Monday, August 23, 2010

சூர்யா, விஜய்- யார் ரியல் ஹீரோ ?


காலங்கள் மாறினாலும் சினிமாவின் நிறம் மாறினாலும் எப்போதும் சில ஹீரோக்கள் எவர்கிரீனாக ரசிகர்களைக் கவர்ந்து கொண்டுதான் இருப்பார்கள். திரையில் பார்க்கும் ஹீரோ நிஜத்திலும் அப்படியே நாற்பது பேரை அடிப்பார், ரோட்டில் செல்லும் ஹீரோயினை வம்பு செய்து பாட்டுப் பாடுவார், அம்மாவின் மீது உயிரையே வைத்திருப்பார், சோற்றுக்கே வழியில்லாவிட்டாலும் தாராளமாக நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து சர்வ வல்லமை பொருந்திய வில்லனை, அரசியல்வாதியை அடித்து துவம்சம் செய்வார் என்று நம்பிக் கொண்டிருந்த காலம் இருந்தது.

இன்றும் அப்படி நம்பும் ரசிகர்கள் இருப்பதன் விளைவே கட்அவுட்டுக்கு பாலபிஷேகம், பீரபிஷேகம் செய்யும் நிகழ்வுகள். என்ன இருந்தாலும் எம்ஜிஆர் போல வராது என்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். திரையில் மட்டுமல்ல மக்கள் மனதிலும் இடம் பிடிப்பது சாதாரணம் இல்லை.

எம்ஜிஆர் விட்டுச் சென்ற அந்த இடத்தைப் பிடிப்பதற்கு எப்போதும் தமிழ் சினிமாவில் போட்டி உண்டு. பிறகு ரஜினி அந்த இடத்தைப் பிடித்தார். இப்போது விஜய் பிடித்து வைத்திருப்பதாக அவரது ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் சிவாஜியின் இடத்தையோ அல்லது கமலின் இடத்தையோ பிடிக்க விரும்புவதில்லை. காரணம், எல்லோரும் முதலிடத்தில் இருப்பதையே விரும்புகின்றனர்.

எம்ஜிஆருக்கு திரையில் இடம் பிடிக்க திறமை இருந்தது. அதை அப்படியே மக்கள் மனதிற்கு மாற்றி அதை வாக்குகளாக மாற்றும் சூழ்நிலையும் அமைந்தது. ரஜினியோ மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொண்டார். அல்லது பல புறக்காரணிகள் அவரை அரசியல் பக்கம் இழுப்பது போல் கொண்டு சென்று எப்போதும் ஒரு சென்ஷேசனாக வைத்திருத்தன.

அந்த வழியொற்றி விஜய்யும் ஒரு எம்ஜிஆராக மாறப் பார்த்தார். பார்க்கிறார். ஆனால் இன்றைய அரசியல், சமூகக் காரணிகள் வேறாகிவிட்டன. மக்கள் மனதில் இடம் பிடிப்பது சாதாரணம் இல்லை. அதே நேரம் ஒரு சில பொருளுதவிகள் செய்துவிட்டால் மக்கள் தம்மை ஏற்றுக் கொள்வார்கள் என நினைப்பது முட்டாள்தனம். அந்த உதவி சில காலங்களில் மறந்து விடும். ஆனால் வாழ்நாள் முழுவதும் நினைக்கும்படியான நற் செயல்கள் செய்பவரையே மக்கள் என்றென்றும் நினைத்திருப்பார்கள்.

திரையில் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் நிஜ வாழ்க்கையில் இருக்கும் யாரோ ஒருவனுக்கு சவால் விடுவதும், பஞ்ச் டயலாக் என்ற பெயரில் பஞ்சம் பிழைப்பது முதல் சில மாதங்களுக்கு முன் அரசியல் பிரவேசம் செய்யப் போகிறேன் என்று அறிவித்தது வரை விஜய் செய்யும் காமெடிகள் தமிழ் ரசிகர்கள் அறிந்ததுதான். வெறும் இஸ்திரிப் பெட்டியும், தையல் இயந்திரமும், ரத்த தான முகாமும், பிரியாணி விருந்தும் போட்டதோடு அல்லாமல் அதை படம் எடுத்து மாலை பத்திரிகைகளில் போட்டுக் கொண்டால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனம்.

இந்த இடத்தில் தான் நடிகர் சூர்யா ஒரு நாயகனாக எழுகிறார். உண்மையில் விஜய்க்குப் பின்னர் திரைப்படத்திற்கு வந்தவர். அவரது தந்தையின் நற்பெயருக்கு ஏற்ப நல்ல பெயருடன் இருப்பவர். அவரது தந்தையின் வழியில் இளம் தலைமுறையினருக்கு அவர் செய்யும் பணியே அவரை உண்மையான ஹீரோவாகக் காட்டுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக சிவக்குமார் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார். அதை அடியொற்றி தான் திரையுலகில் நல்ல இடத்தைப் பிடித்ததும் துவங்கினார் நடிகர் சூர்யா. அகரம் என்ற அறக்கட்டளையை உருவாக்கினார். அதை கடந்த பொங்கலின் போது உருவாக்கினார். அவர் உள்பட ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாயில் அந்த அறக்கட்டளை உருவானது. முதல் ஆண்டில் 158 ஏழை மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கு உதவி இருக்கிறார்கள். அந்த மாணவர்கள் அனைவரும் சமூகத்தின் ஏதோ ஒரு மூலையில் யார் உதவியும் இன்றி வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருந்தவர்கள்.

அவர்களுக்கு ஒரு லைஃப் போட்டாக இருந்து உதவுகிறது சூர்யாவின் அகரம் பவுண்டேசன். 

கைம்மாறு கருதாமல் இந்தச் சேவையை அவர் செய்வதோடு அல்லாமல் தனக்கு நெருங்கியவர்களையும் இதில் முழு மனதோடு ஈடுபட வைத்திருக்கிறார். மேலும் அவருக்கு அறிமுகமே இல்லாதவர்களையும் கூட இந்த அறக்கட்டளையில் ஈடுபடவைத்திருக்கிறார் தனது சேவை மனப்பான்மை மூலம்.  அந்த மாணவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை வைத்தும் அவர்களது திறமையின் அடிப்படையிலும் இந்த உதவிகளை அகரம் அளித்திருக்கிறது. அதுவும் ஏனோதானோ என்றில்லாமல் மிகச் சரியான அளவீடுகளை அறிவியல் முறையில் பயன்படுத்தி அதை செயல்படுத்தி இருக்கிறார்கள்.அந்த வெற்றிப் பயணம் பற்றிய ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியில் சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பானது. அதில் ஒரு மாணவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். அம்மா, அப்பா இருவரும் குவாரியில் கல் உடைக்கிறார்கள். சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு நாள் முழுவதும் உடைத்து ஒரு டிராக்டர் டிரெய்லரை நிரப்ப வேண்டும். சம்பளம் அப்பாவுக்கு ரூ.100. அம்மாவுக்கு ரூ.70. அந்த அம்மாவுக்கு தன் மகன் டாக்டராகப் போகிறான் என்பதின் மகிழ்ச்சியைக் கூட சரியாக வெளிப்படுத்த தெரியவில்லை. இவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வைத்து அவர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சூர்யாதானே.

மற்றொரு மாணவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு சென்னை வர பணம் இல்லாததால் கிணறு வெட்டும் தொழிலுக்குச் சென்று 200 ரூபாய் பெற்று பிறகு வந்திருக்கிறார். அவரும் எதிர்காலத்தில் ஒரு டாக்டர் என்பது ஆச்சரியம். இப்படி ஏராளமான உணர்ச்சிப்பூர்வமான உண்மைக் கதைகள் அந்த நிகழ்ச்சியில்.

இந்த மாணவர்களின் முழு கல்விச் செலவையும் அகரம் அறக்கட்டளையே ஏற்கிறது என்பது கூடுதல் தகவல். கஷ்டப்பட்டவனுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும் என்பது போல தங்களை யாரோ சிலர் வாழ்வில் முன்னேற வைத்து தங்கள் குடும்பத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள் என்று உணர்ந்து தாங்களும் மற்றவர்களுக்கு எதிர்காலத்தில் உதவுவார்கள் இந்த மாணவர்கள் என நம்பலாம்.


தனது பிறந்தநாளுக்கு சந்திக்க வரவேண்டாம், இப்போதைக்கு அரசியலுக்கு வர மாட்டேன். வந்தாலும் வருவேன் என்று குழப்புவதும், 50வது பிறந்தநாளுக்கு 50 இஸ்திரிப் பெட்டி வழங்கி வாழ்வில் ஒளியேற்றுகிறேன் என்பதும், உங்கள் அம்மா அப்பாவை காப்பாற்றுங்கள், குடும்பத்தைக் கவனியுங்கள் (யாருக்கும் தெரியாது பாருங்க...) என்று கேனத்தனமாக அட்வைஸ் செய்வதும் இருந்தால் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியுமா?

நல்ல வேளை. சூர்யாவுக்கு அப்படி ஓர் எண்ணம் இல்லை. அவர் செய்வதை விளம்பரம் செய்யவும் இல்லை. உண்மையாகச் செய்கிறார். அதையும் உறுதியாகச் செய்கிறார். தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு நல்ல சினிமா ஹீரோ...இல்லை இல்லை.. ரியல் ஹீரோ...சூர்யா...உண்மைதானே?

விஜய் டிவியில் வந்த அந்த நிகழ்ச்சியை பார்க்க இங்கே கிளிக்.

பிடிச்சிருந்தா இன்ட்லியில் ஒரு ஓட்டு குத்துங்க...