Thursday, October 28, 2010

எந்திரன் 'ஸ்' ஆன கதை


எந்திரனை பற்றி எல்லாரும் சலிக்கும் அளவுக்கு எழுதி விட்டார்கள். நான் மட்டும் புதுசா என்ன எழுதலாம் என்று யோசித்தேன். டெர்மினேட்டரை கேவலப்படுத்திய படம் அல்லது ஜெட்டிக்ஸ் டிவி பார்க்கும் போது ரஜினியின் முகத்தை மட்டும் நினைத்துக் கொண்டால் அதுதான் எந்திரன் படம்...வீடியோ கேம் படம்...இப்படி பல சிந்தனை.

என்னதான் இருந்தாலும் ரஜினி படத்தை தியேட்டரில் பார்ப்பது போல் வருமா?. நண்பர் ஒருவர் டிவிடி வேண்டுமா என்றார். நான் வேண்டாம் தியேட்டரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறினேன்.

என்றைக்கு பாபா படத்தை முதல் ஷோ பார்த்தேனோ அன்றே முடிவு செய்தேன். ரஜினி படத்தை நிதானமாக ஒரு மாதம் கழித்துத்தான் பார்க்க வேண்டும் என்று எடுத்த முடிவு காரணமாக எந்திரனை கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் பார்க்க முடிந்தது.

கோவையில் மட்டும் 33 தியேட்டர்களில் படம் போட்டிருக்கிறார்கள். படம் வந்து 20 நாளுக்கு மேலாகிறது. எப்படியும் தியேட்டர் காத்து வாங்கும் என்று போனால் படம் போட்டுவிட்டார்கள். சரி சாந்தி தியேட்டருக்கு ஓடினால் அங்கேயும் படம் போட்டாச்சு. அட என்னடா நம்மள ரோபா ரேஞ்சுக்கு ஓட விட்டுட்டானுக என்று சிறிது நேரம் நின்றேன். மதிய காட்சிக்கு முன்பதிவு நடந்தது. அடச் சே இந்தப் படத்தப் போய் ரிசர்வ் செய்து பார்ப்பதா. நமக்குத் தெரிஞ்ச ரிசர்வேசன் எல்லாம் இந்தியன் ரயில்வே ரிசர்வேசன் தான். அதனால் வீடு வந்தேன்.

மறுபடியும் மதியம் 1.30க்கு கேஜி ஓடினால் ஹவுஸ்புல். சாந்திக்குப் போனால் ஒரே கூட்டம். ஆஹா எப்படியும் டிக்கெட் வாங்கிடலாம் என்று வெள்ளந்தியாக கியூவில் நின்றேன். பக்கத்தில் பெண்கள் கூட்டம். அதில் சூப்பர் ----நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வரிசையில் போனால் டிக்கெட் முடிஞ்சு போச்சு போயிட்டு அப்புறமா வாங்க என்று கவுண்ட்டர் பக்கத்தில் ஒருவன் கத்தினான். அடங்கொக்கமக்கா....ஞாயிற்றுக்கிழமை வந்தது தப்பா போச்சே என்று போஸ்டரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஐன்ஸ்டீன் மூளை வேலை செய்தது. வந்ததே வந்துட்டோம். வேற படமாவது பார்ப்போம் என்று என்னை தூண்டியது.

தூண்டியவர் மல்லிகா ஷெராவத். ஒரே காம்ப்ளெக்ஸில் இரண்டு தியேட்டர். ஒன்றில் ரோபா. மற்றொன்று ஸ்..ஸ்...ஸ்...கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு தொடை தெரிய பின்புலத்தில் பாம்பு படமெடுத்த சிலை இருக்க ஜிவ்வென்று தலை சுற்ற அத்தனை கூட்டமும் சாரதா தியேட்டர் கவுண்ட்டருக்கு மாறியது. எனக்கு முன்னால் தலை முழுவதும் நரைத்த பெரியவர் ஓடிவந்து கியூவை ஊடறுத்து நின்று கொண்டு என்னைப் பார்த்து நக்கல் சிர்ப்பு சிரித்தார். அட சொட்ட மண்டயா, நரச்ச தலையா, சுண்ணாம்புச் சட்டித் தலையா வயசானாலும் நாக்க சொழட்டாம இருக்க மாட்டயாடா...இதுல பெரிய கின்னஸ் சாதனை செய்த மாதிரி சிரிப்பு வேற என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

எங்களுக்கு இரண்டு டிக்கட் கொடுங்க என்று ஒரு பெண் கேட்டார். போமா அந்தப் பக்கம்..இது பொம்பளைங்க பார்க்கக் கூடாத படம். ஏ படம் என்று விரட்டினார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது இது ஏ சர்டிபிகேட் என்று. அடச் சே இதெல்லாம் 20 வயசுல பார்க்க வேண்டியதாச்சே. இப்போ அதெல்லாம் தாண்டி போர்னோ அது இதுனு பார்த்து சலிச்சு ஆன்மிக லயத்தோட இருக்கும் போது இதெல்லாம் தேவையா என்று நினைத்தபடி உள்ளே போனால் ஹவுஸ்புல்.

படம் போட்டார்கள். 2 நாகங்கள். ஒன்று ஆண். மற்றது பெண். அதில் ஆணிடம் மாணிக்கக் கல் இருக்கிறது. அதை வெளிநாட்டுக்காரன் எடுத்து மருந்து தயாரிக்கப் பார்க்கிறான். அதனால் அதைக் கடத்துகிறான். அவனையும், அவனுக்கு உதவி செய்வோரையும் போட்டுத் தள்ள பெண் நாகம் வருகிறது. அதுதான் மல்லிகா ஷெராவத். படத்தில் அவருக்கு ஒரு வசனம் கூட கிடையாது. ஒவ்வொருவராக போட்டுத் தள்ளுகிறார் மல்லிகா. (அட...சாகடிக்கிறதைச் சொன்னேன்). அதைக் கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் இர்பான் கான் வருகிறார். கடைசியில் மல்லிகா எல்லோரையும் போட்டுவிட்டு (கொத்திவிட்டு) போகிறார்.

இந்தப் படத்தில் சொல்ல வேண்டியது கிராபிக்ஸ். ஆஹா ஓஹோ என்று சொல்லாவிட்டாலும்...எந்திரனுக்கு இது பரவாயில்லை. குறிப்பாக மல்லிகா பாம்பிலிருந்து பெண்ணாக உருவெடுக்கும்போதும். பெண்ணாக இருக்கும்போது பாம்பாக உருவெடுக்கும் போதும், பாம்பு சட்டை உரிக்கும்போதும் நன்றாக செய்துள்ளார்கள். பெண்ணாக உருவெடுத்தபின் துணி இல்லாமல் இருக்கிறார். அதை லாங் ஷாட்டில் காட்டுகிறார்கள். அதைப் பார்த்தால் எந்த விரசமும் இல்லை. அதுக்கு பேசாமல் ஷகிலா படம் பார்த்திருக்கலாம். இந்தப் படத்தில் அது போன்ற காட்சிக்காக ஏ கொடுத்திருக்கிறார்கள். இதையே கொஞ்சம் டீசென்ட்டாக எடுத்திருந்தால் அதாவது ரம்யா கிருஷ்ணன் போன்றவர்களை நடிக்க வைத்திருந்தால் படம் பெண்கள் மத்தியில் ஹிட்டாகி இருக்கும்.

படம் முடிந்து வெளியே வரும்போது ....ஸ்ஸ்ஸ் அப்பப்பா இதெல்லாம் ஒரு படமா...ஒரு சீனு கூட இல்லை ....ஸ்ஸ்ஸ் என்ற குரல் கேட்டது. யார் என்று திரும்பினால் அதே சுண்ணாம்புச் சட்டித் தலையன்.