Friday, May 1, 2009

சார்லஸ் அந்தோணிக்கு உணர்வுள்ள சீக்கியரின் கடிதம்

சர்வதேச சமூகம் உடனே தமிழீழ வீரர்களுக்கும், மக்களுக்கும் ஆதரவாக இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று ஒரு சீக்கிய எழுத்தாளர் www.worldsikhnews.com இணைய தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ள ஆங்கில கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

தமிழன் காசில் தின்று கொழுக்கும் துரோகிகள், பத்திரிகைகள் இதை படிக்கட்டும். ஒரு சீக்கியருக்கு இருக்கும் உணர்வும் மனிதாபிமானமும் மானங்கெட்ட தமிழினத் துரோக தமிழ் ஊடகங்களுக்கும், (தினம...ம்) தமிழன் நடத்தும் ஆங்கில பத்திரிகைக்கும் (தி சந்து ) இல்லையே.


அன்புள்ள் சார்லஸ் அந்தோணிக்கு,

உங்களது வாழ்வுரிமை, அடையாளம் மற்றும் விடுதலைக்கான போராட்டத்துக்கு எனது ஆதரவை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

நீங்களும் உங்களது மக்களும் உயிர் வாழ எப்படிப்பட்ட போராட்டத்தில் தற்போது இருக்கிறீர்கள் என்பதை பஞ்சாபில் நடந்த போராட்டங்களை அருகில் இருந்து கவனித்தவன் என்ற முறையில் நான் நன்கறிவேன்.

ஊடகங்களில், உங்கள் தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு நாள் நண்பர், மற்றொரு நாள் எதிரி. சில நாட்கள் அவர் பாதுகாக்கப்பட்டவர். இன்று அவர் கைவிடப்பட்டவர். சிலருக்கு அவர் தீவிரவாதி. பலருக்கு அவர் ரட்சகர். அவர் எப்படிப்பட்டவர் என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும் என்று விடுவதே நல்லது.

நான் போர்க் குணம் மிக்க இனத்தைச் சேர்ந்தவன். போராட்ட குணத்துக்கு பெயர் பெற்றவர்கள் சீக்கியர்கள். பஞ்சாபில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்களது வாயைத் திறக்கவில்லை என்றாலும், அச்சமின்றி அறிக்கை வெளியிடவில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களின் துணிச்சல், உறுதி, போர்த் திறன் ஆகியவற்றை அங்குள்ள பலர் பாராட்டுகின்றனர். இதை நீங்கள் நம்பியே ஆக வேண்டும். சமீப காலமாக உங்கள் போராட்டம் சந்தித்து வரும் வீழ்ச்சி பற்றிய செய்தியைக் கேட்டு பெரும்பாலான சீக்கியர்கள் கவலை கொண்டுள்ளனர்.

போர் பகுதியில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற சில மணி நேரங்கள் மட்டுமே அளித்த நிலையில், உங்கள் மக்களும், வீரர்களும் இலங்கை ராணுவத்தின் விஷ வாயு குண்டு வீச்சுக்கும், ரசாயன குண்டு வீச்சுக்கும் ஆளாகியுள்ள நிலையில் உங்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இலங்கையில் தமிழீழ மக்கள் படும் துன்பத்தால் மனம் நொந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். துன்பப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து மலைகளே அசைய வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. உங்கள் வலிகளையும் துன்பங்களையும் கண்டு கொள்ளாமல் மொத்த உலகமும் இயங்கி வருகிறது. அதற்கு 24 மணி நேர டி.வி. சேனல்களுக்கு நன்றி கூற வேண்டும்!.

தமிழீழ தாயகத்தை விட்டும், தமிழீழ வீரர்களை விட்டும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வெளியேறுவதைக் கண்டு எனது இதயம் அழுகிறது. இதை எழுதும் போது எனது உள் மன உணர்வுகளை வெளிப்படுத்த இது ஒரு வழி மட்டுமே என்ற குற்ற உணர்வே மிஞ்சுகிறது. இருந்தபோதிலும் ஒரு சீக்கியனாக என்னால் செய்ய முடிந்தது உங்களது போராட்டத்தில் உங்களுடன் சேர்ந்து கொள்வது மட்டுமே. எனது பிரார்த்தனையும், எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு உண்டு.

உலகில் உள்ள மற்ற அமைப்புகள் போன்று தமிழீழத்திற்கும் வரலாற்று ஆவணங்கள் இருந்தபோதும், இலங்கையில் துன்பப்படும் பல்லாயிரம் மக்களின் துயரை, வலியைத் துடைக்க பன்னாட்டு சமூகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா எப்படி சீக்கியர்கள், காஷ்மீரிகள், வடகிழக்கு மாநில மக்களின் போராட்டங்களை அழித்ததோ, அதே போல் இலங்கை அரசு உங்களது போராட்டத்தை பகல் நேரக் கொலை மற்றும் பேரழிவின் மூலம் நசுக்கி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் வீதிகளில் இறங்கி போராடி இருக்கும் பேச்சுகளைத் தொடங்க வைத்த புலம் பெயர் தமிழர்களின் போராட்டம் இதயத்தை வருடுவதாக உள்ளது. குறிப்பாக நார்வே தலைமையிடம் கூர்மையாக வாதாடிய புலம் பெயர் தமிழர்களால் நான் கவரப்பட்டேன்.

ஆஸ்லோவில் பிரதமரின் அலுவலகத்தை நார்வே வாழ் புலம் பெயர் தமிழர்கள் முற்றுகையிட்டு, அரசாங்கத்துடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது, சர்வதேச வளர்ச்சிக்கான நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைம், ‘என்னால் நார்வே தமிழர்களது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் என்னால் மாயவித்தை புரிய முடியாது’ என்றார். இதை செய்திகளில் நான் படித்தேன். நார்வே அரசின் என்ஆர்கே பத்திரிகை நிருபர்கள் இது குறித்து கேள்வி கேட்ட போது, ‘என்னால் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் மீண்டும் ஒருமுறை பேச இலங்கையில் போரை நிறுத்த ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்’ என்றார்.

தமிழ் எழுத்தாளர் கே.பி.அறிவானந்தம் எரிக்கின் இந்த பதில் குறித்து அளித்த பதில்:
‘மாய வித்தைகள் புரிய சோல்ஹைமால் முடியாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அவர் தவறுகள் செய்வதில் இருந்து தள்ளி நின்றிருக்கலாம். முடிந்தவற்றை செய்வது மட்டுமே ராஜதந்திரம் என்பதாக இருக்கலாம். ஆனால் முடியாததையும் நடத்திக் காட்டுவதுதான் விடுதலைப் போராட்டம்’. இந்த பதில் மிகச் சரியானது. ஒரு காவியம் போன்றது.

துணிவுக்கும், மனித உரிமை போற்றுதலுக்கும் ஸ்காண்டிநேவிய நாடுகள் பெயர் பெற்றவை. அதனால் தான் சமாதான பேச்சுக்கு நார்வேயை உங்கள் தலைமை தேர்ந்தெடுத்திருக்கும்.

‘முக்கியமான கருத்தை நார்வே உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டது. சமாதான பேச்சில் நடுநிலை வகித்ததால், புலிகள் ஆயுதங்களை கீழே போடுமாறு கோரிக்கை விடும் இணைத் தலைமை நாடுகளுடன் சேர்வதில் நியாயம் இல்லை. கொழும்பின் இனப்படுகொலை கரங்களுக்குள் வன்னி மக்களை செல்லுமாறு கூறுவது பெரும் கவலை அளிக்கிறது. அவர்களுடைய செயல்முறைத் தோல்விகளால், பன்னாட்டு அமைதித் தூதுவர் என்ற மதிப்பை நார்வே குறைத்துக் கொண்டுள்ளது. சுதந்திரமாகவும், வல்லரசுகளின் புவிசார் அரசியல் குறிக்கோளில் இருந்து விலகியும், உலக மனித குலத்துக்கு உண்மையாக நடந்து கொள்ள விரும்பியும் வருவதற்கு நார்வேக்கு இன்னும் நேரம் உள்ளது’ என்று நார்வேயின் தலையில் ஆணி அடித்தது போல் அறிவானந்தம் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து துன்பப்படும் தமிழீழ மக்களானவர்கள், இந்தியா மற்றும் உலக நாடுகளின் வெளிப்படையானதும், மவுனமானதுமான ஆதரவால் சிங்களப் பேரினவாத ராணுவத்திடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களின் சகோதரர்களின் அபயக் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 13 தமிழ் சகோதரிகள் உங்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்தியா முழுவதும் தேர்தல் களேபரத்தில் உள்ள நேரத்தில் அவர்களைப் பற்றி இந்த ஊடகங்கள் கண்டு கொள்கின்றனவா?

தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பொய்யாகவும் ஏமாற்றும் விதமாகவும் குரல் கொடுக்கின்றனர். அவர்கள் நேர்மையாக உங்களை ஆதரிக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்கு அவர்களைப் பற்றி நன்கு தெரியும்.

தமிழ் தலைவர்களைப் போன்று இந்தியத் தலைவர்களும் உங்களுடனும் உங்களுடைய லட்சியத்துடனும் தங்கள் சாணக்கியத் தனத்தை காட்டி வருவதாக நான் கருதுகிறேன். இந்தியா உங்கள் நண்பனா, எதிரியா என உலகத்தால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது. அந்த வகையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது. இலங்கை ராணுவத்துக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுப்பதைத் தொடர்ந்து கொண்டே ஒன்றும் தெரியாதது போல் மென்மையாக நடந்து கொள்கிறது.

நான் பாதுகாப்பு ஆய்வாளர் கிடையாது. ஆனால், நார்வே தலைமையிலான அமைதிப் பேச்சு துவங்கியபோதே உங்கள் மக்களின் போராட்டத்துக்கு பெரிய அடி விழுந்து விட்டது. சீக்கியர்கள், காஷ்மீரிகள், நாகா, மிசோ மக்களின் போராட்டத்திலும் இந்தியா இந்த முறையையே கடைபிடித்தது. 9/11 சம்பவத்துக்குப் பிறகு உலகின் புவிசார் அரசியல் மாற்றமும் உங்கள் போராட்டத்தின் தன்மையை மாற்றிவிட்டது. இதுவும் கூட நார்வேயின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

கடந்த ஆண்டு இதே நேரம் கொசோவா என்ற புதிய நாடு பிறந்தது. அதற்கு ஓராண்டு முன்பு கிழக்குத் தைமூர் விடுதலை அடைந்தது. 2009-ல் தமிழீழம் விடுதலை பெறும் என்று நினைத்தேன். இந்த ஆண்டு அது நடைபெறாது போல் இருந்தாலும் எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.

உங்களுடைய போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்துவிட்டது என்று உலக அளவில் ஒரு தோற்றம் உள்ளது. கள நிலைமைகள் குறித்த உண்மைகள் தெளிவாகத் தெரியாத நிலையில் இருந்தாலும் உங்கள் போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. உங்கள் போராட்டம் தொடர வேண்டும். உங்கள் சுதந்திரக் கொடியை தொடர்ந்து நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற கோத்தபய ராஜபட்ச, பச்சை அட்டைதாரர் பொன்சேகா ஆகியோரின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதில் முன்னாள் அமெரிக்க அரசு வழக்கறிஞர் புரூஸ் ஃபெய்ன் வெற்றி பெற்றுள்ளார் என்று நம்புகிறேன். நியூயார்க்கில் உள்ள இனப்படுகொலை தடுப்பு அமைப்பு உலகில் உள்ள 8 நாடுகளில் இனப்படுகொலை நடைபெறுகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் இலங்கையும் ஒன்று. உங்களது தாயகத்தில் இனப்படுகொலை நடக்கிறது என்பதை உலகிற்கு அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நாம் நம்புவோம்.

ஒரு நாட்டின் மக்களை காப்பாற்றுவதில் யாருக்கு பொறுப்பு உள்ளது என்ற ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டதில் எழுப்ப மெக்ஸிகோ தூதர் கிளாட் ஹெலன் முயற்சி செய்தார்.

தெற்காசியாவின் புவியியலையே மாற்றும் வல்லமை கொண்டவரின் மகன் சார்லஸ் அவர்களே, நீங்கள் உங்கள் போராட்டத்தை தொடர்வீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

நான் உங்களுக்கு கூறுவது இதுதான், கொசோவா விடுதலை அடைந்ததும் நான் கூறியதும் இதுதான். சீக்கியர்களின் 10-வது குரு, குரு கோபிந்த் சிங் அவர்களின் வாக்குதான் அது.

‘யாரும் உங்களுக்கு விடுதலையை தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள்; அதைப் பெற்றவர்கள், தங்களுடையை சொந்த முயற்சி, துணிவு, உறுதி, வலிமையாலேயே பெற்றார்கள்’ என்பது தான் அந்த வாசகம்.

விரைவில் அல்லது காலம் தாழ்த்தியோ நீங்கள் அதை அடைவீர்கள்.
இந்த தலைமுறையிலேயே நீங்களும் உங்கள் மக்களும் விடுதலையை அடைவீர்கள் என வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் தமிழ் மக்களுக்கு ஆசி வழங்கட்டும். அவர்களது துன்பத்தை நிறுத்தட்டும். இந்த உலகில் சுதந்திர மக்களாக அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கட்டும்.

உண்மையுள்ள,

ஜக்மோகன் சிங்
sbigideas@gmail.com