Wednesday, September 29, 2010

ஆஸ்கர்: அங்காடித் தெருவை பீப்லி லைவ் தள்ளியது ஏன்?இந்தித் திரைப்படங்களை அதிகம் பார்ப்பது இல்லை. ஆனால் ஒரு சில நல்ல படங்கள் வரும்போதும் விருதுகள் பெறும்போதும் அதைப் பார்த்ததுண்டு.அதில் பா, 3 இடியட்ஸ் போன்ற நல்ல படங்கள். இந்தி திரையுலகில் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக ஆமிர்கான் இருக்கிறார். அவரது தயாரிப்பில் வந்திருக்கிறது பீப்லி லைவ் என்ற படம்.

பளீரென்ற காமிரா கிடையாது. வண்ண வண்ண குட்டிக் குட்டிப் பாவாடைகள் அணிந்து வரும் ஹீரோயின் கிடையாது. மார்புக் கச்சை கீழிறங்க கவர்ச்சி ஆட்டம் போடும் பாடல்கள் கிடையாது. பறந்து பறந்து அருவியில் குதித்தபடி சண்டைக் காட்சி கிடையாது. இப்படி நிறைய கிடையாதுக்கள்.

ஒரு வரியில் சொல்வதென்றால் விவசாயிகள் தற்கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

அண்ணன், விவரமில்லாத தம்பி. இருவரும் விவசாயிகள். தம்பிக்கு மனைவி, 3 குழந்தைகள். படுக்கையில் கிடந்து எந்நேரமும் கத்திக் கொண்டிருக்கும் வயதான அம்மா, அழகில்லாத கிராமம். விவசாயத்தை தவிர ஒன்றும் தெரியாத ஊர். மழையில்லை. கடன் அதிகமானது. வறுமை தாண்டவமாடியது. விளைவு நிலத்தை விற்க வேண்டிய நிலை.

உள்ளூர் அரசியல்வாதியிடம் உதவி கேட்கிறார்கள். வங்கியில் கடன் வாங்கத் தெரிந்தது அல்லவா? போய் அவர்களிடமே கேள். உன் நிலத்தை காப்பார்கள் என்கிறார். அப்போது தற்கொலை செய்தால் அரசாங்கம் ஒரு லட்சம் தருவதாகக் கூறுகிறார் அந்த அரசியல்வியாதி.

அதைப் பற்றிப் பேசிக் கொண்டே வீடு வருகிறார்கள்.  நடந்து நடந்து நடந்து காடு, மேடெல்லாம் கடந்து வீடு வரும் போது இரவாகிவிடுகிறது. இதில் ஒளிப்பதிவின் மாயாஜாலம் அருமை. கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் குறைந்து வீட்டுக்குள் வரும்போது ஒன்றுமே தெரியாது. விவசாயிகளின் நிலையும் அதுதான்.  வெளிச்சத்திலிருந்து இருளுக்கு. (அந்தளவுக்கு ஒளி குறைவு. இயற்கை வெளிச்சம் மட்டுமே வைத்து படம் எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.)

மனைவியோ கடும் கோபத்தில் அடிக்கிறாள் கணவனை. விவசாயிகள் தற்கொலை செய்தால் ஒரு லட்சம். அண்ணன், தம்பி பேசி முடிவெடுக்கிறார்கள். தம்பி தற்கொலை செய்வதாக முடிவாகிறது. இதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை உள்ளூர் பத்திரிகை நிருபர் கேட்கிறார். விஷயம் வெளியே வருகிறது. பிறகென்ன நாட்டின் முக்கிய தொலைக் காட்சிகளில் செய்தி வெளியாகிறது. பரபரப்பாகிறது.

வீட்டின் முன் குவிகிறது ஒட்டுமொத்த மீடியாவும். ஒவ்வொரு நிருபரும் மைக்கை வைத்துக் கொண்டு காட்டுக் கத்தல் கத்துகிறார்கள். நாதா தற்கொலை செய்வார் என்கிறது ஒரு சேனல். இல்லை என்கிறது மற்றொன்று.

விவசாய அமைச்சராக நஷ்ருதீன் ஷா.விவசாயிகள் தற்கொலை சொந்தப் பிரச்னையால் ஏற்பட்டது என்று பேட்டி கொடுக்கிறார்.
 
அரசியல்வாதிகள் தங்கள் பங்குக்கு குட்டையை குழப்புகிறார்கள். உள்ளூர் சாதிக் கட்சித் தலைவர்கள் அதற்கு மேல். மீடியாக்கள் சூடான செய்தி ஒன்று வேண்டும். அதையும் தாங்கள் மட்டுமே முதலில் தர வேண்டும் என்ற வேகம். அதிகாரிகள் கூட்டம் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது. தாங்களாகவே உள்நுழைய முடியாது. உயர்நீதிமன்ற உத்தரவு வரவேண்டும் என்கிறார் வேளாண் அமைச்சக செயலாளர். இப்படி அதிகாரவர்க்கம்-அரசியல்-ஊடகம் என்று மும்முனைத் தாக்குதலில் விவசாயி சிக்கி சீரழிகிறான். கடைசியில் எதிர்பாராத திருப்பத்துடன் கதை முடிகிறது.

இதில் ஊடகத்தை கிழி கிழியென்று கிழித்திருக்கிறார்கள். முக்கியமாக 24 மணி நேர செய்திச் சேனல்களை. வீட்டைச் சுற்றிலும் மீடியாக்கள், போலீஸ் படை. வெளியே எங்கே சென்றாலும் கேள்வி கேட்கிறது போலீஸ். அதனால் அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் கையில் தண்ணீர் வாளியுடன் வயல் பக்கம் ஒதுங்குகிறார் நாதா. அதையும் படம்பிடிக்கிறது ஒரு சேனல். திடீரென்று காணாமல் போகிறார் அவர்.

உடனே தொலைக்காட்சி நிருபரே புலன் விசாரணையில் இறங்குகிறார். நாதா இங்குதான் மலம் கழித்தார். இதோ கடைசியாக இங்குதான் உட்கார்ந்திருக்கிறார். தண்ணீர் பாருங்கள் எப்படிப் போயிருக்கிறது என்று விளக்குகிறார். மீடியாவை இதைவிட கூர்மையாக விமர்சிக்க முடியாது. அந்த வகையில் பீப்லி லைவ் சூப்பர்ப்.

கிராமத்தின் ஓரிடத்தில் எலும்பும் தோலுமான ஒரு விவசாயி தனியே கிணறு வெட்டிக் கொண்டிருக்கிறார். இத்தனை களேபரங்களுக்கிடையில் அவருக்கு என்ன குறை என்று யாரும் பார்ப்பதில்லை. தற்கொலை செய்கிறேன் என்று கூறிய ஒரே காரணத்துக்காக நாட்டின் கவனமெல்லாம் நாதா மேல்தான் இருக்கிறது. அவருக்குள்ள கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் அத்தனை விவசாயிகளுக்கும் உண்டு என்பதை யாரும் சிந்திக்கிவில்லை. ஆனால் உள்ளூர் நிருபர் மட்டும் மனதில் நெருடலோடு இருக்கிறார். திடீரென்று அந்த வயதான விவசாயி தான் வெட்டிய குழியிலேயே இறந்து கிடக்கிறார். பட்டினியால் செத்துவிட்டதாகக் கூறுகிறார்கள். மனம் கனத்து இருக்கிறான் நிருபன்.

இதை எல்லாம் விட்டுவிட்டு ஏன் நாதா பின்னாடியே நாம் அலையவேண்டும் என்று டிவி பெண் நிருபர் மலைக்கா ஷெனாயிடம் கேட்கிறான். அது நமது வேலையில்லை என்கிறாள். நமது வேலை பிரச்னைக்குத் தீர்வு காண்பதல்ல. ஒரு செய்தியின் துவக்கம் முதல் முடிவு வரை பின் தொடர்வதுதான் என்கிறாள். இதையெல்லாம் பார்த்து மனம் வருத்தம் அடைந்து தீர்வு காண முயன்றால் நீ தவறான தொழிலில் இருக்கிறாய் என்று அர்த்தம் என்கிறாள். ஒட்டுமொத்த மீடியாவின் தாரக மந்திரமே அதுதான்.

இத்தனைக்கும் காரணம் பீப்லியில் இடைத்தேர்தல் நடைபெறப் போகிறது. அதனால் அரசியல்வாதி-ஊடகம் ஆகியவற்றின் கவனம் பெறுகிறது. அதுவும் இல்லாவிட்டால் இந்திய விவசாயிக்கு எந்த நாதியும் இல்லை.

நாதாவின் நிலையைக் கண்டு கருத்துக் கணிப்பு எடுப்பது, ஊர்வலம் போவது, பல்கலைக்கழக மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் நாட்டைப் பற்றிக் கவலை கொண்டு உட்கார்ந்திருப்பது. பிறகு இரவில் பார்ட்டிக்குப் போவது என்று எல்லா அபத்தங்களையும் விமர்சிக்கும் படம் இது.

இப்படி ஒரு படம் துணிச்சலுடன் எடுத்ததற்காகவே ஆமிர்கானுக்கு ஆஸ்கர் தர வேண்டும்.

அங்காடித் தெருவுக்கும், பீப்லி லைவ்வுக்கும் கடைசி நேரப் போட்டி. அதில் பீப்லி லைவ் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அங்காடித் தெருவுக்கு ஏன் ஆஸ்கர் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதை விளக்க வேண்டுமா?

நாம் இன்னும் அரிவாள், பஞ்ச் டயலாக், காதல் கத்திரிக்காய், குடும்பக் கதை இதைவிட்டு வெளியே வரவில்லையே. சமுதாயப் பிரச்னை பற்றி படம் எடுத்தாலும் காதல், குத்தாட்டம் என்று இல்லாமல் படம் எடுப்பதும் இல்லை.

தமிழில் பீப்லி லைவ் போல படம் எப்போதும் வராது.