Saturday, January 23, 2010

கூகு‌ள்-சீனா தகராறு!

19.01.2010 தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்


உனக்குத் தெரிந்தது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதும், உனக்குத் தெரியாதது என்ன என்பதை அறிந்து கொள்வதுமே வாழ்வின் உண்மைத் தேடல் என்றார் சீனத் தத்துவஞானி கன்ஃபூசியஸ். அப்படிப்பட்ட நாட்டில் இன்று பரவலான தகவல் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
தகவல்களைத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு மனிதனின் தனியுரிமை என்ற கருத்து இன்று உலகெங்கும் உள்ள பல்வேறு அரசுகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.சீனா பொருளாதார வல்லரசாக இருந்தாலும் கருத்துச் சுதந்திரம் அளித்தல், ஜனநாயக, மனித உரிமைச் செயல்பாடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளது. ஆனால் அவற்றை ஒடுக்குவதில் முன்னணியில் உள்ளது. அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக அமெரிக்க இன்டர்நெட் தேடுபொறி (சர்ச் என்ஜின்) நிறுவனமான கூகு‌ள், சீனா இடையே அண்மையில் ஏற்பட்ட வணிகத் தகராறு அமைந்துள்ளது.

இன்டர்நெட் வந்த பிறகு எந்த ஒரு தகவலும் உடனுக்குடன் உலகெங்கும் பரவுகிறது. இன்டர்நெட் பயன்படுத்தத் தெரிந்த ஒருவர் செய்திகள், படங்கள், ஒலி,ஒளி படங்கள், விடியோக்கள், புள்ளி விவரங்கள், கலைக் களஞ்சியங்கள், அகராதிகள் என்று எந்த ஒரு தகவலையும் உலகின் எந்த மூலையில் இருந்தும் தெரிந்து கொள்ளப் பயன்படுத்துவது சர்ச் என்ஜின் எனப்படும் தேடுபொறி ஆகும். இதில் அமெரிக்க நிறுவனமான கூகிள்.காம் உலகில் முன்னணியில் உள்ளது. சீன மொழியில் ஒரு சர்ச் என்ஜினை கூகு‌ள் நிறுவனம் 2006-ம் ஆண்டு உருவாக்கியது. ஆனால் வழக்கம் போல் சீனா தனது தணிக்கை எனும் ஆயுதத்தைப் பயன்படுத்தியது.

ஒரு தகவல் குறித்துத் தேடினால் அது தொடர்பான எந்தத் தகவலானாலும் கூகிள் சர்வரில் இருந்தால் அதைக் காட்டிவிடும். ஆனால் சீன மொழி சர்ச் என்ஜினில் அதற்கு ஒரு வரைமுறை வைக்கப்பட்டுள்ளது. அதாவது சில தகவல்கள், படங்கள், திரைப்பட துணுக்குகள், அரசியல், மனித உரிமை அமைப்புகள் பற்றிய தகவல் முடிவுகளை தானாகவே தணிக்கை செய்யும் வகையில் சீன கூகு‌ள் தேடுபொறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அந்த நாட்டு சட்டத்துக்கு உட்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக சீனாவுக்கு உலக அரங்கில் தலைக்குனிவை ஏற்படுத்தும் தியானன்மன் சதுக்கப் படுகொலை அல்லது தைவானுக்குச் சுதந்திரம் அளித்தல் ஆகியவை பற்றி தகவல் அறிந்து கொள்ள விரும்பினால் அதை சீன மொழி கூகிள் தேடுபொறி வழங்காது. சீன அரசின் விதிமுறைகளின் படி கேட்கப்பட்ட தகவல் முடிவுகளை வழங்க முடியாது என்ற அறிவிப்பையே கூகிள் தரும். இந்த சட்டம் கூகிளுக்கு மட்டும் அல்ல. சீனாவில் முதலிடத்தில் உள்ள, அதாவது மொத்த தேடுபொறி பயன்பாட்டில் 61 சதவீதம் சந்தையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள கூகிளின் எதிரி நிறுவனமாகக் கருதப்படும் பைடு.காம், யாகூ, மைக்ரோசாஃப்ட் பிங்க், விக்கிப்பீடியா, யூடோ, யூ டியூப்.காம், பைபை, டாவோபோ, டாம் ஆன்லைன் என்று எந்த ஒரு இணைய தளமும் சீன அரசின் கழுகுக் கண்களுக்குத் தப்ப முடியாது.

கூகு‌ள் நிறுவனமும் இந்த சட்டத்துக்கு ஒத்துக் கொண்டுதான் தனது சேவையைத் துவங்கியது. ஆனால் சுய தணிக்கை அடிப்படையில் இதற்கு மேல் தம்மால் சேவை வழங்க முடியாது என்றும் சீனாவில் தனது சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாகவும் அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இது தொழில்நுட்ப உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதில் பணியாற்றும் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்தத் திடீர் அறிவிப்புக்குக் காரணம், முப்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள், அமெரிக்க, ஐரோப்பிய, சீன மனித உரிமை ஆர்வலர்களின் மின்னஞ்சல் கணக்குகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் டிசம்பர் மாதம் கண்டுபிடித்தது. அதற்கு துணை போனதாக அல்லது ஆதரவு கொடுத்ததாக சீன அரசின் மீது புகார் கூறியது. ஆனால் சீன அரசு இதை மறுத்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவியும், திபெத் விடுதலையை ஆதரிப்பவருமான டென்ஜின் செல்டன் என்பவரின் ஜிமெயில் கணக்கில் உள்ள தகவல்களை சீனாவிலிருந்து ஹேக்கர்கள் பார்வையிட்டதாக பகிரங்கமாக புகார் தெரிவித்த பின்பு இப் பிரச்னை பூதாகரமாக வெடித்தது.
இதைப் பெரிதாகக் கண்டு கொள்ளாத அதன் வியாபார எதிரி பைடு.காம் அதிகாரிகள், சீன மொழியில் போட்டியிட்டு சந்தையைப் பெரிதுபடுத்த முடியவில்லை என்ற காரணத்தால் தான் கூகிள் தனது சேவையை நிறுத்துகிறதே தவிர சுய தணிக்கை போன்ற காரணங்கள் எல்லாம் இல்லை என்றனர். ஆனால் கூகிளோ, சீன மனித உரிமை ஆர்வலர்களின் ஜிமெயில் கணக்குகளை ஹேக்கர்கள் எனப்படும் தொழில்நுட்ப திருடர்கள் மூலம் சீன அரசு பார்வையிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. தன்னிடமுள்ள பயன்பாட்டாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் தனது சேவையை நிறுத்திக் கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளது.
கூகுளி‌ன் இந்த முடிவை அமெரிக்க அரசும், யாகூ உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்களும் வரவேற்றுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூகிளின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான சீன தூதரிடமும் இது குறித்து அமெரிக்க உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே ஃபேஸ்புக், யூடியூப், டிவிட்டர் போன்ற சமூக இன்டர்நெட் தளங்களுக்கு தடை உள்ளது. இப்போது முக்கிய இணையத் தளமான கூகிள் வெளியேறுவது தங்களை உலகத்தில் இருந்து துண்டிப்பதைப் போலிருப்பதாக சீன இன்டர்நெட் பயனாளர்கள் கூறுகின்றனர்.

உலகிலேயே அதிக அளவாக 34 கோடி இன்டர்நெட் பயனர்களைக் கொண்ட மிகப் பெரிய சந்தையான சீனாவிலிருந்து காலி செய்யப் போகிறோம் என்று கூகிள் கூறியதால் அமெரிக்கப் பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் பைடு.காம் பங்குகளின் விலை ஒரே நாளில் 13 சதவீதம் உயர்ந்தது. ஆனால் கூகு‌ள் பங்குகள் எதிர்பார்த்த அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. வெறும் 0.5 சதவீதம் மட்டுமே விலை குறைந்தது. இது முதலீட்டாளர்கள் அந்நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

அதே நேரம், சீனாவிலிருந்து கூகு‌ள் வெளியேறுவது சீனா-கூகு‌ள் இருவருக்குமே நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியது என்று சீன நாளிதழ் குளோபல் டைம்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து வெளியேறுவதற்கு காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை. இது குறித்து சீன அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என்று கூகிள் கூறியுள்ளது.
அரசும், அரசின் கொள்கைகளும் பரவலான கருத்துச் சுதந்திரத்துக்கும், ஜனநாயகச் செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாக மாறினால்தான் இன்டர்நெட் உள்ளிட்ட ஊடகங்கள் மீதான மறைமுக, நேரடித் தாக்குதல்கள் தடுக்கப்படும். அதுவரை லாபம், நஷ்டம் ஆகியவை கூகு‌ள் போன்ற நிறுவனங்களுக்கு ஏற்படலாம். ஆனால் சாதாரண குடிமக்களுக்குக் கிடைப்பது வெறும் நஷ்டம் மட்டும்தான்.நன்றி: தினமணி

4 comments:

venkat said...

//சீனாவிலிருந்து கூகு‌ள் வெளியேறுவது சீனா-கூகு‌ள் இருவருக்குமே நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியது என்று சீன நாளிதழ் குளோபல் டைம்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.\\சீனாவிலிருந்து கூகிள் வெளியேறினால் சீனாவுக்குதான் நஷ்டம் கூகிளுக்கு இல்லை.
பதிவு அருமை வாழ்த்துக்கள்.

ரகுநாதன் said...

@ venkat sir

thanks :)

vivekam said...

//சீனா பொருளாதார வல்லரசாக இருந்தாலும் கருத்துச் சுதந்திரம் அளித்தல், ஜனநாயக, மனித உரிமைச் செயல்பாடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளது.\\

correct

ரகுநாதன் said...

@vivekam

thanks :)