Tuesday, October 27, 2009

அழகிரி, தயாநிதி, மதன் என்ற அனானிஇந்தியன் பார்வையில் தமிழன் என்ற தொடரை விளையாட்டைப் போலத்தான் துவங்கினேன். படித்த நண்பர்கள் நன்றாக இருப்பதாகச் சொன்னதால் தொடர்கிறேன்.

இதையெல்லாம் எந்தப் பத்திரிகையிலும் வெளியிட மாட்டார்கள். அதை வெளியிடப் பிறந்துததானே வலைப் பதிவு. ஆனால் இதையும் சீரியசாகப் படிக்கிறார்கள் எனும் போது ஒரு வித பொறுப்புணர்வு கூடுகிறது. விளையாட்டாகக் கூட ஒரு பதிவு மற்றவர்களை புண்படுத்திவிடக் கூடாது என்பதை இது உணர்த்துகிறது.

மதன் என்ற பெயரில் இதற்கு முந்தைய பதிவுக்கு பின்னூட்டமிட்ட தோழர் ஏன் வெளியிட வில்லை என்று கேட்டார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. அவர் இட்ட பின்னூட்டம் கொஞ்சம் கனமான விடயமாக இருந்தது. அதற்கு பதில் பதிவுதான் இது. அவர் படிப்பார் எனக் கருதுகிறேன்.


தோழர் மதன் என்ற அனானி அவர்கட்கு...

முதலில் ஒன்றை கூறிவிடுகிறேன். என்னிடம் இணைய இணைப்புக் கிடையாது. 2. நான் ஊரில் இருந்தேன். 3. மொபைல் நெட் மூலமாக அந்த இரண்டு பின்னூட்டம் மட்டுமே வெளியிட முடிந்தது. நம்மூர் இணையம் பற்றி குறிப்பாக மொபைல் நெட் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். (இந்தியாவில் தானே இருக்கிறீர்கள்?)

//Ragunathan,
may I ask you why have you omitted my comments.?
I always thought you are a person who respect other people's point of view even if it is different from your own opinion//

நீங்கள் என்னைத் திட்டி எழுதினாலும் வெளியிடுவேன். உங்கள் கருத்தை மதிக்கிறேன். என் கருத்தை நான் கூறினேன். பின்னூட்டத்தை வெளியிட மறுக்கும் அளவுக்கு இந்தி ஆதரவாளனோ தமிழ் எதிர்ப்பாளனோ கிடையாது. நான் படித்தது இளங்கலை பொருளியல். முதுகலை தமிழ் இலக்கியம். கற்றது தமிழ் .

இது ஒரு அனுபவம் தான். ஈழப் போர் நடைபெற்ற போது எனக்கும் அந்த மத்திய பிரதேச நண்பனுக்கும் இடையே சொற்போரே நடைபெற்றது. அப்போது இந்தி அவசியமா இல்லையா, விரும்பி படித்தால் ஏற்கலாமா என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. அதை பற்றியும் நம் மீது அவன் வைத்திருந்த மரியாதை குறித்தும் எழுத வேண்டும் என்பதற்காக துவங்கியதே இந்த தொடர் பதிவு.

மேலும் உங்கள் பின்னூட்டத்துக்கு என்ன பதில் எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் என்று எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் விவாதம் சரியே. ஆனால் ஒன்றைக் கவனித்தீர்களா? நாம் இந்தியை எதிர்க்கிறோம். வெறுக்கிறோம். ஆனால் நீங்கள் சொன்ன மலையாளி, வங்காளி, தெலுங்கர், கன்னடர் எதிர்க்கவில்லை. அதே நேரம் அவர்களது மொழியை நேசிக்கிறார்கள். இதற்கு என்ன சொல்வது? இந்தக் கேள்வி எனக்கும் உண்டு.

இந்தியை விரட்டினால் அந்த இடத்தில் ஆங்கிலம் வந்து குந்திக்கும்னேன் என்றார் காமராஜர். அதுதானே நடக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். வார இதழ்களில் பெரும்பாலும் ஆங்கில வார்த்தை கலந்து தானே எழுதுகிறார்கள். பிரபல தமிழ் வார இதழ். ஆனால் ஆங்கிலம் கலந்து எழுதுகிறார்கள். ஏன்? கேள்விகள் நிறைய இருக்கிறது.

நம்மை படிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். சரி என்றோம். அவருக்குப் பதவி வந்த போது ஏன் என்று கேட்டோம். அவருக்கு இந்தி தெரியும் என்றார்.

அது போகட்டும். அவர் படித்தவர். பணக்கார வூட்டுப் பிள்ளை. மன்னிப்போம். நாம் தான் அரசுப் பள்ளியில் படித்து அடிமாடு ரேஞ்சில் இருக்கிறோமே.

அண்மைய பேட்டி ஒன்றில் அதாவது மத்திய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அழகிரி பதவியேற்றார். கேபினட் கூட்டத்தில் அவரைச் சேர்க்கவில்லை. இவருக்கு வந்தது கோபம். ஏன் என்றார். அழகிரிக்கு ஆங்கிலம், இந்தி தெரியாது அதனால் தான் என்று பதில் வந்ததாம்.

அதற்கு இவர் சொன்னார். ஆங்கிலம் தெரியும் பேசுவார். இந்தியைப் புரிந்து கொள்வார். இது எப்படி இருக்கு? இது நான் புலனாய்வு செய்து சொல்லவில்லை. ஒரு ஜூ.வி.யில் படித்த ஞாபகம். ரிப்போர்ட்டராகக் கூட இருக்கலாம். சரியாக நினைவில்லை.

ஏன் அவ்வாறு சொன்னார் என்று தெரியவில்லை. ஆக, நீ படிப்பாய், நாங்கள் படிக்கக் கூடாதா என்றொரு கேள்வி இந்த இடத்தில் எழும்ப, யார் எதிர்த்தார்களோ அவர்களே காரணமாக ஆகி விடுகிறார்கள்.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் கட்டாயமாக போலந்து மொழியைப் படி என்று சொன்னால் எப்படி கோபம் வருமோ அதே போலத் தான் கட்டாயமாக இந்தி படி என்று சொன்னாலும் வரும். ஆனால் பிரான்சுக்கு செல்லும் முன் பிரெஞ்சு படிக்க விரும்பினால் அது சரி என்றால் இந்தி படிப்பதும் தவறில்லை.