Saturday, August 7, 2010

ஆட்டையப் போடும் செல்பேசி சேவை நிறுவனங்கள்
செல்/தொலைபேசி இன்றைய அவசியத் தேவை. தரைவழித் தொலைபேசியை விட செல்பேசி எனப்படும் செல்ஃபோன் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிவிட்டது. பள்ளிக் குழந்தைகள் முதல் நாட்டின் மிக உயர் பொறுப்பில் இருப்போர் வரையும், ஆடு மேய்க்கும் கிராமத்துப் பெரியவர் முதல் அகில உலகையும் ஆண்டு கொண்டிருப்போர் வரை செல்பேசி முக்கியமாகிவிட்டது. தகவல் புரட்சிக் காலம் இது.உணவு, உடை, இருப்பிடம் வரிசையில் செல்பேசியும் சேர்ந்து பல நாட்களாகிவிட்டது.


அழைப்பவருக்கு மட்டுமல்ல அழைப்பை பெறுபவரும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை மாறி இன்றைக்கு ஒரு விநாடிக்கு ஒரு பைசா என்ற நிலைக்கு செல்பேசி சேவை நிறுவனங்கள் இறங்கி வந்துள்ளன. குறிப்பிட்ட கால வரையறை இல்லாமல் நீண்ட நாட்களுக்கு இன்கமிங் மட்டும் பெறும் வசதி, செல்போனில் அரட்டை, இன்டெர்நெட் என்று ஏகப்பட்ட வசதிகளைத் தருகின்றன.

அதே நேரம், வாடிக்கையாளருக்குத் தெரியமால் அல்லது தெரிந்தே திருடுவது எப்படி என்றும் இந்நிறுவனங்கள் தெரிந்து வைத்துள்ளன. போட்டிகள் நிறைந்த தொலைபேசி சேவை வணிகத்தில் மற்ற நிறுவனங்களை விட அதிக வசதிகள் அளிக்கிறோம் என்று கூறிக் கொள்ளும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள், மற்ற நிறுவனங்களை விட அதிகமாக கொள்ளையடிக்கிறோம்...வாடிக்கையாளரிடமிருந்து பணத்தைத் திருடுகிறோம் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

தேவையில்லாமல் குறுஞ்செய்தி அனுப்புவது, அழைப்புக் கொடுத்து காலர் ட்யூன் வேணுமா என்று கேட்பது இப்படி பல தொல்லைகள். இதில் நிதி நிறுவனம், வங்கி போன்றவற்றுக்கு நமது எண்களை விற்று அதில் காசு பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் நம்மை அழைத்து கடுப்பேற்றுவதும் நடக்கிறது. இது நமக்கு மட்டும் நடப்பது இல்லை. இந்தியாவின் நிதியமைச்சரான பிரணாப் முகர்ஜிக்கும் இதே நிலைதான். சமீபத்தில் நடந்த முக்கிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது வந்த தொலைபேசி அழைப்பில் பேசியவர், வீடு கட்ட கடன் வேண்டுமா என்று கேட்டுள்ளார். (உனக்கு எத்தனை கோடி வேண்டும் என்று திருப்பிக் கேட்டிருக்கவேண்டும்) நான் முக்கியக் கூட்டத்தில் இருக்கிறேன் என்று கூறி வைத்துவிட்டார்.

அம்பானியிடமும் இதே போல் வீடு கட்ட கடன் வேண்டுமா என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது ஒரு தொலைபேசி அழைப்பில். ஆக இந்தத் தொல்லை எல்லோருக்கும் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க  பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் படும் பாடு சொல்லி மாளாது. எனது நண்பர் ஒருவர் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் நீங்கள் டவுன்லோட் செய்த விளையாட்டிற்கு 90 ரூபாய் ஆட்டையப் போட்டுட்டோம் என்று தகவல் வருகிறது. உடனே சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு கேட்டால்...அப்படித்தான் செய்வோம் என்ற ரீதியில் பதில் வேறு. நண்பரோ கோபக்காரர். பிடித்து கண்டபடி திட்டி விட்டுவிட்டார். அதை வேறு யாரேனும் கேட்டால் ஒன்று கொலை அல்லது தற்கொலை தான் செய்ய வேண்டும். அப்படி வசைபாடினார். இப்போது அவர் வேறு செல்சேவையைப் பயன்படுத்துகிறார்.

இதே பிரச்னை இப்போது எனக்கும் வந்துவிட்டது. சில நாட்களுக்கு முன் ரூ.50க்கு சீட்டிங்டெல் ரீசார்ஜ் போட்ட சிறிது நேரத்தில் 40 ரூபாயைக் காணவில்லை. விசாரித்தால் நீங்கள் டவுன்லோட் செய்தீர்கள் என்றனர். நான் சண்டைப் பிடித்த பின்னர் அதை திரும்பவும் அளித்தார்கள். பிறகு ஒரு 5 மணி நேரம் கழித்து மீண்டும் அதைக் காணவில்லை. மீண்டும் சண்டை. இப்போது நீங்கள் இன்டர்நெட் பார்த்தீர்கள் என்றனர். நானோ இன்டர்நெட் ஜிபிஆர்எஸ் போட்டிருக்கிறேன். எனக்கு அது முடியும் கால அவகாசம் உள்ளது என்று வாதிட்டேன். சரிசரி இருந்தாலும் இது எங்க தப்பு இல்லை என்று சப்பைக் கட்டு கட்டிவிட்டு பணத்தைத் திருப்பி அளித்தனர்.

பிறகு மீண்டும் காலையில் அந்தப் பணத்தை ஆட்டையப் போட்டுவிட்டனர். கேட்டால் நான் ஏதோ டவுன்லோட் செய்தேன் என்றார்கள். அவர்களிடம் போராட முடியவில்லை. எதற்காக இப்படி ஏமாற்றுகிறீர்கள் என்று கேட்டேன். ஆனால் நாம் என்னதான் திட்டினாலும் அவர்கள் பதில் பேசமாட்டார்கள். மீண்டும் தாங்கள் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்வார்கள். அவங்க டிரெய்னிங் அப்படி. ஆனால் இம்முறை பணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறிவிட்டனர். நானும் திட்டிவிட்டு வைத்துவிட்டேன்.

வேறு என்னதான் செய்வது? வெறுத்துப் போய் இப்போது வேறு தொலைபேசி சேவையை பெறுவது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
கவனமாக இருங்கள். உங்களது செல்போனிலும் திருடக்கூடும். ஜாக்கிரதை.

இவர்களது கொள்ளையையும், திருட்டையும் தடுக்க வழியே கிடையாதா? அல்லது இவர்களைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?

5 comments:

ரமேஷ் said...

சரியா சொன்னீங்க...இந்த செல்போன் சேவை கம்பெனிக்காரன் பண்றது அந்தக் காலத்தில் வெள்ளைக்காரன் பண்ணியது போலத்தான்...

நீச்சல்காரன் said...

எனக்கு நேர்ந்ததைவைத்துப் பார்த்தால் உங்கள் கணக்கு ஏர்டெல் என நினைக்கிறேன். உபயோகமே இல்லை. சில ஆன்லைன் போரமில் புகார் கொடுத்துவிட்டு சேவையை மாற்றிவிட்டேன். கவனித்தால் அந்நிறுவனத்தைப் பற்றி தான் அதிகமான புகார்கள் உள்ளது.
இங்கு பாருங்கள் ஏதாவது உதவுமாஎன்று.
http://ethirneechal.blogspot.com/2010/03/consumer.html

ரகுநாதன் said...

@ நீச்சல்காரன்

YOU ARE RIGHT FRIEND...NAANUM ETHAAVATHU PANNA MUDIYUMA ENRU PAARKIREN. THANKS FOR COMING:)

Jayadeva said...

கன்ஸ்யுமர் கோர்ட்டுல கேசு போடலாம், ஆதாரம் இருக்கணும், நேரமும் இருக்கணும். இதெல்லாம் நமக்கு தெரியாது, முடியாதுன்னுதான் அவனுங்க ஆட்டயப் போட்டுகிட்டே இருக்காய்ங்க.

ரகுநாதன் said...

@ ஜெயதேவா

சரியாகச் சொன்னீர்கள்... மறுபடியும் 40 ரூபாய் ஆட்டயப் போட்டானுங்க..ஒன்னுமே பண்ண முடியலீங்க... போய்த் தொலையறானுங்கனு விட்டுட்டேன்... புடிச்சு கண்டபடி திட்டுன பின்னாடி எந்த மெசேஜும் அனுப்புறதில்லை...