Thursday, September 2, 2010

ரியல் ஹீரோ சூர்யாதான்!
சூர்யா, விஜய் யார் ரியல் ஹீரோ?  என்ற இந்தப் பதிவைப் படித்துவிட்டு நீ என்ன விஜய்யின் விரோதியா, சூர்யாவின் அபிமானியா என்று கேட்டு பின்னூட்டங்கள் வந்தன. அதில் நிர் என்ற அனானி எழுதிய பின்னூட்டம் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

//சூர்யா அனுதாபிகளின் கூப்பாடு. விஜய்யும்தான் 40 குழந்தைகளைப் படிக்க வைக்கிறார். உண்மையைத் தெரிந்து கொண்டு எழுது// என்று கூறியிருந்தார்.

முதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். நான் தமிழ் சினிமா ஹீரோக்கள் யாருக்கும் ரசிகன் இல்லை (சில நேரங்களில் மட்டும் கமல்). மைக்கேலேஞ்சலோ அன்டோனியோனி, மோஷேன் மக்பல்பாஃப் படங்களைத் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் எமிர் குஸ்ட்ரிகா  படங்கள் பெட்டியில் உட்கார்ந்து கொண்டு தினமும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. சராசரி ரசிக உள்ளம் நமக்குக் கிடையாது.

உண்மையில் இதுவரை சூர்யாவின் படங்களில் கஜினி, வாரணம் ஆயிரம் மட்டுமே பார்த்துள்ளேன். அதுவும் இயக்குநருக்காக. சிங்கம் சிடியில் பார்த்ததுதான். ரஜினி-கமல், அஜீத்-விஜய், விஜய்-சூர்யா என்ற இரட்டைத் தன்மையில் நான் விழுவதும் கிடையாது. (விஜய்யை விட சூர்யா நன்றாக நடிக்கிறார் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்)

விஜய் டிவியில் வந்த நிகழ்ச்சியை வைத்து நான் எழுதிய பதிவை சூர்யா படித்திருப்பாரா என்று தெரியாது. (ஆசையப் பாரு...) ஆனால் அந்தப் பதிவு எழுதிய இரு நாள்களுக்குப் பின் சென்னையில் நடந்த விழாவில் கஷ்டப்பட்டு படித்து முன்னேறும் மாணவர்கள்தான் உண்மையான ஹீரோ, நாங்கள் எல்லாம் வெறும் சினிமா ஹீரோக்கள்தான் என்று சூர்யா கூறினார்.

விஜய் படிக்க வைக்கிறார் உதவி செய்கிறார் என்பது மகிழ்ச்சியே. ஆனால் அதை சூர்யாவோடு ஒப்பிட முடியாது. சூர்யா செய்வது சத்தமில்லா சேவை. அனானி நீங்கள் சொல்வது போல விஜய் உதவி செய்கிறார். ஆனால் அதனால் கிடைக்கும் பெயர் தனக்கு மட்டுமே வர வேண்டும் என்பதைப் போல் தான் மட்டுமே செய்கிறார். ஆனால் சூர்யா அப்படியில்லை. அவர் தன்னோடு உதவ மனமும் வசதியும் உள்ளவர்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு குழுவாகச் செயல்படுகிறார். குழு மனப்பான்மை உள்ளவனே உயர்ந்தவன். 

வெறும் 40 பேருக்கு பணம் கொடுத்துவிட்டால் போதுமா. செய்த உதவி சரியான நபர்களுக்குப் போகிறதா, தன்னுடைய ரசிக குஞ்சு மன்றங்கள் கூறும் நபர்களுக்கு மட்டுமே போகிறதா என்பதை விஜய் மட்டுமல்ல ரசிகக் குஞ்சு நிர் என்ற அனானியும் விளக்கினால் பரவாயில்லை.

சூர்யாவுக்கு புகழ் சேர்க்கவோ அல்லது அவரை விளம்பரப்படுத்தவோ நான் என்ன அவர் பிஆர்ஓவா? சேவை செய்யும் ஒருவரைப் பாராட்டி நான்கு வரி எழுதினால் அதைப் படித்து மற்றவர்களும் பின்பற்றவோ அல்லது சூர்யாவின் அறக்கட்டளையில் இணைந்து  பணியாற்றவோ ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே அந்தப் பதிவை எழுதினேன்.

 //இப்படி சொல்லும் நீங்கள் சூர்யா 50 கோடி மதிப்பில் நிலம் வாங்கப் போகிறார். அதற்கு என்ன சொல்கிறீர்கள்// என்று கேட்டார். ஐயா...சாமி...யாருடாப்பா நீ...சூர்யா சம்பாதிக்கிறார், கார்த்தி சம்பாதிக்கிறார், சிவக்குமார் சம்பாதித்தார்..அவர்கள் கையில் காசு இருக்கு இல்லை..கடன் வாங்கி நிலம் வாங்குகிறார்கள்..எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் அது அவர்கள் சொந்த விஷயம். இது பற்றி இங்கு எதற்கு கேள்வி.

அடுத்தவர்களை மட்டம் தட்டாதீர்கள் என்று ஒரு வரி எழுதியிருக்கிறார். விஜய்யை மட்டம் தட்டவில்லை. சேவை செய்கிறேன் என்று இஸ்திரிப் பெட்டி கொடுத்துவிட்டு விளம்பரம் தேடி அதன் மூலம் ஆதாயம் தேட விரும்புவோரையே விமர்சித்தேன். விஜய்யும் சூர்யாபோல் தன்னலம் கருதாமல், மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டால் நல்ல விஷயம் தானே.

விஜய் மட்டுமல்ல..மற்ற நடிகர்கள் செய்யும் எல்லா சேவையிலும் தன்னலமே மேலோடி நிற்கிறது. அதை விளம்பரப்படுத்தி தனக்கு மட்டுமே பெயர் வர வேண்டும் என்று தான் மட்டுமே இவர்களை ரட்சிக்க வந்த தேவதூதன் போல் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் சூர்யா அப்படி செயல்படவில்லை. அவரை விட அதிகமாக பணம் கொடுத்தவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்பதையும், அவர்களையே அதிகமாகப் பேச வைத்தார்கள் என்பதையும் உணர வேண்டும். நிகழ்ச்சியின் இறுதிவரை நான், எனது என்பது போன்ற வார்த்தைகளை அவர் மிகக் கவனமாகத் தவிர்த்தார். எங்கள், நாம், நமது, உங்கள் என்றே கூறினார். இதையும் இங்கே கூற வேண்டும்.

இன்று சூர்யா செய்யும் செயல்களை பயன்படுத்திக் கொண்டு நாளை அரசியல் என்ற சுய நல நோக்கில் இறங்கினால் அப்போது அவரை விமர்சித்தும் எழுதுவேன்.

விஜய், தான் மட்டுமே தேரை இழுக்க வேண்டும் என நினைக்கிறார். சூர்யாவோ ஊரைக் கூட்டி அனைவரையும் தேரை இழுக்க வைக்கிறார். அதனால் சூர்யாதான் ரியல் ஹீரோ.

 இது போன்ற பின்னூட்டத்திற்கு பதில் எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நண்பர் நாஞ்சில் பிரதாப் கூறினார். இருந்தாலும் பதிவு போட மேட்டர் கிடைக்கலையே...அதனால எழுதிட்டேன்.