Saturday, October 17, 2009

திருமாவை சபிப்பது தகுமா?கடந்த நூற்றாண்டில் நடந்த யூத இனப் படுகொலை பற்றி மனித நேய ஆர்வலர்களால் பலமுறை கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த நூற்றாண்டு முழுவதும் சொல்லத் தக்க அளவுக்கு இனப் படுகொலை நடந்தது தமிழீழத்தில் தான். எத்தனை போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தீக்குளிப்புகள் எதற்கும் அசைந்து கொடுக்காத இந்திய அரசும் அதற்கு உறுதுணையாக நின்ற தமிழக அரசும் தமிழினப் படுகொலைக்கு வரலாற்று சாட்சியங்களாக இருக்கின்றன. இனியும் அந்த நிலையே தொடரும் என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன.

போர் முடிந்து விட்டதாக அறிவித்த பின்பும் 3 லட்சம் பேர் அகதிகள் முகாமில் உணவு, உடை, உயிர் பாதுகாப்பு இன்றி தவித்து வருகிறார்கள். அது பற்றி ஒரு சின்ன செய்தியைக் கூட எந்த தொலைக்காட்சியும், செய்தித் தாளும் வெளியிடுவதில்லை. போர் நடந்து கொண்டிருந்தபோது வட இந்திய தொலைக் காட்சிகளும், தேசிய பத்திரிகை என்று தங்களுக்குத் தாங்களே கூறிக்கொள்ளும் ஆங்கில பத்திரிகைகளும் நடத்திய ஊடகப் போர் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் அவர்கள் விருப்பப்படி எல்லாம் முடிந்துவிட்ட பின்னரும் எந்த ஒரு பத்திரிகை ஆசிரியனும் முகாம் அவலத்தை வெளியிட மறுப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு தேசிய ஆங்கில பத்திரிகை தன் கண்களில் சுண்ணாம்பு வைத்துக் கொண்டிருக்கும் போலிருக்கிறது. அந்த பத்திரிகையின் மீது வரும் ரெüத்திரம் பற்றி மற்றொரு பதிவில் கூறுகிறேன்.

போருக்குப் பின்னான சூழலில் பல மாற்றங்கள் நடந்துவிட்டாலும், கலைஞர் மனதில் இன்னும் தமிழர்கள் மீது இரக்கம் மிச்சமிருக்கிறது. அதற்கு அறிகுறிதான் டி.ஆர்.பாலு தலைமையில் தன் மகள் கனிமொழியையும், திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களையும் இலங்கைக்கு அனுப்பி நிலைமையை பார்த்து வர ஆணையிட்டார். தலைவரின் ஆணையை மீற முடியுமா?

ஒரு மனிதன் இறந்தவுடன் அந்த வீட்டுக்குச் செல்வதுதான் உண்மையான பண்பாடு. மிகத் தொலைவில் இருந்தாலோ அல்லது தகவல் தெரியவில்லை என்றாலோ இழவுக்குப் போகாதது தவறாகாது. ஆனால் இந்த விதிவிலக்கு தனிமனிதனின் இறப்புக்கு மட்டுமே. ஆனால் லட்சக்கணக்கான உயிர்கள் போனது பற்றி அறிந்தும் அறியாதது போல யாரை சமாதானம் செய்ய இந்தக் குழு இலங்கை சென்றது எனத் தெரியவில்லை.

எல்லோரும் இறந்து மண்ணோடு மண்ணாகிப் போனப் பின்பு இழவு கேட்க தமிழக எம்.பி.கள் ஈழத்திற்கு வந்தனர் என்று நாளை வரலாறு கூறும். அப்போது நாம் இருப்போமா என்று தெரியாது. நாங்கள் உள்ளே இருக்கும் தமிழர்களை மீட்பதற்காக சென்றோம் என்று அவர்கள் கூறினால் அதைவிட ஜோக் எதுவுமில்லை.

அங்கே சென்றவர்களில் ஆக்கப்பூர்வமாக எந்த ஒரு எம்.பியும் செயல்பட்டதாக தகவல் இல்லை. இதில் திருமாவளவனை மட்டும் குறி வைப்பதனால் என்ன லாபம்? அதிலும் முக்கியமாக ராஜபட்சவுடன் அவரது சந்திப்பு குறித்து வரும் விமர்சனங்கள் குழந்தைத்தனமானவை. திருமாவளவனின் தமிழினப் பற்று குறைந்துபோனது பற்றி எல்லோரும் குறை கூறுகிறார்கள். அதற்கு காரணம் அவரது அரசியல் நிலைப்பாடு. அதைவிடுவோம்.

ராஜபட்சவைப் பார்த்து சிரித்துவிட்டு வருகிறார். அங்கே தனது கோபத்தைக் காட்டவேண்டாமா? சிங்கத்தின் குகையில் சென்று அதன் பிடரி மயிரைப் பிடித்து உலுக்கி இருக்க வேண்டாமா என்று பல பதிவர்கள் கேட்கிறார்கள். இதுதான் தமிழனின் மனோபாவம்.

ஆயிரம் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். நீங்களோ நானோ ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் ராஜபட்ச அந்நாட்டின் அதிபர். அது அதிபர் மாளிகை. அங்கே நாம் விருந்தாளிகள் இல்லாவிட்டாலும் அங்கு வருகை தந்தவர்கள். அந்த சந்திப்பில் எதுவும் விளைந்துவிடப் போவதில்லை. ஏனென்றால் வந்திருப்பவர்கள் அரசியல் கோமாளிகள் என்பது ராஜபட்சவுக்கு நன்றாகத் தெரியும்.

திருமாவைப் பற்றி ராஜபட்சவுக்கும், ராஜபட்ச பற்றி உலகத்துக்கும் தெரியும். அங்கே கொஞ்ச நேரத்துக்கு கோபத்தைக் காட்டி விட்டு வந்தால் அய்யயோ திருமா கோபப்படறாரு...எல்லா தமிழர்களையும் வெளிய அனுப்புங்கப்பா என்று உத்தரவிடுவாரா?.

அது வேண்டாம். குறைந்தபட்சம் தன்னுடைய எதிர்ப்பைக் காட்டியிருக்கலாமே என்று கேட்கலாம். எதற்குக் காட்ட வேண்டும். நமக்கு என்று இந்திய நாடாளுமன்றம் உள்ளது. அங்கே அவர் தனது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று ஓட்டுப் போட்ட நாம் உத்தரவிடலாமே. ஏனென்றால் ராஜபட்ச அம்புதான். இந்திய அரசு தான் அதை எய்தது.

ஒரு முறை தில்லியில் நடந்த கூட்டத்தில் சோனியா கானும் (வந்தவன் போனவன் எல்லாம் காந்தி பெயரை பயன்படுத்த எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை) அத்வானியும் அருகருகே உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போது அத்வானி கண்ணாடி கொண்டு வரவில்லை என்கிறார். உடனே சோனியா கான், தன்னிடம் இருந்த கண்ணாடியைக் கொடுத்து இது உங்களுக்கு சரியாக இருக்குமா என்று பாருங்கள் என்கிறார். இது பத்திரிகையில் வந்த செய்தி.

இதைப் படித்தவுடன் பாஜக தொண்டர்கள் அத்வானியை இந்து துரோகி என்றோ, காங்கிரஸ் தொண்டர்கள் சோனியாவை சிறுபான்மை விரோதி என்றோ கூப்பாடு போடவில்லை. இரு வட இந்திய அரசியல் தலைவர்கள் சந்தித்துக் கொண்டால் சிரித்துப் பேசுகிறார்கள். அவர்களுக்குள் அரசியல் பண்பாடு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடம் கொஞ்சம் கூட அந்தப்பண்பாடு இல்லை என்பதை எத்தனை முறைதான் சொல்வது?

மாயாவதி பதவியேற்கும் விழாவுக்கு முலாயம் சிங் யாதவ் வருகிறார். நிதிஷ்குமார் பதவியேற்புக்கு லாலு பிரசாத் வருகிறார். எடியூரப்பா பதவியேற்புக்கு எச்.டி.குமாரசாமி வருகிறார். கலைஞர் பதவியேற்புக்கு ஜெயலலிதா வந்திருந்தால் அவரும் அதிமுக துரோகி ஆகியிருப்பார். தமிழர்களைப் பொருத்தவரை ஒருவன் நமக்கு எதிரி என்றால் ஜென்மத்துக்கும் அவனுடன் பகைமை பாராட்டி அடுத்த வேலையைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.

தலைவர் பிரபாகரனுடன் திருமாவை வைத்து ராஜபட்ச நக்கலடித்தபோது கூட வேறு வழியில்லாமல் தான் திருமா சிரித்திருப்பார். அந்த இடத்தில் வேறு என்ன செய்வது. கம்பெடுத்து சுத்தி அடிக்க வேண்டும் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறில்லை. அந்த சில நிமிடங்களை வைத்து தமிழினத் துரோகி என்று சொன்னால் கனிமொழி, டி.ஆர்.பாலுவை எல்லாம் என்னவென்று சொல்வது?

ஒரு வேளை போர் திசைமாறி வெற்றி நம் பக்கம் இருந்து தலைவர் பிரபாகரன் ராஜபட்சவை சந்திக்க வேண்டியிருந்தால் கூட கைகுலுக்கி சிரித்திருப்பார். அதைத்தான் திருமா செய்திருக்கிறார். சிங்களன் நக்கலடித்தபோது கூட சுருக்கென்று கோபப்படாமல் வந்த திருமாவளவனிடம் இருந்தது தமிழனின் பண்பாட்டுக் கூறுதான்.

அதை விடுத்து, திருமாவளவனின் சட்டையைப் பிடித்து ஏன் அவனை அடிக்கவில்லை என்று கேட்பதும், துரோகி என சபிப்பதும் குழந்தைத்தனம். திருமா கோபப்பட்டிருந்தாலும், கோபப்படாவிட்டாலும் இப்போதைக்கு தமிழர் அவலம் தீரப்போவதில்லை என்பதுதான் உண்மை.