Thursday, October 1, 2009

"இந்தி"யன் பார்வையில் தமிழன் - 1

வலையுலகில் ஒரு விவாதம் பல நாட்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வேண்டும் என்று சொல்வோர் ஒருபுறமும் வேண்டாம் என்போர் மறுபுறமும் நின்று கொண்டு வாதம் எதிர்வாதம் புரிகின்றனர். எப்பக்கமும் வெற்றி இல்லாமல் விவாதம் முடிவுக்கு வருகிறது. அல்லது அதை மறந்துவிட்டு அடுத்த வேலைக்குச் சென்று விடுகின்றனர்.

அந்த விவாதம் வேறொன்றுமல்ல...இந்தி வேண்டுமா வேண்டாமா? அல்லது இந்தித் திணிப்பு சரியா? கால ஓட்டத்தில் மாற வேண்டாமா? என்பதுதான்.

இந்தியை எதிர்த்து ஆட்சியைப் பிடித்தவர்களின் வழித் தோன்றல்கள் (வாரிசு?) இந்தி படிக்கவில்லையா, ஆட்சிக் கட்டிலில் ஏறுவதில்லையா என்ற சான்றாதாரங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் இல்லை. நாம் மட்டும் எதற்குப் படிக்காமல் எதிர்க்க வேண்டும்? இங்கேயே வாழ்க்கையை ஓட்டினால் பரவாயில்லை. எந்த மொழியும் தேவை இல்லை. ஆனால் தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றால் உறுதியாக இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பது இந்தியை ஆதரிப்போரின் கூற்று.

நான் எதைப் படிக்க வேண்டும் என்பதை நீ முடிவு செய்யாதே. என் மொழியின் வளம் எனக்குப் போதுமானது. இதிலேயே எல்லாமும் செய்ய முடியும். உன் மொழியைத் திணிப்பதோ அதன் மூலம் என் மொழியைச் சிதைப்பதையோ நான் ஏற்க மாட்டேன் என்பதாக உள்ளது இந்தியை எதிர்ப்போரின் கூற்று.

மொழி ஒரு தொடர்பு கொள்ளும் கருவி. எந்தக் கருவியாக இருந்தாலும் அதைப் புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டியதுதானே. இதில் எதற்கு மொழிப்பற்று என்பது ஆதரிப்போர் வாதம்.

மொழி என்பது தொடர்பு கொள்ளும் கருவி மட்டும்தானா? அதில் எண்ணற்ற பண்பாட்டு, விழுமியக் கூறுகள் உள்ளனவே. மொழி என்பது ஒரு இனத்தின் வரலாறு பொதிந்த கல்வெட்டு போன்றது. ஒரு இனத்தை அழிக்க அம்மொழியை அழித்தாலே போதுமானது. வெறும் தொடர்பு கொள்ளும் கருவி மட்டும்தான் என்றால் அவ்வாறு மொழியழிந்த இனம் வேறு கருவியை நாடிச் சென்று தப்பிக்கலாமே. வரலாற்றில் அவ்வாறு ஏதேனும் தகவல் உள்ளதா? - இது எதிர்ப்போர் குரல்.

இந்தப் பதிவு இந்தி பேசும் வடமாநில இளைஞனுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவப் பதிவை பகிர்ந்து கொள்ளும் ஆவல் அவ்வளவே.

முதலில், தமிழ்நாட்டில் மாட்டிக் கொண்டு விழித்த ராஜஸ்தான் மைந்தனின் கதை.

நான் தங்கியிருக்கும் மேன்ஷனில் ஒரு சரக்கு அனுப்பும் லாரி நிறுவனம் இயங்கி வருகிறது. இது ஒரு அகில இந்திய நிறுவனம். இதன் மேலாளர் பிகாரைச் சேர்ந்தவர். இதில் வேலை செய்யும் பெண் அலுவலர் இந்தி தெரிந்த தமிழச்சி. இதில் மூன்றாவதாக அந்த இளைஞன் வந்து சேர்ந்தான். பார்ப்பதற்கு குள்ளமாக, வழக்கமான சிவப்புத் தோல், கலர் டி-சர்ட் போட்டு, பான்பராக் மென்று கொண்டு கொஞ்சம் டோன்ட் கேர் பாலிஸிக்காரன் போலத் திரிவான். என்னைப் பார்க்கும் போதெல்லாம் முறைப்பது போலவே கடந்து செல்வான்.

நமக்குச் சொல்லவா வேண்டும்? ங்கொய்யால எங்கேயோ இருந்து இங்க வந்து என்னையே முறைக்கிறயா என்பது போல நானும் முறைப்பேன். ஓரிருமுறை மாடிப்படியில் ஏறும்போது தண்ணீ இர்க்கா சார்...என்று இந்திக்காரனுக்கே உரிய உச்சரிப்புடன் அவன் கேட்டிருக்கிறான். ஒரு சின்னத் தலையசைப்புடன் அவன் நட்புக் கரத்தையும் விலக்கினேன். கிட்டத்தட்ட அடித்துவிடும் அளவுக்கு அவனுடன் முறைப்பு ஏற்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று இப்போதும் நான் நினைப்பது உண்டு. சில வேளைகளில் அவன் சாதாரணமாகச் சென்றால் கூட நான் முறைத்துப் பார்ப்பேன். அவன் இந்தி பேசுகிறவன் என்ற எண்ணமா அல்லது நம்மை மதராஸி என அங்கே கேவலமாகப் பார்ப்பார்கள் என்று நண்பர்கள் கூறக் கேட்டிருந்ததால் ஏற்பட்ட கோபமா எதுவெனச் சொல்லத் தெரியவில்லை.

ஆனால் எப்படியோ ஒரு நாள் அவனிடம் சிரித்துவிட்டேன். அன்று தெற்கும் வடக்கும் சேர்ந்து திசை தெரியாமல் போனது. திசைகளின் நடுவே நான் நின்றிருந்தேன். எல்லாப் பக்கமும் ஒன்று போலத்தான் என்பதாக உணர்ந்தேன் என்றெல்லாம் கதை விடமாட்டேன். எதிரியாக நான் நினைப்பவன் சும்மா சிரித்து, எப்படி இருக்கிறீங்க என்று கேட்டுவிட்டால் எல்லாவற்றையும் மறந்து சிரித்துவிடும் குணம் என்னுடையது...(ரொம்ப நல்லவன்னு சொல்வாங்க). அன்றைக்கும் அதுதான் நடந்தது.

தண்ணீ இர்க்கா சார்...என்று சிரித்தபடியே வந்தான். நான் கொஞ்சம் விறைப்புடனே இல்லை என்று சொல்லிவிட்டு கேட்டேன். "வாட்ஸ் யுவர் நேம்?"
"ஜெகஜித் சிங்" என்றான். நான் அவன் தலையைப் பார்த்தேன். டர்பன் இல்லை. என் பார்வையைப் புரிந்து கொண்டான் போலிருந்தது. சிரித்தான்.

ஆனால் அவனும் திருப்பிக் கேட்டதுதான் எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் அடுத்த நொடியே என் உதட்டைத் தாண்டி வந்து விழுந்தது ஒரு பெரும் சிரிப்பொலி...அப்போதுதான் தெரிந்தது ஆண்களுக்கும் வெட்கம் வரும் என்பது. அவன் கேட்டது இது தான்...

(தொடரும்)