Saturday, August 14, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கமும் 13 ஜமெட்டி பிரெஞ்சு படமும்இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படம் பார்த்திருப்பீர்கள்.. அதில் லாரென்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை கொல்ல முடிவு செய்யும் போது ஒரு புத்தகம் ஒன்றில் எப்படி எந்த முறையில் அவர்களை கொல்லலாம்  என்று பார்ப்பார். அப்போது இந்த 13 Tzameti (french)    படத்தில் வருவது போல வட்டமாக நின்று கொண்டு துப்பாக்கியை தலையில் வைப்பது போன்ற ஒரு படம் அதில் வரும். ஓ..13 ஜமேடி என்று கொக்கரித்து கத்தியபடி அவர்களை நிற்க வைப்பார். படம் பார்த்தபோது தியட்டரில் கத்த வேண்டும் போல் இருந்தது.  இருக்காதா பின்ன...இந்த சீன இதுலதானே  உருவி இருக்கிறார் நம்ம சிம்புதேவன். ஆனால் அது த்ரில்லிங் பீசு...இது காமெடி பீசு...

இந்த பதிவு படம் வருவதற்கு முன்பே நான் எழுதி விட்டேன். அதனால் என் பதிவை படித்து...அதிலிருந்து...ச்சே இப்படி எல்லாம் பேசக் கூடாது...

சில நாட்களுக்கு முன்  13 Tzameti (french) படம் பார்த்தேன். த்ரில்லர். படம் பார்த்தது மூன்று வருடங்களுக்கு முன்பு. அதை கூகுளில் தேடி ஒரு வழியாகப் பிடித்து பார்த்தேன். மறக்க முடியாத படம். இதற்கு முன்பு விமர்சனம் பதிவு எழுதி இருந்தாலும் கிளைமாக்ஸ் எழுதவில்லை. ஆனால் அவ்வளவு தூரம் படித்து விட்டு எதோ படத்தை நானே எடுத்தவன் மாதிரி மிச்சத்தை வெள்ளித்திரையில் காண்க என்பது போல கூறியது மனதை உறுத்தியது.

எல்லாம் அனுபவம்தான். அதனால் கிளைமாக்ஸ் எழுதிவிட்டேன். 8.50 லட்சம் யூரோவை வீட்டுக்கு அனுப்பிய செபஸ்டியன் அந்தப் பணத்தை அனுபவிக்க முடிந்ததா என்பதை படத்தின் முழு கதையையும் இங்கே போய்  படித்துவிட்டு பிறகு இதை படியுங்கள்...

மு.கு.: உஸ்...அப்பப்பா..பதிவு எழுத மேட்டர் இல்லேன்னா எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு.

----------------------------------------------------------------------------------------------------பிறகு மனம் மாறி, தான் ஒரு காரை மட்டும் அடையாளம் கூற முடியும் என்கிறான். கார் எண் ஜிஆர் 1313. அதைக் குறிக்கிறார் போலீஸ் அதிகாரி.

மீண்டும் ரயில் நிலையம். ரயிலில் ஏறி வாழ்வின் வசந்தத்தை நோக்கிச் செல்கிறான். அடுத்த பெட்டியில் அரேலின் அண்ணன் இருக்கிறான். மெல்ல நடந்து வந்து செபாஸ்டியன் பக்கத்தில் உட்காருகிறான். இருவரும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். அச்சமும், வெறியும் மாறி மாறி காட்டுகிறது அவர்கள் முகம்.

அப்போது அரேலின் அண்ணன் துப்பாகியால் செபாஸ்டியனை சுட்டு விட்டு அடுத்த பெட்டிக்கு செல்கிறான்.

எதற்காக இவ்வளவு தூரம் வந்தோம், ஏன் அந்த மாபியா கும்பலில் நுழைந்து உயிரை உண்மையாலுமே பணயம் வைத்து விளையாடி வெற்றி பெற்று தப்பித்து வந்தோம் என்ற பல நினைவுகள் வயிற்றை பிடித்தபடி சாய்ந்து கிடக்கும் செபாஸ்டியன்  கண் முன் நிழலாட ரயில் ஓட்டத்தின் தாளகதியின் பின்னணியில் மெல்ல இசை மேலெழ திரை மௌனிக்கிறது.
பி.கு.: எளிதாக பதிவு எழுத ஐடியாகளில் இதுவும் ஒன்னு மக்களே...சேர்த்துக் கொள்ளுங்கள்... ஹிஹி.  

புதிய பயங்கரவாதிகள்


கல்வி, உணவு, மருத்துவம் இவை மூன்றும் விற்பனைக்கானது அல்ல என்பது இந்தியாவின் பண்பாடு என்கிறார்கள். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு. இன்று கல்வி ஒரு பெரும் தொழில், உணவு மிகப் பெரும் தொழில்துறை, மருத்துவம் மாபெரும் பண இயந்திரம் ஆகிவிட்டது.

மருத்துவப் படிப்பில் இடம் பெறுவது முதல் நோயாளிக்கு இன்ன மருந்துகள் (பெரும்பாலும் தேவையற்றவை) கொடுக்க வேண்டும் அதையும் எங்களிடம் உள்ள காலாவதி மருந்துக் கடையிலேயே வாங்க வேண்டும் என்பது வரை, மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதில் இருந்து மாபெரும் மருத்துவமனை கட்டி கோடி கோடியாகச் சம்பாதிப்பது வரை மருத்துவத் துறையில் மிகப் பெரும் ஊழல்கள் நடைபெறுவது யாரும் அறியாதது அல்ல.

மருத்துவத் துறையில் நாளுக்கு நாள் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அதே போல புதிய நோய்களும் உருவாக்கப்படுகின்றனவோ என்பது போல சமீப கால நிகழ்வுகள் எண்ண வைக்கின்றன. நூற்றாண்டுகளாக மனித குலம் பயந்து நடுங்கிய அம்மை, மலேரியா போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து அழித்தது தமது சாதனை என்று மருத்துவத் துறை மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகளை நினைத்தால் புதிய புதிய நோய்களை உற்பத்தி செய்து உலகை பீதிக்குள்ளாக்குவதும் அவர்கள்தானோ என நினைக்கத் தோன்றுகிறது.

எய்ட்ஸ் என்ற எரிமலைக்குப் பிறகு பல தொற்று நோய்கள் பரவ ஆரம்பித்தன. எய்ட்ஸ் மட்டுமே சுவாசத்தின் மூலம் பரவாது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நோய்களைப் பாருங்கள். சார்ஸ் என்ற நோய் பத்து ஆண்டுகளுக்கு முன் வந்தது. எல்லோரும் முகமூடி அணிந்து சென்றனர். பிறகு சிக்குன்-குன்யா வந்தது. பின்னர் ஸ்வைன் ப்ளூ எனும் பன்றிக் காய்ச்சல் வந்து உலகையே உலுக்கியது.

இப்போது என்.டி.எம்-1 (New Delhi metallo-beta- lactamase) என்ற சூப்பர் பக் எனும் புதிய பாக்டீரியா. இது ஏற்கெனவே அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள கிருமியாகும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்துகளை வேலை செய்யவிடாத நோய்க் கிருமிகள்க்டீரியாக்கள் இவை. இதை சரி செய்து கட்டுப்படுத்துவது மிகக் கடினம் என்கிறார்கள்.

சார்ஸ் நோய் வந்த பின்னர் உடனடியாக மருந்து கண்டுபிடித்தார்கள். சிக்குன்-குன்யாவுக்கும் மருந்து கொடுத்தார்கள். மெக்சிகோவில் இருந்து பரவிய பன்றிக் காய்ச்சலில் ஓரிரு மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் உலகெங்கும் இறந்த பிறகு இதோ மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று அறிவித்தார்கள். அதை ஒரு நாடு ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு வாங்கியது. அடித்தது ஜாக்பாட் அந்த மருந்து நிறுவனத்துக்கு...

நாங்கள் ரொம்ப சுத்தத்தை பேணுகிறோம் என்று தம்பட்டம் அடிக்கும் நாடுகளில்தான் இந்த நோய்க் கிருமிகள் உருவாகிப் பரவுகின்றன என்பதே ஆச்சரியம்தான்.

திருடியவனே போலீஸின் அடி தாங்க முடியாமல் அதை மறைத்து வைத்த இடத்தைக் கூறுவது போல,  மருந்து நிறுவனங்களே ஆராய்ச்சிக்காக அல்லது கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக இது போன்ற கிருமிகளை மூன்றாம் உலக நாடுகளில் பரவவிட்டு உயிரிழப்பு ஏற்பட்டு பீதியடைய வைத்துவிட்டு பின்னர் இதோ மருந்து என்று அறிவிக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.


என்டிஎம்-1 ஐ பொருத்தவரை மருந்து கிடையாது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள். இந்திய அரசு இது உள்நோக்கம் கொண்டது என்கிறது. மக்களோ சிக்குன்-குனியா போய் பன்றி வந்தது டும்டும்டும்டும்...பன்றிக் காய்ச்சல் போய் என்டிஎம் வந்தது டும்டும்டும்டும் என்று அடுத்த தாக்குதலுக்கும் பீதிக்கும் தயாராகி வருகிறார்கள்.


துன்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமது மக்களை மீட்டெடுக்க வேறு வழியின்றி ஆயுதம் தூக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அழித்தொழிக்கின்றனர். அதை பன்னாட்டு நிறுவனங்கள், ஊடகங்கள் ஆதரிக்கின்றன. ஏனெனில், ஒருவனுடைய  உணவு, உடை, உரிமையை பறிப்பதை எதிர்ப்பது பயங்கரவாதமாம்.


அப்படி என்றால், பணம், அதிக பணம், மிக அதிக பணம் என்ற  மனப்பான்மையில் செயல்படும்  கார்பரேட் மருத்துவத் துறை நிறுவனங்கள் செய்வதும் புதிய பயங்கரவாதம் தானே.  யாரும் இதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லையே. பாவம் மனித இனம்!