Friday, September 3, 2010

உங்களுக்கு இப்படி நடந்திருக்கிறதா?மனிதனின் மனம் விசித்தரம் நிறைந்தது. சிறிய விஷயங்களுக்கு பெரிய களேபரமே நடத்தும். ஆனால் மிகப் பெரிய விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடும். அது நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

உதாரணத்திற்கு, பஸ்ஸில் கூட்ட நெரிசலில் தெரியாமல் நம் காலை யாரும்  மிதித்துவிட்டால் கோபம் மூக்கு நுனியில் இருந்து கிளம்பி கபாலம் வழியாக உச்சி முடியில் ஏறி நட்டுக் கொண்டு நிற்கும். பிறகு எதிராளியின் பலம்/பலவீனம் பொருத்து நம் ரியாக்சன் இருக்கும்.

ஆனால் தேடி வந்து சனியன் பனியனுக்குள் சென்றால் கூட கண்டு கொள்ளாமல் ஹிஹி பரவாயில்லைங்க..என்று விட்டுவிடும். அது போல் மனித மனத்தின் கனவுகளும் விசித்திரம் நிறைந்தவை தான்.

எண்ணற்ற மனிதர்கள் கனவுகளில் நடப்பதை ஏற்கெனவே நடந்ததாகவோ அல்லது பின்னர் நடந்தது என்றோ கூறக் கேட்டிருக்கிறோம். இது போல் எனக்கும் நடந்த அனுபவம் உண்டு.

10 வருடங்கள் முன்பு எனது நண்பரின் தாய் உடல் நலக் குறைவு காரணமாக கோவையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். தினமும் கேஜி மருத்துவமனைக்கு வந்து பார்த்துவிட்டு மருதமலை செல்வார். அப்போது நான் ஈரோடு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் அவர் அம்மாவைப் பார்க்கச் செல்லவில்லை. அல்லது அப்போது தோன்றவில்லை.

அப்போது ஒரு நாள் அதிகாலையில் வந்த கனவில் அவரது தாய் இறந்து போலவும், அவர் அப்பா வேதனை தாங்காமல் மது குடிப்பது போலவும் கனவு கண்டேன். பிறகு அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்று நினைத்து விட்டு மறந்தேன். இரண்டு நாட்கள் கழித்து the mask of zorro படத்தை ஈரோட்டில் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். அப்போது நண்பரின் தாய் இறந்துவிட்ட செய்தி கிடைத்தது. அதிர்ந்து போனேன்.

கனவில் வந்தது நடந்து விட்டதே என்று வருத்தப்பட்டேன். பிறகு ஒரு 5 வருடம் கழித்து இதை என் நண்பரிடம் கூறினேன். அவர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். வேறென்ன செய்ய முடியும். ஆனால் அவர் தந்தை மது குடிக்கவெல்லாம் இல்லை. ஏனெனில் அவருக்கு அந்தப ்பழக்கம் இல்லை.

அடுத்து...

மற்றொரு பள்ளி நண்பர். அவருடைய அப்பா மளிகைக் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடைக்கு எப்போதாவது போவேன் (அதாவது 6 மாதத்துக்கு ஒருமுறை). என்னை அடையாளம் தெரிந்தாலும் பெரிதாக அவரிடம் பழக்கமில்லை.  வயதாகிவிட்டதால் ஒரு மாதத்துக்கு முன் அவர் கீழே விழுந்துவிட்டார். இதனால் உடல் நலம் மோசமாகி வீட்டில் படுக்கையில் இருந்துள்ளார்.  இந்தத் தகவல் எனக்குக் கூறினார்கள். பின்னர் இதை மறந்து விட்டேன்.

கடந்த வாரம் கனவில் அவர் எங்கோ ஓர் அறையில் இருந்து வெளியே வருவது போலவும் என் முன்னே வந்து ஏதோ பேசிவிட்டுச் செல்வதும் போலவும் ஒரு கனவு வந்தது. (நாம் நன்கு பழகிய, மற்றவர்கள் மேல் நாம் அன்பு செலுத்தும் நபர் கனவில் வந்தால் அது வேறு கதை.) ஆனால் இவரிடம் பேசியது கூட மொத்தமே ஒரு 10 வரிகள்தான் இருக்கும். அப்படியிருக்க அவர் கனவில் வந்து சென்றார்.

பிறகு அலுவலகம் வந்து விட்டேன். இரண்டு நாட்கள் கழித்து அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. எனக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும், அச்சமாகவும் ஆகிவிட்டது.

கனவுகள் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இதை இஎஸ்பி பவர் என்றும் கூறுகிறார்கள். எனக்கு ஏற்பட்டது அதுவா?. அப்படியானால் இது போல மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்குமா? இந்த இரு சம்பவங்களும் ஒன்றிணைத்துப் பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் இது போன்று அடிக்கடி ஏற்படுவது இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இப்போது நடந்துள்ளது.


உங்களில் யாருக்காவது இப்படி நடந்திருக்கிறதா?


குறிப்பு: இன்செப்ஷன் படம் இன்னும் பார்க்கவில்லை...