Saturday, December 31, 2011

ஆன்டன் செகாவ் 'பந்தயம்'- 2

ஆன்டன் செகாவ் பந்தயம் சிறுகதை தொடர்ச்சி...தோட்டத்தில் கும்மிருட்டும் குளிரும் ஒரு சேர இருந்தது. தோட்டத்தை நோக்கி ஊளையுடன்  வந்த காற்று மரங்களை ஓய்வு எடுக்க விடாமல் அசைத்துக் கொண்டிருந்தது. கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தபோதும் தோட்டத்தில் இருந்த வெள்ளை நிற சிலையோ, மரங்களோ, விடுதியோ, சிறை வாசியின் இருப்பிடமோ கண்களுக்குப் புலப்படவில்லை வங்கி அதிபருக்கு. அந்தக்கட்டடத்தின் அருகே சென்று இருமுறை குரல் எழுப்பியும் காவலாளி எந்த பதிலும் அளிக்கவில்லை. அடிக்கும் குளிரில் இந்தக் கட்டடத்தின் சமையலறையிலோ அல்லது  ஏதோவொரு மூலையிலோ காவலாளி உறங்கிக் கொண்டிருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டார்.

'எனது திட்டத்தை  செயல்படுத்தினால் முதலில் காவலாளி மீதுதான் சந்தேகம் எழும்'  என்று நினைத்துக் கொண்டார் அந்த வயோதிகர்.

அந்த இருளில் தட்டுத் தடுமாறி தனிமை சிறை உள்ள விடுதியின் மாடிப் படிகளை கண்டு கொண்டார். உள்ளே சென்று ஒரு தீக்குச்சியை உரசினார். அங்கே ஆளரவமற்று இருந்தது. அந்த இளைஞர் உள்ள அறை கதவு பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீல் எந்த சேதமும் அடையாமல் அப்படியே இருந்தது.

தீக்குச்சி அணைந்ததும் நடுக்கத்துடன் அந்த அறையின் சாளரத்தின் வழியே அவர் எட்டிப் பார்த்தார். உள்ளே ஒரு சிறிய மெழுகுவர்த்தி மெலிதாக எரிந்து கொண்டிருந்தது. சாளரத்தை கை விரலால் தட்டினார். இளைஞரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அசைவுமில்லை. கதவின் பூட்டிலிருந்த சீலை கவனமாக உடைத்து அதில் சாவியை நுழைத்தார். துரு ஏறியிருந்த பூட்டு கிறீச்சிட்டபடி திறந்தது. கதவை திறந்தபோது அந்த விடுதியில் சத்தம் எழுப்பியது. கதவை திறந்தால்  பெரும் சத்தம் அந்த இளைஞரிடமிருந்து எழும்பும் என்று நினைத்த வங்கியருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எப்போதும் போல் அந்த அறை மௌனமாக இருந்தது. கதவு திறந்து மூன்று நிமிடங்கள் ஆகியும் எந்த சத்தமும் இல்லாததால் தைரியத்தை வரவழைத்தபடி உள்ளே சென்றார்.
அங்கிருந்த  மேசையின் மீது தலை வைத்து உட்கார்ந்திருந்த அந்த இளைஞர் உடல் எலும்பை சுற்றி வைத்த போர்வை போலிருந்தது. நீண்ட முடியுடன் தாடியுடனும்  வெளிறிய முகத்துடனும் காணப்பட்டார். கன்னங்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக, நைந்து கிடந்த அந்த இளைஞரை பார்க்க பயங்கரமாக இருந்தது. வெளுத்த தலை முடியையும், குலைந்த உடலையும் பார்ப்பவர்கள் அந்த இளைஞருக்கு நாற்பது வயதுதான் ஆகிறது என்பதை நம்ப மாட்டார்கள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அந்த இளைஞர் தலை கவிழ்ந்து படுத்திருந்த மேசையில் அழகிய கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடந்தது. 

'பாவப்பட்ட ஜென்மம்' என்று நினைத்தார் வங்கியர். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் இந்த நைந்து போன இளைஞர் நாளை கிடைக்கும் மில்லியன் ரூபிள்கள் பற்றிய கனவில் இருப்பார். பாதி இறந்த இந்த பிணத்தை தூக்கி கட்டிலில் கிடத்தி ஒரு தலையணையால் அமுக்கி கொன்றால் யாருக்குத்  தெரியப் போகிறது. சிறந்த மருத்துவ நிபுணரால் கூட இந்தக் கொலையை கண்டறிய முடியாது. அதற்கு முன் அந்த கடிதத்தில் என்னதான் அவன் எழுதியிருக்கிறான் என்று பார்ப்போமே என்று எண்ணி அதை எடுத்தார் வயோதிகர்.
கடிதத்தில் அந்த இளைஞர் எழுதியிருந்ததை வாசித்தார் வங்கியாளர்.

'நாளை 12 மணிக்கு நான் எனது சுதந்திரத்தை மீட்டு விடுவேன். அதோடு பிற மனிதர்களுடன் மீண்டும் இணையும் வாய்ப்பையும் பெற்று விடுவேன். ஆனால் இந்த அறையை விட்டுச் சென்று சூரிய ஒளியை பார்க்கும் முன் உங்களுக்கு சில வார்த்தைகள் கூற நினைக்கிறேன். நான் இந்த சுதந்திரத்தையும், வாழ்வையும், வளத்தையும் மற்றும் நீங்கள் அளித்த புத்தகங்கள் கூறும் அனைத்து உலகியல் நலங்களையும் தூக்கி எறிய முடிவு செய்து விட்டேன். என்னை காத்து ரட்சிக்கும் கடவுளிடம் கூறுவது போல்  தெளிவான மனசாட்சியுடன் இதை நான் சொல்கிறேன்.

'கடந்த 15 ஆண்டுகளாக உலக வாழ்வை நான் வெகு ஆர்வத்துடன் படித்தேன். மனிதர்களையோ இந்த பூமியையோ நான் பார்த்திருக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால், நீங்கள் கொடுத்த புத்தகங்களின் மூலம் நான் வாழ்வை அனுபவித்தேன். மிகச் சிறந்த நறுமணமிக்க ஒயினை சுவைத்தேன், பாட்டுப் பாடினேன், காட்டுப் பன்றியையும், கலை மான்களையும்  வேட்டையாடினேன்,  பெண்களை காதலித்தேன். நுண்மையான அழகுடைய மேகங்களையும் உங்கள் கவிஞர்கள் புனைந்த அற்புதமான கவிதைகளையும் ரசித்தேன். இரவு நேரங்களில் தேவதைகள் காதுகளில் வந்து தமது அற்புதமான கதைகளை எனக்குக் கூறினர்.'

'உங்கள் நூல்களில் இருந்த எல்புரூஸ் மற்றும் மான்ட் பிளாங்க் மலை உச்சிகளின் மீதேறி சூரியோதையத்தையும் கடலில் இறங்கும் சூரியனின் அஸ்தமனத்தையும் அந்தி வானச் சிவப்பையும் ரசித்திருக்கிறேன். என் தலைக்கு மேலே மின்னிச் செல்லும் மின்னலையும் இடிஇடிக்கும் மேகங்களையும் கண்டேன். வனங்களும், வயல்களும், ஆறு ஏரிகளும் கடல்களும், நகரங்களும் என் மனதை நிறைத்தன. உங்கள் நூல்களின் வழியே அற்புதங்களை நிகழ்த்தினேன். புதிய மதங்களை பரப்பினேன். பேரரசுகளை வென்றெடுத்தேன்.'

'உங்கள் நூல்கள் எனக்கு ஞானத்தைக் கொடுத்தன.  மனிதனின் ஓய்வில்லாத சிந்தனையால் விளைந்த  அறிவு அனைத்தும் எனது மூளையில் ஒரு சிறிய திசை காட்டும் கருவி போல் சுருக்கி பதிய வைக்கப்பட்டுள்ளது. உங்கள் எல்லோரையும் விட நான் ஞானமுள்ளவன் என்பதை நானிறிவேன்.'

'உங்கள் நூல்களையும், ஞானத்தையும்,  உலகத்தின் ஆசியையும் நான் வெறுக்கிறேன். இவை எல்லாம் பயனற்றவை. மாயை. கானல் நீர் போன்றவை. நீங்கள்  பெருமையடையலாம். அறிவு உடையவர்களாக இருக்கலாம். நன்றாக வாழலாம். ஆனால் மரணம் உங்கள் அனைவரையும் இந்தப் பூமிப் பந்தின் மேலிருந்து துடைத்துச்  சென்றுவிடும். உங்கள் வழித் தோன்றல்கள், வரலாறுகள், மாபெரும் புத்திக் கூர்மை அனைத்தும் இந்த பூமியோடு அழிந்துவிடும்.'

'உங்கள் பகுத்தறிவை இழந்து தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உண்மைக்குப் பதில் பொய்யையும், அழகுக்குப் பதில் அறுவெறுப்பையும் எடுத்துக் கொண்டீர்கள். ஆப்பிள், ஆரஞ்சு மரங்களில் ஏதேனும் திடீர் மாற்றத்தால் பல்லிகளும், தவளைகளும் காய்த்தால் அதை நீங்கள் மலைப்புடன் பார்ப்பீர்கள். ரோஜாவின் நறுமணத்துக்குப் பதில் குதிரையின் வியர்வை நாற்றத்தை ரசிப்பீர்கள். ஆனால் சொர்க்கத்திற்கு பதில் நரகத்தை விரும்பும் உங்களை பார்த்து நான் மலைத்துப் போகிறேன். உங்களை புரிந்து கொள்ள நான் விரும்பவில்லை.'

'இதை உங்களுக்கு நான் நிரூபிக்கும் விதமாக ஒரு காலத்தில் நான் சொர்க்கமாய் கனவு கண்ட மில்லியன் ரூபிள்களை துச்சமாக மதித்து அதை துறக்கிறேன்.  அந்தப் பணத்தை வெறுக்கிறேன். அதை இழக்கும் விதமாக பந்தயம் முடியும் ஐந்து மணி  நேரத்துக்கு முன்பாகவே நான்  வெளியேறுகிறேன்.....ஆம்....ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு செல்கிறேன்....'

இதை படித்த வங்கி அதிபர் அந்தக் கடிதத்தை வைத்துவிட்டு அந்த இளைஞரின் தலையை தடவி முத்தமிட்டு சத்தமில்லாமல் விசும்பியபடியே வெளியேறினார். வாழ்வின் எத் தருணத்திலும் பங்குச் சந்தையில் பெரும் இழப்பை சந்தித்த போது கூட அவர் மனம் இத்தகு அவமானத்தை  அடைந்ததில்லை. வீட்டுக்கு வந்ததும் படுக்கையில் விழுந்தார். அவர் மனமும் கண்களும் வெகு நேரம் அழுது கொண்டே இருந்தன.

மறுநாள் காலை அந்த விடுதியின் காவலாளி ஓடோடி வந்து அவரிடம், அந்த இளைஞர் சன்னல் வழியே எட்டிக் குதித்து தோட்டத்திற்கு வந்து, அங்கிருந்த கதவு வழியே வெளியே ஓடிவிட்டார் என்று கூறினார். உடனே அங்கு கிளம்பிச் சென்று அந்த இளைஞர் சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்டார்.

மற்றவர்களுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்று நினைத்த அவர், அங்கிருந்த மேசையின் மேல் கிடந்த, மில்லியன் ரூபிள்களை இழப்பதாக அந்த இளைஞர் எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்து வந்து, தனது வீட்டின்  பெட்டியில் வைத்துப் பூட்டினார்.

The Bet என்ற இக் கதையின் ஆங்கில வடிவம் இங்கே.