Monday, October 5, 2009

"இந்தி"யன் பார்வையில் தமிழன்- பாகம் 3இந்திக்காரர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் கற்பது பெரிய விஷயமா? அதே போல தமிழர்கள் வேறு பகுதிக்குச் சென்றால் அந்த மொழி கற்பது ஒன்றும் தவறல்ல என்று ஒரு பின்னூட்டம் வந்தது. நம்மை கட்டாயமாக இந்தி மொழியைக் கற்க வேண்டும் என்று திணிப்பதையே எதிர்க்கிறோம் என்றார். இந்த விவாதத்திற்குள் சென்று தமிழையும் விட்டுக் கொடுக்க முடியாமல் இந்தியையும் ஏற்க முடியாமல் பலமுறை ரெண்டுங்கெட்டான் மன நிலைக்கு சென்றிருக்கிறேன்.

என்னதான் இந்தியில் இருக்கிறது என்ற கேள்வி மனதில் சுழன்றது. ஒரு புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். தலை சுற்றல் வந்தது. தமிழில் 247 எழுத்துகள். இந்தியில் ஒவ்வொரு எழுத்துக்கும் 4 எழுத்துகள். தமிழில் ஒன்னுன்னா இந்தியில் நாலு. உச்சரிப்புக்கு ஏற்ப க, க, க, க. Ka, kha, ga, gha... ச, ச, ச, ச, sa, sha, cha, chcha... அட ங்கொக்கமக்கா.. இம்சை அரசன் வடிவேல் பாணியில் கககக என்று புலம்ப வேண்டியதாகிவிட்டது.

அன்று மாலை மேன்ஷன் மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். உண்மையில் அது பள்ளிக் கூடம் முடியும் நேரம். கல்லூரி பேருந்துகள் வந்து நிற்கும் நேரம். நாங்கள் இருப்பதோ சேவல் பண்ணை. சொல்லவா வேண்டும். எப்படிப்பட்ட ஃபிகர் வந்தாலும் கண்களால் கேட்கும் கேள்வி ஒன்றுதான். "வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?" அப்படி சில நண்பர்களுக்கு வெட்கத்தையும், சிலருக்கு அவர்கள் அப்பாவின் கோபத்தையும் கொடுத்துச் சென்ற ஃபிகர்கள் நிறையே பேர். இதில் நான் சிக்காதது அதிசயம்.

அப்போதுதான் அந்த ஊர்வலம் வந்தது. அத்தனை பேரும் பெண்கள். கண்கள் இரண்டும் பைனாகுலர் போல ஜூம் செய்து கொண்டது.

"இது என்னா ஊர்வலம் சார்?"- பக்கத்தில் ஜெகஜித் சிங். "அட, நீ எப்ப வந்தே?'. "நம்மாளு போவுது சார் அதப் பாக்கத்தான்" என்றான். தூரத்தில் ஒரு பள்ளி மாணவி திரும்பிப் பார்த்துப் போவதைப் பார்த்தேன். "அடிப் பாவி... சிவப்புத் தோலுக்கு மயங்கிட்டியேடி..."என்ற நினைத்துக் கொண்டேன். "மாரியம்மன் கோயிலுக்கு மாவிளக்கு கொண்டு போறாங்க...அதான் இந்த ஊர்வலம்" என்றேன். "அப்ப இவங்க எல்லாம் கிறிஸ்டியனா...' என்று கேட்டுவிட்டு என்னைப் பார்த்தான். எனக்கு தலையே சுற்றியது.

"மேரினா கிறிஸ்டியன் தானே சார்."
"அய்யோ...அது M-A-R-Y மேரி இல்ல...M-A-A-R-I மாரி......மாரியம்மன்.' "ஓஹோ...அப்ப இது என்ன சாமி சார்...."

"கிழிஞ்சுது... உனக்கு புரிய வைக்க கோயில் பூசாரியைத்தான் அழைக்க வேண்டும்" நான் என்ன புலம்புகிறேன் என்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"டேய் சிங்கு...உங்க ஊர்ல லட்சுமி, சரஸ்வதி, துர்கா, சாமுண்டி தேவி இப்படி எல்லாம் சாமிங்க இருக்குல்ல...அது மாதிரி தமிழ்நாட்டில முக்கியமான சாமி இதுதான். இது லட்சுமி, சரஸ்வதி மாதிரி நகரத்து கெட்டப் இல்ல...கிராமத்து கெட்டப்பு..." என்றேன்.

ஆரியம், திராவிடம் என்றெல்லாம் பாடம் எடுக்க நினைத்தேன். அந்த அளவுக்கு அவன் ஒர்த் இல்லை என்பதால் நிறுத்திக் கொண்டேன். அந்த ஊர்வலம் முடியும் வரை மேரி- மாரி என்று மாற்றி மாற்றிச் சொல்லி உயிரை எடுத்தான்.

பிறகு எப்படியோ புரிந்து கொண்டு நன்றி என்றான். கூடவே மற்றொரு வார்த்தையையும் கூறினான். எனக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

அதாவது, ஆரம்பத்தில் அவனுக்கு சில வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்தேன். அதைப் புரிந்து கொண்டான். பின்னர் அவன் அறைக்குப் போகும்போது தன்யவாத் என்றான். "அதென்னடா வாத்து...' என்று கேட்டதற்கு, தாங்க்ஸ் என்பதற்கு இந்தியில் தன்யவாத் என்றான். "ஓஹோ..பரவாயில்லையே நமக்கும் ஒரு இந்தி வார்த்தை தெரிந்துவிட்டது" என்ற நினைப்பில் அவனுக்கு இன்னொரு தமிழ் வார்த்தை கற்றுக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

"டேய் சிங்கு...இந்தில தன்யவாத்..தமிழ்ல நன்றி...ந..ன்..றி அப்படின்னு சொல்லணும்...சரியா.."என்றேன். ந..ன்..றி....என்று திருப்பிச் சொன்னான். நான் அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.

"தாங்க்ஸ்னா நன்றி. பிக்னா பன்றி...ஒரு எழுத்துதான் வித்தியாசம்" என்றேன். "நன்றி...பன்றி...நன்றி...பன்றி" என்று சொல்லிப் பார்த்தான். பிறகு சிரி சிரி என்று சிரித்தான். "சரி சார் நான் வர்றேன்" என்று கொஞ்ச தூரம் போய்விட்டு திரும்பி நின்றான். "நன்றி பன்றி" என்று என்னைப் பார்த்து சத்தமாகச் சொல்லிவிட்டு நிற்காமல் ஓடினான்.

இது ஒரு முறையல்ல...பல முறை பார்த்த போதெல்லாம் நன்றி பன்றி என்று கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டான். அதன் பிறகு அவனை மிரட்டி, திட்டி, கோபப்பட்டு அப்படியெல்லாம் சொல்லக் கூடாது...தமிழ் அழகான, எளிதான மொழி...எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்...அதற்குத்தான் அப்படி ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன் என்று அறிவுரை சொன்ன பிறகே விட்டான்.

அதோடு அவனுக்கு வாத்தியார் வேலை பார்ப்பதையும் நிறுத்திக் கொண்டேன். இது நடந்து 6 மாதத்திற்குள் அவன் ஓரளவு நான் பேசுவதையெல்லாம் எளிதாகப் புரிந்து கொண்டான். அவனும் நன்றாக தமிழ் பேசத் துவங்கிவிட்டான்.

"நீங்க பாலக்காடு போயிருக்கீங்களா சார்" என்றான் ஒருநாள்.

"இல்லையே...ஏன்... எதுக்கு கேட்கிறே?"

இந்தக் கேள்விக்கு அவன் சொன்ன பதிலுக்கும், பிறகு அவனே கேட்ட கேள்விக்கும் என்ன சொல்வது என்று நான் சிறிது நேரம் யோசிக்க வேண்டியதாகிவிட்டது...அந்தக் கேள்வி இதுதான்....

(தொடரும்)