Tuesday, February 15, 2011

விக்கிலீக்ஸ்: ஜனநாயகத்தின் ஐந்தாவது தூண்


வரலாற்றின் பக்கங்களில் பல்வேறு தடைகளைக் கடந்து பல நாட்டு மக்களின் வாழ்வை சோதனைக் களமாக்கி உருவாகி வந்த அரிய அரசியல் தத்துவம் மக்களாட்சி எனும் ஜனநாயகம்.

மக்களாட்சியின் மாண்பை சீரழிக்கும் அரசியல்வாதிகளும், பாசிசம், நாசிசம் போன்ற சித்தாந்தங்களும் உருவான போதெல்லாம் சிலிர்தெழுந்த தலைவர்கள், சிந்தனையாளர்கள் அவற்றைத் தகர்த்து எறிந்துள்ளனர். குறைந்தபட்சம் அதற்கு எதிர்ப்பாவது தெரிவித்து வந்துள்ளனர்.

அரசனை கடவுளுக்கு இணையாக வைத்திருந்த மன்னராட்சிக் காலத்திலும் கூட அவனுக்கு எதிராக்க் கருத்துக் கூறியவர்களையும், இடித்துரைத்தவர்களையும் வரலாற்றிலும், தமிழ் இலக்கியங்களிலும் காண முடிகிறது.

சட்டத்தை இயற்றுதல், அதை நடைமுறைப்படுத்துதல், நீதி பரிபாலனம் ஆகிய மூன்றும் மக்களாட்சியில் மட்டுமல்ல முடியாட்சியிலும் இருந்தன. ஆனால் சட்டமியற்றுதல் மன்னராட்சியில் ஒரு சிலரிடம் மட்டும இருந்த்து. ஆனால் மக்களாட்சியில் அது மக்களிடம் அதாவது மக்கள் பிரதிநிதிகளிடம் வந்து சேர்ந்த்து. மக்களாட்சி என்றபோதும் இடிப்பாரை இல்லா ஏமரா மன்ன்ன் போல மக்களாட்சி த்த்துவமும் சிதறுண்டு போய் விடக் கூடாது என்னும் நோக்கில் இயல்பாகவே தோன்றியது பத்திரிகைத் துறை.

மக்களாட்சி எனும் மாபெரும் கட்ட்டத்துக்கு சட்டமியற்றும் துறை, நீதித் துறை, செயலாட்சித் துறை  ஆகியவை மூன்று தூண்கள் ஆகும். ஆனால் அந்தக் கட்ட்டத்தை காக்கும் பொறுப்பில் உள்ள ஏதாவது ஒரு தூண் தவறு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் பொறுப்பை வகிப்பது பத்திரிகைகளே. அதனால் தான் அது ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படுகிறது.

அச்சு ஊடகங்கள் மட்டுமின்றி மின்னணு ஊடகங்களும் ஜனநாயகத்தைக் காப்பதில் மிகப் பெரும் பங்காற்றுகின்றன. அதிலும் இணைய ஊடகங்கள் வந்த பின், செய்திகளும், கருத்துகளும், தகவல்களும் மின்னலடிக்கும் நேரத்தில் உலகில் வலம் வருகின்றன.

ஏறக்குறைய அனைத்துப் பத்திரிகைகளுக்கும் இப்போது இணையப் பதிப்புகள் உள்ளன. இதனால் அச்சில் ஏற்றுவதற்கு முன்னரே அதை இணையத்தில் சுருக்கமாக பதிப்பித்து செய்திகளை முந்தித் தரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் அந்தப் பத்திரிகைகளின் கொள்கை, கோட்பாட்டிற்கு ஏற்பவே அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் வெளிப்படையான நல்லாட்சிக்குத் துணை நிற்கும் வகையிலும், மக்களாட்சி மாண்பினை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் ஒரு ஊடகம் இணையத்தில் ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள அரசுகளின் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவதிலும், அரசுகளின் தவறுகள், குற்றங்களையும் ஆதாரங்களுடன் துணிவோடு வெளியிட்டு மக்களாட்சியின்  ஐந்தாவது தூணாக விளங்குகிறது விக்கிலீக்ஸ் இணையதளம்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தைவான், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணதவியலாளர்கள் ஆகியோரால் 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது விக்கிலீக்ஸ் (http://wikileaks.org). இணையதளக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவுக்கும் இதற்கும் எந்த்த் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கப் படைகளால் இராக்கில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ, ஆப்கன் போர்க் குறிப்புகள் அடங்கிய 76,900 ஆவணங்கள் ஆகியவற்றை வெளியிட்டு அமெரிக்காவின் முகத்திரையைக் கிழித்துள்ளது விக்கிலீக்ஸ்.மேலும், கென்யாவில் போலீஸார் செய்த சட்டவிரோதமான படுகொலைகள், ஐஸ்லாந்து வங்கித் துறை சீர்குலைவு, குவாண்டநாமோ சிறைக் குறிப்புகள், பெரு நாட்டில் நடந்த எண்ணெய் ஊழல்,  ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் கொட்டப்படும் அபாயகரமான நச்சுக் கழிவுகள் பற்றிய ஆவணங்கள் உள்பட இது வரை 12 லட்சம் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

உலகில் வலுவான எதிரியின்றி செயல்படும் அமெரிக்காவையே அஞ்ச வைக்கும் அமைப்பாக விக்கி லீக்ஸ் இணையதளம் உருவாகியுள்ளது.

ரகசியம் காத்தல் எனும் பெயரில் ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களில் உலகெங்கும் உள்ள அரசுகள் ஈடுபடும்போது பத்திரிகைகளால் ஓரளவுக்கே அதைத் தட்டிக் கேட்க முடிகிறது. அதே நேரம் குற்றச்சாட்டுகளை எளிதாக அரசுகள் மறுப்பதற்கு சரியான ஆதாரமின்மையைக் காரணம் காட்ட முடிகிறது. ஆனால் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்படும் ஆவணங்கள், ஆதாரங்கள் அனைத்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் யாரோ ஒரு சில நல்ல உள்ளங்களால் வெளிப்படுத்தப்படும் ரகசியங்களே ஆகும். இவ்வாறு ஆவணங்களை வெளியிடுவோரை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியே தெரிவிப்பதில்லை. அதே நேரம் அந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மையை பரிசோதித்த பிறகே அவற்றை வெளியிடுகின்றனர். அதனால்தான் உலகின் வல்லரசே அடுத்து என்ன குண்டைத் தூக்கிப் போடுவார்களோ என அந்த இணையதளத்தைக் கண்டு அஞ்சுகிறது.

அதன் வெளிப்பாடே இந்திய அமெரிக்க உறவுகள் பற்றிய ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிடக் கூடும் என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையாகும். அதே நேரம் அவ்வாறு வெளியிட்டால் அதனால் விக்கிலீக்ஸுக்கு ஏற்படும் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்ற அமெரிக்காவின் பகிரங்க எச்சரிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ஆப்கன் போர்க் குறிப்புகளை வெளியிட்ட பின்னர் விக்கிலீக்ஸ் இணையத்தின் தலைவரும் ஆஸ்திரேலியப் பத்திரிகையாளருமான ஜூலியன் அசேன்ஜ் மீது பாலியல் புகார் முதற்கொண்டு பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. அதே போல் ஐஸ்லாந்து, ல்க்ஸம்பர்க் போன்ற நாடுகளில் விக்கிலீக்ஸ் இணைய உறுப்பினர்களுக்கு அரசிடம் இருந்து பல்வேறு தொல்லைகள் வந்தன.

அரசு செய்யும் தவறுகள் அனைத்தையும் ராஜதந்திரம் என்ற பெயரில் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், அதைப் பற்றி கேட்க்க் கூடாது எனக் கூறுவது எந்த வகையில் நியாயம்?.  ஒருவரைக் கொன்றால் கொலை, ஒரு சிலரைக் கொன்றால் கலவரம், பல நூறு பேரைக் கொன்றால் போர் என்று பெயரை மாற்றலாம். ஆனால் கொலை கொலைதானே?.  

தேச நலன் என்ற பெயரில் தனது நாட்டு மக்களுக்கு எதிரான செயல்களிலேயே ஓர் அரசு ஈடுபடும்போது அதை எதிர்க்க முடியாமல் மக்கள் திணறுகையில் அதை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடிய ஓர் அமைப்பு உருவாகியிருப்பது அரசாங்களுக்கு கிலி ஏற்படுத்தும் விஷயம் தான். கண்ணுக்குத் தெரியாத எதிரியாக ஓர் உண்மைவிளம்பி உருவாகியிருப்பது அரசுகளுக்கு எரிச்சலைக் கொடுத்துள்ளதும் உண்மைதான்.

இந்தியாவைப் பொருத்தவரை அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்யும் ஊழல்களுக்கு அளவே இல்லை. அதே நேரம் அது குறித்து பத்திரிகைகளால் ஓரளவுக்கே விவாதிக்க, விமர்சிக்க முடிகிறது. ஏனெனில் ஒரு ஊழல் பற்றிய பேச்சு முடிந்தால் அடுத்து அதைவிடப் பெரிய ஊழல் வெளியே வருகிறது. ஆனால் அது பற்றிய ஆதாரங்கள், ஆவணங்கள் வெளியே வருவதில்லை. அவற்றை வெளியிட விக்கிலீக்ஸ் இணையதளம் சரியான களமாக இருக்கும்.

 அதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த பத்திரிகை, ஊடகங்கள் முன் வர வேண்டும். ஏனெனில் பத்திரிகைகளால் ஓரளவே வெளிப்படுத்த முடிந்த ஆள்பவர்களின் தவறுகள், ஊழல்களைப் பற்றி முழுமையாக, தெளிவாக, ஆதாரப்பூர்வமாக, துணிவோடு வெளியிடும் ஓர் அமைப்பை வரவேற்பதே உண்மையான ஜனநாயகம். அவ்வாறு ஐந்தாவது தூணை வலுப்படுத்த நான்காவது தூண் முன் வந்தால் அது  மக்களாட்சியை மேலும் வலுப்படுத்தும்.

3 comments:

கருந்தேள் கண்ணாயிரம் said...

மீ த பேக் யா

கருந்தேள் கண்ணாயிரம் said...

அட விக்கிலீக்காவது பக்கி பூக்காவது.. எங்க அண்ணன் குஞ்சாநெஞ்சன்... ச்சீ.. கெஞ்சாகுஞ்சன் . அய்யய்யோ.. டங்கு கண்டபடி சிலிப்பாவுதே.. அஞ்சாநெஞ்சன் பளகிரி வந்தாருன்னா, சைட்டாவது ஒண்ணாவது.. கைமா தான் தெரியுமில்ல

ரகுநாதன் said...

@கருந்தேள் கண்ணாயிரம்

thaanga mudiyalayee..... :)