Thursday, October 8, 2009

மீண்டும் மீண்டும் ஆப்பிரிக்கா !


லாரல்-ஹார்டி, சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டன், ரோவன் அட்கின்ஸன் (மிஸ்டர் பீன்) நடிப்பை ரசித்துப் பார்த்து மௌனமாய் சிரித்தாலும், வாய்விட்டுச் சிரித்தாலும் அதில் ஒரு அன்னியத் தன்மை ஒட்டியிருக்கிறது. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரப் போல வருமா?.

கவுண்டமணி-செந்தில் காமெடி ஒரு லெஜன்ட் என்றே நான் சொல்வேன். சில காமெடிகளில் வரும் வசனங்களை (பழைய படங்கள்) சொல்லிச் சொல்லி சிரிக்கலாம். உதராணத்துக்கு பெட்ரோமாக்ஸ் லைட். (என்னன்ணே உடைச்சுப்புட்டீங்க என்று செந்தில் கேட்பார்). அப்புறம் அகில உலகப் புகழ் வாழைப்பழ ஜோக்.

காலம் செல்லச் செல்ல வெறும் கூச்சல் மட்டுமே கவுண்டமணியின் காமெடியில் தொடர்ந்தது. அதற்கு திரையுலகின் ஆஸ்தான காமெடி எழுத்தாளர் ஏ.வீரப்பன், கவுண்டமணிக்கு எழுத மறுத்ததும் ஒரு காரணம் என்று சொல்வார்கள். அந்த சமயத்தில் சரியாக வந்து ரூம் போட்டு யோசிச்சு புதுசு புதுசா டெக்னிக்க காட்டி கலக்கி வருகிறார் வடிவேலு. பிறரை தாழ்த்தி அதனால் ஏற்படும் சிரிப்பை விட தன்னைத் தாழ்த்தி பிறரை சிரிக்க வைக்கும் நகைச்சுவை உயர்வானது. அந்த வகையில் வடிவேலு தி கிரேட்.

மனிதனின் வாழ்க்கையில் நகைச்சுவை மிக முக்கியமானது. அதுவும் தமிழனின் வாழ்வில் நகைச்சுவை மிக மிக இன்றியமையாத இடம் கொண்டது.

நகையே அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு என்ப.

என்று இலக்கியம் கண்ட தமிழுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த தொல்காப்பியரின் வரிகளே ஆதாரம். இந்த நூற்பா தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியல் என்ற பகுதியில் வருகிறது. அதாவது சிரிப்பு, அழுகை, இழிவு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை என்று மனிதனின் மெய்ப்பாடுகள் எட்டு வகையாகப் பிரிக்கிறார். நவரசம் என்று சொல்வோமே அதேதான். ஆனால் தமிழில் எட்டு மட்டும் தான். நகைச்சுவையையும் நான்காகப் பிரிக்கிறார் அவர்.

எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்று
உள்ளப்பட்ட நகை நான்கு என்ப.


அதாவது இகழ்தலாலும் (எள்ளல்) நகைச்சுவை வரும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். ஆனால் அது பிறரை இகழ்தலால் வருவதா தன்னையே இகழ்ந்து கொள்வதால் வருகிறதா என்று கூறவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் வாழ்வில் மிக இன்றியமையாத ஒரு கூறாக இருந்தது நகைச்சுவை. அதையே தனது இலக்கண நூலிலும் முன்னிலையாக்கி எழுதியுள்ளார் தொல்காப்பியர்.

அதனால் நகைச்சுவை எனக்கு மிகப் பிடித்த ஒன்று. வீட்டுக்குச் சென்றால் ரிமோட்டை நான் கைப்பற்றி எந்நேரமும் காமெடி சேனலை மட்டுமே பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பேன். முக்கியமா கார்ட்டூன் சேனல் அதுவும் டாம் அன்ட் ஜெர்ரி. (அதிலும் டாம் தான் எனக்குப் பிடித்தது. அதனாலதான் மேலே என் படத்துக்குப் பதிலா டாம் படம் வச்சிருக்கேன். மியாவ் மியாவ் பூன...) இதனால் வீட்டில் இருப்பவர்கள் சீரியல் பார்க்க முடியாததால் சீரியசாகி விடுவார்கள். எப்ப இவன் பொட்டியக் கட்டுவான் என்று நேரம் பார்த்திருப்பார்கள்.

எல்லோரது வாழ்க்கையிலும் என்றைக்கும் தேவையாக இருப்பது நகைச்சுவை ஒன்றே. சார்லி சாப்ளின் காட்சியமைப்புகளில் இருக்கும் துல்லியத் தன்மை, கவுண்டமணி காட்சிகளில் வசனங்களில் இருக்காது.

உதாரணம்:- செந்திலின் நிறத்தைக் கிண்டல் செய்யும் காட்சிகள். எந்தப் படம் என்று நினைவில்லை. செந்திலைப் பார்த்து சொல்வார். இத எங்கியோ பாத்திருக்கிறேன். ஆனா ஊரு மட்டும் சவுத் ஆப்பிரிக்கா என்று சொல்வார். இப்படி பல படங்களில் சொல்லியிருக்கிறார். காரணம் ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமாக நினைவிருப்பது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் டீம்தான் என்று நினைக்கிறேன். அதனால் எழுதும் போதும் தென் ஆப்பிரிக்கா என்று எழுதிவிட்டார்கள் போலிருக்கிறது.

ஆனால் தென்னாப்பிரிக்காவில்தான் வெள்ளைக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள் என நினக்கிறேன். கருப்புன்னா ஆப்பிரிக்கா...ஆப்பிரிக்கான்னா கருப்பு என்று சினிமாக்காரர்கள் நினைத்துக் கொண்டார்கள் போல. ஆப்பிரிக்கா என்றொரு நாடே இல்லை. அது ஒரு கண்டம். அதில் 53 நாடுகள் இருக்கின்றன என்று யாரும் சொல்லவில்லை போலிருக்கிறது.

சரி விஷயத்துக்கு வருகிறேன். மீண்டும் அதேதான். நமக்கும் ஆப்பிரிக்காவுக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை. நம்ம ஆளுங்க எங்கிருந்தாலும் தமிழை மறக்காமல் இருக்கிறார்கள். அதுவும் ஆப்பிரிக்காவில் பலர் இருக்கிறார்கள் போல. அதில் ஒருவர் போட்ஸ்வானாவிலிருந்து முதல்முதலாக வந்தார் என்று முந்திய பதிவில் சொன்னேன். அதை அவர் படித்தாரா இல்லையா என்று தெரியாது.

ஆனால் பக்கத்து நாடான மொசாம்பிக்கில் இருந்து நேற்று முதன்முறையாக இன்னொருவர் என் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறார். அதுதான் நீங்கள் மேலே பார்க்கும் படம். மொசாம்பிக் வாழ் தமிழ் தோழர்/ தோழிக்கு நன்றி.

தம்பட்டத்த போட்டு அடி அடின்னு அடிச்சதுல கையிரண்டும் பயங்கரமா வலிக்குது. அதனால இதோட நிறுத்திக்கறேன்.