Monday, October 12, 2009

விஜய் ஒரு சின்ன ரஜினி: சினிமாக் கொட்டாய் அனுபவம் - பார்ட் 3வேட்டைக்காரன் படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் அவனை வேட்டையாடிக் கொண்டிருந்தது. காலங்காத்தால பல் விளக்காமல் பாக்கெட்டில் வைத்திருந்த பொரி உருண்டையை கொஞ்சம் கொஞ்சமாக கொறித்துத் தின்றபடி போஸ்டரைப் பார்த்தபோது போஸ்டரில் இருந்த ஹீரோ அவனை அப்படி வசீகரித்தார்.

காலையில் எழுந்தவுடன் படிப்பு என்பதெல்லாம் 9 மணிக்கு மேல் பள்ளிக் கூடத்தில்தான். கொட்டாயில் என்ன படம் ஓடுகிறது என்பதை தெரிந்து கொள்வதில் தான் ஆர்வம். அதற்கு அவன் அடிக்கடி சினிமா போக வாய்ப்பில்லாதவன் என்பதும் காரணம்.

தியேட்டரில் என்ன படம் என்பதை அறிவிக்கும் பலகையாக செயல்பட்டது பக்கத்து வீட்டு டீக்கடை. அதை முதலில் யார் பார்ப்பது என்பதில் அவனுக்கும், அவன் எதிரியாகவிட்ட கடிவாங்கிக்கும் செம போட்டி. அதிலும் யாரை யார் முதலில் பார்த்தாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு "இன்னைக்கு நம்மூர் கொட்டாயில ********* படம் ஓடுதுடா டோய்..." என்று சத்தம் போட்டுச் சொல்வதில் படுபயங்கரப் போட்டி. (போன பதிவில் நம் ஹீரோவிடம் வாலாட்டி கடிவாங்கியதால் இன்றிலிருந்து அந்த பக்கத்து வீட்டுப் பையன், கடிவாங்கி என்றே அழைக்கப்படுவான்) டீக்கடை தகர கதவில்தான் சினிமா பட போஸ்டரை ஒட்டுவார்கள். அதை ஒட்டுவதற்கு போஸ்டர் மேன் (ஹிஹிஹி) செய்யும் அட்டகாசம் கொஞ்சமல்ல.

"படம் எடுத்தவங்கூட இவ்வளவு நேரம் பண்ண மாட்டான். இவன் போஸ்டர் ஒட்டுறதுக்கே இப்படி இழுக்கிறானே" என்று கோபமாக வரும். அதற்குள் பொரி உருண்டை தீர்ந்து போய் வாயைச் சுற்றிலும் போஸ்டர் ஒட்ட பசை போட்டது போலாகிவிடும் அவனுக்கு.

அதுவும் அந்த போஸ்டர் மேன் சாதாரண ஆள் இல்லை. அவன் தூரத்தில் வரும்போதே எல்லோரையும் ஒரு இளக்காரப் பார்வை பார்த்தபடிதான் வருவான். கழுத்தில் கர்சீப் கட்டி சட்டையை டக்இன் செய்து அரைக்கை சட்டையை மேலே மடித்துவிட்டு, தையல் போட்ட ரப்பர் செருப்பை போட்டுக் கொண்டு சைக்கிளை மிதித்தபடி வருவான். கேரியரில் பசை பக்கெட். அதற்குப் பின்னால் என்ன படம் என்று தெரிந்து விடக் கூடாது என்ற "தொழில் போட்டி" காரணமாக நான்காக மடித்து வைக்கப்பட்ட போஸ்டர்.

சைக்கிளை நிறுத்தியவுடன் அவனுக்கு டீ தயாராகிவிடும். ஒரு பீடியை பற்ற வைத்தபடி டீக்கடையை வாங்குவது போல பார்த்துக் கொண்டிருப்பான். அதற்குள் அவனைச் சுற்றி கூட்டம் கூடிவிடும். "ஏனுங்க..என்ன படம் போடறீங்க..." என்று கேட்கும் பெரிசுகள் முதல் "அண்ணா என்ன படங்ணா..." என்று கேட்கும் பொடிசுகள் வரை அவனது பதில் ஒரே ஒரு பார்வைதான். அதன் அர்த்தம் காத்திருங்கள் மகாஜனங்களே என்பதுதான்.

ஒரு வழியாக டீயை குடித்துவிட்டு, பீடியை அணைத்து காதில் சொருகிவிட்டு பக்கெட்டிலிருந்து பசையை எடுப்பான். இப்படியும் அப்படியும் தேய்த்து முழு தகரத்தையும் பசையாக்கிவிடுவான். அதுவும் ஏற்கெனவே ஒட்டியிருக்கும் போஸ்டரில் சிலுக்கு இருந்துவிட்டால் போதும்...உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி அவள் மீது பசையை தேய்த்துக் கொண்டே இருப்பான். "அண்ணா சீக்கிரம் ஒட்டுங்ணா...சும்மா தேச்சுக்கிட்டே இருக்கிறீங்க....' என்பான் இவன்.

முறைத்துக் கொண்டே சைக்கிளில் உள்ள போஸ்டரை எடுத்து திரும்பி நின்று கொள்வான் போஸ்டர் மேன். முழங்கை வரையில் ஒட்டியிருக்கும் பசையை போஸ்டரின் பின் பக்கத்தில் தேய்த்துக் கொள்வான். அந்த சமயத்தில் என்ன படம் என்பது யாருக்கும் தெரியாதவாறு கையில் போஸ்டரைப் பிடித்திருப்பான். அதற்குள் காபி டம்ளருடன் வந்துவிடுவான் கடிவாங்கி. இவனுக்கு ஆத்திரம் போஸ்டர் மேன் மேல் வரும்.

போஸ்டர் இரண்டு பகுதியாக இருக்கும். முதல் பாதி ஒட்டும்போது அதில் தெரியும் முதல் பாதி எழுத்துக்களை வைத்து இது இந்தப் படம் அந்தப் படம் என்று பந்தயமே நடக்கும். ஒரு பாதியை ஒட்டிவிட்டு மீண்டும் காதிலிருக்கும் பீடியை பற்ற வைப்பான். இந்த மகா ரசிகர்கள் கண்டுபிடிக்கிறார்களா இல்லையா என்பதை உள்ளூர ரசித்தபடி போஸ்டரை நீவி விட்டுக்
கொண்டே இருப்பான். எல்லோரும் அவனையே பார்ப்பார்கள். அவனும் சொல்வது போலத் தெரியாது. பரபரப்பு பற்றிக் கொள்ளும். அந்த நேரத்தில் போஸ்டர் மேன்தான் ஹீரோ. எல்லோரது பார்வையும் அவன் மேல்தான்.

ஒரு வழியாக இரண்டாவது பாதியை எடுத்து ஒட்டினான். "அட வேட்டைக்காரன்...கெளபாய் தொப்பியணிந்த எம்ஜிஆர் ஏனோ அவன் மனதில் பசை போடாமலேயே ஒட்டிக் கொண்டார். "ஹோய்ய்ய்ய்....எம்ஜிஆர் படம்டோய்...."என்று நம்ம ஹீரோ திடீரென்று கத்த, அதை சற்றும் எதிர்பாராத கடிவாங்கி காபி டம்ளரை பக்கத்தில் நின்ற பெரியவர் காலில் போட்டான். எப்போதுமே எதிரிக்கு எதிரி நண்பன் தானே. இவனுக்கு எம்ஜிஆர் பிடிக்கிறது என்பதை கடிவாங்கி தெரிந்து கொண்டான். அன்றிலிருந்து பள்ளிக் கூடத்தில் சிவாஜிக்கு என்று ஒரு கூட்டம் பிடிக்க முயற்சி செய்தான். ஆனால் நம்ம ஆளுக்கு சிவாஜியையும் பிடிக்கும் என்பது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இவன்தான் உலக ரசிகனாச்சே....

அவன் வேட்டைக்காரன் படத்தை பார்த்தானா இல்லையா....அடுத்த பதிவுல சொல்றேன்.

அது போகட்டும்...இப்போ சின்ன ரஜினியாம் இளைய தளபதி நடிப்பில் வரும் வேட்டைக்காரன் பற்றி வந்த ஒரு எஸ்.எம்.எஸ்.

விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்ட...நாலு மாசம் தூங்க மாட்ட...
பப்ளிக்: நீ அடிச்சா கூட பரவால....நடிச்சாத்தான் தாங்க முடியாது.... :)

ரஜினியைப் பிடிக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு காரணம் இருந்தது என்று போன பதிவில் கூறியிருந்தேன். அது என்ன என்பதை எழுதத்தான் நினைத்தேன். அதற்குள் கற்பன குதுர பின்னால ஓடி எம்ஜிஆர் போஸ்டர்ல போய் ஒட்டிக்கிச்சு... அதை இழுத்து வர வேண்டியிருக்கிறது. அதனால இப்போதைக்கு அப்பீட்டு...அப்புறமா ரிப்பீட்டு....

(தொடரும்)