Monday, October 26, 2009

"இந்தி"யன் பார்வையில் தமிழன்- பாகம் 4

எப்போது எனக்குள்ளே இந்தி எதிர்ப்பு உணர்வு புகுந்தது என்று எனக்கு நினைவில்லை. எங்கள் ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் பிரயாணிகள் தங்குமிடம் என்ற வாக்கியத்தின் கீழே தார் பூசி அழிக்கப்பட்ட சொற்றொடர் மட்டும் இன்றும் நினைவிலிருந்து அகலவில்லை. அதற்கும் கீழே இருந்த ஆங்கிலத் தொடர் அப்படியே இருந்தது. இடையில் ஏன் தார் பூசி உள்ளார்கள் என்று யாரிடமும் கேட்கத் தோன்றவில்லை.

ஜெகஜித் சிங் என்னிடம் கேட்ட கேள்விக்கும் அதற்கான பதிலுக்கும் இடையில் கிடைத்த சின்ன கேப்பில் பல நினைவுகள் வந்து சென்றன. அவன் கேட்டது இது தான்.

"சார் நீங்க பாலக்காடு போயிருக்கீங்களா?' அவ்விட பூமி நாயகிகளைப் பார்த்து ஏங்கும் எங்குலத் தமிழ் வீர இளைஞர்களைப் போல இவனும் அவர்கள் பக்கம் ஜொள் விட ஆரம்பித்து விட்டானோ என்று சட்டென்று ஒரு எண்ணம் மின்னி மறைந்தது. இவங்க ஆளைவிடவா அந்தப் பெண்கள் கலராக இருக்கிறார்கள். காதலுக்கு கண் இல்லை என்பது போல வேறு எதுக்கெல்லாம் கண் இல்லை என்ற பட்டியல் போட வேண்டி வருமோ என்று நினைத்துக் கொண்டேன்.

இந்தி எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டது எப்படி என்று தெரியவில்லை என்று கூறினேனோ அதே போல அவ்விட பூமி மீது எனக்கு ஏற்பட்ட கோபமும் எப்படி ஏற்பட்டது என்று புரியவில்லை. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசினேன்.

"போனதில்ல. ஆனா நல்லா இருக்கும். வாளையாறு வரைக்கும் போயிருக்கேன். அந்தப் பக்கம் அமேசான் காடு மாதிரி பச்ச பசேல்னு இருக்கும். இந்தப் பக்கம் காய்ஞ்சு போன புல் கிடக்கும்'

"அதுக்கு கேட்கல சார். நான் சொல்ல வர்றது வேற."

அப்படின்னா பாலக்காட்டு ஃபிகர்களப் பற்றி ஏதாவது டேட்டா சொல்லப் போறானோ என்று விபரீதமான கற்பனை எழுந்தது. என்ன சொல்ல வந்தாலும் கொஞ்சம் சீரியசான சமயத்தில ஃபிகரப் பத்தி பேசி காமெடி பண்ணாதே என்று எச்சரித்தேன்.

"ராஜஸ்தானிலிருந்து தமிழ்நாடு பார்டர் வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தமிழ்நாடு வந்துட்டாலே யாருக்கும் இந்தி தெரிய மாட்டேங்குது. ஏன் சார் இப்படி? இங்க பாருங்க பாலக்காடு பக்கமாத்தானே இருக்கு. நான் அங்க போனப்ப ஒரு பிரச்னையும் இல்ல. பெங்களூர்ல பிரச்னை இல்ல. எங்கேயும் இந்தி பேசுனா புரிஞ்சுக்கிறாங்க. இங்க மட்டும்தான் இந்தி பேச முடியாது'.

டேய் சிங்கு. இதுக்குப் பதில் சொல்லனும்னா நீயும் நானும் பிறக்காத ஆண்டான 1965-க்கு முன்பிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றேன். ஆனால் அவன் விளையாட்டுப் பையன் என்பதை வீதியில் போகும் ஃபிகரைப் பார்த்து இளித்தபோது புரிந்து கொண்டேன். இவனுக்கு திராவிடம், மொழிப்போர் பற்றியெல்லாம் சொன்னால் அந்த தகவல்களுக்கே இழுக்கு நேர்ந்துவிடும் என்பதால் விட்டுவிட்டேன்.

சுருக்கமாகச் சொன்னால் அதுக்கு பாலிடிக்ஸ்தான்டா காரணம் என்றேன். அவனுக்கு ஒருவாறு புரிந்து விட்டது. அப்படின்னா ஏன் சார் கர்ணாநிதி (கருணா அல்ல கர்ணா என்பதைக் கவனிங்க) பேமிலில இந்தி படிச்சிருக்காங்களே என்றான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவனுக்கு எப்படிடா இது தெரிஞ்சுது என்று குழப்பமாக இருந்தது.

"உனக்கு எப்படி சிங்கு தெரியும்?'

"தயாநிதி மாறன் மினிஸ்டர் ஆனபோது கர்ணாநிதி சொன்னாரே சார். தயாநிதிக்கு இந்தி தெரியும்னு'

இந்தியை எதிர்க்கும் கருணாநிதி குடும்ப அன்பர்கள் இந்தி படித்திருக்கிறார்கள் என்பதை இவன் கூடத் தெரிந்து வைத்திருக்கிறானே என்று எண்ணியபோது அவனது 'பொது அறிவின்' வீச்சு புரிந்தது.

இவன் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினால் தமிழனின் தன்மானம் என்னாவது. "நீங்க இங்க வந்தா தமிழ் படிச்சுத்தான் ஆக வேண்டும். நாங்க அங்க வரும்போது இந்தி மட்டும்தானே பேசுறீங்க...அடடா மதராஸி வந்துட்டான் என்று தமிழ், தெலுங்கு, கன்னடத்திலா பேசுறீங்க?' என்றேன் கோபமாக.

"சரி சார்...இப்போ என்ன நான் தமிழ் பேஸ்லயா? எனக்கு தைர்யம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு. தமிழ்நாடு வந்தா இனி ஒரு பிராப்ளம் இல்ல. ஏன்னா இப்போ எனக்குத் தமிழும் தெரியும்' கண்சிமிட்டி சிரித்தான். பொங்கி எழுந்த கோபமெல்லாம் கோக் பாட்டில் நுரைபோல வழிந்து ஓடியது.

மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமை. நண்பர்கள் இல்லாத நாள். சினிமாவுக்குப் போகலாம் என்று சிங்கை அழைத்தேன். சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்தவன் சரி என்றான். ஆனால் அவன் எந்த படத்துக்கு என்று கேட்டிருந்தால் கூட பரவாயில்லை. அல்லது எந்த தியேட்டர் என்று கூட கேட்டிருக்கலாம். ஆனால் அவனே ஒரு தியேட்டர் பெயரைச் சொன்னான். அப்போது தான் எனக்கு உண்மையிலேயே கோபம் வந்தது. அவன் சொன்ன தியேட்டர்......

(தொடரும்)