Friday, October 2, 2009

"இந்தி"யன் பார்வையில் தமிழன் - பார்ட் 2

அன்று ஞாயிற்றுக்கிழமை. என் நண்பர்கள் எல்லாரும் ஊருக்குச் சென்றிருந்தனர். நான் மட்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தபடி கட்டிலில் சாய்ந்து கிடந்தேன். சினிமாவுக்குப் போகலாம் என்றால் அதற்கும் வழியில்லாமல் இருந்தது.

ஐந்தாறு பேர் ஒரு குரூப்பாகக் கிளம்பி தியேட்டருக்குப் போனால் தான் படத்துக்கு போனது போல இருக்கும். அதுவும் பக்கத்தில் உட்காரும் அங்கிள், ஆன்ட்டி, அவங்க பொண்ணு என்று எல்லோரும் முகத்தை சுழிக்கும் அளவுக்கு சீரியஸ் சீனுக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரித்து கடுப்பேற்றினால் தான் படம் பார்த்த மாதிரியே இருக்கும். (அப்படி ஒரு நாள் 'தல' படத்துக்குப் போய் தியேட்டரையே சிரிக்க வைத்த அனுபவம் மற்றொரு பதிவில்) அதைவிட்டு விட்டு யாரும் இல்லாமல் தனியாகப் போய் எசகுபிசகாக மாட்டிக் கொண்டால் கிழிஞ்சிரும் என்ற யோஜனையில் தலையை சொறிந்து கொண்டு இருந்தேன்.

லேசாக கண்ணயரும் நேரம் பார்த்து ஒரு குரல் கேட்டது. உள்ளே இருந்தல்ல. அறைக்கு வெளியே இருந்து.

"சார் தண்ணீ இர்க்கா...?" மறுபடியும் அவனேதான். வந்துட்டான்யா ஜெகஜித் சிங்.
அதற்கு முன், நான் கேள்வி கேட்ட பிறகு அவன் திருப்பிக் கேட்டதைக் கூறிவிடுகிறேன். அவன் கேட்டது எனக்கு நன்றாகவே புரிந்தது. கூடவே அதில் ஒரு மெசேஜும் இருந்தது.

தன் பேரைச் சொல்லி முடித்த ஜெகஜித் சிங் என்னிடம் கேட்டது இதுதான்.

"உங்க பேரு என்ன சார்? இதே ஊரு தானா நீங்க?" அழகுத் தமிழில் கேட்டான்.

அந்தக் கேள்வியில், "நீங்க வேணா இந்தியை வெறுக்கலாம்...நாங்க அப்படியில்ல" என்ற தொனி தெரிந்தது. அவனிடம் "வாட்ஸ் யுவர் நேம்" என்று கேட்டதற்கு வெட்கமாகவும் இருந்தது. வேறு வழியின்றி "பேரு ரகு... ஊரு வேற" என்று சிரித்து வைத்தேன்.

அதற்குப் பிறகு நாங்கள் அடிக்கடி சிரித்துக் கொண்டோம். சாப்பிட்டாச்சா என்று கேட்பது முதல் இந்தி சினிமா எந்தத் தியேட்டரில் ஓடும் என்பது வரை தமிழிலேயே கஷ்டப்பட்டு கேள்வி கேட்க ஆரம்பித்தான்.

"நான் டிகிரி பாதி படிச்சிருக்கேன் சார். எங்க ஊருப் பக்கம் (கங்கா நகர் மாவட்டம்) எங்களுக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு..." என்றான் ஒருநாள். "டேய்...உண்மையச் சொல்லு...ஏகப்பட்ட சொத்தா இல்ல ஏகப்பட்ட சொக்காவா" என்று நான் கேட்டது அவனுக்குப் புரியவில்லை. "வீட்டில் சண்டை அதனால தில்லி போய் அப்படியே பெங்களூர் வந்து சென்னையில் கொஞ்ச நாள் இருந்து இப்போ கோய்ம்பேத்தூர் வந்துட்டேன் சார்..." அவன் முழு வரலாற்றையும் 3 வரியில் அறிந்து கொண்டேன்.

ஏதோ ராஜ்புத்தோ எதுவோ சரியாக நினைவில்லை...ஆனால் மேல் சாதியைச் சேர்ந்தவன் என்று கூறிக் கொண்டான். அதனால் முட்டை கூட சாப்பிடமாட்டேன் என்றான். "டேய் நிஜமாவா......பான் பராக் போடற... முட்டை சாப்பிட மாட்டயா" என்று சுரண்டினேன். ஒத்துக் கொண்டான். "வீட்லதான் சாப்பிடமாட்டேன் சார்...வெளியே அதெல்லாம் நை சாப்" என்று எல்லா பல்லையும் காட்டினான்.

அவனை எனக்கு ஏனோ பிடித்துவிட்டது. அதற்கு அவன் தமிழார்வமும் காரணம். என்ன சொன்னாலும் அதில் தெரியாத தமிழ் சொல்லுக்கு பொருள் கேட்பான்.

ஒரு முறை வேண்டுமென்றே தாங்க்ஸ் என்பதற்கு பதிலாக நன்றி என்றேன். "அப்படின்னா தாங்க்ஸ்தானே" என்று கேட்டு புரிந்து கொண்டான். நம்ம புத்தி கொஞ்சம் கிறுக்குப் புத்திதானே...கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுக்கலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் உள்ளிருக்கும் தமிழன் சாதாரணமான ஆளா என்ன? "எப்படியாவது இவனைத் தமிழ் படிக்க வைத்து ஒரு ராஜஸ்தானி தமிழனாக்கிவிடு. தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை" என்று மண்டையில் பல்பு எரிந்தது.

ஒட்டு மொத்த இந்தி எதிர்ப்பாளர்களின் பிரதிநிதியாக என்னை நானே அப்பாய்ண்ட் பண்ணிக்கிட்டது அன்றைக்குத் தான்.

அவனும் அதற்கு தயாராகத்தான் இருந்தான். சிலேட், பென்சிலை ஒருகையிலும், அரைக்கால் டவுசரை மறு கையிலும் வைத்துக் கொண்டு ஓடி வரும் அளவுக்கு இல்லாவிட்டாலும், உங்க மொழியை நான் தெரிந்து கொள்ள தயார் என்ற அளவுக்கு ஆர்வத்தை காட்டினான்.

ஆனால் ஒரே ஒரு நாள் வகுப்புடன் அவனுக்கு தமிழ் கற்றுத் தரும் ஆசை அடியோடு நாசமா போச்சு. அதுக்கு நான் விளையாட்டாய் சொல்லிக் கொடுத்த ஒரு வார்த்தை தான் காரணம். எதுக்குடா இவனுக்கு அதை சொன்னோம் என்ற அளவுக்கு எதற்கெடுத்தாலும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதம் போல சொல்ல ஆரம்பித்துவிட்டான். அது......

(தொடரும்)