Thursday, March 25, 2010

பீடி சுற்றும் திப்பு சுல்தான்கள்!

கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற விழாவில் கவிஞர் புவியரசு தனது உளக் குமுறலைக் கொட்டியது குறித்து எழுதி இருந்தேன். அவருக்கு முன்பு பேசிய பேச்சாளர்களில் குறிப்பிடும்படியாகப் பேசியவர் எழுத்தாளரும் தமுஎச பொதுச் செயலருமான ச.தமிழ்ச்செல்வன்.வானம்பாடி கவிஞர்களுக்கும் முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் அந்தக் காலத்தில் இருந்த சிந்தனை ஒற்றுமையே தன்னை கவர்ந்தது என்று கூறினார். தங்கள் நிறத்தில் அதாவது சிவப்புச் சிந்தனையோடு ஒரு குரல் கோவைப் பக்கம் இருந்து வந்ததை ஒரு உற்சாகத்தோடு வரவேற்றோம். அப்போது புரட்சி வந்து விட்டதாகவே நாங்கள் கருதினோம் என்று அப்போதைய புளகாங்கிதத்தை வெளிப்படுத்தினார்.

இந்தக் கவிஞர்களைப் பார்த்து அன்றைய ஒரு சில ராஜகவிக்கள் சீண்டிப் பார்த்தார்கள். நாங்கள் எழுதுவது கவிதையே இல்லை என்றார்கள். எங்களது கவிதையில் வெறும் சத்தமும் கூச்சலும் மட்டுமே உள்ளது என்று குறை கூறினார்கள். எங்கள் மக்களுக்கான சத்தத்தை நாங்கள் எழுப்பினோம். எங்கள் பறையை நாங்கள் அடித்தோம். அதில் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று எதிர்ப்பு குரல் எழுப்பினோம் என்று ஆவேசமாக கூறினார்.

சிவப்புச் சிந்தனை பேசிய தோழர் அப்படியே தேசப்பற்று மிக்க வாசகங்கள் பேசியதுதான் கொஞ்சம் ரசிக்க முடியாததாக இருந்தது. தேசம், தேசியம் என்ற ரீதியில் அவர் பேச முனைந்ததை ரசிக்க முடியவில்லை.

இருந்தாலும் சில சுவாரசியமான செய்திகளை அவர் கூறினார். அவர் பேச்சும் சுவாரசியம் மிக்கதாகவே இருந்தது. நாட்டின் நலனுக்காகப் போராடியவர்கள் இப்போது திரும்பிப் பார்க்கக் கூட ஆள் இல்லாமல் இருக்கிறார்கள் என்றார்.

அறிவொளி இயக்கத்தில் இருந்தபோது ஆரணி பக்கம் போயிருந்தோம். அப்போது சிறிய குடிசைகள் நிறைந்த வீடுகள் இருந்த பகுதிகளில் அறிவொளி இயக்க பிரசாரத்தில் ஈடுபட்டோம். அப்போது அங்கே இருந்தவர்கள் பீடி சுற்றும் தொழில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒரு குடும்பத்தில் இருந்தவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் திப்பு சுல்தான் வாரிசுகள் என்றார்கள். அவர்களது மூதாதையர்கள் சொத்துகளை இழந்ததால் இன்று பீடி சுற்றி பிழைப்பதாகவும் தங்களை அரசு கண்டு கொள்ளவில்லை என்று கூறினார்கள்.

தேசம் காக்க பிரெஞ்சு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டவன் திப்பு சுல்தான். அவனது வாரிசுகள் பீடி சுற்றிப் பிழைக்கிறார்கள். இந்த தேசத்தின் தலை எழுத்து இதுதான் என்றார் ஆதங்கத்தோடு.

அதேபோல் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அரண்மனையை சுற்றிப் பார்க்கப் போயிருந்தோம். அங்கே ஒருவர் வேட்டியை தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு பெரிய மீசையுடன் தலைப்பாகை வைத்துக் கொண்டு கம்பீர நடையுடன் நடந்து வந்தார். யார் அவர் என்று கேட்டபோது அவர் கட்டபொம்மன் பரம்பரையில் வந்தவர் என்றார்கள். அந்த அரண்மனையை அவர்தான் பார்த்துக் கொள்வதாக அவரே கூறினார். பிறகு எங்களை அரண்மனையை சுற்றிக் காட்டினார். அந்த அரண்மனையில் உள்ள அரியாசனத்தில் கட்டபொம்மனைப் போல் அமர்ந்து ராஜ களையோடு பார்த்தார்.

எங்க தாத்தா இங்கதான் உட்கார்ந்தார். இங்கதான் வாள் பயிற்சி எடுத்தார். இங்குதான் சாப்பிடுவார் என்று ஒவ்வொரு இடமாக அவரே கூட இருந்து பார்த்ததுபோல் சொல்லிக் கொண்டே வந்தார். இத்தனையும் பேசியவர், கிளம்பும்போது ஒரு 20 ரூபாய் இருந்தால் கொடுங்கள் என்று கேட்ட போது ஆடிப்போய் விட்டோம். பிறகு 100 ரூபாய் எடுத்துக் கொடுத்தோம். ஆனால் 20 ரூபாய் மட்டும் போதும் என்று வாங்கிக் கொண்டார்.

எங்கள் நிலையைப் பாருங்கள். காட்டிக் கொடுத்த எட்டப்பன் வாரிசுகள் இன்று சுகமாக வாழ்கின்றனர். ஆனால் நாட்டைக் காத்த கட்டபொம்மன் வாரிசுகள் பிச்சை எடுக்காத குறையாக வாழ்ந்து வருகிறோம் என்று சொன்னபோது அரசுகளின் மீது ஆத்திரமாக வந்தது என்றார்.

ஒரு நல்ல நாவலை, கவிதையைப் பாராட்ட சில பத்திரிகைகளுக்கு மனமில்லை என்று கூறியபோது சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தேன். யாரை போட்டுத் தாக்க வருகிறார் என்று ஊகிக்க இடம் தராமல் அவரே கூறினார்.

காலச்சுவடு இதழில் நாவல் வரலாறு குறித்து கட்டுரை எழுதினார்கள். அதில் மிகச் சிறந்த நாவல்களை குறிப்பிட்டார்கள். நாங்கள் மறுக்கும் நாவலாசிரியர் பற்றியும் எழுதினார்கள். பரவாயில்லை. இருக்கட்டும். ஆனால் எவ்வளவோ முயற்சி எடுத்து ஆயிரம் பக்கங்களில் எழுதிய வெங்கடேசனின் காவல் கோட்டம் பற்றி ஒரு வரி எழுத மனமில்லையா அவர்களுக்கு என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு எவ்வளவு முயற்சி, உழைப்பு,ஆராய்ச்சி தேவைப் பட்டிருக்கும். அதை எழுதி முடிக்க அவர் எவ்வளவு உழைப்பை செலவிட்டிருப்பார். இது போன்ற முயற்சிகளைக் கூட பாராட்ட அந்த இதழுக்கு மனமில்லையா என்று ஆதங்கப்பட்டார்.

பிறகு புவியரசு கவிதை வரிகளை குறிப்பிட்டு பேசி தனது உரையை முடித்துக் கொண்டார்.

6 comments:

venkat said...

//காட்டிக் கொடுத்த எட்டப்பன் வாரிசுகள் இன்று சகமாக வாழ்கின்றனர். ஆனால் நாட்டைக் காத்த கட்டபொம்மன் வாரிசுகள் பிச்சை எடுக்காத குறையாக வாழ்ந்து வருகிறோம் என்று சொன்னபோது அரசுகளின் மீது ஆத்திரமாக வந்தது என்றார்.\\

மனம் கனக்கிறது.

ரகுநாதன் said...

thanx venkat :)

துபாய் ராஜா said...

//ஒரு குடும்பத்தில் இருந்தவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் திப்பு சுல்தான் வாரிசுகள் என்றார்கள். அவர்களது மூதாதையர்கள் சொத்துகளை இழந்ததால் இன்று பீடி சுற்றி பிழைப்பதாகவும் தங்களை அரசு கண்டு கொள்ளவில்லை என்று கூறினார்கள்.

தேசம் காக்க பிரெஞ்சு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டவன் திப்பு சுல்தான். அவனது வாரிசுகள் பீடி சுற்றிப் பிழைக்கிறார்கள். இந்த தேசத்தின் தலை எழுத்து இதுதான் என்றார் ஆதங்கத்தோடு.

அதேபோல் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அரண்மனையை சுற்றிப் பார்க்கப் போயிருந்தோம். அங்கே ஒருவர் வேட்டியை தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு பெரிய மீசையுடன் தலைப்பாகை வைத்துக் கொண்டு கம்பீர நடையுடன் நடந்து வந்தார். யார் அவர் என்று கேட்டபோது அவர் கட்டபொம்மன் பரம்பரையில் வந்தவர் என்றார்கள். அந்த அரண்மனையை அவர்தான் பார்த்துக் கொள்வதாக அவரே கூறினார். பிறகு எங்களை அரண்மனையை சுற்றிக் காட்டினார். அந்த அரண்மனையில் உள்ள அரியாசனத்தில் கட்டபொம்மனைப் போல் அமர்ந்து ராஜ களையோடு பார்த்தார்.

எங்க தாத்தா இங்கதான் உட்கார்ந்தார். இங்கதான் வாள் பயிற்சி எடுத்தார். இங்குதான் சாப்பிடுவார் என்று ஒவ்வொரு இடமாக அவரே கூட இருந்து பார்த்ததுபோல் சொல்லிக் கொண்டே வந்தார். இத்தனையும் பேசியவர், கிளம்பும்போது ஒரு 20 ரூபாய் இருந்தால் கொடுங்கள் என்று கேட்ட போது ஆடிப்போய் விட்டோம். பிறகு 100 ரூபாய் எடுத்துக் கொடுத்தோம். ஆனால் 20 ரூபாய் மட்டும் போதும் என்று வாங்கிக் கொண்டார்.

எங்கள் நிலையைப் பாருங்கள். காட்டிக் கொடுத்த எட்டப்பன் வாரிசுகள் இன்று சுகமாக வாழ்கின்றனர். ஆனால் நாட்டைக் காத்த கட்டபொம்மன் வாரிசுகள் பிச்சை எடுக்காத குறையாக வாழ்ந்து வருகிறோம் என்று சொன்னபோது அரசுகளின் மீது ஆத்திரமாக வந்தது என்றார்.//

கலங்க வைத்த நிகழ்ச்சிகள்.

ரகுநாதன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜா... ;)

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அறியாத பல விசயங்கள் அறிந்துகொண்டேன் . ஏதோ கனமாக தோன்றுகிறது இதயம் . பகிர்வுக்கு நன்றி !

ரகுநாதன் said...

@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

நன்றி...வருகைக்கும்..கருத்துக்கும்... :)