Monday, January 25, 2010

இலவச டி.வி.யும் அமைச்சர்களின் நையாண்டியும்கடந்த தேர்தலின்போது கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார் கலைஞர். அதனால் ஏராளமானோர் பயன் பெற்றனர். கிலோ அரிசி அதுவும் ரேசன் அரிசியை யார் வாங்கப் போகிறார்கள் என்று கேட்டபோது என் நண்பனிடம் இருந்து வந்த பதில் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவன் வங்கியில் கடன் வாங்கி பொறியியல் படிப்பைப் படித்து முடித்தான். பிறகு நல்ல வேலையும் கிடைத்தது. பணி நிமித்தமாகத் தான் அவனைத் தெரியும். ஏன் எங்கள் வீட்டில் வாங்குகிறோமே என்றபோது தான் ரேசன் அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாய் என்பது எத்தனை பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று புரிந்தது. ஆனால் அதையும் கடத்துகிறார்கள் அதிகாரிகளின் ஆசியுடன் என்பது கொடூரமானது.


மற்றொரு வாக்குறுதி இலவச கலர் டி.வி. வழங்குவது. அதை ஒவ்வொரு ஊராட்சியாக வழங்கி வருகின்றனர். அதிலும் எங்களுக்கு வரவில்லை என்று கூறி பெரும்பாலான இடங்களில் சாலை மறியல், போராட்டம் என்று மக்கள் வீதிகளில் குவிகின்றனர். தமிழனின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

சில இடங்களில் நிலைமை மோசம். டி.வி. கிடைத்திருக்கும். ஆனால் டி.வி.யை பார்க்க முடியாது. காரணம் அந்த வீதியிலேயே மின்சாரம் இருக்காது. முதலில் மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவையை வழங்குங்கள் அப்புறம் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொடுங்கள் என்று யாரும் வீதியில் இறங்கிப் போராடுவதில்லை. இது ஒருபுறம் என்றால் டி.வி.யை கொடுப்பதற்கு ஏகப்பட்ட பாரபட்சம். இவன் நம்ம ஆள், நம்ம கட்சி, நம்ம மச்சான் என்று பார்த்துப் பார்த்து கொடுப்பதாகப் புகார்கள் வேறு. டி.வி. வேண்டுமானால் அதற்கு 500 ரூபாய் கொடு என்று அந்த ஏரியா கவுன்சிலரே விலை வைப்பது மற்றொரு புகார். இது இப்படி என்றால் வாங்கி வந்த டி.வி.யை அன்றைக்கே மற்றொருவருக்கு வந்த விலைக்கு விற்றுவிட்டு வேறு வேலை பார்க்கப் போகும் பொதுமக்கள் இன்னொருபுறம்.

நான் ஈரோட்டில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது அங்கே டி.வி. வைத்திருந்தார்கள். அதை ஓடவிட்டால் முதலில் தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி என்று வருகிறது. பாருங்கள் மக்களின் வரிப்பணத்தில் வந்த இலவசப் பொருள் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வாங்கும் ஹோட்டலின் அறையில் தங்குவோரை மகிழ்விக்கிறது.

இந்த டி.வி.வழங்கும் நிகழ்ச்சி என்று ஒன்று நடக்கும். அதில் அமைச்சரோ, எம்எல்ஏவோ, கட்சியின் மாவட்டச் செயலரோ பேசுவார்கள். அப்போது ஒப்பிப்பார்கள் பாருங்கள் ஒரு புள்ளி விவரத்தை. தாங்கவே முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞரின் உத்தரவின் பேரில் இது வரை இத்தனை லட்சம் டி.வி. வழங்கியிருக்கிறோம். அத்தனை பேர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று பேசுவார்கள். சரி இது ஏதோ புள்ளிவிவரம் என்று விட்டுவிடலாம்.
ஆனால் இந்த அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சொல்லும் ஒரு விசயம் தான் எரிச்சலும் கோபமும் ஏற்படுத்தும். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மத்திய அமைச்சர் காந்திச் செல்வன், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் என்று யாராக இருந்தாலும் ஒரு வரி பஞ்ச் டயலாக் சொல்வார்கள். அது இதுதான். உலகச் செய்திகளை அறிந்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காகவும், வீட்டிலிருக்கும் பெண்களும் உலக நடப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் கலைஞரின் இந்த இலவச கலர் டி.வி. வழங்கப்படுகிறது என்பார்கள். இதைக் கேட்டபோது ஈழத்தின் சோகத்தின் போதும் சிரிப்புதான் வந்தது. ஆனால் அதன் பின்னால் வெறுப்பும், வேதனையும் நிறைந்திருந்தது.

நம்ம ஆட்களும் இளித்துக் கொண்டு வாங்கி வந்து வீட்டில் வைத்து விடுவார்கள். ஏற்கெனவே டி.வி. உள்ள வீட்டில் மேலும் 2 இலவச டி.வி. சும்மா இருந்து கொண்டு இருக்கிறது.

ஈழப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போதும், அங்கே மக்கள் புழுக்களைப் போலத் துடித்த போதும், உதவிக்கு ஏங்கித் தவித்தபோதும், இனப் படுகொலை உச்சத்தில் இருந்த போதும் மேற்படி டி.வி.யைப் பார்த்து யாரேனும் தெரிந்து கொண்டார்களா?

எந்த டி.வி.யில் அந்தக் கொடுமையை, போருக்குப் பின்னான அவலத்தை, முள்வேலி சித்திரவதையைக் காட்டினார்கள்? அரசின் இலவச டி.வி.யிலா? இதைப் பார்த்துதான் உலகச் செய்திகளைத் தெரிந்து கொண்டார்களா? உலகச் செய்திகளை இருட்டடிப்பு செய்துவிட்டு இலவச டி.வி.யில் சீரியல் பார்த்து எங்கள் சேனல்களை வளப்படுத்துங்கள் மக்களே என்பதற்கே இந்த இலவச டி.வி. கொடுக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர்களும் அரசும் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வீர்களா மக்களே?

6 comments:

s.k.kannan said...

கர்நாடகாவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் இலவச டிவி கொடுப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்தது ஆனாலும் வெற்றிóபெறவில்லை.
பிரியா (ஓசியில்) பினாயிலை கொடுதாக்கூட ஓசியில் கிடைகிறதனாலே குடித்துவிடுவான் தமிழன்.
தமிழன் சரியில்லாத காரணத்தினாலே அரசியல்வாதி விளையாடுகிறான்.

venkat said...

இலவசம் தமிழ் நாட்டை சீர்குலைத்துவிட்டது என்று சொன்னால் மிகைஆகாது.

veera said...

இலவச டிவி மாத்திரம் அல்ல இலவச காஸ், இலவச ஸ்டவ், இலவச வீட்டு மனை, இப்படி இலவசம் கொடுத்து தமிழக மக்களை பிச்சக்காரர்களாக ஆக்கிவிட்டார்கள் அரசியல்வாதிகள்.

ரகுநாதன் said...

தமிழனுக்கு என்றோர் குணமுண்டு கண்ணன் :)

ரகுநாதன் said...

நன்றி வெங்கட் சார் :)

ரகுநாதன் said...

@ VEERA

THANKS