Tuesday, February 9, 2010

13 Tzameti (french) மரண விளையாட்டுநீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள ஒரு அதிகாரிக்கோ அல்லது சக பணியாளருக்கோ ஒரு கடிதம் வருகிறது. ஒரு முக்கியமான இடத்தில் ஏராளமான பணம் இருப்பதாகவும் அந்த இடத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற தகவலும் அதில் இருக்கிறது. ஏற்கெனவே பணத் தேவையில் இருக்கும் உங்களுக்கு அது தெரியவர, எதேச்சையாக அந்தக் கடிதம் உங்கள் கைகளில் சிக்குகிறது. நீங்கள் அதில் கூறப்பட்ட வழிமுறைப்படி அந்த இடத்துக்கு ஆவலோடும், அதே சமயம் கொஞ்சம் பயத்தோடும் புறப்பட்டுச் செல்கிறீர்கள். நடக்கப் போகும் விபரீதம் பற்றி அறியாமலும்தான்.... ஜார்ஜிய நாட்டு இயக்குநர் ஜெலா பேப்லுயானி இயக்கிய 13 (ஜமெட்டி) என்ற படம் மேலே சொன்ன படத்தின் துவக்கக் காட்சி. படத்தின் ஹீரோ செபாஸ்டியன் (ஜார்ஜ் பேப்லுயானி) கட்டட வேலை செய்யும் 22 வயது இளைஞன். ஜார்ஜியாவிலிருந்து பிரான்ஸில் குடும்பத்துடன் குடியேறி உள்ளான். வறுமையில் வாடும் தனது குடும்பத்தைக் காப்பாற்ற கட்டட வேலை செய்கிறான். முதல் காட்சியில் தனது தாயிடம் அன்றைய சம்பாத்தியத்தைப் பெருமையோடு கொடுக்கிறான்.

அடுத்த நாள் மீண்டும் வேலைக்குச் செல்கிறான். அந்த வீட்டின் மேல் கூரையை சரிசெய்ய வேலையைத் துவக்குகிறான். அப்போது அங்கு வரும் தபால்காரர் ஒரு கடிதத்தை வெளியில் இருக்கும் பெட்டியில் போட்டுவிட்டுச் செல்கிறார். வீட்டின் உரிமையாளர் பிரான்ஸிஸ் கோடன் அந்தக் கடிதத்தை எடுக்கிறார். அப்போது வெளியில் காரில் இருந்து ஒரு ஆள் அந்தக் கடிதத்தையும், கோடனையும் படம் பிடிக்கிறார். அந்தக் கடிதத்தின் உள்ளே ஒரு ரயில் டிக்கெட்டும், ஹோட்டலில் தங்குவதற்கு கட்டப்பட்ட பணத்துக்கான ரசீதும் இருக்கிறது.

அடுத்த நாள் வீட்டுக்கு வரும் நண்பர் தான் கொடுத்த பணத்தைக் கேட்கிறார். ஒரு சில நாட்களில் தருவதாகக் கூறுகிறார். அந்தக் கடிதம் பற்றிக் கேட்கிறார். அது போதைப் பொருளுடன் தொடர்புடையதா எனக் கேட்கிறார். அதை மறுக்கும் கோடன் வீட்டில் வேலை செய்யும் செபாஸ்டியனுக்கு பணம் கொடுக்கக் கூட தன்னிடம் தற்போது பணம் இல்லை என்கிறார். இவர்கள் பேசுவதை மற்றொரு அறையிலிருந்து கோடனின் மனைவி (ஒல்கா லெக்ராண்ட்) கேட்டுக் கொண்டிருக்கிறார். 

தன்னை அவர்கள் அழைத்துவிட்டார்கள் என்று முடிவு செய்யும் கோடன் குளியலறைக்குள் செல்கிறார். அப்போது மெல்ல அவரது அறைக்குள் செல்லும் ஒல்கா அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்க்கிறாள். அதில் பாரிஸுக்குச் செல்ல ரயில் டிக்கெட்டும், அங்கு வின்டஸர் ஹோட்டலில் தங்குவதற்கான ரசீதும் இருப்பதைப் பார்த்துக் குழம்புகிறாள்.

கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போது தனது கால்களின் அடியில் தண்ணீர் மெல்ல ஊர்ந்து வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடையும் ஒல்கா குளியலறைக் கதவை தட்டுகிறாள். உள்ளே தண்ணீர் விழும் சப்தம் தவிர ஏதும் இல்லாததால் கடிதத்தை மேசையின் மீது வைத்துவிட்டு, கூரை மேலே வேலை செய்யும் செபாஸ்டியனை அழைக்கிறாள். அவன் ஓடி வந்து கதவை உடைத்துப் பார்க்கும் போது அளவுக்கு அதிகமான மார்ஃபின் போதை மருந்தைச் செலுத்திக் கொண்டு குளியலறைத் தொட்டியில் இறந்து கிடக்கிறார் கோடன். அப்போது வீசும் பலத்த காற்றில் மேசையின் மீதிருந்த கடிதம் பறந்து சென்று சன்னலுக்கு வெளியே செபாஸ்டியன் கொண்டு வந்த தள்ளு வண்டியின் மீது விழுகிறது.

போலீஸ் வருகிறது. விசாரணை நடக்கிறது. அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வீட்டுக்குச் செல்கிறான் செபாஸ்டியன். அடுத்த நாள் வீட்டிற்கு வரும் கோடனின் நண்பர் அந்தக் கடிதம் பற்றி விசாரிக்கிறார். அதில் உள்ளது பற்றிக் கூறும் ஒல்கா மேலதிகத் தகவல் தெரியாது என்று கூறிவிட்டு, அந்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு பணத்தைப் பெறப் போவதாகக் கூறுகிறாள். அந்த டிக்கெட்டை தானே வாங்கிக் கொள்வதாகக் கூறுகிறார் கோடனின் நண்பர்.

மறுநாள் வேலைக்கு வரும் செபாஸ்டியனிடம் தன்னால் பணம் தர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என்றும், இனி இந்த வீடு கோடனின் தங்கைக்குத் தான் செல்லும் என்றும், அவள் அதை வேறு ஒருவருக்கு விற்கப் போவதாகவும் தெரிவிக்கிறாள் ஒல்கா. ஒரு பத்து நாள் குடும்பச் செலவுக்கு தேற வேண்டிய பணம் கை நழுவிய வெறுப்பில் அங்கிருந்து வெளியேறுகிறான் செபாஸ்டியன். 

வீட்டிற்கு வரும் அவன் அந்தக் கடிதத்தில் உள்ள ரயில் டிக்கெட், ஹோட்டல் ரசீதுடன் கிளம்புகிறான். இதில் கூறியுள்ள படி சென்றால் தனது வறுமை தீர்ந்து செல்வச் செழிப்பான வாழ்வு தரும் ஏராளமான பணம் கிடைக்கும் என்ற ஆவலில் செல்கிறான் செபாஸ்டியன். ஆனால் நடக்கப் போகும் விபரீதம் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. அவனைப் பின் தொடர்ந்து உளவுத் துறை போலீஸும் வருகிறது.

பாரீஸ் செல்லும் ரயிலில் ஏறிய அவனிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை பரிசோதிக்கிறார். அங்கு நிற்கும் மற்றொரு பயணியிடம் டிக்கெட் கேட்கும் போது தரக்குறைவாகப் பேசுகிறான் அவன். தனது தம்பியிடம் டிக்கெட் இருக்கிறது. வேண்டும் என்றால் அடுத்த பெட்டியில் இருக்கும் அவனிடம் சென்று பெற்றுக் கொள்ளுமாறு திட்டுகிறான். அப்போது அவனது தம்பியே அங்கு வருகிறான். அவன் தான் வில்லன். அல்லது வில்லன் மாதிரி. (அரேலின்)

ரயிலில் இருந்து இறங்கி ஹோட்டலுக்குச் சென்று ஓய்வெடுக்கும் செபாஸ்டியனை எழுப்புகிறது ஒரு தொலைபேசி அழைப்பு. அருகில் இருக்கும் கட்டடத்தில் உள்ள லாக்கரில் ஒரு ரயில் டிக்கெட் உள்ளது. அதில் உள்ள ரயில் நிலையத்துக்கு முந்திய நிறுத்ததில் இறங்கிவிட வேண்டும் என்று போனில் பேசும் குரல் கூறுகிறது. மீண்டும் பயணமாகிறான். அங்கு அவனுக்காக ஒரு டாக்ஸி காத்திருக்கிறது. காட்டுப் பாதை வழியே செல்லும் போது ஒரு நாற்சந்தியில் இறக்கிவிடப் படுகிறான்.

டாக்ஸி சென்ற பிறகு ஒரு கார் அங்கு வருகிறது. அதில் இருக்கும் டிரைவர் 13 என்ற எண்ணிட்ட அட்டையக் காட்டுகிறான். அதே போல் லாக்கரிலிருந்து எடுத்து வந்த 13 என்ற அட்டையைக் காட்டிய பின்னர் காரில் வந்து உட்காருமாறு அழைக்கிறான் டிரைவர். என்ன நடக்கிறது, எங்கு போகிறோம் என்றே புரியாமல் எந்தக் கேள்வியும் கேட்காமல் பயணிக்கிறான் செபாஸ்டியன். கார் ஒரு பாழடைந்த கட்டடத்துக்கு முன் நிற்கிறது. அதன் உள்ள இரண்டு பேர் அவனை சோதிக்கிறார்கள். அவனது ஸூவை வாங்கி அதன் அடிப்பாகத்தை உடைத்து சோதிக்கிறார்கள். சந்தேகப்படும் படி எதுவும் இல்லை என்று முடிவானதும் மற்றொரு காரில் ஏற்றி காட்டுக்குள இருக்கும் பங்களாவுக்குள்ள அழைத்துச் செல்கிறார்கள்.

அங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். தாங்கள் கட்டப் போகும் பணத்தைப் பற்றியும், தங்களது பந்தயக் கணக்கு பற்றியும் பேசிக் கொள்கிறார்கள். செபாஸ்டியனைப் பார்க்கும் இருவர் நீ கோடன் இல்லையே என்கிறார்கள், கோடன் இறந்துவிட்டார் என்கிறான். உனக்கு அனுபவம் இல்லையே என்று அதிர்ச்சியுடன் சொல்கிறார்கள் அந்த இருவரும். நான் ஏற்றவன் இல்லையெனில் நான் போகிறேன் என்று சொல்லும் செபாஸ்டியனை தடுத்து நீ இங்கிருந்து போக முடியாது. ஆட்டத்தில் இறங்கு என்று கட்டளையிடுகின்றனர்.

போதைப் பொருள் தாதாவின் மற்றொரு வணிகமாக திகழ்கிறது அந்த விளையாட்டு. கோடிக்கணக்கான யூரோக்களை பந்தயமாகக் கட்டுகின்றனர் அங்கு கூடி இருப்போர். பந்தயத்தில் குதிரையாக இருப்பவர்கள் 13 பேர். அவர்கள் ஆடப்போகும் விளையாட்டு மரணம். ஒவ்வொருவருக்கும் ஒரு எண் தரப்படுகிறது. செபாஸ்டியனின் எண் 13.

வலுக்கட்டாயமாக அந்த அறையினுள் தள்ளப்படும் செபாஸ்டியன் நிலை தடுமாறி நிற்கிறான். அங்கு போட்டி நடுவர் போல இருக்கும் ஒருவன் உணர்ச்சி வேகத்தின் உச்சத்திலேயே காணப்படுகிறான். ஆனால் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் மரணத்தின் கால்களைத் தழுவியபடி நிற்பதை உணர்கிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் ரிவால்வர் வழங்கப்படுகிறது. முதல் சுற்றில் ஒரு குண்டு மட்டும் தருகிறார்கள். கைகளில் நடுக்கத்துடன் செபாஸ்டியனும் பெறுகிறான்.

முதல் சுற்று. எல்லோரும் ஒருவருக்குப் பின் ஒருவராக வட்டமாக நில்லுங்கள். உங்கள் கையிலிருக்கும் குண்டை எடுத்து துப்பாக்கியின் உள்ள செருகுங்கள். தலைக்கு மேலே துப்பாக்கியைத் தூக்குங்கள். அதில் உள்ள சிலிண்டரை வேகமாகச் சுற்றுங்கள். வேகமாக. இன்னும் வேகமாக. போதும் நிறுத்துங்கள். கட்டளைகள் நடுவரிடம் வந்து கொண்டே இருக்க அனிச்சையாக 12 பேரும் செய்ய, தயங்கித் தயங்கி செய்கிறான் செபாஸ்டியன். இப்போது உங்கள் முன்னால் இருப்பவரின் தலையில் துப்பாக்கியை வைத்து குறி வையுங்கள். உயிரோடு இருப்பவர்கள் வெற்றியாளர் ஆவார்.

அடுத்து கட்டளையின் கடைசி வரி. சுற்றி நிற்கும் 13 பேருக்கும் நடுவே கூரையில் ஒரு குண்டு பல்பு தொங்குகிறது. 13 பேரும் அவர்கள் மேல் கோடிக்கணக்கில் பந்தயம் கட்டிய சூதாடிகளும் அந்த பல்பையே பார்க்கின்றனர். பல்பு எரியத் துவங்கும் போது நீங்கள் குறி வைத்த தலையை சுட வேண்டும் என்கிறார் நடுவர். 

எல்லோர் முகத்திலும் மரணத்தை தொடப் போகும் கலவரம் தெரிகிறது. செபாஸ்டியன் அழுது கொண்டே குறி வைத்து நிற்கிறான். அவனுக்கு பின்னே பாரீஸ் வரும்போது ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் தகராறு செய்பவனின் தம்பி (அரேலியன் ரீகோய்ங்) நிற்கிறான். அவன் குறி செபாஸ்டியன் தலையில் இருக்கிறது. 

துப்பாக்கியில் 6 குண்டுகள் போடலாம். ஆனால் ஒரே குண்டுதான் உள்ளது. சுட்டால் எதிரிலிருப்பவர் சாவதற்கு 6ல் 1 வாய்ப்பு. பல்பு எரிகிறது. துப்பாக்கிகள் வெடிக்கின்றன. செபாஸ்டியன் பின்னால் இருப்பவன் சுடுகிறான். வெடிக்கவில்லை. சிலர் சுடப்பட்டு கீழே சரிகிறார்கள். அவர்கள் மேல் பந்தயம் கட்டியவர்கள் திட்டுகிறார்கள். பணியாளர்கள் அந்தப் பிணத்தை அப்புறப்படுத்துகின்றனர். ஆனால் செபாஸ்டியன் மட்டும் சுடாமல் நிற்கிறான். அவன் முன்னால் நிற்பவன் மரணத்தை எதிர்நோக்கி நிற்கிறான். இதைக் கவனிக்கும் நடுவர் அவனைச் சுடச் சொல்கிறார். ஒரு உயிரைக் கொல்ல முடியாமல், அல்லது சுட்டால் என்னவாகும் என்று தெரியாத தவிப்பில் நடுங்கும் கைகளுடன் துப்பாக்கியைப் பிடித்திருக்கிறான்.

அப்போது ஓடி வரும் மற்றொருவன் செபாஸ்டியன் தலையில் வைத்து சுடச் சொல்லி மிரட்டுகிறான். வேறு வழியில்லாமல் சுடுகிறான். வெடிக்கவில்லை. பீதியின் உச்சத்தில் நின்ற முன்னாள் நிற்பவன் செபாஸ்டியனை அடிக்கிறான். சுட வேண்டியதுதானே என்று கத்துகிறான். முதல் சுற்று முடிவடைகிறது. அறையில் சென்று ஓய்வெடுக்கிறான். அப்போது அரேலியன் செபாஸ்டியன் மீது காகிதத்தை வீசி அவமானப்படுத்துகிறான். தனது பந்தயதாரரான அண்ணனிடம் தனக்கு வர வேண்டிய பணத்தைத் தருமாறு கேட்கிறான் அரேலியன். அந்த அறையில் வேறு சிலர் மார்ஃபின் போதை மருந்தை உட்கொள்கிறார்கள். செபாஸ்டியனுக்கு வேண்டுமா என்று கேட்கிறார்கள். மறுக்கிறான்.

இரண்டாவது சுற்று. இப்போது 2 குண்டுகள் தரப்படுகின்றன. அதே போல கட்டளைகள். பல்பு எரிகிறது. இம் முறை செபாஸ்டியன் பின்னால் இருப்பவன் சுடப்படுகிறான். அதனால் செபாஸ்டியன் தப்பிக்கிறான். ஆனால் எதிரில் இருப்பவனை செபாஸ்டியன் துப்பாக்கி சுடுகிறது. அரேலியன் தப்பிக்கிறான். செபாஸ்டியனும் தான்.

மூன்றாவது சுற்று. 3 குண்டுகள். இப்போதும் அரேலியன், செபாஸ்டியன் தப்பிக்கிறார்கள். அவர்கள் மீது பந்தயத் தொகை ஏறிக் கொண்டே செல்கிறது. மற்றவர்கள் மீது பந்தயம் கட்டித் தோற்றவர்கள் கூட செபாஸ்டியன் மீது பந்தயம் கட்ட முன் வருகிறார்கள்.

கடைசிச் சுற்று. மிச்சமிருக்கும் ஆட்களின் எண்கள் குலுக்கப்படுகின்றன. 2 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் தங்கள் விதியை முடித்துக் கொள்ள வாய்ப்புத் தரப்படும். அரேலின் தேர்வாகிறான். அவனது எண் 6. மற்றவன்....ஆம். செபாஸ்டியன். அவன் எண் 13. 

4 குண்டுகள். இப்போது ஒருவரின் குறி மற்றொருவர் நெற்றியில் இருக்கிறது. மரணத்தை நேருக்கு நேர் பார்க்கும் வாய்ப்பு. பல்பு எரிகிறது. அரேலின் சுடுகிறான். வெடிக்கவில்லை. செபாஸ்டியனுடையதும் வெடிக்கவில்லை. 

5 குண்டுகள். பல்பு எரிகிறது. மரணத்தின் அச்சம் முகத்தில் அப்பிக் கொள்ள செபாஸ்டியன் அழுகிறான். அஞ்சாமல் நிற்பதாக நினைக்கும் அரேலினுக்குள்ளும் மெல்ல மரண பயம் தொற்றுகிறது. அரேலின் சுடுகிறான். ஒன்றும் ஆகவில்லை. இப்போது செபாஸ்டியன் சுடுகிறான். பிணம் சரிகிறது.

வெற்றி என்று வெறித் தனமாகப் பேசுகிறார்கள் பந்தயதாரர்கள். மரணத்துடன் சில மணி நேரம் வாழ்ந்துவிட்ட பயத்தில் செய்வதறியாது நிற்கிறான் செபாஸ்டியன். அவனுக்குச் சேர வேண்டிய 8,50,000 யூரோவை வாங்கிக் கொள்ளுமாறு கூறுகிறார்கள். அதைப் பெறுகிறான்.

அவனை அழைத்து வந்தவன் அவன் பின்னாலேயே வந்து தனக்கு ஏதாவது தருமாறு கேட்கிறான். ஒரு பணக்கட்டை எடுத்து மரணத்தின் கைகளில் தன்னை தள்ளிவிட வந்த அவன் கைகளில் தராமல், டேபிளின் மீது வீசுகிறான்.நாங்கள் உன்னை வழியனுப்புகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் சந்தேகமடையும் செபாஸ்டியன் அங்கிருந்து தப்பிக்கிறான். காட்டுக்குள் செல்லும் போது அவ்வழியே ஒரு கார் வருகிறது. ஒளிந்து கொள்கிறான். காரிலிருந்து அவன் மீது பந்தயம் கட்டியவன் இறங்கி சிறுநீர் கழிக்கிறான். காரின் எண்ணைப் பார்க்கிறான். ஜிஆர் 13 13.

பாரீஸின் ஒரு ஹோட்டல் அறையில் தங்குகிறான் செபாஸ்டியன். தன்னிடமுள்ள பணத்தை கூரியர் மூலம் பார்சல் அனுப்பி விட்டு தனது வீட்டுக்குத் தகவல் கூறுகிறான். இவ்வளவு பணம் ஏது என்று கேட்கும் தனது மாமாவிடம் வந்து சொல்கிறேன். ஒரு வேளை வராமலும் போகலாம் என்றும் சொல்கிறான். 

ரயில் நிலையத்தில் காத்திருக்கிறான். போலீஸ் வருகிறது. விசாரிக்கிறது. அழைத்துச் செல்லப்படுகிறான். உளவுத் துறை விசாரிக்கிறது. உண்மையை மறுக்கிறான். தான் அங்கே போனபோது துப்பாக்கியால் தன்னை சுட வந்ததாகவும், இருட்டில் தப்பி வந்ததாகவும் கூறுகிறான். இதெல்லாம் என்ன என்று போலீஸிடம் கேட்க, இது ஒரு மரண வியாபாரம் என்கிறார் அவர். நீ மட்டும் உண்மையைக் கூறியிருந்தால் அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தியிருப்பேன் என்கிறார். 

பிறகு மனம் மாறி, தான் ஒரு காரை மட்டும் அடையாளம் கூற முடியும் என்கிறான். கார் எண் ஜிஆர் 1313. அதைக் குறிக்கிறார் போலீஸ் அதிகாரி.

மீண்டும் ரயில் நிலையம். ரயிலில் ஏறி வாழ்வின் வசந்தத்தை நோக்கிச் செல்கிறான். அடுத்த பெட்டியில் அரேலின் அண்ணன் இருக்கிறான். மெல்ல நடந்து வந்து செபாஸ்டியன் பக்கத்தில் உட்காருகிறான். இருவரும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். அச்சமும், வெறியும் மாறி மாறி காட்டுகிறது அவர்கள் முகம். அடுத்து நடந்தது என்ன......டிவிடி, டோரன்ட் இப்படி ஏதாவது இருந்தால் பாருங்கள்.

இந்தப் படத்தை யூ டிவி வேர்ல்டு மூவிஸ் சானலில் 2 வருடத்திற்கு முன்பு பார்த்தேன். இந்தப் படத்தின் இசையும், அதில் வரும் பியானோவின் லயமும் மிகச் சிறந்த த்ரில்லருக்கு ஏற்ப அமைந்திருந்தது. த்ரில்லிங் என்பது ரத்தம் சீறிப் பாய்வதில் இல்லை. அது நடிப்பவரின் முகத்திலும், திரைக் கதையிலுமே இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது இப்படம். 

முக்கியமாகக் கூற வேண்டியது, இப்படம் 2005-ல் வந்திருந்தாலும் கருப்பு வெள்ளையிலேயே எடுக்கப்பட்டுள்ளது. அதுவே இந்தப் படத்தின் dark thriller ஆக உணர்வதற்கு பயன்படுகிறது. 

முதலில் இந்தப் படத்தின் பெயரை மறந்து விட்டேன். பிறகு கூகிளில் தேடிப் பிடித்தேன். அந்த அளவுக்கு என்னைக் கவர்ந்த படம். இந்தப் படத்தை இப்போது ஹாலிவுட்டில் எடு்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே 13. ஆனால் அப்படியே எடுக்காமல் கதையை மாற்றி எடுங்கள் என்று இயக்குநர் ஜெலா பேப்லுயானி கூறியுள்ளார். அவரது தம்பி தான் செபாஸ்டியனாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் ஜார்ஜ் பேப்லுயானி.

பிரெஞ்சு, ஜார்ஜியன், ஜெர்மன் மொழிகளில் வெளியான இப்படம் சன்டேன்ஸ், வெனிஸ் திரைப்பட விழா உள்பட 8 விருதுகளைப் பெற்றது. ஜார்ஜிய மொழியில் ஜமெட்டி என்றால் 13 என்று பொருள்.

படத்தின் டிரைலர் இங்கே
 

26 comments:

Sugu said...

http://www.novamov.com/video/er21irchyb2um
http://www.novamov.com/video/y0lyc54h7xk71

vivekam said...

பயங்கர திர்லிங்கான படம்
கதை விமர்சனம் அதை விட விர்விருவிபு

venkat said...

படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை அதிகரித்து விட்டது.

veera said...

தமிழ் பட இயகுனர்கள் யாரும் பார்கவில்லை என்று நினைக்கிறேன்

maya said...

படத்தோட திருட்டு சீடி எங்கே கிடைக்கும் நண்பரே (சாரி பழக தோசத்துல கேட்டிட்டேன் )

anbu said...

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்

s.k.kannan said...

//பல்பு எரிகிறது. மரணத்தின் அச்சம் முகத்தில் அப்பிக் கொள்ள செபாஸ்டியன் அழுகிறான். அஞ்சாமல் நிற்பதாக நினைக்கும் அரேலினுக்குள்ளும் மெல்ல மரண பயம் தொற்றுகிறது. அரேலின் சுடுகிறான். ஒன்றும் ஆகவில்லை. இப்போது செபாஸ்டியன் சுடுகிறான். பிணம் சரிகிறது.\\

திக் திக் திக் ........

Chitra said...

Good review. முடிவை சொல்லாமல் இருந்ததுக்கு நன்றி.

mythoughts said...

உண்மையில் இது மரண விளையாட்டுத்தான்

kovaivenkat said...

சூப்பர்ப்பு!

கருந்தேள் கண்ணாயிரம் said...

நண்பர் ரகுநாதன்,

மிகவும் நல்ல முறையில் எழுதியிருக்கிறீர்கள். முழுவதும் படித்தேன். அருமை. ஒரு சின்ன மேட்டர் என்னன்னா, ஒரு ப்ளோல படிக்கும்போது, நம்ம நண்பர் கார்த்திகேயன் (கீதப்ரியன்) எழுதுற மாதிரியே இருந்தது . . :--) . . அலசி ஆராய்ந்து அருமையாக எழுதியிருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள் பாஸு . . குத்து குத்துன்னு குத்திடோம்ல (வோட்ட ) . . எழுதிக்கினே இருங்க . .

ரகுநாதன் said...

@ sugu, vivkeam

thanks for the comment

ரகுநாதன் said...

@ venkat

நேரம் கிடைத்தால் படத்தை பாருங்க....சூபரா இருக்கும் :)

ரகுநாதன் said...

@ veera

சரியா சொன்னீங்க :)

ரகுநாதன் said...

@ maya, anbu, sk.kannan

thanks ;)

ரகுநாதன் said...

@ சித்ரா

உங்கள் கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி :)

சொல்லி விடலாம் என்று நினைகிறேன். அவ்வளவு நேரம் படித்து விட்டு மிச்சத்த சி டி வாங்கி பாரு என்றால் கடுப்பாகும் என்று நினைகிறேன். :)

ரகுநாதன் said...

@ my thoughts, kovai venkat

thanks :)

ரகுநாதன் said...

@ கருந்தேள் கண்ணாயிரம்

வாங்க boss. உங்களது பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிறது. உங்கள் பதிவுகளை படித்த பின் அது போல எழுத வேண்டும் என்ற ஆவல் வந்தது. கீதப்ரியன் பதிவின் தாக்கம் இந்த பதிவில் இருப்பதை சரியாய் கண்டுபுடிசிடீன்களே பாஸு :) அவர்தான் சீன பை சீனா எழுதறாரே.

உங்கள் வருகைக்கும் வோட்டுக்கும் நன்றி :)

அடிக்கடி வாங்க ;)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நண்பா , மிக நல்ல எழுத்துடன் அமைந்த விமர்சனம்,கருந்தேள் சொன்னது எல்லாம் பெரிய வார்த்தை,அவர் அருமையாக வர்ணிக்கிறார். படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை அதிகரித்தே விட்டது.இதை உடனே தரவிறக்கிவிடுகிறேன்.உங்களையும் சினிமாக்காரங்க பட்டியலில் போடுடறேன்
இனி தொடர்ந்து வருகிறேன்.ஓட்டுக்கள் போட்டாச்சி நண்பா.

ரகுநாதன் said...

நன்றி கார்த்திகேயன்... வருகைக்கும், பாராட்டுக்கும்...உங்கள் சினிமா பதிவு அதிக ஈர்ப்பையும் ஆவலையும் ஏற்படுத்துகிறது. அடிக்கடி வாங்க...:)

ஹாலிவுட் பாலா said...

அட... நான் கூட கார்த்திக்கேயந்தான்.. இன்னொரு பெயரில் எழுதிட்டாரோன்னு நினைச்சேன்! :) :)

இன்னொரு விக்கியா...?!!! கலக்குங்க!! :)

ரகுநாதன் said...

@ஹாலிவுட் பாலா

அட தல...வாங்க...வாங்க...வாங்க...வாங்க... ;)

உங்க பதிவெல்லாம் ரொம்ப நாளா படிக்கிறேன்...அதனாலே ஒரு இது வந்து நானும் எழுதிட்டேன்....அடிக்கடி வந்து ஒரு குத்து குத்தி (அட ஒட்டுதாங்க) பின்னால கொடுத்தீங்கன்னா (பின்னூட்டம்தான்) சந்தோசப்படுவேன்...தொடர்ந்து வாங்க பாலா... :)

. said...

மாபியாவின் சூதாட்டம் எந்த அளவுக்குப் போயிருக்கிறது என்பதை மிக விறுவிறுப்பாக விவரித்திருக்கிறீர்கள். விவரிப்பு மிக அருமையாக இருந்தது.முடிவைத் தவிர மீதிப்படத்தைப் பார்த்துவிட்டது மாதிரியே இருக்கிறது.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

மிகவும் தெளிவான, அழகான நடையில், விறுவிறுப்புக் குறையாது எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

ரகுநாதன் said...

முதல் வருகைக்கும், உங்கள் பாராட்டுக்கும் நன்றி தமிழ்மகன் சார் :)

ரகுநாதன் said...

வாங்க கனவுகளின் காதலரே...உங்கள் பாராட்டுகள் உற்சாகம் அளிக்கிறது. வருகைக்கு நன்றி. :)