Monday, June 8, 2009

'நக்கீரா' நன்றாக உற்றுப் பார்...
தமிழர் தாயகத்தை அழித்தொழிக்கும் வேலையில் மாவிலாறு தொடங்கி நந்திக்கடல் வரையில் சிங்கள பேரினவாதிகளுக்கு முட்டு கொடுத்து அண்டை நாடுகள் நிற்க அதை வேடிக்கை பார்த்து நின்றது .நா. மற்றும் மேற்குலக நாடுகள். எங்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அழிக்கப்படுவதை ஒட்டு மொத்த உலகமும் மெளனமாக உள்ளூர ஒருவித கொடூர மனதோடு ரசித்து நின்றன.

யாரேனும் ஒருவர் தமிழீழ மக்களுக்காக குரல் கொடுத்தால், உள்ளூர் என்றால் வெள்ளை வேனும், வெளிநாடு என்றால் அவர் வெள்ளை புலி என்றும் புகார் சுமத்தப்பட்டு அவர்தம் குரலை நசுக்குவதில் சிங்கள அரசு வல்லமையோடு இருந்தது. தொப்புள் கொடி உறவுகள் பல்வேறு வடிவம் கொண்டு போரடியும் உயிராயுதம் ஏந்தியும் தமிழின படுகொலையை நிறுத்துவதில் ஒரு சிறு துரும்பை கூட அசைக்க முடியவில்லை. ஒரு இனத்தின் ஒட்டு மொத்த கூக்குரலையும் ஆழ்ந்து அகன்ற புதை குழியில் இட்டு புதைப்பதில் மாபெரும் வெற்றி கொண்டவை உலக, இந்திய ஆங்கில ஊடகங்கள். வெற்றி கணக்கை மட்டுமே காட்டி உலக சமுதாயத்தை கண்டும் காணமல் இருக்க வைத்ததில் அவற்றுக்கு பெரும் பங்கு உண்டு. இன்றைக்கு எந்த அளவு படையினர் முன்னேற்றம், எவற்றை பிடித்தார்கள், எத்தனை புலிகளை கொன்றார்கள் என்பது மட்டுமே அவர்தம் செய்தியாக, கட்டுரைகளாக இருந்தன.

அதே வேளையில் சம காலத்தில் பாலஸ்தீனத்தில் போர் நடைபெற்ற போது அதை ஐயகோ எமது உறவு போகிறதே, சுதந்திரம் பறிக்கப் படுகிறதே என்ற ரீதியில் இந்த ஊடகங்கள் செய்தியாக்கி ஊதி பெரிதாக்கி சளைக்காமல் புலம்பின. அதற்கு மேற்குலகும் பணிந்தது. போர் நின்றது. ஆனால் பல்லாயிரம் பேர் உயிர் இழந்தும் கேட்க நாதியற்று கிடந்த அழுகிறது, அழிகிறது ஓர் இனம்.

கருத்து சுதந்திரத்துக்கு குரல் கொடுக்கும் இந்த ஊடகங்கள், சிங்கள அரசின் கொலை வெறி தாக்குதல் குறித்தோ, தன்னிச்சையான செய்தி சேகரிப்பாளர்கள் அனுமதிக்கப் படாதது குறித்தோ எந்த ஒரு கேள்வியும் எழுப்பவில்லை. அந்த ஒரு விடயத்தில் மட்டும் சிங்கள அரசின் கருத்து சுதந்திரத்துக்கு மட்டுமே மதிப்பு கொடுத்தன. தொழிநுட்பம் வளர்ந்துள்ள நிலையில் எந்த ஒரு மனிதனும் உலகின் எந்த மூலையில் இருந்தும் செய்தியை அறிந்து கொள்ள முடியும் எனும்போது, 24 மணி நேரமும் வெறும் ஆங்கிலத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அதட்டும் தொனியில் செய்தி வாசித்து ஜல்லி அடிக்கும் கூட்டம் சொன்னது -- 'போர் நடைபெறும் பகுதி நிகழ்வு குறித்து சுயமாக உறுதி செய்ய முடியவில்லை. அதனால் சிங்கள அரசு கொடுப்பதை மட்டுமே போடுகிறோம்' என்பதுதான்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்குவதையும், வெட்கம் கெட்ட எம்.பி.கள் நாடளுமன்றத்தில் இந்த இந்த கேள்வி கேட்க இவ்வளவு தொகை என்று பேரம் பேசி லஞ்சத்தில் ஊறியதையும், குஜராத் கலவரம் குறித்த உண்மையை குற்றம் செய்ய தூண்டியவர்கள் வாயாலேயே ஒத்துக் கொள்வதையும் sting operation என்ற பெயரால் செய்தி போட்டு காசு பார்த்த ஊடகங்களுக்கு ஈழத்தில் தமிழினம் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரத்தை அறிந்து உறுதி செய்ய முடியவில்லையாம். இது வரை வெளியிட்ட செய்தி எல்லாமும் உறுதி செய்துதான் வெளியிட்டீர்களா?

ஒட்டு மொத்த தமிழினத்தையும் பயங்கரவாத கூட்டமாகதானே இந்திய ஊடகங்கள் பார்த்தன.? பார்க்கின்றன?

இன்றைய தேதி வரை பிரபாகரன் உடல் எரித்தோம், பொட்டு அம்மன் உடலை தேடுகிறோம் என்று ங்கோத்தா பய பேட்டி கொடுத்ததை பெரிதாகப் போடுகிறீர்களே. இடம் பெயர்ந்த மக்களை என்ன செய்கிறாய், காணமல் போவோர் பற்றி ஏன் பேச மறுக்கிறாய், முகாம் என்ற பெயரில் உள்ள வதை முகாம்கள் எதற்கு, போர் முடிந்து விட்டது ஏன் சர்வதேச ஊடகங்களை அனுமதிக்க மறுக்கிறாய் என்று கேட்க எந்த ஊடக ஆசிரியனுக்கும் முதுகெலும்பு இல்லை.

.நாவில் சிங்கள அரசுக்கு ஆதரவாக இருந்தது ஏன் என்று கேட்க ஒரு ஊடகத்துக்கும் துணிவில்லை. போர் குற்றத்தை மறைக்க துணை போனது ஏன் என்று சீன, கியூபா அரசுக்கு கேள்வி எழுப்ப எந்த மானங்கெட்ட மார்க்சிச்ட்டுக்கும் தெரியவில்லை.

இதெல்லாம் போகட்டும். தமிழ் ஊடகங்கள் ஒருபடி மேலே போய் நிற்கின்றன. நாளிதழ்கள் என்று எடுத்தால் தினமலம் செய்யும் பச்சை துரோகம் (சில வேளைகளில் மஞ்சள் துரோகம்) அது தமிழின விரோத பத்திரிகை, பத்திரிகை தருமம் இல்லாத பத்திரிகை என்பது ஊர் அறிந்த ரகசியம். எனவே அதை விட்டு தள்ளுவோம்.
தினகரன் பற்றி நமக்கு எதற்கு பேச்சு. தினமணியும் தினத்தந்தியும் எல்லாம் முடிந்த பிறகு வரலாற்றை புரட்டி கொண்டு இருக்கின்றன. அதையாவது செய்கிறார்களே அதற்கே பாராட்டலாம்.

வார பத்திரிகையில் குமுதம் தவிர்த்து பார்த்தல் விகடன் மட்டுமே சொல்லும்படி தமிழனின் குமுறலை வெளியிடுகிறது.

ஆனால் நக்கீரன் என்றொரு பத்திரிகை தமிழினத்தை தூக்கி நிறுத்துவதாக நினைத்துக் கொண்டு கிளிநொச்சி தொடங்கி இன்று வரை நேரில் பார்த்தது போல போர் செய்திகளையும், பிரபாகரன் படத்தையும் அட்டையில் போட்டு உள்ளே நினைத்தை எழுதி காசு பார்க்கிறது. கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் graphics செய்து அட்டை படம் போடுவது மட்டும் இல்லாமல் மீண்டும் வருவோம், விட்டதை பிடிப்போம் என்ற ரீதியில் கட்டுரை எழுதி விற்பனையை உயர்த்துகிறது.

நக்கீரனின் நேர்மை குறித்து நடிகர் ராஜ்குமார் கடத்தலின் போது பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. நுண்மையாக பார்க்கும் போது, ஈழம் குறித்த அதன் கட்டுரைகளை படிக்கும் போது இது ஒரு வியாபர தந்திரமாகவே தெரிகிறது.

உயிருடன் உள்ளார் என்று graphics அட்டை போட்டு அதை போஸ்டேரில் போட்டு விற்பனை பெருக்கியது அன்று. இன்று பிரபாகரனும் பொட்டுவும் ஒன்றாக இருப்பது போல அட்டை படம். உள்ளே படித்தால் எல்லாம் ஊகத்தின் கதை. அதுவும் அந்த பெட்டிக் கடையில் இரண்டு போஸ்டர்கள் தொங்கின. இரண்டும் இந்த வார நக்கீரன். ஒன்றில் வேறு செய்தி பற்றிய படம் அதன் கீழே சிறியதாக பிரபா பொட்டுவுடன் சிரித்தபடி. மற்றொரு போஸ்டரில் அவர்கள் இருவர் மட்டுமே முழு பக்க அளவில் உள்ளனர். இதன் அடி நாதமாக இருப்பது என்ன. வேறென்ன வியாபாரம் தான்.

பிரபாகரன், புலிகள் படம் போட்டால் விற்பனை ஜோர் என்பதை தெரிந்து கொண்டார்கள். இணையத்தில் பதிவிறக்கம் செய்து அட்டையில் போட்டு பார்க்கிறது நக்கீரன். போர் செய்திகளயே உங்களால் நன்றாக தெரிந்து செய்தி வெளியிட முடிந்தது என்றால் இப்போது வதை முகாம்களில் உள்ள உயிர்களின் நிலை பற்றி நிச்சயம் தெரிந்து கொள்ள முடியும். தலைவர் பிரபாகரன் பற்றி தரும் செய்திகள் ஆறுதலை தருகிறது என்றாலும், அது கற்பனையோ என்றுதான் தோன்றுகிறது. தயவு செய்து புண்பட்ட தமிழ் இனத்தின் கொடுமைகளை எடுத்து சொல்லி அதை உலகுக்கு தெரிய படுத்துங்கள். அதை விடுத்து வெறும் கதைகள் எங்களுக்கு வேண்டாம்.

அப்படி செய்யாவிட்டால் தமிழரின் அவலம் குறித்து எதுவும் பேசாத ஊடகங்களுக்கும் அவலத்தை மறைத்து புலிகள் பற்றி மட்டும் செய்தி வெளியிட்டு காசு பார்க்கும் நக்கீரனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தான் சொல்வோம்.

கிளிநொச்சி தொடங்கி இன்று வரை வெளியிட்ட அட்டைகளையும் செய்திகளையும் ...

நக்கீரா நீயே நன்றாக உற்றுப் பார்...

எமது மக்களின் துன்பம் தெரியவில்லையா. ?