Sunday, October 4, 2009

உளியின் ஓசை- கலைஞரின் நமக்கு நாமே திட்டம்
முன் குறிப்பு: இது ஏதோ அரசியல் உள் நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு அல்ல.


கோயிலை இடித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக....

இந்த புகழ் பெற்ற வசனத்தை நான் பல முறை என் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சொல்லி இருக்கிறேன். இந்த வசனம் வந்த படம் வெளியான ஆண்டில் தான் என் அப்பாவே பிறந்துள்ளார். அப்படின்னா நான் இந்த வசனத்தை சன் டி.வியில் பார்த்துதான் ரசித்தேன் என்று நீங்கள் நம்பலாம்.

விடயம் இதுதான்...அப்போது வந்த வசனத்தை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பின்பு ஒரு சின்ன பையன் (நாந்தாங்க) மனப்பாடம் போல சொல்கிறான் . அந்த அளவுக்கு அந்த பேனாவில் வலு இருந்தது. தீப்பொறி பறந்தது. அரை நூற்றாண்டு கழித்தும் கூட ஒரு நவ யுக வாலிபனை கட்டிபோட்ட எழுத்துக்கு சொந்தக்காரர் அப்படியே இருந்திருந்தால் என்னைப் போல எத்தனையோ வாலிபர்கள் அவரது எவ்வளவோ வசனத்தை சொல்லி இருப்பார்கள்.

ஆனால் தமிழகத்தின் தலை எழுத்துக்கு அவர் மட்டும் விதி விலக்கா என்ன ?
அவரு திசை திரும்பினார். அரசியல் பரம பதத்தில் ஏறினார். உச்சம் சென்றார். பிறகு இறங்கினார். அப்புறம் ஏறினார். ஆனால் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர் அல்ல அவர். அதனால் அதில் ஒரு கை இதில் ஒரு கை வைத்து இருந்தார்.

தொடர்ந்து சினிமாவுக்கும் அரசியலுக்கும் வசனம் எழுதினர். மக்கள் அவரை கொண்டாடினார்கள். பிறகு அரசியல் வசனம் அதிக வெற்றியை கொடுக்கவே நிழல் உலகமான சினிமா வசனத்தை குறைத்துக் கொண்டார். இருந்தாலும் எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி உண்டு. "இரும்பு புடிச்சவன் கையும் பேனா புடிச்சவன் கையும் சும்மா இருக்காது"

அதனால் அப்பபோ வசனம் எழுதினார். கண்ணம்மா என்ற ஒரு படத்துக்கு வசனம் எழுதினார். அதில் ஒரு வசனம் உங்களுக்கு நினைவு உண்டா? எனக்கு இல்லை.

பராசக்தி படத்தை மட்டும் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன். அதுவும் அந்த கோர்ட் சீன்.

கொஞ்ச நாளுக்கு முன்னால் மீண்டு அவர் பேனாவில் இருந்து கிளம்பிய ஓசை ஒரு சிற்பியின் கையிலிருக்கும் உளியின் ஓசை போல ஒலித்தது. அது படமாகவும் வந்தது. சினிமா கொட்டாயை விட்டும் போனது. (ஏப்பா தம்பி, இந்தப் படம் எந்த கொட்டாயில ஓடுது என்று டீ கடையில் ஒரு பெரியவர் கேட்டது இன்னும் நினைவு இருக்கு)

உளியின் ஓசை என்ற அந்தப் படத்தில் பராசக்தியை விட காலம் கடந்து நிற்கும் வசனத்தை எழுதியதற்காக ஒரு விருது கொடுக்கலாம் என்று எவன் அவருக்கு யோசனை சொன்னான் என்று தெரியவில்லை.

அவரும் சிறந்த திரைப்படம் நடிகர், நடிகை, இசை அமைப்பாளர் என்று லிஸ்ட் படித்து ஓ.கே. செய்து விட்டு... நமக்கு எதுவும் இல்லையே என்று நினைத்தாரோ என்னவோ...அதனால் அவருக்கு ஒரு யோசனை வந்தது...யார் கொடுத்தால் என்ன...விருது விருதுதானே...என்று முடிவு செய்தார்.

இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற உரையாடல் பராசக்தி படத்தையே விஞ்சிய காரணத்தால் நமக்கு நாமே திட்டப்படி தனக்கு தானே விருதை அளித்துக் கொள்கிறேன் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டார் மனதுக்குள்.

அப்புறம் என்ன.... சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது உளியின் ஓசை படத்திற்க்காக அவருக்கு வழங்கப் படுகிறது....டிங் டிங் டிங் டிடடிங்.....

சின்னப் பையன் சந்தேகம்: எல்லாருக்கும் அவர்தான் விருது கொடுப்பார்...அவருக்கு யார் கொடுப்பாங்க....அப்படின்னா அந்த விழாவுல chief guest அவரா இல்ல வேற ஆளா? அப்படியே அந்தப் படத்தில் இருந்து ஒரே ஒரு வசனம் மட்டும் சொன்ல்லுங்க...

ஐயோ... நான் அடிச்ச தாங்கமாட்டே...நாலு மாசம் தூங்கமாட்டேன்னு யாரோ பாடறா மாதிரி இருக்கே....

விஜய் ஒரு சின்ன ரஜினி: சினிமாக் கொட்டாய் அனுபவம் - பார்ட் 1
முன்னொரு காலத்தில் ஒரு சிறுவன் முதல் முதலாக திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தான். அது பின்பொரு காலத்தில் சினிமா-அரசியல், அரசியல்-சினிமா என்று ரவுண்டு கட்டி அடிக்கப்போகும் ஒருவரின் படம் என்பது அப்போது அவனுக்குத் தெரியாது. யாருக்கும் தெரியாது. அவ்வளவு ஏன்...இதைப் படிக்கும் உங்களுக்கும் தெரிந்திருக்காது.

அப்போதெல்லாம் சினிமா பார்ப்பது என்றால் தூர்தர்ஷன் என்ற ஆதி பழங்காலத் தொலைக் காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் காட்டுவார்கள். அதைப் பார்க்க பல வீடுகளுக்கு ஓடிச் சென்று ஏதாவது ஒரு வீட்டின் ஒரு மூலையில் வீட்டுக்காரனின் கேவலமான பார்வைகளை சகித்துக் கொண்டு அத்தனை பல்லையும் காட்டிவிட்டுத்தான் பார்த்து தொலைக்க வேண்டும்.

அப்படிப்பட்ட நேரத்தில் "எங்கூட வாப்பா சினிமாவுக்குப் போலாம்' என்று அந்தச் சின்னப் பையனின் அப்பா அழைத்தார். அவனுக்குச் சொல்லவா வேண்டும். ஒரே குத்தாட்டம் போடாத குறைதான். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு இதெல்லாம் வருஷத்துக்கு ஒரு முறை வருவது போல அவன் அப்பா சினிமாவுக்கு அழைத்துப் போவதும் ஒரு பண்டிகை போலத்தான்.

ஞாயிற்றுக்கிழமை விடிந்து விட்டால், காலையிலிருந்து மாலை 4 மணி வரை வெகு நேரம் யோசித்து தலைவலி வந்து, பின்னர் யாசித்துக் கேட்டால்தான் டி.வி.யில் படம் பார்க்க அனுமதியே கிடைக்கும். அதுவும் படம் குறைந்தபட்சம் 1970களுக்கு முன்பு வந்ததாக இருக்க வேண்டும். 'படிக்கற வேலையெல்லாம் முடிஞ்சுதா' என்று அரைத் தூக்கத்தில் அவனது அப்பா கேட்பார். "முடிஞ்சுருச்சுங்ப்பா..' என்பான் வெகு அமைதியாக. அதாவது டி.வி.பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறேன் என்றும் தெரிந்துவிடக் கூடாது, அதே நேரம் டி.வி பார்க்க அனுப்பியே ஆக வேண்டும் என்ற பிடிவாதமும் இருக்கக் கூடாது. இப்படி அந்த வயதிலேயே நடிப்பின் சகல பரிமாணங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு பதில் சொல்வான். "சரிசரி... ஒழுங்கா போய் பாத்துட்டு சீக்கரமா வந்து சேரணும்' என்ற நிபந்தனை ஜாமீனில் வெளியே வருவான்.

வீட்டிலிருந்து சில மீட்டர் தூரம் வரை அமைதியாகவே வருவான். அப்புறம் எடுப்பான் பாருங்கள் ஒரு ஓட்டம்.....அட ங்கொக்கமக்கா... ஏதோ பத்து, பதினஞ்சு வெறிநாய் ஒன்றாய் சேர்ந்து துரத்துவதைப் போல உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு டி.வி. இருக்கும் வீட்டுக்கு ஓடுவான். வேகமாகப் போனால்தானே உட்கார இடம் கிடைக்கும். இல்லாவிட்டால் வேறுவீடு பார்க்க வேண்டுமே. இவ்வளவு தவமாய் தவமிருந்து ஓடிப்போய் பார்த்தால் டி.வி.யை ஸ்கிரீன் போட்டு மூடி வச்சுட்டு குடும்பமே சோபாவில் உட்கார்ந்து பல் குத்திக் கொண்டிருக்கும்.

"இன்னைக்கு மத்தியானமே படம் முடிஞ்சுருச்சேப்பா...' என்று சிரிப்பார்கள். அல்லது அமிதாப் பச்சனோ எவனோ ஒரு இந்திக்காரன் நடித்த படம் ஓடிக் கொண்டிருப்பதை வெகு சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் (புரியாமல்தான்!). இல்லாவிட்டால் பால், டிக்காசன், சர்க்கரை எல்லாம் போட்டு குடியரசுத் தலைவர் என்பவர் தனது உரையை ஆற்றிக் கொண்டிருப்பார்.

அல்லது இந்தியாவின் அத்தனை விவசாயிகளும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுத்தான் விதைப்பார்கள் என்ற நினைப்பில் அதைப் போட்டு கொத்திக் கொண்டிருப்பார்கள். "ஏக்கருக்கு நீங்க எவ்வளவு செலவு செஞ்சீங்க....எத்தனை நாளில் அறுவடைக்கு வரும்...பயிருக்கு வாய்க்காலா, கிணற்றுப்பாசனமா... இல்ல சொம்புல தண்ணி எடுத்துட்டுப் போயி ஒவ்வொரு பயிருக்கா ஊத்துவீங்களா' என்ற ரீதியில் கேள்வி கேட்பார்கள். இதைப்பார்த்துக் கொண்டிருந்தால் எந்த விவசாயியாவது சேற்றில் கால் வைக்க முடியுமா? போங்கடா நீங்களும் உங்க சினிமாவும் என்று வீட்டுக்கு வந்தால் அடுத்து இரவு 9 மணி வரையிலும் கடிகாரம் நகரவே நகராது.

அப்படிப் பட்ட நேரத்தில் தான் ஒரு நாள் படம் பார்க்கக் கூப்பிட்டார் அவனது அப்பா. அதுவும் தியேட்டருக்கு. என்னது? மல்டிபிளக்ஸ் தியேட்டரா...ஹலோ... ஹலோ...ரொம்ப கற்பனை பண்ணாதீங்க... அந்த ஊர்ல ஒரே ஒரு சினிமா கொட்டாய்தான்....படம் பார்க்க எவனும் வரவில்லை என்றால் இன்றே கடைசி அப்படின்னு போஸ்டர் ஒட்டுவார்கள். அதைப் பார்த்தாவது நாலு பேர் வரமாட்டானா என்ற ஏக்கம்தான் காரணம். இன்றே கடைசி போட்டு ஒருவாரம் ஓட்டிய பல படங்களைக் கூட அந்தக் கொட்டாய் பார்த்திருக்கிறது. அதில் தான் அன்றும் சினிமா பார்க்க போனார்கள்.

அந்தப் படத்தின் பெயர் இன்றும் அந்த சிறுவனுக்கு நினைவு உள்ளது. சைக்கிளின் முன்னே பார் கம்பியில் உட்கார்ந்து மணி அடித்துக் கொண்டே சென்றதும், தலையில் கொட்டு வாங்கியதும், போஸ்டரை வாயைப் பிளந்து கொண்டு பார்த்ததும், முறுக்கு, தட்டுவடை, விலை உயர்ந்த தேங்காய் பன் (75 பைசா) தின்றதும் இன்னும் அவன் நினைவை விட்டு அகலவில்லை.

அதே போல அந்தப் படத்தில் நடித்தவரின் முகமும்...அந்தப் பாடலும்...அந்த சண்டைக் காட்சியும்....இன்னும் நெஞ்சில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆடிக் கொண்டிருக்கிறது.

சரி...என்ன திரைப்படம்...யார் அந்த நடிகர்? (தொடரும்)

பின் குறிப்பு: அந்தச் சிறுவன் யார் என்பதை இந்நேரம் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் இந்த முழுப் பதிவையும் படித்தவர்கள் ஆவீர்கள்.

பின்- பின் குறிப்பு: அந்த நடிகர் அடிக்கடி தன் தலை முடிக்குள் விரலை விட்டு பின்னால் தள்ளிவிட்டுக் கொண்டார். என்னது... கண்டுபிடிச்சுட்டீங்களா?

பின்-பின்-பின் குறிப்பு: சரி இதைக் கண்டுபிடிங்க பார்ப்போம்...1980-க்குப் பின் 90-க்கு முன் திரைக்கு வந்தது. படத்தின் பெயர் பறந்து செல்வதைக் குறிப்பால் உணர்த்தும். எப்பூ.....டீ?