலும் காதல் ஒன்று தான் . அது எங்கும் யாரிடத்திலும் ஒன்றுதான் என்ற அவன் பேச்சுக்கு முதல்...
-
பள்ளி இறுதியாண்டு வகுப்பு முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு சிறிய அச்சகத்தில் மதிய நேரங்களில் நான் வேலை செய்தேன் . என் தா...