Wednesday, October 28, 2009

தமிழ்த் தாத்தா, தமிழ் விக்கி, தமிழ் பதிவர்


பல்வேறு தாக்குதல்களுக்கும், அழிப்பு வேலைகளுக்கும் இடையே தமிழ் தழைத்தோங்கி 21-ம் நூற்றாண்டு வரை வந்து விட்டது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற கூற்று சென்ற நூற்றாண்டுடன் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.

இந்த நூற்றாண்டில் உலகெங்கும் பரவி வேரோடி வாழும் தமிழ்ச் சமூகம் தங்கள் தாய்மொழிக்குத் தன்னளவிலான தொண்டினைப் புரிந்து கொண்டுதான் இருக்கிறது. கணினியின் வரவுக்குப் பிறகு எல்லாம் ஆங்கில மயமாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் அதிலும் தங்களது மொழியின் வளத்தைக் கொண்டு செல்ல ஏராளமான தனி நபர்கள் தங்கள் நேரம், பொருள், உழைப்பு எனச் செலவிட்டு இன்று தமிழை இணையத்தில் ஏற்றி உலகெங்கும் விரவிக் கிடக்குமாறு செய்துவிட்டனர்.

மற்ற மொழிகளுக்கு அழிவு ஏற்படும் நேரத்தில் மட்டுமே தமிழுக்கும் அவ்வாறு நிகழ வாய்ப்புண்டு. இல்லையேல் இனி தமிழை அதன் வளத்தை அழிப்பது என்பது இயலாத செயலாகிவிடும். அந்த அளவுக்கு இணையத்தில் ஏராளமான தகவல்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், தற்கால இலக்கியச் செல்வங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தரவுகள், தகவல்கள் போதுமானவையா என்று கேட்டால் யானைப் பசிக்கு சோளப் பொரி என்றுதான் கூற வேண்டும்.

மதுரைத் திட்டம், நூலகம் திட்டம் போன்றவற்றில் இலக்கியச் செல்வங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இவை எவராலும் எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் உள்ள தேர்ந்த கட்டுரைகள் தமிழிலும் கிடைக்க வேண்டுமானால் அதை நாம் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். அல்லது அதே போன்ற கட்டுரைகளை தமிழில் எழுத வேண்டும். அப்படி எழுதினாலும் அது ஒருவரின் வலைத் தளத்திலோ, வலைப்பதிவிலோ மட்டும்தான் வைக்கப்படும். ஒரு பொதுவான அமைப்பு இருந்தால் ஒரு நூலகம் போல யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றிருந்தால் அதன் வீச்சு எவ்வாறிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அப்படி ஒரு பொது அமைப்புதான் விக்கிப் பீடியா.

ஆங்கில விக்கிப்பீடியாவில் இன்று 30 லட்சம் கட்டுரைகள் உள்ளன. சில மொழிகளில் லட்சத்துக்கும் மேலான கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன. இந்திய மொழிகளில் இந்தி, தெலுங்கு, வங்கம் போன்றவற்றில் 35 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகள் உள்ளன. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 20 ஆயிரம் கட்டுரைகளே உள்ளன. உள்ளடக்கத்தில் தமிழில்தான் சிறந்த கட்டுரைகள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்த தகவல் மற்ற மொழியினருடன் போட்டியிடுவதற்கு அல்ல. ஆனால், நாம் செய்ய வேண்டியவை இன்னும் ஏராளம் உள்ளன என்பதை உணர்த்துவதற்கு இது தேவையான ஒன்றுதான்.

விக்கிப்பீடியாவில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், திருத்தலாம், தொகுக்கலாம். இதில் எழுதினால் நம் பெயர் வருமா என்பதே பெரும்பாலானோர் கேள்வி. பெயர் வராது. ஆனால் தொகுத்தல் வரலாற்றில் நாம் செய்யும் ஓரெழுத்துத் திருத்தம் கூட நம் பயனர் பெயரில் (user login) பதிவாகிவிடும். இது மீண்டும் அழிக்கப்பட முடியாதது. எனவே நம் முத்திரை அதிலிருக்கும்.

என்ன பயன் என்ற அடுத்த கேள்வி. சற்றே பின்னோக்கி எண்ணிப் பாருங்கள். எத்தனை முயற்சி செய்து, எவ்வளவு கடினமாக உழைத்து தனியொருவர் ஏராளமான பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் ஓலைச் சுவடிகளை கேட்டுப் பெற்றார். எத்தனை பேர் அதை கொடுக்க மறுத்து போகிப் பண்டிகையில் தீயிலிட்டுக் கொளுத்தினர். அதையும் மீறி கிடைத்தவையே தமிழில் படித்து முடிக்க முடியாத அளவிற்கு குவிந்து கிடக்கிறது. இதற்கெல்லாம் பிரதிபலன் பார்த்தா அவர் செயல்பட்டார். அவரை தமிழ்கூறும் நல்லுலகு தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் என்று அழைக்கிறது. இன்னும் அழைக்கும். இங்கு அவர் பின்புலம் பற்றி விவாதிக்காமல் அவர்தம் தமிழ்த் தொண்டு பற்றி மட்டும் சிந்திப்போம்.

எண்ணிப் பார்த்தால் அவருக்கு எம்.பி, எம்.எல்.ஏ சீட்டோ, மந்திரிப் பதவியோ, சொத்துகளோ இத் தமிழ்த் தொண்டால் கிடைத்துவிடவில்லை. ஆனால் அவரை இன்றும் நினைவு கூர்கிறோம்.

அந்த அளவுக்கு சிரத்தை எடுத்து நாம் செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால் எளிதில் கிடைக்கும் கலைச் செல்வங்களை தமிழில் மொழி பெயர்த்தோ, அல்லது தமிழிலேயே கிடைக்கும் செல்வங்களை பொது இடமான விக்கியில் சேர்ப்பதன் மூலம் தமிழுக்கு நாமும் தொண்டாற்றியவர்கள் ஆவோம். வெறும் தமிழ் தமிழ் என்று கூச்சலிட்டுக் கொண்டிருப்பதால் யாருக்கும் பயன் இல்லை.

தமிழ் விக்கிப்பீடியாவை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். சான்றாக, புதுக்கோட்டையில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தி தமிழ் விக்கிப் பீடியாவில் தகவல் பெற்று பாடக் குறிப்புகள் எழுதுகிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் மேலும் அதிகமான மாணவர்கள், உயர் வகுப்பு, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அதைப் பயன்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் குவிந்துள்ளனவா என்றால், இப்போதைக்கு இல்லை. அதற்கான வளர்ச்சிப் பாதையில் விக்கிப்பீடியா சென்று கொண்டிருக்கிறது எனலாம்.

ஒரு சிறுகட்டுரையைக் கூட நம்மால் எழுத முடியும். நம் ஊர், உறவு முறைகள், சடங்குகள், பண்பாடு, மரம் , செடி, கொடி என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் விக்கியின் கொள்கைகளுக்கு ஏற்ப எழுதலாம். இது ஒரு இணையக் கலைக்களஞ்சியம். விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடன் எதைப் பற்றியும் எழுத முடியும்.

இன்றைக்கு 6 ஆயிரம் தமிழ் பதிவர்கள் உள்ளனர். இவர்களில் அன்றாடம் பதிவு எழுதுவோர் 10 சதம் என்று எடுத்துக் கொண்டாலும் 600 பேர் இருக்கிறார்கள். இதில் நேரமும், வாய்ப்பும், வசதியும் கொண்டவர்கள் 300 பேர் என்று கொண்டால், அவர்கள் நாளொன்றுக்கு ஒரு கட்டுரை எழுதினால் கூட போதும். இதற்கு அரை மணி நேரமே செலவாகும்.

தங்களுக்குப் பிடித்த எத்துறை என்றாலும் எழுதலாம். எத்தடையும் இல்லை. மேலும் தகவல் பெற தமிழ்விக்கிப்பீடியா வலைப்பதிவை அணுகலாம். விக்கிப்பீடியா ஆலமரத்தடியை அணுகலாம். ஆக, ஒரு நாளுக்கு 300 கட்டுரை எனில் ஒரு மாதத்துக்கு 9 ஆயிரம் கட்டுரை. ஓராண்டுக்கு 72 ஆயிரம் கட்டுரை. ஏதோ காமெடி போலத் தோன்றும். வெகு சிலரின் பங்களிப்பு மூலமே இது வரை 20 ஆயிரம் கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டுள்ளன. அதைப் பயன்படுத்தும் ஒரு இளைய தலைமுறையும் புதுக்கோட்டை அருகே அடையாளம் காணப்பட்டுவிட்டது. எனவே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பொருந்தும்.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றார்.

எட்டுத் திக்கும் சென்றுவிட்டீர்கள்.... கலைச் செல்வங்கள் யாவையும் எப்போது கொணர்ந்து சேர்ப்பீர்கள்?

Tuesday, October 27, 2009

அழகிரி, தயாநிதி, மதன் என்ற அனானிஇந்தியன் பார்வையில் தமிழன் என்ற தொடரை விளையாட்டைப் போலத்தான் துவங்கினேன். படித்த நண்பர்கள் நன்றாக இருப்பதாகச் சொன்னதால் தொடர்கிறேன்.

இதையெல்லாம் எந்தப் பத்திரிகையிலும் வெளியிட மாட்டார்கள். அதை வெளியிடப் பிறந்துததானே வலைப் பதிவு. ஆனால் இதையும் சீரியசாகப் படிக்கிறார்கள் எனும் போது ஒரு வித பொறுப்புணர்வு கூடுகிறது. விளையாட்டாகக் கூட ஒரு பதிவு மற்றவர்களை புண்படுத்திவிடக் கூடாது என்பதை இது உணர்த்துகிறது.

மதன் என்ற பெயரில் இதற்கு முந்தைய பதிவுக்கு பின்னூட்டமிட்ட தோழர் ஏன் வெளியிட வில்லை என்று கேட்டார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. அவர் இட்ட பின்னூட்டம் கொஞ்சம் கனமான விடயமாக இருந்தது. அதற்கு பதில் பதிவுதான் இது. அவர் படிப்பார் எனக் கருதுகிறேன்.


தோழர் மதன் என்ற அனானி அவர்கட்கு...

முதலில் ஒன்றை கூறிவிடுகிறேன். என்னிடம் இணைய இணைப்புக் கிடையாது. 2. நான் ஊரில் இருந்தேன். 3. மொபைல் நெட் மூலமாக அந்த இரண்டு பின்னூட்டம் மட்டுமே வெளியிட முடிந்தது. நம்மூர் இணையம் பற்றி குறிப்பாக மொபைல் நெட் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். (இந்தியாவில் தானே இருக்கிறீர்கள்?)

//Ragunathan,
may I ask you why have you omitted my comments.?
I always thought you are a person who respect other people's point of view even if it is different from your own opinion//

நீங்கள் என்னைத் திட்டி எழுதினாலும் வெளியிடுவேன். உங்கள் கருத்தை மதிக்கிறேன். என் கருத்தை நான் கூறினேன். பின்னூட்டத்தை வெளியிட மறுக்கும் அளவுக்கு இந்தி ஆதரவாளனோ தமிழ் எதிர்ப்பாளனோ கிடையாது. நான் படித்தது இளங்கலை பொருளியல். முதுகலை தமிழ் இலக்கியம். கற்றது தமிழ் .

இது ஒரு அனுபவம் தான். ஈழப் போர் நடைபெற்ற போது எனக்கும் அந்த மத்திய பிரதேச நண்பனுக்கும் இடையே சொற்போரே நடைபெற்றது. அப்போது இந்தி அவசியமா இல்லையா, விரும்பி படித்தால் ஏற்கலாமா என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. அதை பற்றியும் நம் மீது அவன் வைத்திருந்த மரியாதை குறித்தும் எழுத வேண்டும் என்பதற்காக துவங்கியதே இந்த தொடர் பதிவு.

மேலும் உங்கள் பின்னூட்டத்துக்கு என்ன பதில் எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் என்று எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் விவாதம் சரியே. ஆனால் ஒன்றைக் கவனித்தீர்களா? நாம் இந்தியை எதிர்க்கிறோம். வெறுக்கிறோம். ஆனால் நீங்கள் சொன்ன மலையாளி, வங்காளி, தெலுங்கர், கன்னடர் எதிர்க்கவில்லை. அதே நேரம் அவர்களது மொழியை நேசிக்கிறார்கள். இதற்கு என்ன சொல்வது? இந்தக் கேள்வி எனக்கும் உண்டு.

இந்தியை விரட்டினால் அந்த இடத்தில் ஆங்கிலம் வந்து குந்திக்கும்னேன் என்றார் காமராஜர். அதுதானே நடக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். வார இதழ்களில் பெரும்பாலும் ஆங்கில வார்த்தை கலந்து தானே எழுதுகிறார்கள். பிரபல தமிழ் வார இதழ். ஆனால் ஆங்கிலம் கலந்து எழுதுகிறார்கள். ஏன்? கேள்விகள் நிறைய இருக்கிறது.

நம்மை படிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். சரி என்றோம். அவருக்குப் பதவி வந்த போது ஏன் என்று கேட்டோம். அவருக்கு இந்தி தெரியும் என்றார்.

அது போகட்டும். அவர் படித்தவர். பணக்கார வூட்டுப் பிள்ளை. மன்னிப்போம். நாம் தான் அரசுப் பள்ளியில் படித்து அடிமாடு ரேஞ்சில் இருக்கிறோமே.

அண்மைய பேட்டி ஒன்றில் அதாவது மத்திய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அழகிரி பதவியேற்றார். கேபினட் கூட்டத்தில் அவரைச் சேர்க்கவில்லை. இவருக்கு வந்தது கோபம். ஏன் என்றார். அழகிரிக்கு ஆங்கிலம், இந்தி தெரியாது அதனால் தான் என்று பதில் வந்ததாம்.

அதற்கு இவர் சொன்னார். ஆங்கிலம் தெரியும் பேசுவார். இந்தியைப் புரிந்து கொள்வார். இது எப்படி இருக்கு? இது நான் புலனாய்வு செய்து சொல்லவில்லை. ஒரு ஜூ.வி.யில் படித்த ஞாபகம். ரிப்போர்ட்டராகக் கூட இருக்கலாம். சரியாக நினைவில்லை.

ஏன் அவ்வாறு சொன்னார் என்று தெரியவில்லை. ஆக, நீ படிப்பாய், நாங்கள் படிக்கக் கூடாதா என்றொரு கேள்வி இந்த இடத்தில் எழும்ப, யார் எதிர்த்தார்களோ அவர்களே காரணமாக ஆகி விடுகிறார்கள்.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் கட்டாயமாக போலந்து மொழியைப் படி என்று சொன்னால் எப்படி கோபம் வருமோ அதே போலத் தான் கட்டாயமாக இந்தி படி என்று சொன்னாலும் வரும். ஆனால் பிரான்சுக்கு செல்லும் முன் பிரெஞ்சு படிக்க விரும்பினால் அது சரி என்றால் இந்தி படிப்பதும் தவறில்லை.

Monday, October 26, 2009

"இந்தி"யன் பார்வையில் தமிழன்- பாகம் 4

எப்போது எனக்குள்ளே இந்தி எதிர்ப்பு உணர்வு புகுந்தது என்று எனக்கு நினைவில்லை. எங்கள் ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் பிரயாணிகள் தங்குமிடம் என்ற வாக்கியத்தின் கீழே தார் பூசி அழிக்கப்பட்ட சொற்றொடர் மட்டும் இன்றும் நினைவிலிருந்து அகலவில்லை. அதற்கும் கீழே இருந்த ஆங்கிலத் தொடர் அப்படியே இருந்தது. இடையில் ஏன் தார் பூசி உள்ளார்கள் என்று யாரிடமும் கேட்கத் தோன்றவில்லை.

ஜெகஜித் சிங் என்னிடம் கேட்ட கேள்விக்கும் அதற்கான பதிலுக்கும் இடையில் கிடைத்த சின்ன கேப்பில் பல நினைவுகள் வந்து சென்றன. அவன் கேட்டது இது தான்.

"சார் நீங்க பாலக்காடு போயிருக்கீங்களா?' அவ்விட பூமி நாயகிகளைப் பார்த்து ஏங்கும் எங்குலத் தமிழ் வீர இளைஞர்களைப் போல இவனும் அவர்கள் பக்கம் ஜொள் விட ஆரம்பித்து விட்டானோ என்று சட்டென்று ஒரு எண்ணம் மின்னி மறைந்தது. இவங்க ஆளைவிடவா அந்தப் பெண்கள் கலராக இருக்கிறார்கள். காதலுக்கு கண் இல்லை என்பது போல வேறு எதுக்கெல்லாம் கண் இல்லை என்ற பட்டியல் போட வேண்டி வருமோ என்று நினைத்துக் கொண்டேன்.

இந்தி எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டது எப்படி என்று தெரியவில்லை என்று கூறினேனோ அதே போல அவ்விட பூமி மீது எனக்கு ஏற்பட்ட கோபமும் எப்படி ஏற்பட்டது என்று புரியவில்லை. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசினேன்.

"போனதில்ல. ஆனா நல்லா இருக்கும். வாளையாறு வரைக்கும் போயிருக்கேன். அந்தப் பக்கம் அமேசான் காடு மாதிரி பச்ச பசேல்னு இருக்கும். இந்தப் பக்கம் காய்ஞ்சு போன புல் கிடக்கும்'

"அதுக்கு கேட்கல சார். நான் சொல்ல வர்றது வேற."

அப்படின்னா பாலக்காட்டு ஃபிகர்களப் பற்றி ஏதாவது டேட்டா சொல்லப் போறானோ என்று விபரீதமான கற்பனை எழுந்தது. என்ன சொல்ல வந்தாலும் கொஞ்சம் சீரியசான சமயத்தில ஃபிகரப் பத்தி பேசி காமெடி பண்ணாதே என்று எச்சரித்தேன்.

"ராஜஸ்தானிலிருந்து தமிழ்நாடு பார்டர் வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தமிழ்நாடு வந்துட்டாலே யாருக்கும் இந்தி தெரிய மாட்டேங்குது. ஏன் சார் இப்படி? இங்க பாருங்க பாலக்காடு பக்கமாத்தானே இருக்கு. நான் அங்க போனப்ப ஒரு பிரச்னையும் இல்ல. பெங்களூர்ல பிரச்னை இல்ல. எங்கேயும் இந்தி பேசுனா புரிஞ்சுக்கிறாங்க. இங்க மட்டும்தான் இந்தி பேச முடியாது'.

டேய் சிங்கு. இதுக்குப் பதில் சொல்லனும்னா நீயும் நானும் பிறக்காத ஆண்டான 1965-க்கு முன்பிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றேன். ஆனால் அவன் விளையாட்டுப் பையன் என்பதை வீதியில் போகும் ஃபிகரைப் பார்த்து இளித்தபோது புரிந்து கொண்டேன். இவனுக்கு திராவிடம், மொழிப்போர் பற்றியெல்லாம் சொன்னால் அந்த தகவல்களுக்கே இழுக்கு நேர்ந்துவிடும் என்பதால் விட்டுவிட்டேன்.

சுருக்கமாகச் சொன்னால் அதுக்கு பாலிடிக்ஸ்தான்டா காரணம் என்றேன். அவனுக்கு ஒருவாறு புரிந்து விட்டது. அப்படின்னா ஏன் சார் கர்ணாநிதி (கருணா அல்ல கர்ணா என்பதைக் கவனிங்க) பேமிலில இந்தி படிச்சிருக்காங்களே என்றான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவனுக்கு எப்படிடா இது தெரிஞ்சுது என்று குழப்பமாக இருந்தது.

"உனக்கு எப்படி சிங்கு தெரியும்?'

"தயாநிதி மாறன் மினிஸ்டர் ஆனபோது கர்ணாநிதி சொன்னாரே சார். தயாநிதிக்கு இந்தி தெரியும்னு'

இந்தியை எதிர்க்கும் கருணாநிதி குடும்ப அன்பர்கள் இந்தி படித்திருக்கிறார்கள் என்பதை இவன் கூடத் தெரிந்து வைத்திருக்கிறானே என்று எண்ணியபோது அவனது 'பொது அறிவின்' வீச்சு புரிந்தது.

இவன் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினால் தமிழனின் தன்மானம் என்னாவது. "நீங்க இங்க வந்தா தமிழ் படிச்சுத்தான் ஆக வேண்டும். நாங்க அங்க வரும்போது இந்தி மட்டும்தானே பேசுறீங்க...அடடா மதராஸி வந்துட்டான் என்று தமிழ், தெலுங்கு, கன்னடத்திலா பேசுறீங்க?' என்றேன் கோபமாக.

"சரி சார்...இப்போ என்ன நான் தமிழ் பேஸ்லயா? எனக்கு தைர்யம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு. தமிழ்நாடு வந்தா இனி ஒரு பிராப்ளம் இல்ல. ஏன்னா இப்போ எனக்குத் தமிழும் தெரியும்' கண்சிமிட்டி சிரித்தான். பொங்கி எழுந்த கோபமெல்லாம் கோக் பாட்டில் நுரைபோல வழிந்து ஓடியது.

மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமை. நண்பர்கள் இல்லாத நாள். சினிமாவுக்குப் போகலாம் என்று சிங்கை அழைத்தேன். சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்தவன் சரி என்றான். ஆனால் அவன் எந்த படத்துக்கு என்று கேட்டிருந்தால் கூட பரவாயில்லை. அல்லது எந்த தியேட்டர் என்று கூட கேட்டிருக்கலாம். ஆனால் அவனே ஒரு தியேட்டர் பெயரைச் சொன்னான். அப்போது தான் எனக்கு உண்மையிலேயே கோபம் வந்தது. அவன் சொன்ன தியேட்டர்......

(தொடரும்)

Friday, October 23, 2009

இதாண்டா பகுத்தறிவு!


இது நேற்று நாளிதழ்களில் வந்த தமிழ்நாடு அரசின் விளம்பரம். மேலே கலைஞர் மஞ்சள் துண்டுடன். இதென்ன அதிசயமா? இல்லை. ஆனால் காப்பீட்டுத் திட்ட விளம்பரம் இது. அதில் எமன் வருகிறான் பாசக் கயிறுடன். கலைஞர் காபாற்றுகிறாராம்.


நீதிக் கட்சி - திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் - பெரியார் - அண்ணா - கலைஞர் - கடவுள் இல்லை - கடவுளை நம்புபவன் காட்டு மிராண்டி - ஒன்றே குலம் ஒருவனே தேவன் - ராமன் ஆரிய மாயை - கோயில் கூடாது என்றேன் - மஞ்சள் துண்டு - புத்தர் - மருத்துவ குணம் - இந்து என்றால் திருடன் - பா.ஜ.க - பண்டாரங்கள் - கூட்டணி - ராமன் புராணம் - கட்டுக் கதை - மேற்கோள்கள் காட்டுவேன் - விவாதிக்கத் தயாரா - சேது - காங்கிரஸ் பல்டி - காங்கிரஸ் - ஜனதா - பா ஜ க - காங்கிரஸ் - கிருஷ்ணா நதி - சாய் பாபா - தமிழ் பேசினோம் - கடவுளை நம்புகிறேனா என்பதல்ல அந்த கடவுள் ஏற்கும் வகையில் செயல்படுகிறேனா என்று பார் - தமிழ் தமிழ் தமிழ் - புலி - சகோதர யுத்தம் - போர் - உண்ணாவிரதம் - பேரழிவு - இப்போ அமைதி - சிங்களம் - (அ)சிங்கம் - ராஜபக்சே - மகிழ்ச்சி - பணம் - டி.வி - இலவசம் - தேர்தல் - வெற்றி - ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி - தயாநிதி - மானாட மயிலாட - தமிழ் விளையாட - காவிரியாறு - பாலாறு - பெரியாறு - உண்ணாவிரதம் - கண்டன கூட்டம் - காதுல பூ - இலவசம் - ராமன் பொய் - கிருஷ்ணன் பொய் - கடவுள் பொய் - ஈழம் பொய் - புராணம் பொய் - அதில் வரும் காலன் மட்டும் மெய் - கலைஞர் காப்பீட்டு திட்டம் - விளம்பரம் - பதவி மெய் - இதாண்டா பகுத்தறிவு!

Wednesday, October 21, 2009

அட ங்கொக்கமக்கா...இந்த போஸ்டரை பார்த்தீர்களா?


சமீபத்தில் இலங்கை சென்றிருந்த திமுக தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் மறுகுடியேற்றம் செய்ய வேண்டும் என ராஜபக்சேவிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து அடுத்த 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் பேர் மறு குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தான் விடுதலை என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

எம் தமிழ் உணர்வாளர்களின் பாசத்தை நினைத்தால் எதை எடுத்து அடித்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் இவர்களை................

என்னத்த சொல்லறது........

ஈழத் தமிழர்களே இன்னுமா எங்களை நம்புறீங்க.....?

பதிவர்களை பெருமைப்படுத்திய எழுத்தாளர்
சினிமா பற்றியும், நடிகர்கள் பற்றியும் எப்படிப்பட்ட விஷயங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக நடிகைகள் பற்றி என்பதை ஒரு வரியில் சொல்லிவிடலாம்.

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு என்றும் எப்போதும் தேவைப்படும் விஷயங்கள் இரண்டை இப்போதைக்குக் குறிப்பிடலாம். 1. சினிமா. 2. சினிமா நடிக, நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள். இந்த வார்த்தையைக் கண்டுபிடித்தவர் எந்த மொழியியல் அறிஞர் என்று தெரியவில்லை. கிசுகிசுக்கள் எழுதுவதற்கு என்றே ஒரு குரூப் அலைவதும் அதைப் படிப்பதற்கென்றே மற்றொரு குரூப் திரிவதும் யாருக்கும் தெரியாத ரகசியம் இல்லை. குறிப்பாக வாரப் பத்திரிகைகள். பெருந்தன்மையாக வெளியாகும் பத்திரிகைகள் கூட போகிற போக்கில் சில பிட்டுகளை வீசிவிட்டுச் சென்றால் தான் அந்த நாள் அல்லது அந்த வாரம் முழுமை பெறுவதாக அமையும் என்பது போல வெளியிடுகின்றன.

"நாட்டியத்தில் கோலோச்சும் அந்த நடிகருடன் சேர்ந்து குடும்பம் நடத்த குடுமிப்பிடி சண்டை போடவும் தயாராகிவிட்டாராம் அவ்விட பூமி நாயகி. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் உற்சாக பானத்தை அளவுக்கதிகமாக ஏற்றிவிட்டு ஹோட்டலில் மட்டையாகி கிடக்கிறாராம். இந்தக் கோலத்தைப் பார்த்து ஜொள்ளு விடாதவர்களே இல்லையாம். பாவம் அந்த நடிகை என்கிறார்கள் அவர் நலம் விரும்பிகள்.'

இப்படி ஒரு செய்தி. சாரி கிசுகிசு. இதனால் யாருக்கு என்ன லாபம். இதை எழுதியவருக்கு? படித்தவருக்கு? அந்த நடிகைக்கு? நடிகருக்கு? இந்த தமிழ்கூறும் நல்லுலகுக்கு? என்ன பயன்? ஒன்றும் இல்லை. ஒரு வேளை எழுதியவருக்கு சன்மானம், விற்பவருக்கு சர்குலேசன் ஏறுவது, படிப்பவருக்கு சில நிமிட கிளுகிளுப்பு. அவ்வளவுதான். (இது போல நானும் படித்து கிளுகிளுப்பு அடைந்திருக்கிறேன். அதனால் முன்னாடியே சொல்லிடறேன்... பின்னூட்டத்தில் ஆயுதங்களுடன் வரவேண்டாம்...)

எந்த ஒரு சினிமா நிருபருக்கும் இருக்கும் தொடர்புகளைப் பயன்படுத்தி அவரே நேரில் பார்த்த, அல்லது செவிவழிச் செய்தியை விற்பதும் உண்டு அல்லது தனது
பத்திரிகையில் எழுதுவதும் உண்டு. சினிமா நடிக, நடிகைகள் பற்றி நல்ல விஷயங்களே இல்லையா என்று கிசுகிசு படித்து வெறுக்கும் ரசிக மகாஜனங்களுக்காக இருக்கவே இருக்கிறது நடிகரின் அரசியல் பிரவேசம் பற்றிய கிசுகிசு. உள்ளே ஒன்றும் இல்லாத விஷயங்களை ஊதிப் பெரிதாக்கி அதை உண்மையாக்கிவிடும் கிசு கிசுவும் உண்டு. அதனால் பாதிக்கப்பட்டவர்களும், நன்மையடைந்தவர்களும் ஏராளம்.

நடிகர், நடிகைகள் பற்றி பத்திரிகையில் வருவது எல்லாமே கிசுகிசுக்கள்தான் என்ற நிலையே இருக்கிறது. அதே போல கிசுகிசுக்கள் வராதா என்று ஏங்கும் புது நடிகர், நடிகைகள் நிறைய பேர். இந்தமாதிரியான சூழலில் ஒரு சினிமா நிருபர் எதற்கு முக்கியத்துவம் தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாக ரசிகர்களை (வாசகர்களை?) கவர்ந்து இழுக்கும் விஷயமான கிசுகிசுதான். அதுவும் நீண்ட நாட்கள் சினிமா துறை ஆட்களுடன் தொடர்பு கொண்ட ஒருவர் அப்படி எழுதுவதில் எந்த ஆச்சரியமும் இருக்காது.

ஆனால் அப்படி 20 ஆண்டுகள் சினிமா துறையில் சிவாஜி கணேசன் முதல் இன்று தனுஷ் வரை அனைத்து நடிகர், நடிகைகளிடமும் பேட்டி எடுத்து, பழகிய பத்திரிகையாளரான திரு. தமிழ்மகன், ஒவ்வொரு நடிகர், நடிகை பற்றியும் மிக நல்ல விஷயங்களை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள செல்லுலாய்ட் சித்திரங்கள் என்ற தனது நூலில் எழுதியுள்ளார். நிழலில் பார்க்கும் முகங்களின் பின்னால் ஆச்சரியமூட்டும் பல நிஜ முகங்கள் இருப்பதை இந்த நூலைப் படிக்கும் போது அறிய முடிகிறது.

ஒவ்வொரு நடிகர், நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றி எழுதும்போதும் அவர்களிடம் உள்ள ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தைக்
குறிப்பிடுகிறார். சில சமயம் அது சிலருக்கு பாதகமான விஷயமாகவும் இருக்கும். இந்த சூழலில் இவர் ஏன் இப்படி நடந்து கொண்டார். மனிதர்கள் எந்த உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களது அடிப்படைக் குணம் (நல்லதோ கெட்டதோ) என்றும் மாறாமல் அப்படியே நிலைத்திருப்பது ஏன் என்று தனது கட்டுரையின் முடிவில் ஒரு தேடல் நிறைந்த கேள்வியாக எழுப்பி முடிக்கிறார் தமிழ்மகன்.

திரையுலக முகங்களில் தன்னால் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்க முடிந்தது, அவர்கள் பற்றி எழுதுவதற்கு தன்னிடம் நல்ல விஷயங்களே உள்ளன என்பதை பறைசாற்றும் விதத்தில் எழுதியிருக்கிறார். திரையுலக பிரமுகர்களைப் பற்றிய அவரது பார்வை உயர்ந்த கோணத்திலேயே இருந்துள்ளது என்பதை இதைப்படிக்கும் போது உணர முடியும்.

ஆன்மிகத்திலேயே என் மனம் அதிக நாட்டம் கொண்டுள்ளது என்று கூறிக்கொண்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் நடிகரை நமக்குத் தெரியும். ஆனால் ஓரளவுக்கு புகழ் இருந்த போது கூட அதை வேண்டாம் என்று கூறிச் சென்று துறவறம் பூண்ட நடிகையை எத்தனை பேருக்குத் தெரியும். அவர் நடித்துக் கொண்டிருந்தபோது அவரைப் பற்றி வந்த கிசுகிசுக்களையும் நான் படித்திருக்கிறேன். ஆனால் அந்த நடிகையின் உண்மை முகத்தை தமிழ்மகன் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். தனது புகழைத் துறந்து விட்டதோடு அல்லாமல் மைசூரிலுள்ள பரமஹம்ச நித்தியானந்தரின் நித்தியானந்த பீடத்தில் ஸ்வாமினி நிர்மலாந்தா என்ற சந்நியாசியாக இருக்கிறார். அவர்தான் நடிகை ராகசுதா. இதைப் படித்த போது ஆச்சரியமாக இருந்தது. எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் இதைப் படித்துவிட்டு தமிழ்மகனைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு உதாரணம்தான். இப்படி பல விஷயங்களைக் குறிப்பிடலாம்.

இந்தக் கட்டுரைகள் உயிரோசை இணைய இதழில் திரைக்குப் பின்னே என்ற தலைப்பில் தொடராக வந்தபோது, தனது வலைப்பதிவிலும் (தமிழ்மகன்) அதை வெளியிட்டார். அதைப் படித்த எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன். ஆனால் பின்னுட்டமிட்டவர்கள் ஒரு சிலரே. அது அவருக்கு மேலும் உற்சாகம் அளித்திருக்கிறது. இதனால் யாரெல்லாம் அவருக்குப் பின்னூட்டமிட்டார்களோ, அவர்களது பெயரையெல்லாம், தனது நூலின் நன்றியுரையில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். பல சிறுகதைகள், சில நாவல்கள், தமிழக அரசின் பரிசு, சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைப் போட்டியில் முதல் பரிசு என்று பெயர் பெற்ற இவர், வலைப்பதிவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களது பெயரை தனது நூலில் வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

நீங்களும் அவரது வலைப்பதிவில் பின்னூட்டமிட்டிருந்தால் புத்தகத்தை வாங்கிப் பாருங்கள். உங்கள் பெயரும் இருக்கலாம்.

ஏனென்றால் என் பெயரும் அதில் இருக்கிறது.


செல்லுலாய்ட் சித்திரங்கள், தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை ரூ.100.

Saturday, October 17, 2009

திருமாவை சபிப்பது தகுமா?கடந்த நூற்றாண்டில் நடந்த யூத இனப் படுகொலை பற்றி மனித நேய ஆர்வலர்களால் பலமுறை கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த நூற்றாண்டு முழுவதும் சொல்லத் தக்க அளவுக்கு இனப் படுகொலை நடந்தது தமிழீழத்தில் தான். எத்தனை போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தீக்குளிப்புகள் எதற்கும் அசைந்து கொடுக்காத இந்திய அரசும் அதற்கு உறுதுணையாக நின்ற தமிழக அரசும் தமிழினப் படுகொலைக்கு வரலாற்று சாட்சியங்களாக இருக்கின்றன. இனியும் அந்த நிலையே தொடரும் என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன.

போர் முடிந்து விட்டதாக அறிவித்த பின்பும் 3 லட்சம் பேர் அகதிகள் முகாமில் உணவு, உடை, உயிர் பாதுகாப்பு இன்றி தவித்து வருகிறார்கள். அது பற்றி ஒரு சின்ன செய்தியைக் கூட எந்த தொலைக்காட்சியும், செய்தித் தாளும் வெளியிடுவதில்லை. போர் நடந்து கொண்டிருந்தபோது வட இந்திய தொலைக் காட்சிகளும், தேசிய பத்திரிகை என்று தங்களுக்குத் தாங்களே கூறிக்கொள்ளும் ஆங்கில பத்திரிகைகளும் நடத்திய ஊடகப் போர் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் அவர்கள் விருப்பப்படி எல்லாம் முடிந்துவிட்ட பின்னரும் எந்த ஒரு பத்திரிகை ஆசிரியனும் முகாம் அவலத்தை வெளியிட மறுப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு தேசிய ஆங்கில பத்திரிகை தன் கண்களில் சுண்ணாம்பு வைத்துக் கொண்டிருக்கும் போலிருக்கிறது. அந்த பத்திரிகையின் மீது வரும் ரெüத்திரம் பற்றி மற்றொரு பதிவில் கூறுகிறேன்.

போருக்குப் பின்னான சூழலில் பல மாற்றங்கள் நடந்துவிட்டாலும், கலைஞர் மனதில் இன்னும் தமிழர்கள் மீது இரக்கம் மிச்சமிருக்கிறது. அதற்கு அறிகுறிதான் டி.ஆர்.பாலு தலைமையில் தன் மகள் கனிமொழியையும், திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களையும் இலங்கைக்கு அனுப்பி நிலைமையை பார்த்து வர ஆணையிட்டார். தலைவரின் ஆணையை மீற முடியுமா?

ஒரு மனிதன் இறந்தவுடன் அந்த வீட்டுக்குச் செல்வதுதான் உண்மையான பண்பாடு. மிகத் தொலைவில் இருந்தாலோ அல்லது தகவல் தெரியவில்லை என்றாலோ இழவுக்குப் போகாதது தவறாகாது. ஆனால் இந்த விதிவிலக்கு தனிமனிதனின் இறப்புக்கு மட்டுமே. ஆனால் லட்சக்கணக்கான உயிர்கள் போனது பற்றி அறிந்தும் அறியாதது போல யாரை சமாதானம் செய்ய இந்தக் குழு இலங்கை சென்றது எனத் தெரியவில்லை.

எல்லோரும் இறந்து மண்ணோடு மண்ணாகிப் போனப் பின்பு இழவு கேட்க தமிழக எம்.பி.கள் ஈழத்திற்கு வந்தனர் என்று நாளை வரலாறு கூறும். அப்போது நாம் இருப்போமா என்று தெரியாது. நாங்கள் உள்ளே இருக்கும் தமிழர்களை மீட்பதற்காக சென்றோம் என்று அவர்கள் கூறினால் அதைவிட ஜோக் எதுவுமில்லை.

அங்கே சென்றவர்களில் ஆக்கப்பூர்வமாக எந்த ஒரு எம்.பியும் செயல்பட்டதாக தகவல் இல்லை. இதில் திருமாவளவனை மட்டும் குறி வைப்பதனால் என்ன லாபம்? அதிலும் முக்கியமாக ராஜபட்சவுடன் அவரது சந்திப்பு குறித்து வரும் விமர்சனங்கள் குழந்தைத்தனமானவை. திருமாவளவனின் தமிழினப் பற்று குறைந்துபோனது பற்றி எல்லோரும் குறை கூறுகிறார்கள். அதற்கு காரணம் அவரது அரசியல் நிலைப்பாடு. அதைவிடுவோம்.

ராஜபட்சவைப் பார்த்து சிரித்துவிட்டு வருகிறார். அங்கே தனது கோபத்தைக் காட்டவேண்டாமா? சிங்கத்தின் குகையில் சென்று அதன் பிடரி மயிரைப் பிடித்து உலுக்கி இருக்க வேண்டாமா என்று பல பதிவர்கள் கேட்கிறார்கள். இதுதான் தமிழனின் மனோபாவம்.

ஆயிரம் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். நீங்களோ நானோ ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் ராஜபட்ச அந்நாட்டின் அதிபர். அது அதிபர் மாளிகை. அங்கே நாம் விருந்தாளிகள் இல்லாவிட்டாலும் அங்கு வருகை தந்தவர்கள். அந்த சந்திப்பில் எதுவும் விளைந்துவிடப் போவதில்லை. ஏனென்றால் வந்திருப்பவர்கள் அரசியல் கோமாளிகள் என்பது ராஜபட்சவுக்கு நன்றாகத் தெரியும்.

திருமாவைப் பற்றி ராஜபட்சவுக்கும், ராஜபட்ச பற்றி உலகத்துக்கும் தெரியும். அங்கே கொஞ்ச நேரத்துக்கு கோபத்தைக் காட்டி விட்டு வந்தால் அய்யயோ திருமா கோபப்படறாரு...எல்லா தமிழர்களையும் வெளிய அனுப்புங்கப்பா என்று உத்தரவிடுவாரா?.

அது வேண்டாம். குறைந்தபட்சம் தன்னுடைய எதிர்ப்பைக் காட்டியிருக்கலாமே என்று கேட்கலாம். எதற்குக் காட்ட வேண்டும். நமக்கு என்று இந்திய நாடாளுமன்றம் உள்ளது. அங்கே அவர் தனது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று ஓட்டுப் போட்ட நாம் உத்தரவிடலாமே. ஏனென்றால் ராஜபட்ச அம்புதான். இந்திய அரசு தான் அதை எய்தது.

ஒரு முறை தில்லியில் நடந்த கூட்டத்தில் சோனியா கானும் (வந்தவன் போனவன் எல்லாம் காந்தி பெயரை பயன்படுத்த எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை) அத்வானியும் அருகருகே உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போது அத்வானி கண்ணாடி கொண்டு வரவில்லை என்கிறார். உடனே சோனியா கான், தன்னிடம் இருந்த கண்ணாடியைக் கொடுத்து இது உங்களுக்கு சரியாக இருக்குமா என்று பாருங்கள் என்கிறார். இது பத்திரிகையில் வந்த செய்தி.

இதைப் படித்தவுடன் பாஜக தொண்டர்கள் அத்வானியை இந்து துரோகி என்றோ, காங்கிரஸ் தொண்டர்கள் சோனியாவை சிறுபான்மை விரோதி என்றோ கூப்பாடு போடவில்லை. இரு வட இந்திய அரசியல் தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் சிரித்துப் பேசுகிறார்கள். அவர்களுக்குள் அரசியல் பண்பாடு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடம் கொஞ்சம் கூட அந்தப்பண்பாடு இல்லை என்பதை எத்தனை முறைதான் சொல்வது?

மாயாவதி பதவியேற்கும் விழாவுக்கு முலாயம் சிங் யாதவ் வருகிறார். நிதிஷ்குமார் பதவியேற்புக்கு லாலு பிரசாத் வருகிறார். எடியூரப்பா பதவியேற்புக்கு எச்.டி.குமாரசாமி வருகிறார். கலைஞர் பதவியேற்புக்கு ஜெயலலிதா வந்திருந்தால் அவரும் அதிமுக துரோகி ஆகியிருப்பார். தமிழர்களைப் பொருத்தவரை ஒருவன் நமக்கு எதிரி என்றால் ஜென்மத்துக்கும் அவனுடன் பகைமை பாராட்டி அடுத்த வேலையைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.

தலைவர் பிரபாகரனுடன் திருமாவை வைத்து ராஜபட்ச நக்கலடித்தபோது கூட வேறு வழியில்லாமல் தான் திருமா சிரித்திருப்பார். அந்த இடத்தில் வேறு என்ன செய்வது. கம்பெடுத்து சுத்தி அடிக்க வேண்டும் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறில்லை. அந்த சில நிமிடங்களை வைத்து தமிழினத் துரோகி என்று சொன்னால் கனிமொழி, டி.ஆர்.பாலுவை எல்லாம் என்னவென்று சொல்வது?

ஒரு வேளை போர் திசைமாறி வெற்றி நம் பக்கம் இருந்து தலைவர் பிரபாகரன் ராஜபட்சவை சந்திக்க வேண்டியிருந்தால் கூட கைகுலுக்கி சிரித்திருப்பார். அதைத்தான் திருமா செய்திருக்கிறார். சிங்களன் நக்கலடித்தபோது கூட சுருக்கென்று கோபப்படாமல் வந்த திருமாவளவனிடம் இருந்தது தமிழனின் பண்பாட்டுக் கூறுதான்.

அதை விடுத்து, திருமாவளவனின் சட்டையைப் பிடித்து ஏன் அவனை அடிக்கவில்லை என்று கேட்பதும், துரோகி என சபிப்பதும் குழந்தைத்தனம். திருமா கோபப்பட்டிருந்தாலும், கோபப்படாவிட்டாலும் இப்போதைக்கு தமிழர் அவலம் தீரப்போவதில்லை என்பதுதான் உண்மை.

Monday, October 12, 2009

விஜய் ஒரு சின்ன ரஜினி: சினிமாக் கொட்டாய் அனுபவம் - பார்ட் 3வேட்டைக்காரன் படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் அவனை வேட்டையாடிக் கொண்டிருந்தது. காலங்காத்தால பல் விளக்காமல் பாக்கெட்டில் வைத்திருந்த பொரி உருண்டையை கொஞ்சம் கொஞ்சமாக கொறித்துத் தின்றபடி போஸ்டரைப் பார்த்தபோது போஸ்டரில் இருந்த ஹீரோ அவனை அப்படி வசீகரித்தார்.

காலையில் எழுந்தவுடன் படிப்பு என்பதெல்லாம் 9 மணிக்கு மேல் பள்ளிக் கூடத்தில்தான். கொட்டாயில் என்ன படம் ஓடுகிறது என்பதை தெரிந்து கொள்வதில் தான் ஆர்வம். அதற்கு அவன் அடிக்கடி சினிமா போக வாய்ப்பில்லாதவன் என்பதும் காரணம்.

தியேட்டரில் என்ன படம் என்பதை அறிவிக்கும் பலகையாக செயல்பட்டது பக்கத்து வீட்டு டீக்கடை. அதை முதலில் யார் பார்ப்பது என்பதில் அவனுக்கும், அவன் எதிரியாகவிட்ட கடிவாங்கிக்கும் செம போட்டி. அதிலும் யாரை யார் முதலில் பார்த்தாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு "இன்னைக்கு நம்மூர் கொட்டாயில ********* படம் ஓடுதுடா டோய்..." என்று சத்தம் போட்டுச் சொல்வதில் படுபயங்கரப் போட்டி. (போன பதிவில் நம் ஹீரோவிடம் வாலாட்டி கடிவாங்கியதால் இன்றிலிருந்து அந்த பக்கத்து வீட்டுப் பையன், கடிவாங்கி என்றே அழைக்கப்படுவான்) டீக்கடை தகர கதவில்தான் சினிமா பட போஸ்டரை ஒட்டுவார்கள். அதை ஒட்டுவதற்கு போஸ்டர் மேன் (ஹிஹிஹி) செய்யும் அட்டகாசம் கொஞ்சமல்ல.

"படம் எடுத்தவங்கூட இவ்வளவு நேரம் பண்ண மாட்டான். இவன் போஸ்டர் ஒட்டுறதுக்கே இப்படி இழுக்கிறானே" என்று கோபமாக வரும். அதற்குள் பொரி உருண்டை தீர்ந்து போய் வாயைச் சுற்றிலும் போஸ்டர் ஒட்ட பசை போட்டது போலாகிவிடும் அவனுக்கு.

அதுவும் அந்த போஸ்டர் மேன் சாதாரண ஆள் இல்லை. அவன் தூரத்தில் வரும்போதே எல்லோரையும் ஒரு இளக்காரப் பார்வை பார்த்தபடிதான் வருவான். கழுத்தில் கர்சீப் கட்டி சட்டையை டக்இன் செய்து அரைக்கை சட்டையை மேலே மடித்துவிட்டு, தையல் போட்ட ரப்பர் செருப்பை போட்டுக் கொண்டு சைக்கிளை மிதித்தபடி வருவான். கேரியரில் பசை பக்கெட். அதற்குப் பின்னால் என்ன படம் என்று தெரிந்து விடக் கூடாது என்ற "தொழில் போட்டி" காரணமாக நான்காக மடித்து வைக்கப்பட்ட போஸ்டர்.

சைக்கிளை நிறுத்தியவுடன் அவனுக்கு டீ தயாராகிவிடும். ஒரு பீடியை பற்ற வைத்தபடி டீக்கடையை வாங்குவது போல பார்த்துக் கொண்டிருப்பான். அதற்குள் அவனைச் சுற்றி கூட்டம் கூடிவிடும். "ஏனுங்க..என்ன படம் போடறீங்க..." என்று கேட்கும் பெரிசுகள் முதல் "அண்ணா என்ன படங்ணா..." என்று கேட்கும் பொடிசுகள் வரை அவனது பதில் ஒரே ஒரு பார்வைதான். அதன் அர்த்தம் காத்திருங்கள் மகாஜனங்களே என்பதுதான்.

ஒரு வழியாக டீயை குடித்துவிட்டு, பீடியை அணைத்து காதில் சொருகிவிட்டு பக்கெட்டிலிருந்து பசையை எடுப்பான். இப்படியும் அப்படியும் தேய்த்து முழு தகரத்தையும் பசையாக்கிவிடுவான். அதுவும் ஏற்கெனவே ஒட்டியிருக்கும் போஸ்டரில் சிலுக்கு இருந்துவிட்டால் போதும்...உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி அவள் மீது பசையை தேய்த்துக் கொண்டே இருப்பான். "அண்ணா சீக்கிரம் ஒட்டுங்ணா...சும்மா தேச்சுக்கிட்டே இருக்கிறீங்க....' என்பான் இவன்.

முறைத்துக் கொண்டே சைக்கிளில் உள்ள போஸ்டரை எடுத்து திரும்பி நின்று கொள்வான் போஸ்டர் மேன். முழங்கை வரையில் ஒட்டியிருக்கும் பசையை போஸ்டரின் பின் பக்கத்தில் தேய்த்துக் கொள்வான். அந்த சமயத்தில் என்ன படம் என்பது யாருக்கும் தெரியாதவாறு கையில் போஸ்டரைப் பிடித்திருப்பான். அதற்குள் காபி டம்ளருடன் வந்துவிடுவான் கடிவாங்கி. இவனுக்கு ஆத்திரம் போஸ்டர் மேன் மேல் வரும்.

போஸ்டர் இரண்டு பகுதியாக இருக்கும். முதல் பாதி ஒட்டும்போது அதில் தெரியும் முதல் பாதி எழுத்துக்களை வைத்து இது இந்தப் படம் அந்தப் படம் என்று பந்தயமே நடக்கும். ஒரு பாதியை ஒட்டிவிட்டு மீண்டும் காதிலிருக்கும் பீடியை பற்ற வைப்பான். இந்த மகா ரசிகர்கள் கண்டுபிடிக்கிறார்களா இல்லையா என்பதை உள்ளூர ரசித்தபடி போஸ்டரை நீவி விட்டுக்
கொண்டே இருப்பான். எல்லோரும் அவனையே பார்ப்பார்கள். அவனும் சொல்வது போலத் தெரியாது. பரபரப்பு பற்றிக் கொள்ளும். அந்த நேரத்தில் போஸ்டர் மேன்தான் ஹீரோ. எல்லோரது பார்வையும் அவன் மேல்தான்.

ஒரு வழியாக இரண்டாவது பாதியை எடுத்து ஒட்டினான். "அட வேட்டைக்காரன்...கெளபாய் தொப்பியணிந்த எம்ஜிஆர் ஏனோ அவன் மனதில் பசை போடாமலேயே ஒட்டிக் கொண்டார். "ஹோய்ய்ய்ய்....எம்ஜிஆர் படம்டோய்...."என்று நம்ம ஹீரோ திடீரென்று கத்த, அதை சற்றும் எதிர்பாராத கடிவாங்கி காபி டம்ளரை பக்கத்தில் நின்ற பெரியவர் காலில் போட்டான். எப்போதுமே எதிரிக்கு எதிரி நண்பன் தானே. இவனுக்கு எம்ஜிஆர் பிடிக்கிறது என்பதை கடிவாங்கி தெரிந்து கொண்டான். அன்றிலிருந்து பள்ளிக் கூடத்தில் சிவாஜிக்கு என்று ஒரு கூட்டம் பிடிக்க முயற்சி செய்தான். ஆனால் நம்ம ஆளுக்கு சிவாஜியையும் பிடிக்கும் என்பது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இவன்தான் உலக ரசிகனாச்சே....

அவன் வேட்டைக்காரன் படத்தை பார்த்தானா இல்லையா....அடுத்த பதிவுல சொல்றேன்.

அது போகட்டும்...இப்போ சின்ன ரஜினியாம் இளைய தளபதி நடிப்பில் வரும் வேட்டைக்காரன் பற்றி வந்த ஒரு எஸ்.எம்.எஸ்.

விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்ட...நாலு மாசம் தூங்க மாட்ட...
பப்ளிக்: நீ அடிச்சா கூட பரவால....நடிச்சாத்தான் தாங்க முடியாது.... :)

ரஜினியைப் பிடிக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு காரணம் இருந்தது என்று போன பதிவில் கூறியிருந்தேன். அது என்ன என்பதை எழுதத்தான் நினைத்தேன். அதற்குள் கற்பன குதுர பின்னால ஓடி எம்ஜிஆர் போஸ்டர்ல போய் ஒட்டிக்கிச்சு... அதை இழுத்து வர வேண்டியிருக்கிறது. அதனால இப்போதைக்கு அப்பீட்டு...அப்புறமா ரிப்பீட்டு....

(தொடரும்)

Friday, October 9, 2009

ஸ்ரீ பிரியா பொண்ணா? பொம்பளையா?பூனை கண்ணுக்கு எப்பவுமே ஒரு அதிர்ஷ்டம் இருக்கு. பூனை கண் இருக்கும் ஆட்கள் நான் பார்த்த வரை கவர்ச்சியாக இருக்கிறார்கள். அல்லது குறைந்தது அழகாகவாவது இருக்கிறார்கள்.

நான் சொல்ல வர விஷயத்துக்கும் நடிகை புவனேஸ்வரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் சொன்னால் படிச்சுட்டு நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை.

புடிச்சாலும் புடிச்சாங்க புவனேஸ்வரியை, அது பாட்டுக்கு ஒரு லிஸ்ட் கொடுத்துட்டு கம்னு உள்ள உக்காந்திருக்கு. வெளிய இருக்கிற ஆட்கள் தான் இப்போ பதறிக் கொண்டிருக்கிறார்கள்.

பத்திரிகையில் செய்தி வெளியிடலாம். ஆனால் போட்டோ பேரு எல்லாம் போட்டு செய்தி வெளியிட்டதுதான் தவறு. உச்ச நீதிமன்ற ஆணைப்படி, கற்பழிப்பு வழக்கில் கூட அது பற்றிய செய்தியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அடையாளம் வராமல் செய்தி வெளியிட வேண்டும் என்ற வழிகாட்டல் இருக்கிறது. ஆனால் எவன் கேட்கிறான்.

வட இந்திய தொலைகாட்சியில் முகத்தை லேசா மறைத்து காட்டுகிறார்கள். அது போகட்டும்.

அந்த செய்தித்தாளை கண்டித்து நடந்த நடிக, நடிகை கண்டன கூட்டத்துக்கு ரஜினி எதுக்கு வந்தாரு என்றுதான் தெரியவில்லை. அதிலும் அங்கெ பேசியவர்களின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை.

திரையுலகில் இருக்கும் சிலரை தவிர மற்றவர்கள் எல்லாம் சாக்கடை என்று நான் நினைத்தது ஓரளவு உண்மை ஆகிவிட்டது. அதுவும் நடிகைகள் பேசிய பேசும், ஹீரோக்கள் பேசிய வெட்டி வீர வசனமும் கேட்டால் காமடியாக இருக்கிறது. அந்த செய்தியை படித்ததும் பத்திரிகை ஆபீஸ் போய் நாலு பேர வெட்டனும்னு இருந்துச்சு என்று பேசிய வீர வசனம்...அட ங்கொக்கமக்கா...

ஆனால் உணர்ச்சிவசப்படாமல் பேசியவர் தாமு மட்டுமே. உண்மை நிலவரம் தெரிந்து நிதானமாக பேசிய தாமு தான் ரியல் ஹீரோ.

இதில் ரொம்ப சிரிப்பும் சிந்தனையை தூண்டும் விதமாக பேசியவர் ஸ்ரீப்ரியா தான். அந்த செய்தியை போட்டவன் ஒரு தா*****தே*****பை***** என்ற தமிழ்கூறு நல்லுலகம் பேசும் வசை சொல் பொருள் படும்படி ஆங்கிலத்தில் பொது மேடையில் திட்டி இருக்கிறார். ஓகே. அவர் சரியான காண்டில் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் அடித்த ஜோக் என்ன என்பது அவருக்கே தெரியாது...

யாராவது அதை கவனித்தீர்களா என்றும் தெரியவில்லை. அது என்னவென்றால்

ஸ்ரீப்ரியா சொன்னார்- "இந்த செய்தியை படித்த என் கணவர் என்னை ஆறுதல் படுத்தினார். நீ தைரியமான பொண்ணு என்றார். நான் தைரியமான பொண்ணுதான்...ஆனால் நானும் மனிசிதானே..."

இதில் "தைரியமான" என்ற சொல்லில் ஒரு நுண்ணரசியல் உள்ளது. அதாவது திரையுலகில் இந்த நூற்றாண்டிலேயே, பல விஷயம் அறிந்த புதிய நடிகைகளை ஒரு வழி செய்வதாக கேள்வி படுகிறோம். பழைய நடிகையான ஸ்ரீப்ரியா அந்தக் காலத்தில் என்ன பாடுபட்டாரோ தெரியாது..அதனால் அந்த தைரியம் என்ற சொல் மனதளவில் உளவியல் ரீதியில் அவர் தன்னை கோழை என்று யாரும் நினைத்து விடக்கூடாது என்ற நினைப்பின் காரணமாக உதிர்த்த முத்து என்று சொல்லலாம்.

எங்கள் ஊரில் கல்யாணம் ஆகிவிட்டாலே அவள் பொம்பளை தான். தமிழ்நாட்டில் எல்லா ஊரிலும் இதுதான் நிலவரம் என்று நினைக்கிறன். இருபது வயதுக்கு கீழ் உள்ளவர்களையே பொண்ணு என்று அழைப்பார்கள். கொஞ்சம் பெரிய உடம்பு உள்ள சின்ன பெண்களையே என்னடி பெரிய பொம்பளையாட்டம் இருக்குற...என்று கிண்டல் செய்யாதா ஊர் இருக்கா?

மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் (ரண்டு விட்டுப்போச்சு...கோச்சுகாதீங்க) என்று தமிழ் இலக்கியம் பெண்ணின் பருவங்களை பிரிக்கிறது.... அதாவது 35 வயதுக்கு மேலே அவள் பேரிளம்பெண் தான்.

ஸ்ரீப்ரியாவுக்கு எப்படியும் 45 வயது இருக்கும்....அவர் பொண்ணா? பொம்பளையா?

Thursday, October 8, 2009

மீண்டும் மீண்டும் ஆப்பிரிக்கா !


லாரல்-ஹார்டி, சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டன், ரோவன் அட்கின்ஸன் (மிஸ்டர் பீன்) நடிப்பை ரசித்துப் பார்த்து மௌனமாய் சிரித்தாலும், வாய்விட்டுச் சிரித்தாலும் அதில் ஒரு அன்னியத் தன்மை ஒட்டியிருக்கிறது. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரப் போல வருமா?.

கவுண்டமணி-செந்தில் காமெடி ஒரு லெஜன்ட் என்றே நான் சொல்வேன். சில காமெடிகளில் வரும் வசனங்களை (பழைய படங்கள்) சொல்லிச் சொல்லி சிரிக்கலாம். உதராணத்துக்கு பெட்ரோமாக்ஸ் லைட். (என்னன்ணே உடைச்சுப்புட்டீங்க என்று செந்தில் கேட்பார்). அப்புறம் அகில உலகப் புகழ் வாழைப்பழ ஜோக்.

காலம் செல்லச் செல்ல வெறும் கூச்சல் மட்டுமே கவுண்டமணியின் காமெடியில் தொடர்ந்தது. அதற்கு திரையுலகின் ஆஸ்தான காமெடி எழுத்தாளர் ஏ.வீரப்பன், கவுண்டமணிக்கு எழுத மறுத்ததும் ஒரு காரணம் என்று சொல்வார்கள். அந்த சமயத்தில் சரியாக வந்து ரூம் போட்டு யோசிச்சு புதுசு புதுசா டெக்னிக்க காட்டி கலக்கி வருகிறார் வடிவேலு. பிறரை தாழ்த்தி அதனால் ஏற்படும் சிரிப்பை விட தன்னைத் தாழ்த்தி பிறரை சிரிக்க வைக்கும் நகைச்சுவை உயர்வானது. அந்த வகையில் வடிவேலு தி கிரேட்.

மனிதனின் வாழ்க்கையில் நகைச்சுவை மிக முக்கியமானது. அதுவும் தமிழனின் வாழ்வில் நகைச்சுவை மிக மிக இன்றியமையாத இடம் கொண்டது.

நகையே அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு என்ப.

என்று இலக்கியம் கண்ட தமிழுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த தொல்காப்பியரின் வரிகளே ஆதாரம். இந்த நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியல் என்ற பகுதியில் வருகிறது. அதாவது சிரிப்பு, அழுகை, இழிவு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை என்று மனிதனின் மெய்ப்பாடுகள் எட்டு வகையாகப் பிரிக்கிறார். நவரசம் என்று சொல்வோமே அதேதான். ஆனால் தமிழில் எட்டு மட்டும் தான். நகைச்சுவையையும் நான்காகப் பிரிக்கிறார் அவர்.

எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்று
உள்ளப்பட்ட நகை நான்கு என்ப.


அதாவது இகழ்தலாலும் (எள்ளல்) நகைச்சுவை வரும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். ஆனால் அது பிறரை இகழ்தலால் வருவதா தன்னையே இகழ்ந்து கொள்வதால் வருகிறதா என்று கூறவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் வாழ்வில் மிக இன்றியமையாத ஒரு கூறாக இருந்தது நகைச்சுவை. அதையே தனது இலக்கண நூலிலும் முன்னிலையாக்கி எழுதியுள்ளார் தொல்காப்பியர்.

அதனால் நகைச்சுவை எனக்கு மிகப் பிடித்த ஒன்று. வீட்டுக்குச் சென்றால் ரிமோட்டை நான் கைப்பற்றி எந்நேரமும் காமெடி சேனலை மட்டுமே பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பேன். முக்கியமா கார்ட்டூன் சேனல் அதுவும் டாம் அன்ட் ஜெர்ரி. (அதிலும் டாம் தான் எனக்குப் பிடித்தது. அதனாலதான் மேலே என் படத்துக்குப் பதிலா டாம் படம் வச்சிருக்கேன். மியாவ் மியாவ் பூன...) இதனால் வீட்டில் இருப்பவர்கள் சீரியல் பார்க்க முடியாததால் சீரியசாகி விடுவார்கள். எப்ப இவன் பொட்டியக் கட்டுவான் என்று நேரம் பார்த்திருப்பார்கள்.

எல்லோரது வாழ்க்கையிலும் என்றைக்கும் தேவையாக இருப்பது நகைச்சுவை ஒன்றே. சார்லி சாப்ளின் காட்சியமைப்புகளில் இருக்கும் துல்லியத் தன்மை, கவுண்டமணி காட்சிகளில் வசனங்களில் இருக்காது.

உதாரணம்:- செந்திலின் நிறத்தைக் கிண்டல் செய்யும் காட்சிகள். எந்தப் படம் என்று நினைவில்லை. செந்திலைப் பார்த்து சொல்வார். இத எங்கியோ பாத்திருக்கிறேன். ஆனா ஊரு மட்டும் சவுத் ஆப்பிரிக்கா என்று சொல்வார். இப்படி பல படங்களில் சொல்லியிருக்கிறார். காரணம் ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமாக நினைவிருப்பது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் டீம்தான் என்று நினைக்கிறேன். அதனால் எழுதும் போதும் தென் ஆப்பிரிக்கா என்று எழுதிவிட்டார்கள் போலிருக்கிறது.

ஆனால் தென்னாப்பிரிக்காவில்தான் வெள்ளைக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள் என நினக்கிறேன். கருப்புன்னா ஆப்பிரிக்கா...ஆப்பிரிக்கான்னா கருப்பு என்று சினிமாக்காரர்கள் நினைத்துக் கொண்டார்கள் போல. ஆப்பிரிக்கா என்றொரு நாடே இல்லை. அது ஒரு கண்டம். அதில் 53 நாடுகள் இருக்கின்றன என்று யாரும் சொல்லவில்லை போலிருக்கிறது.

சரி விஷயத்துக்கு வருகிறேன். மீண்டும் அதேதான். நமக்கும் ஆப்பிரிக்காவுக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை. நம்ம ஆளுங்க எங்கிருந்தாலும் தமிழை மறக்காமல் இருக்கிறார்கள். அதுவும் ஆப்பிரிக்காவில் பலர் இருக்கிறார்கள் போல. அதில் ஒருவர் போட்ஸ்வானாவிலிருந்து முதல்முதலாக வந்தார் என்று முந்திய பதிவில் சொன்னேன். அதை அவர் படித்தாரா இல்லையா என்று தெரியாது.

ஆனால் பக்கத்து நாடான மொசாம்பிக்கில் இருந்து நேற்று முதன்முறையாக இன்னொருவர் என் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறார். அதுதான் நீங்கள் மேலே பார்க்கும் படம். மொசாம்பிக் வாழ் தமிழ் தோழர்/ தோழிக்கு நன்றி.

தம்பட்டத்த போட்டு அடி அடின்னு அடிச்சதுல கையிரண்டும் பயங்கரமா வலிக்குது. அதனால இதோட நிறுத்திக்கறேன்.

Wednesday, October 7, 2009

யாருங்க அந்த போட்ஸ்வனா தமிழர்?
நேற்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது...அது ஒரு தானியங்கி தகவல். நாம் வலைப்பதிவுக்கு புதிதாக இருந்த போது அடிக்கடி ஹிட்ஸ் செக் செய்வோம். (இப்பவும்தான்) இன்றைக்கு எத்தனை பேரு தங்களது பொன்னான நேரத்தை செலவு செய்து நம்ம மொக்கை காவியங்கள படிகிறாங்க என்று ஆவலோடு பார்ப்போம். சரி, சரி...கோவப் படாதீங்க பார்ப்பேன்.

போட்டி தேர்வுகளுக்கு படித்த போது அட்லசும் (atlas) கையுமாக இருப்பேன். அந்த அட்லசை இப்போ (oriental longman) எடுத்து பார்த்தா கண்ணனுக்கு தெரியாத குட்டி குட்டி தீவுகளில் இருந்து மிச்சிப்பி, றோனே, றினே நதிகள் எங்கே ஓடுது, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள குடி குட்டி நாடுகளோட தலை நகரம், land locked country என்று ஏகப்பட்ட இடத்துல கோடு கிழிச்சு, குறிப்பு எழுதி, எந்த நாட்டுக்கு எது எல்லை என்று தெரியாத அளவுக்கு இருக்கு.

ஆபிரிக்காவில் எங்கே வைரம் அதிகம் கிடைக்கு, சூயஜ் கால்வாய் எப்போ எதுக்கு தோண்டினாங்க, என்று தகவல், தகவல்....தகவல்தான்,

இந்தியர்களை பிடிச்சுட்டு போன சோமாலி திருட்டு பசங்க பற்றி படிச்சுட்டா உடனே அட்லஸ் எடுத்து எங்கே அந்த கடல், அதுக்கு பக்கத்துல என்ன நாடு, என்ன நதி, அந்த கடலுக்கு எந்த நதி ரூட்டு போட்டு கொடுக்குது....அங்க யார் president, அவிங்க சோத்துக்கு என்ன பண்றாங்க..இப்படி சொல்லிட்டே போகலாம்...

அதே மாதிரி ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுக்கும் போயிருக்கேன்...அட அட்லசுலதாங்க... அதனால அங்கேயும் கொஞ்சம் தெரியும். (எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னால் அது தலைக்கனம். எதோ கொஞ்சம் தெரியும் என்று சொன்னால் அதுக்கு பேரு என்ன?)

ஆப்பிரிக்காவுல இருக்கும் போட்ஸ்வானா என்ற நாட்டில் இருந்து உங்கள் வலைப்பதிவை முதன்முறையாக ஒருவர் பார்த்துள்ளார் என்ற நற்செய்தியை அந்த மின்னஞ்சல் சொன்னது. அது neoworx.net இணைய தலத்தில் இருந்து வந்தது.

நான் என்ன சொல்ல வரேன்னா... அந்த முகம் தெரியாத நண்பருக்கு (சரி தோழிக்கு) நன்றி.

வந்தவங்கள வாங்க என்று வரவேற்பதுதானே நம் பண்பாடு....

விஜய் ஒரு சின்ன ரஜினி: சினிமாக் கொட்டாய் அனுபவம் - பார்ட் 2இதுக்கு மேலேயும் எழுதாம இருந்தா யாரும் ஒன்னும் கேட்க மாட்டாங்க...அவங்க அவங்க அவங்க அவங்களோட வேலையப் பார்க்க போயிடுவாங்க என்பதால் அந்த அதி பயங்கர ரகசியத்தை பொட்டுனு போட்டு பட்டுனு உடைச்சிடறேன்.

அந்த நடிகர் அடிக்கடி தலைமுடியை கோதிவிட்டுக் கொண்டார். இதை யார் என்று நான் வேறு சொல்ல வேண்டுமா? ஆமாங்க... அதே தான்... சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் என்கிற சூப்பர் ஸ்டார் தான் அவரு....

அந்தப் படத்தில் ஒரு சீன் வரும். அதாவது ஒரு அடுக்கு மாடி வீட்டின் மேல் கயிறைக் கட்டி ரஜினி ஏறுவார். அதுக்கு அப்புறம் படம் எப்படி முடிந்தது என்று இதுவரை அந்த சிறுவனுக்கு நினைவில்லை. அதில் வரும் ஹீரோயினும் நினைவில்லை. ஆனால் ஒன்று மட்டும் ஞாபகம் உள்ளது. அதுவும் அகில இந்திய வானொலி புண்ணியத்தில் அந்தப் படத்தில் வரும் பாடல் மட்டும் இன்றும் அவன் நினைவில் உள்ளது. ஆனா ரெண்டு வரிதான்.

அது, தங்கமணி, ரங்கமணி வா மானே- (மானேவோ தேனேவோ தெரியலை..) என்று ரஜினி பாடுவார். தனிமையில் இருக்கும்போது இப்படி ஏதாவது இட்டுக் கட்டி அவனாகவே பாடிப் பார்ப்பான். முத்துமணி வைரமணி நான்தானே...அப்படின்னு அந்தம்மா பாடும். அந்தப் பாடல் நினைவிருப்பதற்கு இன்னமொரு காரணம், ஆறாம் வகுப்பு வரை அவனோடு ஒன்றாகப் படித்த தங்கமணி தான். அவன் நினைவுகளின் பழுப்பேறிய அடுக்குகளில் அடைந்து கிடக்கும் நிழல் வெளியின் தொலைதூரத்தில் சிக்கியுள்ளது அந்த இசை. அதன் ஒலி காற்றின் மெளனத் தடைகளைத் தாண்டி அவன் காதுகளில் இன்றும் ரீங்கரிக்கிறது. (அப்பப்பா... ஒரு வழியா எப்படியோ இலக்கியத் தரத்தைக் கொண்டு வந்துட்டேன். இனி படிக்கிறவங்க பாடு...)

அந்தப் படத்தின் பெயர் "விடுதலை". பின்னூட்டத்தில் ஒரு நண்பர் சரியாகச் சொல்லிவிட்டார். அதுக்குப் பிறகும் அடுத்த பார்ட் எழுதாவிட்டால் அப்புறம் இந்தப் பக்கமே வரமாட்டார்.

அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகு ரஜினி போல பக்கத்து வீட்டு நண்பனுடன் சண்டைப் போட ஆரம்பித்தான். துவக்கத்தில் ஏதோ விளையாடுகிறான் என்று அவனும் ஜாலியாகச் சிரித்து விளையாடினான். ஆனால் நம்ம தொடரின் ஹீரோ (ஹி..ஹி...ஹி..) செய்யும் இம்சையைத் தாங்க முடியவில்லை. அவன் நிசமாகவே அடிக்கிறான் என அந்தப் பையன் நினைத்தானோ என்னவோ தெரியவில்லை. நம்ம ஆளை நிஜமாலுமே போட்டு அடிக்க ஆரம்பித்து விட்டான்.

கடலை உருண்டை, கமர்கட்டு, வேர்க்கடல, கருவாடு, சுண்டகஞ்சி, வடுமாங்கா, பொரி உருண்டை, உருளைக் கிழங்கு, அவிச்ச முட்டை, ஆஃப் பாயில், ஆம்லெட், பட்டர் மசாலா, லெக் பீஸ், தந்தூரி, சிக்கன் டிக்கா என்று ரவுண்டு கட்டி உக்காந்து சாப்பிட்டாக் கூட ஏறாத உடம்ப வச்சுக்கிட்டு பொரி மூட்டை சைஸ்ல இருப்பவனை அடித்தால் வாங்கிக் கொண்டு தோத்தாங்குளி மாதிரி பேசாமல் போவதற்கு எவன் முன்னால வருவான். அவன் திருப்பி அடித்த ஒவ்வொரு அடியும்..."இப்படித்தான் ரஜினி அடிச்சா வலிக்கும் போலிருக்கிறது" என்று முணகும் அளவுக்கு இருந்தது. வேறு வழியே இல்லை. பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தான்.

இந்த பிரம்மாஸ்திரம், கதாயுதம், வில்லு, அம்பு என்ற சொற்பிரயோகம் எல்லாம் அவனுக்குத் தெரிய வந்தது வேறு கதை. சுருக்கமாக நாலு வரியில்...

ராமாயணம் என்ற ஒரு தொடர் அதே தூர்தர்ஷனில் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஓட்டுவார்கள். ஆனால் இந்தியில்....அட அதக் கூட விடமாட்டேன் என்று வழக்கம் போல பல்லை எடுத்து உதடுக்கு வெளியே போட்ட படி ஒரு ஓரமாக உட்கார்ந்து பார்ப்பான். அப்படிப் பார்த்த காரணத்தால் புராண கால வெப்பன்ஸ் எல்லாம் அவனுக்கு அத்துப்படியாக இருந்தது. பீமன் வைத்திருப்பது கதாயுதம், அர்ஜுனனிடம் வில்லு (இப்போ விஜயிடம் இருக்குது), நகுலன், சகாதேவன் குட்டி குட்டி வில்லு, ஆனா தருமன் மட்டும் சும்மா கைய வீசிக்குனு போவார்.

சமாளிக்க முடியாத நேரங்களில் அவனுடைய பல் தான் அவனுக்கு பிரம்மாஸ்திரம். அதைப் பயன்படுத்துவதும் சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு ஒரு டெக்னிக் உண்டு. முதலில் எதிரியிடம் நான் தோத்துட்டேன் என்ற பாவனை காட்டி ஒரு சில விநாடி ஒதுங்க வேண்டும். பிறகு அவன் அசந்த நொடியில் பாய்ந்து நம் வலது கையால் எதிரியின் கையின் மேல்புறத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்போது இடது கையால் எதிரி கையின் அடிப் புறத்தை பிடித்துக் கொண்டு பற்களால் சதைப் பகுதியில் நன்கு நறுநறுவென்று கடிக்க வேண்டும்.

அப்படிச் செய்யும் போது அவன் போடும் சத்தம் 500 மீட்டருக்கு மேல் கேட்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 501-வது மீட்டருக்குக் கேட்குமளவு கடித்தால் போச்சு. ரத்தம் குபுகுபுகுபுகுபு வென்று வெளியே வந்து ஜெயிலுக்குப் போக வைத்துவிடும்.

அப்படி விடுதலை படம் பார்த்துவிட்டு வந்து நண்பனைக் கடித்து வைத்த நம்ம ஹீரோ, அவனது அப்பாவின் கடும் தீர்ப்புக்கு ஆளாகி அரை நாள் வெயிலில் முட்டி போட்டு நிற்க வேண்டியதாகிவிட்டது. "விடுதலை' படம் பார்த்து ஜெயிலுக்குப் போகத் திரிஞ்சான்.

இப்படி எல்லாம் கொசுவத்திக்கு உள்ள கொசுவத்தியா சுழன்று கதை சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கு. அதை விடுங்க...

இந்த சம்பவத்துக்குப் பிறகு ரஜினியை அவனுக்கு ரொம்ப பிடித்துப்போய்விட்டது என்று நினைத்தால் அது தப்பு. ரஜினியை வெறுக்க ஆரம்பித்தான் என்று நீங்கள் நினைத்தால் அது ரொம்ப தப்பு. அவனுக்கு ரஜினியைப் பிடிக்க வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு காரணம் இருந்தது. அது.....

(தொடரும்)

Tuesday, October 6, 2009

தலைவர் இருக்கின்றார்- மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கப்பா !
ஒரு இணையத்தளத்தில் ஒரு கட்டுரை. அதை கொஞ்ச நாள் முன்பு வேறொரு இணைய தளத்தில் படித்தேன். படித்தவுடன் எழுந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை. ஏன் எதற்கு என்று விளக்கப் போவதில்லை.

இப்போதுதான் ஓரளவுக்கு மறந்து நிற்கிறோம். மீண்டும் வருவார்.. வந்து விட்டதைப் பிடிப்பார் என்ற ரீதியில் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையாகவே இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சி தான். ஆனால் இதுவரை கிடைத்த ஆதாரங்களை வைத்து உக்காந்து யோசிக்கும் போதும் மீண்டும் வர வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

அப்படியே வருவதாக இருந்தாலும் இவர்களின் அவசரத்துக்கு அவர் வரமாட்டார். இன்னும் 5 ஆண்டு காலம் ஆகலாம். காரணம் ஆட்சியில் இருப்பது நெ.10 ஜன்பத், புதுதில்லி. இதோ பார் இங்கதான் இருக்கிறேன் என்று அவர் தலையைக் காட்டிவிட்டால் மூன்று லட்சம் பேர் கதி அவ்வளவுதான் என்பதை ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறார்களோ தெரியவில்லை.

"எங்கட தமிழ் மக்களுக்கு ஒரு சிக்கல் உண்டு. யாராவது அவங்களுக்காக போராட வேணும்...அவரை தெய்வமெண்டு போற்றி பின்னால் நிற்க வேணும் என்பதே. அப்படியில்லாமல் எல்லாரும் சேர்ந்து போராட வேணும்' என்று அவர் கூறியபடி மேற்கொண்டு ஒருங்கிணைந்து போராடுவதே சிறந்தது.

அல்லது குறைந்தபட்சம் முள்வேலியில் இருப்போரை வெளியே கொண்டுவர ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகள், செயற்றிட்டங்களை வகுத்து எழுதினால் அவ்வாறு உதவ முன் வருவோருக்கு அது பயனுள்ளதாக இருக்கும். (ஆனா எப்படி சொன்னாலும் செய்தாலும் இரண்டாம் ஹிட்லர் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது வேறு விஷயம்).

//ராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27-ம் தேதி ‘வீரவணக்க’ தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலைவருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்!’ என்கிறார்கள் உறுதி குறையாமல்.//

இதைப் படித்தபோது மனதில் எழுந்த கேள்வி இதுதான்...
மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கப்பா...

இதைச் சொன்னால் நான் ஏதோ தமிழின விரோதி என்று கூறலாம். ஆனால் நானும் நின்றிருக்கிறேன் மனிதச் சங்கிலியில். பங்கெடுத்திருக்கிறேன் உண்ணாவிரதத்தில். எழுதியும் இருக்கிறேன் என் பதிவில்.

Monday, October 5, 2009

"இந்தி"யன் பார்வையில் தமிழன்- பாகம் 3இந்திக்காரர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் கற்பது பெரிய விஷயமா? அதே போல தமிழர்கள் வேறு பகுதிக்குச் சென்றால் அந்த மொழி கற்பது ஒன்றும் தவறல்ல என்று ஒரு பின்னூட்டம் வந்தது. நம்மை கட்டாயமாக இந்தி மொழியைக் கற்க வேண்டும் என்று திணிப்பதையே எதிர்க்கிறோம் என்றார். இந்த விவாதத்திற்குள் சென்று தமிழையும் விட்டுக் கொடுக்க முடியாமல் இந்தியையும் ஏற்க முடியாமல் பலமுறை ரெண்டுங்கெட்டான் மன நிலைக்கு சென்றிருக்கிறேன்.

என்னதான் இந்தியில் இருக்கிறது என்ற கேள்வி மனதில் சுழன்றது. ஒரு புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். தலை சுற்றல் வந்தது. தமிழில் 247 எழுத்துகள். இந்தியில் ஒவ்வொரு எழுத்துக்கும் 4 எழுத்துகள். தமிழில் ஒன்னுன்னா இந்தியில் நாலு. உச்சரிப்புக்கு ஏற்ப க, க, க, க. Ka, kha, ga, gha... ச, ச, ச, ச, sa, sha, cha, chcha... அட ங்கொக்கமக்கா.. இம்சை அரசன் வடிவேல் பாணியில் கககக என்று புலம்ப வேண்டியதாகிவிட்டது.

அன்று மாலை மேன்ஷன் மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். உண்மையில் அது பள்ளிக் கூடம் முடியும் நேரம். கல்லூரி பேருந்துகள் வந்து நிற்கும் நேரம். நாங்கள் இருப்பதோ சேவல் பண்ணை. சொல்லவா வேண்டும். எப்படிப்பட்ட ஃபிகர் வந்தாலும் கண்களால் கேட்கும் கேள்வி ஒன்றுதான். "வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?" அப்படி சில நண்பர்களுக்கு வெட்கத்தையும், சிலருக்கு அவர்கள் அப்பாவின் கோபத்தையும் கொடுத்துச் சென்ற ஃபிகர்கள் நிறையே பேர். இதில் நான் சிக்காதது அதிசயம்.

அப்போதுதான் அந்த ஊர்வலம் வந்தது. அத்தனை பேரும் பெண்கள். கண்கள் இரண்டும் பைனாகுலர் போல ஜூம் செய்து கொண்டது.

"இது என்னா ஊர்வலம் சார்?"- பக்கத்தில் ஜெகஜித் சிங். "அட, நீ எப்ப வந்தே?'. "நம்மாளு போவுது சார் அதப் பாக்கத்தான்" என்றான். தூரத்தில் ஒரு பள்ளி மாணவி திரும்பிப் பார்த்துப் போவதைப் பார்த்தேன். "அடிப் பாவி... சிவப்புத் தோலுக்கு மயங்கிட்டியேடி..."என்ற நினைத்துக் கொண்டேன். "மாரியம்மன் கோயிலுக்கு மாவிளக்கு கொண்டு போறாங்க...அதான் இந்த ஊர்வலம்" என்றேன். "அப்ப இவங்க எல்லாம் கிறிஸ்டியனா...' என்று கேட்டுவிட்டு என்னைப் பார்த்தான். எனக்கு தலையே சுற்றியது.

"மேரினா கிறிஸ்டியன் தானே சார்."
"அய்யோ...அது M-A-R-Y மேரி இல்ல...M-A-A-R-I மாரி......மாரியம்மன்.' "ஓஹோ...அப்ப இது என்ன சாமி சார்...."

"கிழிஞ்சுது... உனக்கு புரிய வைக்க கோயில் பூசாரியைத்தான் அழைக்க வேண்டும்" நான் என்ன புலம்புகிறேன் என்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"டேய் சிங்கு...உங்க ஊர்ல லட்சுமி, சரஸ்வதி, துர்கா, சாமுண்டி தேவி இப்படி எல்லாம் சாமிங்க இருக்குல்ல...அது மாதிரி தமிழ்நாட்டில முக்கியமான சாமி இதுதான். இது லட்சுமி, சரஸ்வதி மாதிரி நகரத்து கெட்டப் இல்ல...கிராமத்து கெட்டப்பு..." என்றேன்.

ஆரியம், திராவிடம் என்றெல்லாம் பாடம் எடுக்க நினைத்தேன். அந்த அளவுக்கு அவன் ஒர்த் இல்லை என்பதால் நிறுத்திக் கொண்டேன். அந்த ஊர்வலம் முடியும் வரை மேரி- மாரி என்று மாற்றி மாற்றிச் சொல்லி உயிரை எடுத்தான்.

பிறகு எப்படியோ புரிந்து கொண்டு நன்றி என்றான். கூடவே மற்றொரு வார்த்தையையும் கூறினான். எனக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

அதாவது, ஆரம்பத்தில் அவனுக்கு சில வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தேன். அதைப் புரிந்து கொண்டான். பின்னர் அவன் அறைக்குப் போகும்போது தன்யவாத் என்றான். "அதென்னடா வாத்து...' என்று கேட்டதற்கு, தாங்க்ஸ் என்பதற்கு இந்தியில் தன்யவாத் என்றான். "ஓஹோ..பரவாயில்லையே நமக்கும் ஒரு இந்தி வார்த்தை தெரிந்துவிட்டது" என்ற நினைப்பில் அவனுக்கு இன்னொரு தமிழ் வார்த்தை கற்றுக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

"டேய் சிங்கு...இந்தில தன்யவாத்..தமிழ்ல நன்றி...ந..ன்..றி அப்படின்னு சொல்லணும்...சரியா.."என்றேன். ந..ன்..றி....என்று திருப்பிச் சொன்னான். நான் அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.

"தாங்க்ஸ்னா நன்றி. பிக்னா பன்றி...ஒரு எழுத்துதான் வித்தியாசம்" என்றேன். "நன்றி...பன்றி...நன்றி...பன்றி" என்று சொல்லிப் பார்த்தான். பிறகு சிரி சிரி என்று சிரித்தான். "சரி சார் நான் வர்றேன்" என்று கொஞ்ச தூரம் போய்விட்டு திரும்பி நின்றான். "நன்றி பன்றி" என்று என்னைப் பார்த்து சத்தமாகச் சொல்லிவிட்டு நிற்காமல் ஓடினான்.

இது ஒரு முறையல்ல...பல முறை பார்த்த போதெல்லாம் நன்றி பன்றி என்று கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டான். அதன் பிறகு அவனை மிரட்டி, திட்டி, கோபப்பட்டு அப்படியெல்லாம் சொல்லக் கூடாது...தமிழ் அழகான, எளிதான மொழி...எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்...அதற்குத்தான் அப்படி ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன் என்று அறிவுரை சொன்ன பிறகே விட்டான்.

அதோடு அவனுக்கு வாத்தியார் வேலை பார்ப்பதையும் நிறுத்திக் கொண்டேன். இது நடந்து 6 மாதத்திற்குள் அவன் ஓரளவு நான் பேசுவதையெல்லாம் எளிதாகப் புரிந்து கொண்டான். அவனும் நன்றாக தமிழ் பேசத் துவங்கிவிட்டான்.

"நீங்க பாலக்காடு போயிருக்கீங்களா சார்" என்றான் ஒருநாள்.

"இல்லையே...ஏன்... எதுக்கு கேட்கிறே?"

இந்தக் கேள்விக்கு அவன் சொன்ன பதிலுக்கும், பிறகு அவனே கேட்ட கேள்விக்கும் என்ன சொல்வது என்று நான் சிறிது நேரம் யோசிக்க வேண்டியதாகிவிட்டது...அந்தக் கேள்வி இதுதான்....

(தொடரும்)

Sunday, October 4, 2009

உளியின் ஓசை- கலைஞரின் நமக்கு நாமே திட்டம்
முன் குறிப்பு: இது ஏதோ அரசியல் உள் நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு அல்ல.


கோயிலை இடித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக....

இந்த புகழ் பெற்ற வசனத்தை நான் பல முறை என் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சொல்லி இருக்கிறேன். இந்த வசனம் வந்த படம் வெளியான ஆண்டில் தான் என் அப்பாவே பிறந்துள்ளார். அப்படின்னா நான் இந்த வசனத்தை சன் டி.வியில் பார்த்துதான் ரசித்தேன் என்று நீங்கள் நம்பலாம்.

விடயம் இதுதான்...அப்போது வந்த வசனத்தை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பின்பு ஒரு சின்ன பையன் (நாந்தாங்க) மனப்பாடம் போல சொல்கிறான் . அந்த அளவுக்கு அந்த பேனாவில் வலு இருந்தது. தீப்பொறி பறந்தது. அரை நூற்றாண்டு கழித்தும் கூட ஒரு நவ யுக வாலிபனை கட்டிபோட்ட எழுத்துக்கு சொந்தக்காரர் அப்படியே இருந்திருந்தால் என்னைப் போல எத்தனையோ வாலிபர்கள் அவரது எவ்வளவோ வசனத்தை சொல்லி இருப்பார்கள்.

ஆனால் தமிழகத்தின் தலை எழுத்துக்கு அவர் மட்டும் விதி விலக்கா என்ன ?
அவரு திசை திரும்பினார். அரசியல் பரம பதத்தில் ஏறினார். உச்சம் சென்றார். பிறகு இறங்கினார். அப்புறம் ஏறினார். ஆனால் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர் அல்ல அவர். அதனால் அதில் ஒரு கை இதில் ஒரு கை வைத்து இருந்தார்.

தொடர்ந்து சினிமாவுக்கும் அரசியலுக்கும் வசனம் எழுதினர். மக்கள் அவரை கொண்டாடினார்கள். பிறகு அரசியல் வசனம் அதிக வெற்றியை கொடுக்கவே நிழல் உலகமான சினிமா வசனத்தை குறைத்துக் கொண்டார். இருந்தாலும் எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி உண்டு. "இரும்பு புடிச்சவன் கையும் பேனா புடிச்சவன் கையும் சும்மா இருக்காது"

அதனால் அப்பபோ வசனம் எழுதினார். கண்ணம்மா என்ற ஒரு படத்துக்கு வசனம் எழுதினார். அதில் ஒரு வசனம் உங்களுக்கு நினைவு உண்டா? எனக்கு இல்லை.

பராசக்தி படத்தை மட்டும் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன். அதுவும் அந்த கோர்ட் சீன்.

கொஞ்ச நாளுக்கு முன்னால் மீண்டு அவர் பேனாவில் இருந்து கிளம்பிய ஓசை ஒரு சிற்பியின் கையிலிருக்கும் உளியின் ஓசை போல ஒலித்தது. அது படமாகவும் வந்தது. சினிமா கொட்டாயை விட்டும் போனது. (ஏப்பா தம்பி, இந்தப் படம் எந்த கொட்டாயில ஓடுது என்று டீ கடையில் ஒரு பெரியவர் கேட்டது இன்னும் நினைவு இருக்கு)

உளியின் ஓசை என்ற அந்தப் படத்தில் பராசக்தியை விட காலம் கடந்து நிற்கும் வசனத்தை எழுதியதற்காக ஒரு விருது கொடுக்கலாம் என்று எவன் அவருக்கு யோசனை சொன்னான் என்று தெரியவில்லை.

அவரும் சிறந்த திரைப்படம் நடிகர், நடிகை, இசை அமைப்பாளர் என்று லிஸ்ட் படித்து ஓ.கே. செய்து விட்டு... நமக்கு எதுவும் இல்லையே என்று நினைத்தாரோ என்னவோ...அதனால் அவருக்கு ஒரு யோசனை வந்தது...யார் கொடுத்தால் என்ன...விருது விருதுதானே...என்று முடிவு செய்தார்.

இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற உரையாடல் பராசக்தி படத்தையே விஞ்சிய காரணத்தால் நமக்கு நாமே திட்டப்படி தனக்கு தானே விருதை அளித்துக் கொள்கிறேன் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டார் மனதுக்குள்.

அப்புறம் என்ன.... சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது உளியின் ஓசை படத்திற்க்காக அவருக்கு வழங்கப் படுகிறது....டிங் டிங் டிங் டிடடிங்.....

சின்னப் பையன் சந்தேகம்: எல்லாருக்கும் அவர்தான் விருது கொடுப்பார்...அவருக்கு யார் கொடுப்பாங்க....அப்படின்னா அந்த விழாவுல chief guest அவரா இல்ல வேற ஆளா? அப்படியே அந்தப் படத்தில் இருந்து ஒரே ஒரு வசனம் மட்டும் சொன்ல்லுங்க...

ஐயோ... நான் அடிச்ச தாங்கமாட்டே...நாலு மாசம் தூங்கமாட்டேன்னு யாரோ பாடறா மாதிரி இருக்கே....

விஜய் ஒரு சின்ன ரஜினி: சினிமாக் கொட்டாய் அனுபவம் - பார்ட் 1
முன்னொரு காலத்தில் ஒரு சிறுவன் முதல் முதலாக திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தான். அது பின்பொரு காலத்தில் சினிமா-அரசியல், அரசியல்-சினிமா என்று ரவுண்டு கட்டி அடிக்கப்போகும் ஒருவரின் படம் என்பது அப்போது அவனுக்குத் தெரியாது. யாருக்கும் தெரியாது. அவ்வளவு ஏன்...இதைப் படிக்கும் உங்களுக்கும் தெரிந்திருக்காது.

அப்போதெல்லாம் சினிமா பார்ப்பது என்றால் தூர்தர்ஷன் என்ற ஆதி பழங்காலத் தொலைக் காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் காட்டுவார்கள். அதைப் பார்க்க பல வீடுகளுக்கு ஓடிச் சென்று ஏதாவது ஒரு வீட்டின் ஒரு மூலையில் வீட்டுக்காரனின் கேவலமான பார்வைகளை சகித்துக் கொண்டு அத்தனை பல்லையும் காட்டிவிட்டுத்தான் பார்த்து தொலைக்க வேண்டும்.

அப்படிப்பட்ட நேரத்தில் "எங்கூட வாப்பா சினிமாவுக்குப் போலாம்' என்று அந்தச் சின்னப் பையனின் அப்பா அழைத்தார். அவனுக்குச் சொல்லவா வேண்டும். ஒரே குத்தாட்டம் போடாத குறைதான். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு இதெல்லாம் வருஷத்துக்கு ஒரு முறை வருவது போல அவன் அப்பா சினிமாவுக்கு அழைத்துப் போவதும் ஒரு பண்டிகை போலத்தான்.

ஞாயிற்றுக்கிழமை விடிந்து விட்டால், காலையிலிருந்து மாலை 4 மணி வரை வெகு நேரம் யோசித்து தலைவலி வந்து, பின்னர் யாசித்துக் கேட்டால்தான் டி.வி.யில் படம் பார்க்க அனுமதியே கிடைக்கும். அதுவும் படம் குறைந்தபட்சம் 1970களுக்கு முன்பு வந்ததாக இருக்க வேண்டும். 'படிக்கற வேலையெல்லாம் முடிஞ்சுதா' என்று அரைத் தூக்கத்தில் அவனது அப்பா கேட்பார். "முடிஞ்சுருச்சுங்ப்பா..' என்பான் வெகு அமைதியாக. அதாவது டி.வி.பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறேன் என்றும் தெரிந்துவிடக் கூடாது, அதே நேரம் டி.வி பார்க்க அனுப்பியே ஆக வேண்டும் என்ற பிடிவாதமும் இருக்கக் கூடாது. இப்படி அந்த வயதிலேயே நடிப்பின் சகல பரிமாணங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு பதில் சொல்வான். "சரிசரி... ஒழுங்கா போய் பாத்துட்டு சீக்கரமா வந்து சேரணும்' என்ற நிபந்தனை ஜாமீனில் வெளியே வருவான்.

வீட்டிலிருந்து சில மீட்டர் தூரம் வரை அமைதியாகவே வருவான். அப்புறம் எடுப்பான் பாருங்கள் ஒரு ஓட்டம்.....அட ங்கொக்கமக்கா... ஏதோ பத்து, பதினஞ்சு வெறிநாய் ஒன்றாய் சேர்ந்து துரத்துவதைப் போல உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு டி.வி. இருக்கும் வீட்டுக்கு ஓடுவான். வேகமாகப் போனால்தானே உட்கார இடம் கிடைக்கும். இல்லாவிட்டால் வேறுவீடு பார்க்க வேண்டுமே. இவ்வளவு தவமாய் தவமிருந்து ஓடிப்போய் பார்த்தால் டி.வி.யை ஸ்கிரீன் போட்டு மூடி வச்சுட்டு குடும்பமே சோபாவில் உட்கார்ந்து பல் குத்திக் கொண்டிருக்கும்.

"இன்னைக்கு மத்தியானமே படம் முடிஞ்சுருச்சேப்பா...' என்று சிரிப்பார்கள். அல்லது அமிதாப் பச்சனோ எவனோ ஒரு இந்திக்காரன் நடித்த படம் ஓடிக் கொண்டிருப்பதை வெகு சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் (புரியாமல்தான்!). இல்லாவிட்டால் பால், டிக்காசன், சர்க்கரை எல்லாம் போட்டு குடியரசுத் தலைவர் என்பவர் தனது உரையை ஆற்றிக் கொண்டிருப்பார்.

அல்லது இந்தியாவின் அத்தனை விவசாயிகளும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுத்தான் விதைப்பார்கள் என்ற நினைப்பில் அதைப் போட்டு கொத்திக் கொண்டிருப்பார்கள். "ஏக்கருக்கு நீங்க எவ்வளவு செலவு செஞ்சீங்க....எத்தனை நாளில் அறுவடைக்கு வரும்...பயிருக்கு வாய்க்காலா, கிணற்றுப்பாசனமா... இல்ல சொம்புல தண்ணி எடுத்துட்டுப் போயி ஒவ்வொரு பயிருக்கா ஊத்துவீங்களா' என்ற ரீதியில் கேள்வி கேட்பார்கள். இதைப்பார்த்துக் கொண்டிருந்தால் எந்த விவசாயியாவது சேற்றில் கால் வைக்க முடியுமா? போங்கடா நீங்களும் உங்க சினிமாவும் என்று வீட்டுக்கு வந்தால் அடுத்து இரவு 9 மணி வரையிலும் கடிகாரம் நகரவே நகராது.

அப்படிப் பட்ட நேரத்தில் தான் ஒரு நாள் படம் பார்க்கக் கூப்பிட்டார் அவனது அப்பா. அதுவும் தியேட்டருக்கு. என்னது? மல்டிபிளக்ஸ் தியேட்டரா...ஹலோ... ஹலோ...ரொம்ப கற்பனை பண்ணாதீங்க... அந்த ஊர்ல ஒரே ஒரு சினிமா கொட்டாய்தான்....படம் பார்க்க எவனும் வரவில்லை என்றால் இன்றே கடைசி அப்படின்னு போஸ்டர் ஒட்டுவார்கள். அதைப் பார்த்தாவது நாலு பேர் வரமாட்டானா என்ற ஏக்கம்தான் காரணம். இன்றே கடைசி போட்டு ஒருவாரம் ஓட்டிய பல படங்களைக் கூட அந்தக் கொட்டாய் பார்த்திருக்கிறது. அதில் தான் அன்றும் சினிமா பார்க்க போனார்கள்.

அந்தப் படத்தின் பெயர் இன்றும் அந்த சிறுவனுக்கு நினைவு உள்ளது. சைக்கிளின் முன்னே பார் கம்பியில் உட்கார்ந்து மணி அடித்துக் கொண்டே சென்றதும், தலையில் கொட்டு வாங்கியதும், போஸ்டரை வாயைப் பிளந்து கொண்டு பார்த்ததும், முறுக்கு, தட்டுவடை, விலை உயர்ந்த தேங்காய் பன் (75 பைசா) தின்றதும் இன்னும் அவன் நினைவை விட்டு அகலவில்லை.

அதே போல அந்தப் படத்தில் நடித்தவரின் முகமும்...அந்தப் பாடலும்...அந்த சண்டைக் காட்சியும்....இன்னும் நெஞ்சில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆடிக் கொண்டிருக்கிறது.

சரி...என்ன திரைப்படம்...யார் அந்த நடிகர்? (தொடரும்)

பின் குறிப்பு: அந்தச் சிறுவன் யார் என்பதை இந்நேரம் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் இந்த முழுப் பதிவையும் படித்தவர்கள் ஆவீர்கள்.

பின்- பின் குறிப்பு: அந்த நடிகர் அடிக்கடி தன் தலை முடிக்குள் விரலை விட்டு பின்னால் தள்ளிவிட்டுக் கொண்டார். என்னது... கண்டுபிடிச்சுட்டீங்களா?

பின்-பின்-பின் குறிப்பு: சரி இதைக் கண்டுபிடிங்க பார்ப்போம்...1980-க்குப் பின் 90-க்கு முன் திரைக்கு வந்தது. படத்தின் பெயர் பறந்து செல்வதைக் குறிப்பால் உணர்த்தும். எப்பூ.....டீ?

Friday, October 2, 2009

"இந்தி"யன் பார்வையில் தமிழன் - பார்ட் 2

அன்று ஞாயிற்றுக்கிழமை. என் நண்பர்கள் எல்லாரும் ஊருக்குச் சென்றிருந்தனர். நான் மட்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தபடி கட்டிலில் சாய்ந்து கிடந்தேன். சினிமாவுக்குப் போகலாம் என்றால் அதற்கும் வழியில்லாமல் இருந்தது.

ஐந்தாறு பேர் ஒரு குரூப்பாகக் கிளம்பி தியேட்டருக்குப் போனால் தான் படத்துக்கு போனது போல இருக்கும். அதுவும் பக்கத்தில் உட்காரும் அங்கிள், ஆன்ட்டி, அவங்க பொண்ணு என்று எல்லோரும் முகத்தை சுழிக்கும் அளவுக்கு சீரியஸ் சீனுக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரித்து கடுப்பேற்றினால் தான் படம் பார்த்த மாதிரியே இருக்கும். (அப்படி ஒரு நாள் 'தல' படத்துக்குப் போய் தியேட்டரையே சிரிக்க வைத்த அனுபவம் மற்றொரு பதிவில்) அதைவிட்டு விட்டு யாரும் இல்லாமல் தனியாகப் போய் எசகுபிசகாக மாட்டிக் கொண்டால் கிழிஞ்சிரும் என்ற யோஜனையில் தலையை சொறிந்து கொண்டு இருந்தேன்.

லேசாக கண்ணயரும் நேரம் பார்த்து ஒரு குரல் கேட்டது. உள்ளே இருந்தல்ல. அறைக்கு வெளியே இருந்து.

"சார் தண்ணீ இர்க்கா...?" மறுபடியும் அவனேதான். வந்துட்டான்யா ஜெகஜித் சிங்.
அதற்கு முன், நான் கேள்வி கேட்ட பிறகு அவன் திருப்பிக் கேட்டதைக் கூறிவிடுகிறேன். அவன் கேட்டது எனக்கு நன்றாகவே புரிந்தது. கூடவே அதில் ஒரு மெசேஜும் இருந்தது.

தன் பேரைச் சொல்லி முடித்த ஜெகஜித் சிங் என்னிடம் கேட்டது இதுதான்.

"உங்க பேரு என்ன சார்? இதே ஊரு தானா நீங்க?" அழகுத் தமிழில் கேட்டான்.

அந்தக் கேள்வியில், "நீங்க வேணா இந்தியை வெறுக்கலாம்...நாங்க அப்படியில்ல" என்ற தொனி தெரிந்தது. அவனிடம் "வாட்ஸ் யுவர் நேம்" என்று கேட்டதற்கு வெட்கமாகவும் இருந்தது. வேறு வழியின்றி "பேரு ரகு... ஊரு வேற" என்று சிரித்து வைத்தேன்.

அதற்குப் பிறகு நாங்கள் அடிக்கடி சிரித்துக் கொண்டோம். சாப்பிட்டாச்சா என்று கேட்பது முதல் இந்தி சினிமா எந்தத் தியேட்டரில் ஓடும் என்பது வரை தமிழிலேயே கஷ்டப்பட்டு கேள்வி கேட்க ஆரம்பித்தான்.

"நான் டிகிரி பாதி படிச்சிருக்கேன் சார். எங்க ஊருப் பக்கம் (கங்கா நகர் மாவட்டம்) எங்களுக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு..." என்றான் ஒருநாள். "டேய்...உண்மையச் சொல்லு...ஏகப்பட்ட சொத்தா இல்ல ஏகப்பட்ட சொக்காவா" என்று நான் கேட்டது அவனுக்குப் புரியவில்லை. "வீட்டில் சண்டை அதனால தில்லி போய் அப்படியே பெங்களூர் வந்து சென்னையில் கொஞ்ச நாள் இருந்து இப்போ கோய்ம்பேத்தூர் வந்துட்டேன் சார்..." அவன் முழு வரலாற்றையும் 3 வரியில் அறிந்து கொண்டேன்.

ஏதோ ராஜ்புத்தோ எதுவோ சரியாக நினைவில்லை...ஆனால் மேல் சாதியைச் சேர்ந்தவன் என்று கூறிக் கொண்டான். அதனால் முட்டை கூட சாப்பிடமாட்டேன் என்றான். "டேய் நிஜமாவா......பான் பராக் போடற... முட்டை சாப்பிட மாட்டயா" என்று சுரண்டினேன். ஒத்துக் கொண்டான். "வீட்லதான் சாப்பிடமாட்டேன் சார்...வெளியே அதெல்லாம் நை சாப்" என்று எல்லா பல்லையும் காட்டினான்.

அவனை எனக்கு ஏனோ பிடித்துவிட்டது. அதற்கு அவன் தமிழார்வமும் காரணம். என்ன சொன்னாலும் அதில் தெரியாத தமிழ் சொல்லுக்கு பொருள் கேட்பான்.

ஒரு முறை வேண்டுமென்றே தாங்க்ஸ் என்பதற்கு பதிலாக நன்றி என்றேன். "அப்படின்னா தாங்க்ஸ்தானே" என்று கேட்டு புரிந்து கொண்டான். நம்ம புத்தி கொஞ்சம் கிறுக்குப் புத்திதானே...கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுக்கலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் உள்ளிருக்கும் தமிழன் சாதாரணமான ஆளா என்ன? "எப்படியாவது இவனைத் தமிழ் படிக்க வைத்து ஒரு ராஜஸ்தானி தமிழனாக்கிவிடு. தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை" என்று மண்டையில் பல்பு எரிந்தது.

ஒட்டு மொத்த இந்தி எதிர்ப்பாளர்களின் பிரதிநிதியாக என்னை நானே அப்பாய்ண்ட் பண்ணிக்கிட்டது அன்றைக்குத் தான்.

அவனும் அதற்கு தயாராகத்தான் இருந்தான். சிலேட், பென்சிலை ஒருகையிலும், அரைக்கால் டவுசரை மறு கையிலும் வைத்துக் கொண்டு ஓடி வரும் அளவுக்கு இல்லாவிட்டாலும், உங்க மொழியை நான் தெரிந்து கொள்ள தயார் என்ற அளவுக்கு ஆர்வத்தை காட்டினான்.

ஆனால் ஒரே ஒரு நாள் வகுப்புடன் அவனுக்கு தமிழ் கற்றுத் தரும் ஆசை அடியோடு நாசமா போச்சு. அதுக்கு நான் விளையாட்டாய் சொல்லிக் கொடுத்த ஒரு வார்த்தை தான் காரணம். எதுக்குடா இவனுக்கு அதை சொன்னோம் என்ற அளவுக்கு எதற்கெடுத்தாலும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதம் போல சொல்ல ஆரம்பித்துவிட்டான். அது......

(தொடரும்)

Thursday, October 1, 2009

"இந்தி"யன் பார்வையில் தமிழன் - 1

வலையுலகில் ஒரு விவாதம் பல நாட்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வேண்டும் என்று சொல்வோர் ஒருபுறமும் வேண்டாம் என்போர் மறுபுறமும் நின்று கொண்டு வாதம் எதிர்வாதம் புரிகின்றனர். எப்பக்கமும் வெற்றி இல்லாமல் விவாதம் முடிவுக்கு வருகிறது. அல்லது அதை மறந்துவிட்டு அடுத்த வேலைக்குச் சென்று விடுகின்றனர்.

அந்த விவாதம் வேறொன்றுமல்ல...இந்தி வேண்டுமா வேண்டாமா? அல்லது இந்தித் திணிப்பு சரியா? கால ஓட்டத்தில் மாற வேண்டாமா? என்பதுதான்.

இந்தியை எதிர்த்து ஆட்சியைப் பிடித்தவர்களின் வழித் தோன்றல்கள் (வாரிசு?) இந்தி படிக்கவில்லையா, ஆட்சிக் கட்டிலில் ஏறுவதில்லையா என்ற சான்றாதாரங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் இல்லை. நாம் மட்டும் எதற்குப் படிக்காமல் எதிர்க்க வேண்டும்? இங்கேயே வாழ்க்கையை ஓட்டினால் பரவாயில்லை. எந்த மொழியும் தேவை இல்லை. ஆனால் தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றால் உறுதியாக இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பது இந்தியை ஆதரிப்போரின் கூற்று.

நான் எதைப் படிக்க வேண்டும் என்பதை நீ முடிவு செய்யாதே. என் மொழியின் வளம் எனக்குப் போதுமானது. இதிலேயே எல்லாமும் செய்ய முடியும். உன் மொழியைத் திணிப்பதோ அதன் மூலம் என் மொழியைச் சிதைப்பதையோ நான் ஏற்க மாட்டேன் என்பதாக உள்ளது இந்தியை எதிர்ப்போரின் கூற்று.

மொழி ஒரு தொடர்பு கொள்ளும் கருவி. எந்தக் கருவியாக இருந்தாலும் அதைப் புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டியதுதானே. இதில் எதற்கு மொழிப்பற்று என்பது ஆதரிப்போர் வாதம்.

மொழி என்பது தொடர்பு கொள்ளும் கருவி மட்டும்தானா? அதில் எண்ணற்ற பண்பாட்டு, விழுமியக் கூறுகள் உள்ளனவே. மொழி என்பது ஒரு இனத்தின் வரலாறு பொதிந்த கல்வெட்டு போன்றது. ஒரு இனத்தை அழிக்க அம்மொழியை அழித்தாலே போதுமானது. வெறும் தொடர்பு கொள்ளும் கருவி மட்டும்தான் என்றால் அவ்வாறு மொழியழிந்த இனம் வேறு கருவியை நாடிச் சென்று தப்பிக்கலாமே. வரலாற்றில் அவ்வாறு ஏதேனும் தகவல் உள்ளதா? - இது எதிர்ப்போர் குரல்.

இந்தப் பதிவு இந்தி பேசும் வடமாநில இளைஞனுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவப் பதிவை பகிர்ந்து கொள்ளும் ஆவல் அவ்வளவே.

முதலில், தமிழ்நாட்டில் மாட்டிக் கொண்டு விழித்த ராஜஸ்தான் மைந்தனின் கதை.

நான் தங்கியிருக்கும் மேன்ஷனில் ஒரு சரக்கு அனுப்பும் லாரி நிறுவனம் இயங்கி வருகிறது. இது ஒரு அகில இந்திய நிறுவனம். இதன் மேலாளர் பிகாரைச் சேர்ந்தவர். இதில் வேலை செய்யும் பெண் அலுவலர் இந்தி தெரிந்த தமிழச்சி. இதில் மூன்றாவதாக அந்த இளைஞன் வந்து சேர்ந்தான். பார்ப்பதற்கு குள்ளமாக, வழக்கமான சிவப்புத் தோல், கலர் டி-சர்ட் போட்டு, பான்பராக் மென்று கொண்டு கொஞ்சம் டோன்ட் கேர் பாலிஸிக்காரன் போலத் திரிவான். என்னைப் பார்க்கும் போதெல்லாம் முறைப்பது போலவே கடந்து செல்வான்.

நமக்குச் சொல்லவா வேண்டும்? ங்கொய்யால எங்கேயோ இருந்து இங்க வந்து என்னையே முறைக்கிறயா என்பது போல நானும் முறைப்பேன். ஓரிருமுறை மாடிப்படியில் ஏறும்போது தண்ணீ இர்க்கா சார்...என்று இந்திக்காரனுக்கே உரிய உச்சரிப்புடன் அவன் கேட்டிருக்கிறான். ஒரு சின்னத் தலையசைப்புடன் அவன் நட்புக் கரத்தையும் விலக்கினேன். கிட்டத்தட்ட அடித்துவிடும் அளவுக்கு அவனுடன் முறைப்பு ஏற்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று இப்போதும் நான் நினைப்பது உண்டு. சில வேளைகளில் அவன் சாதாரணமாகச் சென்றால் கூட நான் முறைத்துப் பார்ப்பேன். அவன் இந்தி பேசுகிறவன் என்ற எண்ணமா அல்லது நம்மை மதராஸி என அங்கே கேவலமாகப் பார்ப்பார்கள் என்று நண்பர்கள் கூறக் கேட்டிருந்ததால் ஏற்பட்ட கோபமா எதுவெனச் சொல்லத் தெரியவில்லை.

ஆனால் எப்படியோ ஒரு நாள் அவனிடம் சிரித்துவிட்டேன். அன்று தெற்கும் வடக்கும் சேர்ந்து திசை தெரியாமல் போனது. திசைகளின் நடுவே நான் நின்றிருந்தேன். எல்லாப் பக்கமும் ஒன்று போலத்தான் என்பதாக உணர்ந்தேன் என்றெல்லாம் கதை விடமாட்டேன். எதிரியாக நான் நினைப்பவன் சும்மா சிரித்து, எப்படி இருக்கிறீங்க என்று கேட்டுவிட்டால் எல்லாவற்றையும் மறந்து சிரித்துவிடும் குணம் என்னுடையது...(ரொம்ப நல்லவன்னு சொல்வாங்க). அன்றைக்கும் அதுதான் நடந்தது.

தண்ணீ இர்க்கா சார்...என்று சிரித்தபடியே வந்தான். நான் கொஞ்சம் விறைப்புடனே இல்லை என்று சொல்லிவிட்டு கேட்டேன். "வாட்ஸ் யுவர் நேம்?"
"ஜெகஜித் சிங்" என்றான். நான் அவன் தலையைப் பார்த்தேன். டர்பன் இல்லை. என் பார்வையைப் புரிந்து கொண்டான் போலிருந்தது. சிரித்தான்.

ஆனால் அவனும் திருப்பிக் கேட்டதுதான் எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் அடுத்த நொடியே என் உதட்டைத் தாண்டி வந்து விழுந்தது ஒரு பெரும் சிரிப்பொலி...அப்போதுதான் தெரிந்தது ஆண்களுக்கும் வெட்கம் வரும் என்பது. அவன் கேட்டது இது தான்...

(தொடரும்)