Friday, March 12, 2010

விஜய் ஒரு சின்ன ரஜினி: சினிமாக் கொட்டாய் அனுபவம் - பார்ட் 4


விஜய் ஒரு சின்ன ரஜினி சினிமா கொட்டாய் அனுபவம் என்ற
தொடர் பதிவை எழுத நினைத்ததற்கான காரணத்தையே மறந்து விடுவேன் போலிருக்கிறது. பல மாதம் கழித்து அதை தூசு தட்டி மீண்டும் எழுத முடிவு செய்தேன்.


விஜய் ஒரு சின்ன ரஜினி என்று ஏன் அழைக்கிறேன்/அழைக்க வேண்டும் என்பதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க காரணம் இன்னும் அப்படியே தான் உள்ளது. அதனால் எப்போது வேண்டுமானாலும் விஜயின் முடியைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு கலாய்க்கலாம்.

போகிற போக்கைப் பார்த்தால் சின்ன ரஜினி பதிவை விட சின்ன விஜய் என்று எழுதலாம் போலிருக்கிறது. “தம்பிக்கு இந்த ஊரு” என்ற காவிய சிறப்பு மிக்க படத்தைப் பார்த்த பிறகு பரத்தின் வீட்டு முகவரியை வாங்கிச் சென்று குனிய வைத்து நாலு சாத்து சாத்தலாம் என்ற அளவுக்கு கோபம் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து அநியாயமாக 50+50 ரூபாய் நாசமாக போய்விட்டது.

அது கிடக்கட்டும். இந்த தொடர் பதிவை விரைவாக முடிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த பதிவே வேண்டாம் என்று நீங்கள் நினைத்தாலும் விடப் போவதில்லை.

போன பதிவில் அந்தச் சிறுவன் வேட்டைக்காரன் படம் பார்த்தானா இல்லையா என்பதை அடுத்த பதிவில் கூறுவதாகச் சொல்லியிருந்தேன். ஞாபகம் உள்ளதா? (உனக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுடா... மாசத்துக்கு ஒன்னு எழுதிட்டு எங்களுக்கு டெஸ்ட் வேற வைக்கிறயா என்று நறநறப்பது கேட்கிறது. பிளீஸ் கோவப்படாதீங்க மக்கா...)

எம்ஜிஆர் நடித்த வேட்டைக்காரன் படம் பார்க்க டென்ட் கொட்டாய்க்கு ஆவலோடு ஓடினால் அங்கே பிரபுவும் கனகாவும் கட்டிப் பிடித்தபடி “தாலாட்டுக் கேட்குதம்மா” என்ற போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். அப்படியே விஜயகாந்த் மாதிரி ஒரு யூ டர்ன் போட்டு ஓடிவிடலாமா என்று யோசித்தான். ஏனென்றால் ரஜினி அப்போதுதான் அவனது மனதில் உள்ள சிம்மாசனத்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார். ஏற்கெனவே அங்கு உட்கார்ந்திருந்த எம்ஜிஆர் எப்போது வேண்டுமானாலும் எழுந்து செல்லும் நிலையில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தார். இதில் பிரபுவாவது குஷ்புவாவது....அந்தப் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த அவனது நண்பனுக்காக சரி வந்ததே வந்துட்டோம் பாத்துட்டுப் போயிருவோம் என்று உள்ளே சென்றான். இவ்வாறு கனகாவை ரசித்த காலங்கள் கூட உண்டு. (ஆமா...கனகா மேட்டர் என்னாச்சு...நித்யானந்தா மேட்டரில் காணாம போயிடுச்சா?)

சரி விஷயத்துக்கு வருவோம். நம்ம ஹீரோ (அட..அதுவும் மறந்து போச்சா) ரஜினியின் தீவிர விசிறியாகக் காரணம் பாட்ஷா படம் தான். அதில் வரும் ஒற்றை வரிப் பாடலுக்கு அப்புறம் தான் அவனுக்கு ரொம்பப் பிடித்துப் போனது. அதில் நக்மா பாடுவார். “கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே...”டேன்-டட-டேன்-டன் டேன்-டட-டேன்-டன் என்று மீசிக் (சாரி மியூசிக்.. அதாவது இசை...அல்லது சத்தம்னு வச்சுக்குவோம்) வரும். அன்றைக்கு முழுவதும் கண்ணாடியும் கையுமாகவே வீட்டில் இருந்தான். அவன் அம்மாவுக்கோ பையனை நினைத்து பயமாகிவிட்டது. எதற்கும் பக்கத்து வீட்டு பெண் மீது ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அதற்கு முன் உழைப்பாளி, தளபதி, அண்ணாமலை போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காவியங்களைக் கண்டிருந்தாலும் அவனால் அதை உணர முடியவில்லை. “அட நம்மளும் ரஜினியும் ஒரே நிறம்...என்ன ஒரு ஒற்றுமை. நாளைக்கே நம்மள கிண்டல் பண்ணின நாய்களிடம் சொல்லி பெருமைப்பட வேண்டும்” என்று முடிவு செய்தான். அடுத்த நாள் பள்ளியில் பெருமையடித்த போது அவனே எதிர்பாராத எதிர்ப்பு கிளம்பியது. “அடிங்கொ... நீயும் ரஜினியும் ஒன்னா... கருப்பா இருந்தா மட்டும் போதாதுடா... ஒரு இது வேணும்” என்று ரசிகக் குஞ்சுகள் அடிக்காத குறையாக மிரட்ட இவன் வெலவெலத்துப் போனான். இருந்தாலும் அஞ்சா நெஞ்சனான நம் ஹீரோ “ஒரு இது வேணும்னு சொன்னீங்களேடா... எதுடா அது” என்று கேட்க நினைத்தான். ஆனால் கர்லா கட்டையை கையாக வைத்திருப்பவனைப் போய் ஏன் சொரண்டிப் பார்க்க வேண்டும் என்று பேசாமல் வந்து விட்டான்.

இவ்வாறு ரஜினியைப் பிடிக்க வரலாற்றுக் காரணம் இருந்ததால் அவன் ரஜினி ரசிகனாகிவிட்டான். அந்தச் சமயத்தில்தான் அவன் தனது உறவினர்கள் கல்யாணத்துக்காக ஈரோட்டுப் பக்கம் செல்ல வேண்டி வந்தது. அந்த ஊர் கொஞ்சம் டவுனை விட்டு உள்ளடங்கி இருந்தது. கிராமம் என்று சொல்வார்கள். பட்டிக்காடு என்றும் நாமகரணம் சூட்டியிருந்தார்கள். கல்யாணம் காலையில்தான். இரவினில் மணமகனும் மணமகளும் கட்டித் தழுவிக் கொண்டிருக்க (அட...கற்பனையில்தாங்க) பெருசுகள் எல்லாம் சீட்டுக் கட்டும் பீடிக் கட்டுமாக பாயில் வட்டமிட்டிருந்தார்கள்.

அப்போது அவனும் அவனைப் போன்ற இளசுகளும் சேர்ந்து சினிமாவுக்கு போகலாம் என்று முடிவு எடுத்தனர். எல்லோரும் போவதற்கு அனுமதி கிடைத்தது பெருசுகளிடம் இருந்து. இந்த பட்டிக்காட்டில் எங்கேடா தியேட்டர் இருக்கு என்று அவர்கள் பின்னாலேயே சென்றான். நான்கு தெரு தள்ளி வந்தால் “அடங்கொக்க மக்கா இங்கேயும் ஒரு டென்டு கொட்டாய்” என்று அவனறியாமலேயே வாயிலிருந்து வார்த்தைகள் எழும்பின.

வழக்கம் போல யாரோ ஒருவர் டிக்கெட் எடுக்க இவன் என்ன படம் என்று அருகிலிருந்த மாமா பையனை வினவினான். அவன் சொன்ன படத் தலைப்பு ஆச்சரிப்பட வைக்கவில்லை. யார் நடிச்சதுடா என்ற கேள்விக்கு அவன் சொன்ன பதில் இவனுக்குப் புரியவில்லை. இவன் நினைச்சதோ ரஜினி, கமல் படமாக இருக்கும் என்பது. ஆனால் போஸ்டரில் பார்த்த முகமோ பக்கத்துத் தெருவில் கோலிக்குண்டு ஆடுபவன் போன்றிருந்தது. இதெல்லாம் ஒரு படமா என்று கேட்கத் தோன்றினாலும் சினிமா பார்க்கும் ஆசையில் உள்ளே சென்றான்.

இவன் பேர் என்னடா மாப்ள? நம் ஹீரோ கேட்ட கேள்விக்கு அவன் பார்த்த பார்வை இருக்கிறதே எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. அட பட்டிக்காட்டு மூடமே என்று நினைத்தானோ என்னவோ சில விநாடிகள் மௌனமாய் இருந்துவிட்டு சொன்னான்.

இவன் பேரு........................

(தொடரும்)

2 comments:

முருகன் said...

நல்ல நகைச்சுவை உணர்வோடு எழுதியுள்ளதற்கு வாழ்த்துக்கள் :)

ரகுநாதன் said...

நன்றி முருகன் :)