Thursday, September 16, 2010

அட... ஜூனியர் விகடனில் என்னோட பதிவு!


இன்று காலையில் நண்பர் வெங்கட் செல்பேசியில் அழைத்தார். கொஞ்சம் வேலையாக இருந்ததால் அழைப்பை எடுக்கவில்லை. (வேறன்ன...தூக்கம் தான்) 

 பிறகு மதியம் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் வேலையைத் துவங்கும்  முன் (மறுபடியும் தூக்கம்) மிஸ்டு கால் விட்டேன். உடனே லைனில் வந்தவர்...உங்க பதிவு ஜுனியர் விகடனில் வந்திருக்கிறது என்றார்.

ஏப்ரல், மே, ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆயிடுச்சே...இனி அடுத்த ஏப்ரல் 1 வருவதற்கு 6 மாதத்துக்கு மேல இருக்கே. ஒரு வேளை அட்வான்ஸா ஏப்ரல் ஃபூல் பண்றாரோ என்று நினைத்துக் கொண்டு அப்படியா...சரி பார்க்கிறேன் என்றேன். பிறகு நல்லா பாருங்க...விகடன் குட் பிளாக்ஸில் வந்திருக்கப் போவுது என்றேன். அவர் ஜூ.வி. வாசகர். அதனால் அடித்துக் கூறினார். கையிலேயே ஜூ.வி. வைத்திருப்பார் போலிருந்தது.

தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா பற்றி நீங்கள் போட்ட பதிவை அப்படியே போட்டிருக்காங்க. அதே படம். என்றார். ஆஹா...பதிவு போட நல்ல மேட்டர் சிக்கிருச்சு என்று ஆர்வத்தோடு ஜூ.வி. வாங்க  பெட்டிக் கடைக்கு ஓடினேன். பக்கத்தில் டாஸ்மாக். வேக வேகமாக ஜூ.வி.யை வாங்கி கைகள் நடுநடுங்க பிரித்துப் பார்த்தேன். (எவனாவது பார்த்திருந்தால் சரக்கு அடிச்சிட்டு சைட் டிஷ்ஷுக்கு ஜூ.வி. சினிமாவைத் தேடுகிறேன் என்று நினைத்திருப்பான்) அட ஆமா நம்ம பதிவுதான் என்று சந்தோஷம் அடி நெஞ்சிலிருந்து கிளம்பி அப்படியே உச்சியைத் தொடுவதற்குள்... புஸ்ஸ்ஸ்ஸஸ்ஸ்...... மேட்டர் மாறிப்பூடுச்சு...

அங்கதான் கதையில ஒரு ட்விஸ்ட்டு.....நான் எழுதிய பதிவை அப்படியே போடவில்லை. விஷயத்தோடுதான் எழுதியிருக்கிறார்கள். விவரமாகவும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் கொஞ்சூண்டு மூளையை வைத்துக் கொண்டு (உடம்பு மட்டும் ரொம்ப பெரிசாக்கும்...) காட் பாதர்-2 அல் பேசினோ போலவும்...கோஸ்ட் ரைட்டர் ரோமன் பொலான்ஸ்கி போலவும் செயல்பட நினைக்கும் எனக்கு ஒரு துப்பும் கொடுத்திருக்கிறார்கள்.  நான் வைத்த பதிவின் தலைப்பை அப்படியே...சாரி கொஞ்சம் மாற்றி வைத்திருக்கிறார்கள். (எப்புடி பாயிண்ட்ட புடிச்சம்ல பாஸு...).

இருந்தாலும் பரவாயில்லை. நம்ம பதிவுகளைக் கூட விகடன் குரூப்பில் பாலோ செய்கிறார்கள் என்பதை நினைத்தால் பெருமையாகவும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. (நம்ம பதிவெல்லாம் படிக்கிறாங்கன்னா இதுக்கு பின்னாடி என்னவோ பெரிய சதி இருக்குது)  

அதாவது நான் வைத்த தலைப்பு சும்மாவே இருக்க மாட்டாரா ஜேக்கப் ஜுமா. (கிளிக் செய்து படிங்க) ஜூ.வி.யில் வந்ததோ சும்மாவே இருக்கமாட்டார் சுமா. எப்பூடி....படம் கூட நம்ம பதிவில் இருப்பதுதான். (நீ என்ன ஜுமா வீட்டுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிட்டு போயி எடுத்தியா...கூகுளில் ஆட்டயப் போட்டதுதானே) இது இரண்டுக்கும் 6 வித்தியாசம் எல்லாம் இல்லை. ஏனென்றால் இது குமுதம் இல்லை. ஹிஹி.

நம்ம என்னதான் நல்லா பதிவு போட்டாலும் விகடனில் வராது என்றிருந்தேன். முடிஞ்சவரை கடைசி முயற்சியாக நானும் ரவுடிதான் சார் என்று ஜீப்பில் ஏறலாம் என்று கூட நினைத்தேன். அப்புறம் மனசாட்சி (பார்றா..) இடம் கொடுக்காததால் அந்த திட்டத்தை கைவிட்டேன். (மறுபடியும் பார்றா...) எப்படியோ விகடன் பிளாக்ஸில் நம்ம பிளாக்கை பிளாக் பண்ணி வைத்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் பரவாயில்லை.

பேரு வருது வரல அது பற்றி நமக்கென்னங்க கவலை. எப்படியோ நாம எழுதினது நாலு பேரு படிச்சு மண்டய சொறிஞ்சா அது போதும். நாம எழுதினது நல்லா ரீச் ஆகுதுங்கறது நிரூபணம் ஆயிடுச்சு... 

அதனால நாங்களும் ரவுடிதான் சார்...வர்ட்டா...